search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மற்ற மாநிலங்களில் கூட்டணி வலிமையாக இல்லாததே காங்கிரஸ் தோல்விக்கு காரணம்- ப.சிதம்பரம் விளக்கம்
    X

    மற்ற மாநிலங்களில் கூட்டணி வலிமையாக இல்லாததே காங்கிரஸ் தோல்விக்கு காரணம்- ப.சிதம்பரம் விளக்கம்

    தமிழகத்தை போன்று மற்ற மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணி வலிமையாக இல்லாததே பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு காரணம் என்று ப. சிதம்பரம் விளக்கம் அளித்துள்ளார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    மக்களின் எண்ணத்தை யாரும் கணிக்க முடியாது. மக்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என்பதை அறிந்து அதற்கேற்ப வியூகங்கள் அமைத்தும் வேட்பாளர் தேர்வு செய்தும் , தேர்தல் பணியாற்றினால் வெற்றி பெறலாம். தற்போது நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் வாக்களித்து விட்டார்கள் என்பதால், சட்டமன்ற தேர்தலிலும் நமக்கு வாக்களிப்பார்கள் என்று எண்ணி விட முடியாது.

    இன்னும் பல போர்க் களங்களை நாம் காண வேண்டியது உள்ளது. அதற்கு நாம் தயாராக வேண்டும். முதலில் நாம் காணவிருப்பது உள்ளாட்சி தேர்தல். அதன் பிறகு சட்டமன்ற தேர்தல். உள்ளாட்சி தேர்தலிலும் சட்டமன்ற தேர்தலிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்று சபதம் ஏற்று பணியை தொடங்க வேண்டும். சட்டமன்ற தேர்தலில் நாம் ஒற்றுமையாக இருந்து பாடுபட்டால் 200 இடங்களில் நம்முடைய கூட்டணி வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப் பேற்பது உறுதி.


    தமிழகத்தைப் பொறுத்த வரை இந்திரா காந்தி காலத்தில் தி.மு.க.விடம் தொடங்கிய கூட்டணி தற்போது வரை வலிமையான கூட்டணியாக இருந்து வருகிறது. தமிழகத்தை போன்று மற்ற மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணி வலிமையாக இல்லாததே பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு காரணம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×