என் மலர்
செய்திகள்

தேவேகவுடா கட்சியுடன் கூட்டணி அமைத்ததால் காங்கிரசுக்கு படுதோல்வி- சுமலதா எம்பி சொல்கிறார்
பெங்களூரு:
கர்நாடக காங்கிரஸ் முன்னாள் எம்.பி. நடிகர் அம்பரிசின் மனைவி நடிகை சுமலதா மாண்டியா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த காலங்களில் அம்பரிஷ் மாண்டியா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வந்தார். அவர் மரணம் அடைந்து விட்டதால் அந்த தொகுதியில் தனக்கு டிக்கெட் வேண்டும் என்று சுமலதா காங்கிரசிடம் கேட்டு வந்தார்.
ஆனால், இந்த தொகுதியை கூட்டணி கட்சியான தேவேகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் கேட்டது. அந்த கட்சிக்கு தொகுதி விட்டுக் கொடுக்கப்பட்டது.
அதில் முதல்-மந்திரி குமாரசாமியின் மகன் நிகில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து சுமலதா சுயேச்சையாக நின்றார். அவருக்கு பாரதீய ஜனதா ஆதரவு அளித்தது. இதில் சுமலதா வெற்றி பெற்றார்.
இதுகுறித்து சுமலதாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
நான் தேர்தலில் நின்ற போதே வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது. ஜனதா தளம் (எஸ்.) வேட்பாளர் நிகில் என்னை போலவே அரசியல் அனுபவம் இல்லாதவர்.
ஆனால், அவரது குடும்பத்தில் உள்ள தலைவர்கள் மிகுந்த அரசியல் அனுபவம் கொண்டவர்கள். அவர்கள் நடந்து கொண்ட விதம்தான் எனது வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது.
குறிப்பாக பெண்களை பற்றி அவர்கள் இழிவாக பேசியதன் மூலம் பெண்கள் ஓட்டு அவர்களுக்கு கிடைக்காமல் போனது.
குமாரசாமி பேசும்போது சுமலதா முகத்தில் கணவர் இறந்த துக்கத்தை கூட பார்க்க முடியவில்லை என்று கூறினார். இது, எவ்வளவு புண்படுத்தும் வார்த்தை. இதுபோன்ற செயல்கள்தான் அவர்களை தோற்கடித்தது.

மாண்டியா தொகுதி மக்கள் என்னை சுயேச்சையாக போட்டியிட வற்புறுத்தினார்கள். பாரதீய ஜனதா ஆதரவு அளித்தது. ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்ததால் காங்கிரஸ் தொண்டர்கள் அதிருப்தியில் இருந்தார்கள். அவர்களும் என்னை ஆதரித்தார்கள்.
இந்தியாவிலேயே எனது தொகுதியில் மட்டும் தான் காங்கிரஸ்- பாரதீய ஜனதா தொண்டர்கள் ஒரே வேட்பாளருக்காக ஒருங்கிணைந்து வேலை செய்த நிகழ்வு நடந்தது.
என்னை காங்கிரசில் சேரும்படி இப்போது யாரும் அழைக்கவில்லை. எந்த தலைவரும் என்னுடன் தொடர்பு கொள்ளவில்லை.
பாரதீய ஜனதாவுக்கு கிடைத்த வெற்றி என்பது மிகப்பெரிய ஆச்சரியமாக இருக்கிறது. கர்நாடகாவில் 19-ல் இருந்து 21 தொகுதிகள் வரை பாரதீய ஜனதா வெற்றி பெறும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், 25 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
மிகப்பெரிய கட்சியான காங்கிரசுக்கு ஒரு இடம்தான் கிடைத்து இருக்கிறது. இதற்கு கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைவர்கள் எடுத்த தவறான முடிவுகள்தான் காரணம். அவர்கள் ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி வைத்திருக்க கூடாது. அதை மக்கள் ஏற்று கொள்ளவில்லை.
காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகளில் ஜனதாதளம் தொண்டர்கள் அவர்களுக்கு ஆதரவு அளிக்கவில்லை. அதேபோல் ஜனதா தளம் போட்டியிட்ட தொகுதிகளில் காங்கிரஸ் தொண்டர்கள் ஆதரிக்கவில்லை.
இதேபோன்ற நிலைதான் மாநிலம் முழுவதும் நிலவியது. காங்கிரஸ் - ஜனதா தளம் கூட்டணியை மக்கள் வெறுப்புடன் பார்த்தனர். காங்கிரஸ் மட்டும் தனியாக நின்றிருந்தால் 10 தொகுதிகள் வரை வென்று இருக்கும்.
மாண்டியா தொகுதி காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதி ஆகும். அதை ஜனதா தளத்துக்கு விட்டுக் கொடுத்தார்கள்.
அதேபோல் மைசூர், தும்கூர் தொகுதிகளிலும் காங்கிரசுக்கு வாய்ப்பு இருந்தது. கூட்டணி கட்சிக்கு கொடுத்ததால் வெற்றி பெற முடியவில்லை.
இதேபோல் வெற்றி வாய்ப்புள்ள பல தொகுதிகளை கூட்டணிக்கு கொடுத்து விட்டார்கள். அங்கெல்லாம் பாரதீய ஜனதா வென்று விட்டது.
காங்கிரஸ்-ஜனதா தளம் கூட்டணி அரசு பதவி ஏற்றதில் இருந்தே தடு மாற்றத்துடன் செல்கிறது. அந்த கட்சிகளின் தலைவர்கள் முகத்தில் மகிழ்ச்சியே காணவில்லை. இது ஒரு பொருந்தாத திருமணமாக இருக்கிறது. அது எப்போது வேண்டுமானாலும் முடிவுக்கு வரலாம்.
மாண்டியா தொகுதியில் போட்டியிட்ட நிகில் 2½ லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறாவிட்டால் அரசியலை விட்டே சென்று விடுவேன் என்று மந்திரி குட்டராஜு கூறினார்.
மோடி மறுபடியும் ஆட்சிக்கு வந்தால் இந்த நாட்டை விட்டே சென்று விடுவேன் என்று மந்திரி ரேவன்னா கூறினார்.
ஆனால், அவர்கள் சொன்னதை எதையும் செய்யவில்லை.
இவ்வாறு சுமலதா கூறினார்.






