search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோடியின் புதிய மந்திரி சபையில் உள்ள மந்திரிகளில் 22 பேர் மீது குற்ற வழக்குகள்
    X

    மோடியின் புதிய மந்திரி சபையில் உள்ள மந்திரிகளில் 22 பேர் மீது குற்ற வழக்குகள்

    மோடியின் புதிய மந்திரி சபையில் உள்ள மந்திரிகளில் 22 பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரியவந்துள்ளது.
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி தலைமையிலான புதிய மந்திரி சபையில் மொத்தம் 58 பேர் இடம்பெற்றுள்ளனர். அவர்களின் கல்வித் தகுதி, சொத்து விவரம் மற்றும் அவர்கள் எதிர்கொண்டுள்ள வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஜனநாயக சீர்திருத்த சங்கம் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. 

    வேட்பு மனுவுடன் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்து வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வியாழக்கிழமை பதவியேற்ற மந்திரிகளில் 51 பேர் கோடீஸ்வரர்கள். 22 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. 47 மந்திரிகள் பட்டதாரிகள். ஒரு மந்திரி டிப்ளமோ படித்துள்ளார். 8 மந்திரிகள் 10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்துள்ளனர். 

    16வது மக்களவையை ஒப்பிடுகையில், இந்த மக்களவையில் இடம்பெற்றுள்ள மந்திரிகளில் குற்றவழக்குகள் கொண்ட மந்திரிகளின் எண்ணிக்கை 8 சதவீதம் அதிகம் ஆகும். தீவிர குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள மந்திரிகளின் எண்ணிக்கை 12 சதவீதம் உயர்ந்துள்ளது. 

    சராசரியாக ஒவ்வொரு மந்திரிக்கும் ரூ.14.72 கோடி சொத்து உள்ளது. உள்துறை மந்திரி அமித் ஷா, ரெயில்வே  மந்திரி பியூஷ் கோயல், ஷிரோமணி அகாலி தளம் கட்சியின் ஹர்சிம்ரத் கவுர் பாதல் ஆகியோருக்கு ரூ.40 கோடிக்கும் அதிகமாக சொத்துக்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    கைலாஷ் சவுத்ரி, ராமேஸ்வர் தேலி உள்ளிட்ட 5 மந்திரிகளுக்கு மட்டுமே ஒரு கோடி ரூபாய்க்கு குறைவாக சொத்து உள்ளது. ஒடிசாவைச் சேர்ந்த மந்திரி பிரதாப் சந்திர சாரங்கியிடம் வெறும் ரூ.13 லட்சம் மதிப்புள்ள சொத்து மட்டுமே உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×