search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருநாவுக்கரசர்
    X
    திருநாவுக்கரசர்

    இடைத்தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டால் காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கும்- திருநாவுக்கரசர்

    நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டால் காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கும் என்று திருநாவுக்கரசர் எம்.பி. கூறியுள்ளார்.

    திருச்சி:

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், திருச்சி தொகுதி எம்.பி.யுமான திருநாவுக்கரசர் திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதுகுறித்து அ.தி.மு.க.வை சேர்ந்த ஒரு எம்.பி.யை தவிர தமிழ்நாட்டில் இருந்து சென்ற மற்ற எம்.பி.க்கள் அனைவரும் பாராளுமன்றத்தில் பேசினோம். இக்கட்டான இந்த சூழலை சமாளிக்க தமிழ் நாட்டுக்கு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என நான் கூட மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தேன். அதே போல துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், டெல்லி சென்று குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக ரூ.1000 கோடி நிதி கேட்டிருந்தார்.

    இந்த நிலையில் தமிழ் நாட்டில் தண்ணீர் பஞ்சமே இல்லை என அ.தி.மு.க. எம்.பி. ரவீந்திரநாத் குமார் பாராளுமன்றத்தில் கூறியதுதவறு. அவர் அளித்த தகவல்களும் தவறானவை. முதல் முறையாக பாராளுமன்றம் வந்துள்ளார். அடுத்தடுத்து பேசும்போது, இதுபோன்ற தவறுகளை அவர் திருத்திக் கொள்ள வேண்டும்.

    நீதிபதிகள் நியமனம், அரசியலுக்கு அப்பாற்ப்பட்டது. எனவே அதில் மத்திய மாநில அரசுகள் தலையிடக்கூடாது. ஒரே நாடு, ஒரே ரே‌ஷன்கார்டு திட்டம் நடைமுறைக்கு சாத்தியமில்லாதது. அ.ம.மு.க. என்ற கட்சி கடந்த தேர்தலுடன் முடிந்து விட்டது. அதில் இருந்து தங்க தமிழ் செல்வன் விலகி தி.மு.க.வில் சேர்ந்துள்ளார். அவர் வாழ்க, வளர்க.

    இந்தியாவில் நதிகள் இணைக்கப்பட வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கை. அவ்வாறு இணைத்தால் மகிழ்ச்சி. திருச்சி மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினை தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் பேசியுள்ளேன். நான் ஏற்கனவே எம்.பி. யாக இருந்தபோது புதுக்கோட்டை நகராட்சிக்கு குடிநீர் லாரி வாங்கி கொடுத்தேன். தற்போது அது பயன் பட்டு வருகிறது. அதுபோல, இப்போதும் திருச்சி மாநகராட்சி, புதுகை நகராட்சிக்கு குடிநீர் லாரிகளை வாங்கி கொடுக்கலாம் என திட்ட மிட்டுள்ளேன்.

    உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. தனித்து போட்டியிட வேண்டும் என கே.என்.நேரு பேசியது அவருடைய சொந்த கருத்து. கருத்தை சொல்ல அவருக்கு உரிமை இருக்கிறது. உள்ளாட்சி தேர்தலுக்கான இடங்கள் பங்கீடு குறித்து கட்சிகளின் தலைமைகள் தான் பேசி முடிவு செய்யும்.

    உள்ளாட்சி, சட்டப் பேரவை தேர்தல்களிலும் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி தொடர வேண்டும். ஆனால் தோற்றுவிடுவோம் என்ற பயம் இருப்பதால் அ.தி.மு.க. அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்துமா? என்பது சந்தேகமே. பாராளுமன்ற தேர்தலில் திருச்சி தொகுதியில் சொந்த செல்வாக்கில் வெற்றி பெற்றேன் என்று நான் எங்கும் கூறவில்லை. என்னுடைய வெற்றிக்கு தி.மு.க- காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினருக்கு பங்கு உண்டு.


    நாங்குநேரி தொகுதியில் ஏற்கனவே காங்கிரஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்ததால், இடைத்தேர்தலிலும் அங்கு காங்கிரஸ் போட்டியிடவே வாய்ப்புகள் அதிகம். வேலூர் பாராளுமன்ற தேர்தலுடன் காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் வர வாய்ப்புள்ளது. இவற்றில் ஒரு வேளை தி.மு.க. சார்பில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டால் அவருக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×