என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    ஒருதலைப்பட்சமாக சோதனை நடந்தால் பல சந்தேகங்கள் வரும் என்று பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார்.
    ஆலந்தூர்:

    பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சுப்பிரமணிய சாமி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜெயா டி.வி. உள்பட சசிகலாவின் உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடந்து வருகிறது. இவ்வாறு ஒருதலைப்பட்சமாக சோதனை நடத்தினால் பல சந்தேகங்கள் வரும். அதனால் டெல்லியில் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் இதுபற்றி நான் விசாரிக்க உள்ளேன்.



    மத்திய அரசு ஒருதலைப்பட்சமாக நடப்பதாக தெரியக்கூடாது. எந்த பக்கத்திலும், எங்கு ஊழல் நடந்தாலும் அதன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    கருணாநிதியை பிரதமர் சந்தித்தது, அரசியல் நாகரிகத்துடன் நடந்தது. உடல்நலக்குறைவுடன் யார் இருந்தாலும் அவர்களை சந்திப்பது வழக்கம்.



    தமிழகத்தில்தான் எதிர்க்கட்சிகள் திருமணங்களில் பங்கேற்பது இல்லை. சினிமா கலாசாரம்தான் இதற்கு காரணம். மகாபாரத காலத்திலும் துரியோதனன் படையில் சிலர் இறந்துபோனால் பாண்டவர்கள் வந்து நிற்பார்கள்.

    தி.மு.க.வுடன், பாரதீய ஜனதா கூட்டணி வராது. ஒருமுறை நடந்த தவறு இனி நடக்காது.

    இரட்டை இலை சின்னம் சசிகலா தலைமையிலான அணிக்குத்தான் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    காஞ்சிபுரத்தில் கின்னஸ் சாதனைக்காக 150 மணி நேர யோகாசனம் செய்து காட்டி வருகிறார். இதனை ஏராளமானோர் ஆர்வமுடன் பார்த்து வருகிறார்கள்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தை சேர்ந்தவர் ரஞ்சனா. யோகா ஆசிரியராகவும், வக்கீலாகவும் உள்ளார். இவர் கடந்த ஆண்டு 57 மணிநேரம் தொடர்ந்து யோகாசனம் செய்து உலக சாதனை நிகழ்த்தினார்.

    இந்நிலையில் இந்த சாதனையை அவரே முறியடிக்கும் வகையில் தொடர்ந்து 150 மணிநேரம் (6 நாட்களுக்கும் மேலாக) உணவு மற்றும் தூக்கத்தினை தவிர்த்து தொடர்ந்து யோகாசனம் செய்து கின்னஸ் சாதனை படைக்க முடிவு செய்தார்.

    இன்று காலை சின்ன காஞ்சீபுரம் பங்காரு ஏசப்பன் தெருவில் உள்ள மகாயோக தியான மைய வளாகத்தில் யோகாசனத்தை தொடங்கினார்.

    தொடர்ந்து அவர் பல்வேறு யோகாசனங்கள் செய்து காட்டி வருகிறார். இதனை ஏராளமானோர் ஆர்வமுடன் பார்த்து ரஞ்சனாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
    காஞ்சீபுரம் மாவட்டத்தில் பொதுமக்கள் மழை காலங்களில் உணவு பொருட்களை பாதுகாப்பதை குறித்து கலெக்டர் அறிவுரை கூறியுள்ளார்.

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் பொதுமக்கள் மழை காலங்களில் உணவு பாதுகாப்பு மேலாண்மை சம்பந்தமாக கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் பின் வருமாறு:-

    பொதுமக்கள் குளோரினேற்றம் செய்யப்பட்ட மற்றும் காய்ச்சிய குடிநீரை பயன்படுத்த வேண்டும். ஐ.எஸ்.ஐ. தர முத்திரை மற்றும் உணவு பாதுகாப்பு உரிமம் உள்ள பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரை பயன்படுத்த வேண்டும். உடனுக்குடன் தயாரிக்கப்பட்ட சூடான உணவை உட் கொள்ள வேண்டும். தயாரிக்கப்பட்ட உணவு பொருளை பாதுகாப்பான முறையில் மூடி பயன்படுத்த வேண்டும். சமைக்கும் முன்பு காய்கறிகளை சுத்தமான உப்புநீரில் கழுவி பயன் படுத்த வேண்டும்.

    மேலும் எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய உணவு பொருட்களை அதிகம் உட்கொள்ள வேண்டும். உலர் திராட்சை, வறுத்த முந்திரி, கடலை வகைகள், பிஸ்கட்டுகள், பால் பவுடர்கள், ரஸ்க் போன்ற போதுமான அளவு உணவு பொருட்களை சேமித்து உட்கொள்ளவேண்டும். சமைத்த உணவு பொருட்களை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். உணவு தயாரிக்கும் முன்பும், சாப்பிடும் முன்பும் சோப்பு போட்டு சுத்தமாக கை கழுவ வேண்டும். சாலையோரம் விற்கப்படும் உணவுகளை சாப்பிட கூடாது.

    எளிதில் கிருமி தொற்று ஏற்படக்கூடிய அசைவ உணவு பொருட்களை சுத்தமாக கழுவிய பின்பு உயர் கொதிநிலை அடைந்த பின்பே உணவாக பயன் படுத்த வேண்டும். உணவு உபாதைகள், வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் கஞ்சி வகைகளை நீரிழப்பு ஏற்படாமல் இருக்க உட்கொள்ள வேண்டும். உணவு மற்றும் உணவுப்பொருட்கள் பற்றிய புகார்களுக்கு 9444042322 என்ற எண்ணில் வாட்ஸ் அப் மூலம் புகார் அளிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    சென்னையில் இருந்து இலங்கைக்கு செல்ல இருந்த பயணிகள் விமானத்தில் ரூ.4 கோடி மதிப்புள்ள போதை பவுடர் கடத்தியதாக ராமநாதபுரத்தை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    ஆலந்தூர்:

    சென்னையில் இருந்து இலங்கைக்கு இன்று காலை பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது.

    அதில் செல்ல இருந்த பயணிகளை மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் சோதனை செய்தனர். ராமநாதபுரத்தைச் சேர்ந்த அமீர் ஷாஜகானை சோதனை செய்தபோது உள்ளாடையில் சுமார் 4 கிலோ போதை பவுடர் மறைத்து கடத்தி வந்தது தெரிந்தது.

    அதனை அவர் காண்டத்தில் கட்டி வைத்திருந்தார். போதை பவுடரை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 4 கோடியாகும்.

    இதையடுத்து அமீர் ஷாஜகானை அதிகாரிகள் கைது செய்து போதை தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. அவர் கடத்தி வந்தது எந்த வகையான போதை பவுடர் என்பது தெரியவில்லை. அதனை பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர்.
    திருக்கழுக்குன்றம் அருகே வீட்டுச்சுவர் இடிந்து விவசாயி பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மாமல்லபுரம்:

    திருக்கழுக்குன்றத்தை அடுத்த கோரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கன்னியப்பன் (வயது 75) விவசாயி. கடந்த 4-ந் தேதி அவர் வீட்டில் தூங்கினார்.

    அப்போது பலத்த மழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து கன்னியப்பன் மீது விழுந்தது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.

    உடனடியாக அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி கன்னியப்பன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரு கிறார்கள்.


    மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கையினை எதிர்த்து காஞ்சீபுரத்தின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டம் மற்றும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் காஞ்சி.ஜீவீ.மதியழகன் தலைமையில் காந்தி ரோடு பெரியார் நினைவுத்தூண் அருகே மத்திய அரசினை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசு மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் கூறி மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    ஆர்பாட்டத்தில் நிர்வாகிகள் பிரபாகரன், இராம.நீராளன், சேரன், நாதன், கருணாமூர்த்தி, சுகுமாரன், சங்கரலிங்கம், வீரபத்திரன் மற்றும் ஏராளமான கட்சியினர் கலந்து கொண்டனர்.

    பணமதிப்பு நீக்க நடவடிக்கையினை எதிர்த்து காஞ்சிபுரத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலம் நடத்தி பொது மக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கினர்.

    காஞ்சீபுரம் நகர காங்கிரஸ் சார்பில் தலைவர் ஆர்.வி.குப்பன் தலைமையில் பெரிய காஞ்சீபுரம் கங்கை கொண்டான் மண்டபம் அருகே மத்திய அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து பிரச்சார ஊர்வலம் தொடங்கியது. நான்கு ராஜ வீதிகள் மற்றும் காஞ்சீபுரம் நகரின் முக்கிய சாலைகள் வழியாக கருப்பு பேட்ஜ் அணிந்து சென்ற காங்கிரஸ் கட்சியினர் பா.ஜ.க. அரசுக்கு எதிரான துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கினர். மாவட்ட பொது செயலாளர் லோகநாதன், மாவட்ட செயலாளர் குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மூர்த்தி, வட்டாரத் தலைவர் அவளுர் சீனிவாசன், நிர்வாகிகள் தணிகாசலம், ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை அதனால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி குறித்து முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் அளித்த பேட்டிகளின் தொகுப்பு அடங்கிய புத்தகத்தினை முன்னாள் சேர்மனும் காங்கிரஸ் கட்சி நிர்வாகியுமான பரந்தூர் சங்கர் தலைமையில் காங்கிரஸ் நிர்வாகி அளவூர் நாகராஜன் வெளியிட்டார்.

    புத்தகங்கள் பொது மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. கட்சி நிர்வாகிகள் பன்னீர்செல்வம், பச்சையப்பன், முத்தியால்பேட்டை ராஜசேகர், கந்தவேல், நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    துபாயில் இருந்து திருவனந்தபுரம் வழியாக சென்னை வந்த விமானத்தில் 4½ கிலோ தங்கம் கடத்தியது தொடர்பாக கேரள பெண்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஆலந்தூர்:

    துபாயில் இருந்து திருவனந்தபுரம் வழியாக சென்னை வந்த விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து இன்று காலை சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    அப்போது கேரளாவைச் சேர்ந்த ஆதிராவ் வர்கீத், ஜெசிவர்கீத் ஆகியோர் உடலில் மறைத்து வைத்து 4½ கிலோ தங்கம் கடத்தி வந்தது தெரிந்தது. அதை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1.35 கோடியாகும்.

    இது தொடர்பாக தங்கம் கடத்திய பெண்கள் கூறும்போது, “துபாயில் இருந்து வேறு நபர்கள் விமான இருக்கையின் கீழே மறைத்து தங்கத்தை கடத்தி வந்தனர். நாங்கள் திருவனந்தபுரத்தில் இருந்து அந்த நபர்களிடம் தங்கத்தை வாங்கி எடுத்து வந்தோம்” என்று கூறியுள்ளனர்.

    இதைத் தொடர்ந்து துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்தவர்கள் யார்? யாருக்கு கடத்தப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து அதனை சுற்றி உள்ள 21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து அதனை சுற்றி உள்ள 21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கடந்த 8 நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாக குடியிருப்புப்பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

    காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் உள்ள ஏரி முழு கொள்ளளவை எட்டி 23.3 அடியில் நீர் உள்ளது. இதன் காரணமாக அணையிலிருந்து உபரி நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர் கிளியாற்றின் வழியாக திறந்து விடப்பட்டு வருவதால் ஆற்றின் கரையோரத்தில் உள்ள 21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    அணையின் அருகே யாரும் செல்ல வேண்டாம் எனவும், புகைப்படம் அல்லது வீடியோ எடுக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுரை வழங்கியுள்ளது.
    கமல் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

    ஆலந்தூர்:

    பள்ளிக்கரணை அருகே உள்ள நாராயணபுரம் ஏரி தொடர்மழையால் முழுவதும் நிரம்பி வழிகிறது. ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர் அருகில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்து உள்ளது.

    இந்த நிலையில் நாராயணபுரம் ஏரியை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் மனைவி பிரேமலதா மற்றும் கட்சி நிர்வாகிகள் வந்து இருந்தனர்.

    ஏரியில் போடப்பட்ட மணல் மூட்டைகளில் விஜயகாந்த் சிறிது தூரம் நடந்து சென்று பார்வையிட்டார். அவரை கட்சி நிர்வாகிகள் கைதாங்கலாக அழைத்து சென்றனர்.

    பின்னர் விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-


    கமல், புதிய கட்சி தொடங்கினால் வரவேற்பேன். அவர் கட்சி தொடங்கி கிளை கழகங்கள் ஆரம்பிக்கட்டும். அதன் பின்னர் கூட்டணி எல்லாம் பற்றி பேசிக்கொள்ளலாம். யார் கட்சி தொடங்கினாலும் வரவேற்கிறேன். திரைப்படத்துரைக்கு கமல் என்ன செய்தார் என்று அவரிடம் தான் கேட்க வேண்டும். அரசு நிதிகள் மக்களுக்கு ஒதுக்கப்படவில்லை. அரசியல் வாதிகளுக்குதான் ஒதுக்கப்படுகிறது.

    பிரேமலதா கூறும்போது, “பிரதமர் மோடி- கருணாநிதி சந்திப்பை அரசியல் ஆக்க வேண்டாம்” என்றார்.

    மாமல்லபுரம், தேவநேரி, பூஞ்சேரி பகுதிகளில் அரசு அனுமதி இல்லாமல் அமைக்கப்பட்டிருந்த இறால் பண்ணைகளை பொக்லைன் எந்திரம் மூலம் அதிகாரிகள் அகற்றினர்.
    மாமல்லபுரம்:

    கனமழை காரணமாக மாமல்லபுரம் பக்கிங்காம் கால்வாயில் அதிகளவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    மாமல்லபுரம், தேவநேரி, பூஞ்சேரி பகுதிகளில் அரசு அனுமதி இல்லாமல் அமைக்கப்பட்ட இறால் பண்ணைகளால் வெள்ளம் வேகமாக செல்வது தடைபட்டு அருகே உள்ள குடியிறுப்பு பகுதி மற்றும் மாமல்லபுரம் பேரூராட்சி குப்பை கிடங்கின் உள்ளே புகுந்தது. இதனால் வெள்ள அபாயமும் தொற்றுநோய் பரவும் நிலையும் ஏற்பட்டது.

    இதையறிந்த மழை வெள்ள கண்காணிப்பு அலுவலர் சிவசண்முகராஜா கால்வாயை பார்வையிட்டு உடனடியாக இறால் பண்ணைகளை அகற்றும்படி மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய் துறையினருக்கு உத்தரவிட்டார்.

    இதையடுத்து பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு இறால் பண்ணைகளை அதிகாரிகள் அகற்றினர். கால்வாயை ஆக்கிரமிப்பு செய்த மாமல்லபும் நகர அ.தி.மு.க முக்கிய பிரமுகருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு விசாரணை நடக்கிறது.

    தாம்பரத்தை அடுத்த முடிச்சூரில் இன்று வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிளை தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டார்.

    தாம்பரம்:

    வடகிழக்கு பருவ மழையையொட்டி சென்னை புறநகர் பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. வீடுகளில் மழை வெள்ளம் புகுந்ததால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    தாம்பரத்தை அடுத்த முடிச்சூரில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியேறினர்.

    இந்த நிலையில் தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று வெள்ளம் பாதிக்கப்பட்ட முடிச்சூர் பகுதிகளை பார்வையிட்டார்.

    அப்போது பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் குடை பிடித்தபடி வரதராஜபுரம், மகாலட்சுமி நகரில் தண்ணீரில் நடந்து சென்று வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்பகுதி பொதுமக்கள், நலச்சங்க நிர்வாகிகளிடம் குறைகளை கேட்டார். அப்போது அவர்கள் மு.க.ஸ்டாலினிடம் வெள்ள பாதிப்புகள் குறித்து விளக்கி கூறினார்கள். அதன்பின் அவர் அங்குள்ள ஒரு கட்டிடத்தில் மேல் ஏறி குடியிருப்புகளை சூழ்ந்துள்ள வெள்ளத்தை பார்வையிட்டார்.


    அதன்பின் மு.க.ஸ்டாலின் பெருங்களத்தூர் அரசு பள்ளி முகாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டு இருந்த 500 பேருக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். பிறகு முடிச்சூர் சாலை கிருஷ்ணா நகர் பகுதியையும் பார்வையிட்டார்.

    அவருடன் மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன், எம்.எல்.ஏ.க்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, ஒன்றிய செயலாளர் படப்பை மனோகர் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் சென்றனர்.

    காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் அடுத்த சோமங்கலம் மலைப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் விவசாயி. இவர் மாடுகளை ஓட்டிக்கொண்டு மலைப்பட்டு சாலையில் வந்து கொண்டிருந்தபோது எதிரேவந்த இருசக்கர வாகனம் ராஜேந்திரன் மீது மோதி நிற்காமல் சென்று விட்டது.

    படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக படப்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    மறைமலைநகர் அடுத்த அஞ்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமிபதி. தனியார் கம்பெனியில் பணிபுரிகிறார். இவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது கொண்டமங்கலம் என்ற இடத்தில் வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்து சிகிச்சைக்காக பொத்தேரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    ×