search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதிய கல்விக்கொள்கையில் இந்தியை திணிக்க கூடாது- கே.எஸ்.அழகிரி கண்டனம்
    X

    புதிய கல்விக்கொள்கையில் இந்தியை திணிக்க கூடாது- கே.எஸ்.அழகிரி கண்டனம்

    புதிய கல்விக்கொள்கையில் இந்தியை திணிக்க கூடாது என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்ற கொள்கையில் நம்பிக்கையுள்ள பா.ஜ.க.வின் சுயரூபம் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை அமைந்த உடனேயே அம்பலமாகியுள்ளது.

    1960களில் இந்தி பேசாத மக்கள் மீது இந்தி திணிக்கப்படுகிறது என்று உருவான அச்சத்தை போக்குவதற்கு அன்று பிரதமராக இருந்த பண்டித நேரு, மக்களவை தி.மு.க.வின் இரு உறுப்பினர்களில் ஒருவராக இருந்த ஈ.வெ.கி. சம்பத்தை டெல்லியில் தேடி கண்டுபிடித்து தமது அலுவலகத்திற்கு வரச் சொல்லி, கலந்து பேசி நான்குமணி நேரத்தில் இந்தி பேசாத மக்களுக்கான உறுதிமொழியை கடிதம் மூலமாக சம்பத் வீட்டுக்கே அனுப்பியிருந்தார்.

    நாடாளு மன்றத்தில் தி.மு.க.வின் பலம் இரண்டு உறுப்பினர்கள் மட்டுமே இருந்தபோது அவர்களது கோரிக்கைக்கு மதிப்பளித்து பிரதமர் நேரு எழுதிய உறுதிமொழி கடிதத்தின்மூலம், “இந்தி பேசாதமக்கள் விரும்பும்வரை ஆட்சிமொழியாக இந்தியோடு ஆங்கிலமும் கூடுதல் மொழியாகவும், இணை மொழியாகவும் தொடர்ந்து நீடிக்கும். இது எவ்வளவு காலம் நீடிக்கும்என்பதை முடிவு செய்யும் உரிமையை இந்தி பேசும் மக்களிடம் விடாமல் இந்தி பேசாத மக்களிடமே விடுவேன்” என்று அதில் குறிப்பிட்டிருந்தார். இது குறித்து அண்ணா கருத்து கூறும்பொழுது, “திராவிடத்தின்வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய அரசியல் தஸ்தா வேஜிகளாகும்” என்று கூறியதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

    மேலும் மக்களவையில் பிரதமர் நேரு உரையாற்றும்பொழுது, “எந்த மொழியையும் எவர் மீதும் திணிக்கக்கூடாது. நமது அரசியல் அமைப்பு சட்டத்தில் குறிப்பிட்டுள்ள அனைத்து மொழிகளும் சம அந்தஸ்துடன் நடத்தப்படவேண்டும். இந்தியாவில் எந்த ஒரு மொழியும் மற்ற மொழியை தாண்டி, தேசிய மொழியாக இருக்கும் என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று மிக தெளிவாக 1960 ஏப்ரல்24 அன்று குறிப்பிட்டிருந்தார்.

    இத்தகைய உறுதி மொழிகளை வழங்கியதற்கு காரணம் நாட்டின் பிரதமராக ஜவஹர்லால் நேரு என்கிற ஜனநாயக ஜாம்பவான் பதவி வகித்ததுதான். ஆனால் இன்று அசுர பலத்தோடு அதிகாரத்தில் அமர்ந்திருக்கிற, ஜனநாயக உணர்வே இல்லாத பிரதமர் மோடி இத்தகைய உறுதிமொழிகளை காப்பாற்றுவார்என்று எதிர்பார்க்க முடியாது. அதனால்தான் தேர்தல் வரை பதுக்கிவைக்கப்பட்டிருந்த புதிய கல்விக் கொள்கை என்கிற பூனைக்குட்டி இப்போது வெளிவந்துவிட்டது.


    தமிழகத்தை பொறுத்த வரை இந்தி பேசாத மக்களுக்கு பண்டித நேரு வழங்கிய உறுதிமொழி தொடர்ந்து காப்பாற்றப்படவேண்டும். நேரு வழங்கிய உறுதி மொழிக்கு எதிர் காலத்தில் ஏதாவதுஆபத்து ஏற்பட்டால் அதை தடுக்கவே அன்று பிரதமர்களாக இருந்த லால்பகதூர் சாஸ்திரியும், இந்திரா காந்தியும் ஆட்சி மொழி சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்தார்கள். இச்சட்டத் திருத்தத்தின்படி நேருவின் உறுதிமொழிக்கு சட்ட பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. இதையும் மீறி புதிய கல்விக் கொள்கை என்ற போர்வையில் மும்மொழி திட்டத்தை புகுத்தி இந்தி மொழியை கட்டாயப்படுத்தி திணிக்க முயன்றால் மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக கடுமையான போராட்டங்களை நடத்தவேண்டி வரும் என தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக எச்சரிக்கையாக தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×