search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தினகரன்
    X
    தினகரன்

    தி.மு.க.வில் நிர்வாகிகளுக்கு பஞ்சம் இருப்பதால் அ.ம.மு.க.வினரை சேர்க்கிறார்கள்- தினகரன் கிண்டல்

    தி.மு.க.வில் தற்போது நிர்வாகிகளுக்கு பஞ்சம் இருப்பதால் அ.ம.மு.க.வில் இருந்து விலகியவர்களை சேர்த்துக் கொள்கின்றனர் என்று தினகரன் கூறியுள்ளார்.
    மதுரை:

    அ.ம.மு.க.வில் தினகரனின் வலதுகரம் போல் செயல்பட்ட தங்கதமிழ் செல்வன் திடீரென மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் தி.மு.க.வில் சேர்ந்தார்.

    தங்கதமிழ்ச்செல்வனின் இந்த திடீர் முடிவு காரணமாக தேனி மாவட்ட அ.ம. மு.க.வினர் அவர் பக்கம் செல்வதை தடுக்க தினகரன் உடனடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

    இதற்காக தஞ்சையில் இருந்து நேற்று காலை தினகரன் மதுரை வந்தார். மதுரை ரிங் ரோட்டில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ள அவர் தேனி மாவட்ட நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார்.

    மேலும் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக யாரை நியமிப்பது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இது தொடர்பான அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆலோசனை கூட்டம் முடிந்த பின்னர் டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் தற்போது குடிநீர் பிரச்சினை பூதாகரமாக நிலவி வருகிறது. இதில் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்தவில்லை. இந்த பிரச்சினையை திசை திருப்ப அ.ம.மு.க.வில் இருந்து வெளியேறுபவர்கள் குறித்து பெரிதுப்படுத்தி வருகின்றனர்.

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்திலும் கட்சியில் இருந்து சில நிர்வாகிகள் விலகியுள்ளனர். ஆனால் தற்போது அ.ம.மு.க.வில் இருந்து நிர்வாகிகள் விலகி இருப்பதை பெரிய விசயமாக்கி வருகின்றனர்.

    பாராளுமன்றத்தில் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திர நாத்குமார் குடிநீர் பிரச்சினை இல்லை என பேசியுள்ளார். இதுகுறித்து தேனி மாவட்ட மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

    அ.ம.மு.க.வில் இருந்து விலகிய சிலர், அ.தி.மு.க. விற்கு சென்றுள்ளனர். ஆட்சியில் இருப்பதால் பயனடைவதற்காக அங்கு சென்றிருக்கலாம். அவர்களை பற்றி கவலை இல்லை. நிர்வாகி கள்தான் கட்சியை விட்டு சென்றுள்ளனர். ஆனால் தொண்டர்கள் அ.ம.மு.க.வில்தான் உள்ளனர். சிலர் சென்றதால், அ.ம.மு.க. பலவீனம் அடையாது.

    தங்க தமிழ்செல்வன் எதற்காக எங்களுடன் வந்தார் என இதுவரை தெரியவில்லை. அவர் எடப்பாடி பக்கமே இருந்திருக்கலாம். எங்களுடன் 18 எம்.எல்.ஏ.க் கள் வந்தனர். யாருக்கும் பதவி போய்விட்டால் சிறிது வருத்தம் இருக்கும். அவர்கள் குடும்பத்தில் வறுமை ஏற்பட்டதற்கு எம்.எல்.ஏ. பதவி போனது தான் காரணம் என தங்க தமிழ்செல்வன் கூறி கொச்சைப்படுத்தி வருகிறார்.

    எம்.எல்.ஏ.வாக இல்லா விட்டால் வறுமையில் வாடி விடுவார்களா? யாருக்கும் பதவி போனால் சிறிது வருத்தம் இருக்கும். எங்களை பொறுத்தவரை தங்க தமிழ்செல்வனை தவிர, வேறு யாருக்கும் வருத்தம் இல்லை.

    நான் இங்கு வந்தபோது தேனி நிர்வாகிகள் சந்தித்து பேச வேண்டும் என்றனர். இதனால் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அவர்கள் மகிழ்ச்சியுடன் பங்கேற்றனர் இப்போது என்னுடன் இருப்பவர்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். யார் அழைத்தாலும் செல்லலாம். ஆனால் அவர்கள் அப்படி செல்ல மாட்டார்கள்.

    தங்க தமிழ்செல்வனை கொள்கைபரப்பு செயலாளர் பதவிக்கு பரிந்துரை செய்தவர் செந்தில் பாலாஜி. கடந்த 6 மாத காலமாக தங்க தமிழ்செல்வனின் நடத்தை சரியில்லை. அ.தி.மு.க. - தி.மு.க. இரு தரப்பிலும் பேசினார். ஆனால் அவரை அ.தி.மு.க.வில் சேர்க்க ஓ.பி.எஸ். தரப்பு எதிர்ப்பு தெரிவித்ததால், தி.மு.க.வில் சேர்ந்துள்ளார்.

    தி.மு.க.வில் தற்போது நிர்வாகிகளுக்கு பஞ்சம் இருப்பதால் அ.ம.மு.க.வில் இருந்து விலகியவர்களை சேர்த்துக் கொள்கின்றனர். டெல்லியில் இருப்பவர்களை கண்டு பயம் அடைந்ததால்தான் சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தி.மு.க. திரும்ப பெற்றுள்ளது.

    அவர் எங்கு போய் சேர வேண்டுமோ, அங்கு சென்று விட்டார். அவரை பற்றி பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×