என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சோனியா காந்திக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

    சென்னை:

    காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சோனியா காந்திக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது:-


    அரசியல் சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள பன் முகத்தன்மை மத சார்பின்மை, சமூக நீதி, சமத்துவம் மற்றும் ஏழை எளிய நடுத்தர மக்களின் நம்பிக்கை ஆகியவற்றுக்கு நிரந்தர உத்தரவாதமாகத் திகழும் காங்கிரஸ் பேரியக் கத்தின் சிறப்பான பணியினை இந்திய மக்களின் நல் இதயங்களை விட்டு என்றும் எந்த சக்தியும் நீக்கிவிட முடியாது.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

    பா.ஜனதாவை எதிர்த்து நாள்தோறும் போராடுவோம் என்று காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியுள்ளார்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் டெல்லியில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:-

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் நாம் 44 மக்களவை எம்பி.க்களை பெற்று பா.ஜனதாவை எதிர் கொண்டோம். தற்போது 52 எம்.பி.க்கள் உள்ளனர். இதனால் நாம் நாள் தோறும் பா.ஜனதாவை எதிர்த்து போராடுவோம்.


    நீங்கள் (எம்.பி.க்கள்) ஒன்றை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் ஒவ்வொரு இந்திய மக்களுக்காக போராடுகிறீர்கள். வெறுப்புணர்வை தூண்டுபவர்களும், கோபத்தை ஏற்படுத்துபவர்களும் உங்களை எதிர்த்து நிற்கிறார்கள். இதனால் நீங்கள் கூடுதல் ஆக்ரோ‌ஷத்துடன் செயல்பட வேண்டும்.

    கட்சியை சுய பரிசோதனை செய்து கொள்வது அவசியமாகும். நாம் கடும் முயற்சி செய்து புத்துணர்வு அடைவோம். நம்மால் அதை செய்ய முடியும்.

    எம்.பி.க்கள் குழு தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்ட சோனியாவுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மோடியின் புதிய மந்திரி சபையில் உள்ள மந்திரிகளில் 22 பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரியவந்துள்ளது.
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி தலைமையிலான புதிய மந்திரி சபையில் மொத்தம் 58 பேர் இடம்பெற்றுள்ளனர். அவர்களின் கல்வித் தகுதி, சொத்து விவரம் மற்றும் அவர்கள் எதிர்கொண்டுள்ள வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஜனநாயக சீர்திருத்த சங்கம் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. 

    வேட்பு மனுவுடன் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்து வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வியாழக்கிழமை பதவியேற்ற மந்திரிகளில் 51 பேர் கோடீஸ்வரர்கள். 22 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. 47 மந்திரிகள் பட்டதாரிகள். ஒரு மந்திரி டிப்ளமோ படித்துள்ளார். 8 மந்திரிகள் 10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்துள்ளனர். 

    16வது மக்களவையை ஒப்பிடுகையில், இந்த மக்களவையில் இடம்பெற்றுள்ள மந்திரிகளில் குற்றவழக்குகள் கொண்ட மந்திரிகளின் எண்ணிக்கை 8 சதவீதம் அதிகம் ஆகும். தீவிர குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள மந்திரிகளின் எண்ணிக்கை 12 சதவீதம் உயர்ந்துள்ளது. 

    சராசரியாக ஒவ்வொரு மந்திரிக்கும் ரூ.14.72 கோடி சொத்து உள்ளது. உள்துறை மந்திரி அமித் ஷா, ரெயில்வே  மந்திரி பியூஷ் கோயல், ஷிரோமணி அகாலி தளம் கட்சியின் ஹர்சிம்ரத் கவுர் பாதல் ஆகியோருக்கு ரூ.40 கோடிக்கும் அதிகமாக சொத்துக்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    கைலாஷ் சவுத்ரி, ராமேஸ்வர் தேலி உள்ளிட்ட 5 மந்திரிகளுக்கு மட்டுமே ஒரு கோடி ரூபாய்க்கு குறைவாக சொத்து உள்ளது. ஒடிசாவைச் சேர்ந்த மந்திரி பிரதாப் சந்திர சாரங்கியிடம் வெறும் ரூ.13 லட்சம் மதிப்புள்ள சொத்து மட்டுமே உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் பிரதமர் மோடியின் திட்டத்தை அனைத்து விவசாயிகளுக்கும் விரிவுப்படுத்த மத்திய மந்திரிசபை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி தலைமையிலான கடந்த ஆட்சிக்காலத்தில் பாராளுமன்றத்தில் இறுதியாக தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் நாடுமுழுவதும் 5 ஏக்கர் நிலத்தை கொண்ட விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் அளிக்கக்கூடிய திட்டத்தை அரசு அறிவித்தது. இதன் மூலம் 12 கோடி சிறு,குறு விவசாயிகள் பலன் அடைவார்கள் என்று அறிவிக்கப்பட்டு 75 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது.

    மூன்று தவணைகளாக வழங்கப்படும் 2 ஆயிரம் ரூபாய் என்ற முதல் தவணையை 3.11 கோடி சிறு, குறு விவசாயிகள் பெற்று பலனடைந்துள்ளனர்.  2.75 விவசாயிகள் இரண்டாவது தவணையையும் பெற்றுள்ளனர்.

    இதற்கிடையில், இந்த உதவித்தொகையை அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதையடுத்து, இந்த கோரிக்கையை மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவோம் என்று பாராளுமன்ற தேர்தலின்போது பாஜக வாக்குறுதி அளித்தது.

    இந்நிலையில், ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் பிரதமர் மோடியின் திட்டத்தை அனைத்து விவசாயிகளுக்கும் விரிவுப்படுத்த மத்திய மந்திரிசபை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை டெல்லியில் நடைபெற்ற புதிய அரசின் முதல் மந்திரிசபை கூட்டத்துக்கு பின்னர் இதற்கான அறிவிப்பு வெளியானது.
    மோடி தலைமையிலான புதிய அரசு தனது முதல் பட்ஜெட்டை ஜூலை 5-ம் தேதி தாக்கல் செய்ய உள்ளது. நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி தலைமையில் புதிய மந்திரி சபையின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதுபற்றி மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:-

    17வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர், ஜூன் 17-ம் தேதி தொடங்கி ஜூலை 26ம் தேதி வரை நடைபெறும். கூட்டத் தொடரின் முதல்நாளான ஜூன் 17-ம் தேதி புதிய எம்பிக்கள் பதவியேற்கிறார்கள். ஜூன் 19-ம் தேதி மக்களவை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஜூன் 20-ம் தேதி பாராளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்துகிறார்.

    ஜூலை 4-ம் தேதி பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. ஜூலை 5-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    17வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் ஜூன் 17ம் தேதி தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
    புதுடெல்லி:

    நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி இரண்டாவது முறையாக நேற்று பதவியேற்றார். அவரது தலைமையிலான புதிய மந்திரி சபையும் பதவியேற்றது. மோடி மற்றும் அவரது மந்திரி சபையில் இடம்பெற்றுள்ள மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டு, அவர்கள் இன்று பொறுப்பேற்றனர்.

    மோடி தலைமையில் புதிய மந்திரிசபையின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

    இந்நிலையில், 17வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர், ஜூன் 17-ம் தேதி தொடங்கி ஜூலை 26ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் நாளில் புதிய எம்பிக்கள் பதவியேற்கிறார்கள். ஜூன் 19-ம் தேதி மக்களவை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 
    மத்திய மந்திரிசபையில் முதல்முறையாக முழுநேர பெண் நிதி மந்திரியாக பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமனுக்கு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    நாட்டின் தலையெழுத்தையும் வளர்ச்சியையும் நிர்ணயிக்கக்கூடிய சக்தியும் பொறுப்பும் வாய்ந்த அரசின் முக்கிய துறையாக மத்திய நிதி அமைச்சகம் இருந்து வருகிறது. பல்வேறு மந்திரிகளின்கீழ் வரும் பலதுறைகளுக்கான நிதி நிர்வாகங்கள் அனைத்தையும் கண்காணித்து ஆண்டுதோறும் பாராளுமன்றத்தில் வரவு-செலவு அறிக்கையை தாக்கல் செய்யும் நம் நாட்டின் மத்திய நிதி மந்திரி பதவியை பெரும்பாலும் ஆண்களே ஆக்கிரமித்து வந்துள்ளனர்.

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1970-71-ம் ஆண்டுகளுக்கு இடையில் ஒரேயொருமுறை இந்த நிதித்துறை இலாகாவை கூடுதல் பொறுப்பாக கவனித்தார். மற்றபடி இதுவரை நிதி அமைச்சகத்துக்கு வேறெந்த பெண்மணியும் மந்திரியாக நியமிக்கப்பட்டதில்லை.

    இந்த குறையை தீர்க்கும் வகையில் மத்திய மந்திரிசபையில் முதல்முறையாக முழுநேர பெண் நிதி மந்திரியாக பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமனுக்கு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இந்த பொறுப்பை ஏற்றதன் மூலம் ஆண்-பெண்ணுக்கு இடையிலான சரிநிகர் சமத்துவத்துக்கான பழைய அளவுகோல்களை எல்லாம் நிர்மலா சீதாராமன் தகர்த்துள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் மெகபூபா முப்தி இன்று குறிப்பிட்டுள்ளார்.
    அமேதி மக்கள் கைவிட்டாலும் தன்மீது அன்புவைத்து வாக்களித்த வாக்களர்களுக்கு நன்றி தெரிவிக்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஜூன் 7, 8 தேதிகளில் வயநாடு தொகுதிக்கு செல்கிறார்.
    புதுடெல்லி:

    சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அமேதி தொகுதியுடன் கேரளாவின் வயநாடு தொகுதியில் முதல் முறையாக போட்டியிட்டார். இத்தொகுதியின் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டபோது ஆரம்பத்தில் இருந்தே ராகுல்காந்தி அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். 

    இந்நிலையில், தனக்கு அடுத்தபடியாக வந்த கம்யூனிஸ்டு கூட்டணி வேட்பாளர் பி.பி.சுனிரை விட 4 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற்றார்.

    பாரதிய ஜனதா கூட்டணி சார்பில் இங்கு போட்டியிட்ட துஷார் வெள்ளாப்பள்ளி 78 ஆயிரத்து 816 வாக்குகள் மட்டுமே பெற்று 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டார். ராகுல் காந்தி போட்டியிட்ட மற்றொரு தொகுதியான அமேதியில் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானியிடம் அவர் தோல்வியடைந்தார்.

    அமேதி மக்கள் கைவிட்டாலும் தன்மீது அன்புவைத்து வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஜூன் 7, 8 தேதிகளில் வயநாடு தொகுதிக்கு செல்கிறார். இதற்கான அறிவிப்பை தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் மலையாளத்தில் பதிவிட்டுள்ளார்.

    தேர்தல் வெற்றிக்கு பின்னர் முதல்முறையாக வயநாடு தொகுதிக்கு வரும் ராகுல் காந்தியை சிறப்பான முறையில் வரவேற்பதற்கான முன்னேற்பாடுகளில் காங்கிரசார் ஈடுபட்டு வருகின்றனர்.
    இந்திய பிரதமர் மோடி அடுத்த மாத துவக்கத்தில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்வதை அந்நாட்டு அதிபர் சிறிசேனா உறுதி செய்துள்ளார்.
    புதுடெல்லி:

    இந்தியாவின் பிரதமராக இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள நரேந்திர மோடி, வெளிநாட்டுப் பயணத்தில் முதல் நாடாக மாலத்தீவு செல்கிறார். ஜூன் மாத துவக்கத்தில் மாலத்தீவு செல்லும் மோடி, அங்கிருந்து இலங்கைக்கு செல்ல உள்ளார். இத்தகவலை இலங்கை அதிபர் சிறிசேனா இன்று உறுதி செய்துள்ளார். 

    டெல்லியில் மோடியின் பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபர் சிறிசேனா பங்கேற்றார். அவரை மோடி இன்று சந்தித்து பேசினார். அப்போது இரு நாடுகளுக்கிடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக இருவரும் பேசினர்.

    மோடியுடனான சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சிறிசேனா, மோடியின் இலங்கை பயணத்தை உறுதி செய்தார்.

    இலங்கைக்கு இந்திய பிரதமர் மோடி வருகை தர உள்ளது முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், அவரது வருகையை பெருமையாக கருதுவதாகவும் சிறிசேனா கூறினார். 

    ‘மோடியின் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம். உலகம் முழுவதிலும் பயங்கரவாதம் பல்வேறு வடிவங்களில் தலை தூக்கி உள்ளது. சில நாடுகளில் உள்நாட்டு பயங்கரவாதிகள் உள்ளனர். உலகில் உள்ள அனைத்து ஜனநாயக நாடுகளும் ஒன்றிணைந்தால் தான் பயங்கரவாதத்தை ஒழிக்க முடியும்’ என்றும் சிறிசேனா கூறினார்.
    தமிழகத்துக்கு மந்திரி பதவி வழங்குவது குறித்து பிரதமர் மோடி முடிவு எடுப்பார் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

    ஆலந்தூர்:

    டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இரண்டாவது முறையாக பிரதமராக மோடி பதவி ஏற்று கொண்ட அற்புதமான நிகழ்விற்கு கட்சிக்காக உழைத்த தொண்டர்களான மாவட்ட தலைவர்கள் சுமார் 150-க்கும் மேற்பட்டவர்களுக்கு சிறப்பு அழைப்பாளர்கள் போலவே அழைப்பு விடுத்து அவர்களும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள். இது தொண்டர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த உற்சாகத்தோடு தமிழ்நாட்டில் கட்சியை பலப்படுத்தி பணியாற்றுவோம்.

    இன்னும் நிறைய வாய்ப்புகள் வரும். மோடி தலைமையிலான இந்த அமைச்சரவை இந்தியாவை வல்லரசு நாடாக எடுத்துச் செல்லும்.

    இன்னும் பல வெற்றிகள் பல மாநிலங்களில் குவிக்க இருக்கிறது. தமிழகத்திலும் பா.ஜனதா பலம் பெற இருக்கிறது. தமிழகத்தில் பா.ஜனதா பலம் பெற பலம் பெற தமிழகத்திற்கு அதிக பிரதிநிதித்துவம் கிடைக்கும்.

    மக்களுக்கு எதிரான, மக்களுக்குத் துன்பம் தரக் கூடிய பிரச்சனைகளை இந்த அரசு ஆதரிக்க போவதில்லை, பாஜகவிற்கு தமிழகத்தின் மீது அக்கறை இல்லை என்ற தவறான பிரசாரம் எதிர்கட்சிகளால் செய்யப்படுகிறது. பா.ஜனதா தமிழகத்தின் மீது மிகுந்த அக்கறையோடு இருக்கிறது. பல நல்ல திட்டங்களை கொண்டு வருவதற்கான அடிப்படையில் எங்களுடைய பணி இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.


    மத்திய அமைச்சரவையில் தமிழகத்திற்கு பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் உங்கள் கூட்டணியில் வெற்றிபெற்ற ஒரே எம்.பி.யான ரவீந்திரநாத் பெயரை தமிழகத்திலிருந்து மேலிடத்திற்கு பரிந்துரை செய்வீர்களா? என்ற கேள்விக்கு,

    ‘இதுகுறித்து கட்சி தலைமையும், பிரதமர் மோடியும் தான் முடிவு எடுக்க வேண்டும். இப்போது அது பற்றி எதுவும் கூற விரும்பவில்லை’ என்று தெரிவித்தார்.

    நேபாளம், மொரிஷியஸ், பூடான், வங்காளதேசம் உள்ளிட்ட வெளிநாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி டெல்லியில் இன்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.
    புதுடெல்லி:

    நாட்டின் பிரதமராக தொடர்ந்து இரண்டாவது முறை நேற்று பொறுப்பேற்ற நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த அதிபர்களும் பிரதமர்களும் இந்தியா வந்துள்ளனர்.

    இந்நிலையில், டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா இன்று காலை பிரதமர் மோடியை சந்தித்து இருநாடுகள் இடையிலான நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

    இதைதொடர்ந்து, வங்காளதேசம் அதிபர் அப்துல் ஹமித், மொரிஷியஸ் பிரதமர் பிரவின்ட் குமார், நேபாள பிரதமர் ஷர்மா ஒலி, பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்த பிரதமர் மோடி அந்நாடுகளுடனான இந்தியாவின் பல்வேறுதரப்பு நல்லுறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசித்து வருகிறார்.
    மோடி தலைமையிலான புதிய மந்திரிசபையில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு இடம் வழங்கப்படவில்லை.
    புதுடெல்லி:

    மத்தியில் பாஜக தலைமையிலான கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றிருந்தாலும், மோடி தலைமையிலான புதிய மந்திரி சபையில் கூட்டணி கட்சிகளுக்கும் வாய்ப்பு கொடுக்க முடிவு செய்யப்பட்டது. 

    எனவே, தமிழ்நாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 2 மந்திரி பதவி கொடுக்க முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியானது. கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் அல்லது மேல்-சபை எம்.பி.யான வைத்திலிங்கம் ஆகியோரில் ஒருவருக்கு மத்திய மந்திரி பதவி கிடைக்கலாம் என பேசப்பட்டது. 

    ஆனால், இன்று மோடி தலைமையிலான புதிய மந்திரிசபை பதவியேற்றபோது, அதிமுகவைச் சேர்ந்த யாரும் அதில் இடம்பெறவில்லை. 

    இதேபோல் தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு மந்திரி பதவி கிடைக்கலாம் என்றும் கட்சி வட்டாரங்களில் பேசப்பட்டது. அவருக்கும் மந்திரிசபையில் இடம் வழங்கப்படவில்லை. 
    ×