என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    காஞ்சிபுரம் நகராட்சிக்கு சொத்து வரி மற்றும் குடிநீர் வரி செலுத்தாததால் ரூ.42 கோடி நிலுவையில் உள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் பெருநகராட்சி ஆணையரும் தனி அதிகாரியுமான சர்தார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காஞ்சீபுரம் நகராட்சி முழுவதும் 51 வார்டுகளிலும் 157 டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்களை கொண்டு வீடு வீடாக சென்று டெங்கு ஒழிப்பு பணி செய்து டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    காஞ்சீபுரம் நகராட்சி பகுதியில் டெங்கு கொசு ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் வசூலாகியுள்ளது. மீதி வசூல்செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    நகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் சீராக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    காஞ்சீபுரம் நகராட்சியில் உள்ள 51 வார்டுகளிலும் நகராட்சியை சேர்ந்த பில் கலெக்டர்கள், நகராட்சி வருவாய் அதிகாரிகள், நகர அபிவிருத்தி அதிகாரிகள் வீடு வீடாக சென்று மக்கள் தொகை கணக்கெடுத்து வருகின்றனர்.

    இந்த தொகை கணக்கெடுக்கப்பட்டு அதன்படி நகர வார்டுகள் சீரமைக்கப்பட உள்ளது. தற்போது நகராட்சியில் 2 லட்சத்து 34 ஆயிரம் பேர் உள்ளனர். இந்த கணக்கெடுப்பு முடிந்ததும் மேலும் 50 ஆயிரம் பேர் கூடுதலாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    காஞ்சீபுரம் நகராட்சியில் வழங்கப்படும் பிறப்பு-இறப்பு சான்றிதழ்கள் கட்டணம் உயர்ந்து இன்று முதல் ரூ.100 (வியாழக்கிழமை) வசூலிக்கப்படும். மேலும் இந்த பிறப்பு-இறப்பு சான்றிதழ்களை இலவசமாக இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கான வசதி நகராட்சியில் செய்யப்பட்டுள்ளது.

    நகராட்சியை சேர்ந்தவர்கள் தங்கள் நகராட்சி இணையத்தளத்தில் தங்களது குடும்ப அட்டை, தொலைபேசி எண், ஆதார் எண் இணைத்து தனி கணக்கு தொடங்கி அதற்காக வழங்கப்படும் கடவு எண்ணை (பாஸ்வேர்டு) பயன்படுத்தி பிறப்பு-இறப்பு சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யலாம். மேலும் இதன் மூலம் வரியையும் செலுத்திக் கொள்ளலாம்.

    காஞ்சீபுரம் நகராட்சியில் வணிகளர்கள் பாதாள சாக்கடை இணைப்புகளுக்கான பராமரிப்பு கட்டணம் செலுத்தாமல் உள்ளனர்.

    வணிகர்களுக்கான 7 ஆயிரம் பாதாள சாக்கடை இணைப்புகளில் 5 ஆயிரம் பாதாள சாக்கடை இணைப்புகளுக்கான கட்டணம் செலுத்தாமல் உள்ளனர். இதனால் இவர்களுடைய இணைப்பு துண்டிக்கும் பணி தொடங்கப்பட உள்ளது.

    காஞ்சீபுரம் நகராட்சியில் சொத்துவரி ரூ.22 கோடியே 80 லட்சமும், குடிநீர் வரி ரூ.7 கோடியே 35 லட்சமும், பஸ்நிலையம், நகராட்சி இடங்களில் உள்ள கடைகளில் வாடகை பாக்கி ரூ.4 கோடியே 19 லட்சமும், பாதாள சாக்கடை பராமரிப்பு கட்டணம் ரூ.8 கோடியே 25 லட்சமும் நிலுவையில் உள்ளது.

    எனவே காஞ்சீபுரம் பெருநகராட்சியை சேர்ந்த பொதுமக்கள் சொத்துவரி, குடிநீர்வரி, பாதாள சாக்கடை கட்டணம், வாடகை பாக்கி ஆகியவற்றை செலுத்தாதவர்கள் உடனடியாக செலுத்தி நடவடிக்கையை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    மதுராந்தகம் அருகே கல்லூரி பேராசிரியர், அவரது மனைவியை தாக்கி மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையர்கள் பணம் மற்றும் நகையை பறித்துச் சென்றனர்.
    மதுராந்தகம்:

    செங்கல்பட்டு, வேதாச்சலம் நகரை சேர்ந்தவர் ராஜசேகர். தனியார் கல்லூரியில் பேராசிரியராக உள்ளார். இவரது மனைவி அன்பு.

    நேற்று மாலை ராஜசேகர், மனைவியுடன் மதுராந்தகம் அருகே முதுரை கிராமத்தில் உள்ள மாமியார் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    பின்னர் இருவரும் திரும்பி வந்து கொண்டு இருந்தனர். அரையபாக்கம் அருகே சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் வந்தபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென ராஜசேகர் - அன்புவை தாக்கி அவர்கள் வைத்திருந்த பையை பறித்தனர்.

    இதில் நிலை தடுமாறிய ராஜசேகரும், அன்பும் மோட்டார் சைக்கிளோடு கீழே விழுந்தனர். இதில் அவர்கள் 2 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனே கொள்ளையர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். பையில் ரூ. 15 ஆயிரம், ¼ பவுன் நகை இருந்தது.

    இது குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மதுராந்தகம் அருகே மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த 2 போலி டாக்டர்களை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
    மதுராந்தகம்:

    தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் நோய் மிரட்டி வருகிறது. போலி டாக்டர்களிடம் காய்ச்சல் பாதித்தவர்கள் சிகிச்சை பெறுவதால் உயிர் இழப்பு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து போலி டாக்டர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் காஞ்சீபுரம் - திருவள்ளூர் மாவட்டத்தில் போலி டாக்டர்கள் சிக்கும் சம்பவம் தொடர்கிறது.

    மதுராந்தகத்தை அடுத்த மாமண்டூரில் போலி டாக்டர்கள் ஆஸ்பத்திரி நடத்துவதாக காஞ்சீபுரம் மாவட்ட சுகாதாரத்துறையினருக்கு புகார்கள் வந்தன.

    இதைத் தொடர்ந்து சுகாதாரத்துறை இணை இயக்குனர் சுந்தர்ராஜ் தலைமையில் அதிகாரிகள் மாமண்டூரில் இயங்கி வந்த சக்தி வினாயகா கிளினீக்கில் ஆய்வு செய்தனர்.

    அப்போது செங்கல்பட்டைச் சேர்ந்த தட்சணாமூர்த்தி மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரிந்தது. அவர் பிளஸ்-2 மட்டும் படித்து இருந்தார்.

    அவரை படாளம் போலீசார் கைது செய்தனர். கிளினிக்கில் இருந்த ஏரளமான மாத்திரைகள், மருந்து பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதேபோல அச்சரப்பாக்கம் அடுத்த எலப்பாக்கம் கிராமத்தில் 10-ம் வகுப்பு வரை மட்டும் படித்து விட்டு தீபம் கிளினிக் என்ற பெயரில் ஆஸ்பத்திரி நடத்தி வந்த காண்டீபன் சிக்கினார்.

    அவரை ஒரத்தி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அச்சரப்பாக்கத்தை அடுத்த கடமலைபுத்தூரில் உள்ள ஆஸ்பத்திரியில் சுகாதார அதிகாரிகள் ஆய்வு செய்ய வந்தனர்.

    அப்போது ஆஸ்பத்திரி நடத்திய கருங்குழியைச் சேர்ந்த பாண்டுரங்கன் என்பவர் மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளிப்பது தெரிந்தது. அவர் லேப்-டெக்னீசியன் படித்து உள்ளார்.

    ஆஸ்பத்திரிக்கு அதிகாரிகள் வந்தபோது போலி டாக்டர் பாண்டுரங்கன் அங்கு இல்லை. இதையடுத்து அவரது வீட்டுக்கு அவர்கள் சென்றனர்.

    சுகாதார அதிகாரிகள் வீட்டுக்கு வருவதை கண்டதும் அங்கிருந்த பாண்டுரங்கன் சுவர் ஏறிக்குதித்து தப்பி ஓடி விட்டார்.

    இதுகுறித்து அச்சரப்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆண் சிங்க குட்டியை இறந்த நிலையில் ஈன்ற, பெண் சிங்கம் ‘மாலா’ கர்ப்பப்பை கிழிந்ததால் பரிதாபமாக இறந்தது.
    வண்டலூர்:

    வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் நேற்று வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் தற்போது 15 சிங்கங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதில் ‘மாலா’ என்ற 6 வயது பெண் சிங்கம், கடந்த 13-ந் தேதி காலை ஆண் சிங்ககுட்டி ஒன்றை இறந்த நிலையில் ஈன்றது.

    பிரசவத்துக்கு பிறகு பெண் சிங்கம் ‘மாலா’வை பூங்கா மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது அதனுடைய கர்ப்பப்பை கிழிந்து போனது தெரியவந்தது. அதன் காரணமாக நேற்று காலை 8.30 மணிக்கு பெண் சிங்கம் ‘மாலா’ பரிதாபமாக இறந்தது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இது குறித்து பூங்கா உயர் அதிகாரியிடம் கேட்டபோது:-

    பெண் சிங்கம் ‘மாலா’வுக்கு கடந்த 13-ந் தேதி காலை 9.30 மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அதற்கு சிங்க குட்டி பிறக்கும்போது தலை முதலில் வருவதற்கு மாறாக, கால்கள் முதலில் வெளியே வந்தன. இதனால் சிங்க குட்டி இறந்த நிலையில் பிறந்தது. அப்படி கால்கள் வெளியே வரும்போது தாய் சிங்கம் ‘மாலா’வின் கர்ப்பப்பை அதிக அளவில் கிழிந்துவிட்டது.

    இதன் காரணமாக ‘மாலா’வின் உடல் நிலை மோசம் அடைந்தது. ஆனாலும் பூங்கா மருத்துவமனையில் அதற்கு மருத்துவ குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் பெண் சிங்கத்தின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது.

    பிரேதபரிசோதனைக்கு பிறகு ‘மாலா’வின் உடல் பூங்கா வளாகத்தில் புதைக்கப்பட்டது. இறந்து போன அந்த பெண் சிங்கம், வண்டலூர் உயிரியல் பூங்காவிலேயே பிறந்ததாகும். தற்போது பூங்காவில் சிங்கங்களின் எண்ணிக்கை 14 ஆக குறைந்து உள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    உத்திரமேரூர் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மரணம் அடைந்த செய்து அறிந்து மாவட்ட அவைத் தலைவர் குண்ணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஏராளமான அ.தி.மு.க.வினர் அஞ்சலி செலுத்தினர்.

    காஞ்சீபுரம்:

    உத்திரமேரூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. நரசிம்ம பல்லவன் (வயது 71). இவர் குடும்பத்துடன் உத்திரமேரூரில் வசித்து வந்தார்.

    நேற்று முன்தினம் இரவு நரசிம்மபல்லவனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு காஞ்சீபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். நேற்று இரவு சிகிச்சை பலனின்றி நரசிம்மபல்லவன் மரணம் அடைந்தார்.

    அவருக்கு சூடாமணி என்ற மனைவியும் 4 மகள்களும் உள்ளனர்.

    உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியில் 1984-ம் ஆண்டு சட்ட மன்ற உறுப்பினராக தேர்ந் தெடுக்கப்பட்டார். இவர் உத்திரமேரூர் ஒன்றிய செயலாளராகவும் பதவி வகித்தார்.

    1987-ல் அதிமுக ஜானகி அணி மற்றும் ஜெயலலிதா அணிகளாக பிளவு பட்டபோது ஜெயலலிதா அணி சார்பில் அவர் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியில் சேவல் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றார்.

    மரணம் அடைந்த நரசிம்ம பல்லவனின் உடல் அவரது சொந்த ஊரான உத்திரமேரூருக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வாலாஜாபாத். பா. கணேசன், மாவட்ட அவைத் தலைவர் குண்ணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஏராளமான அ.தி.மு.க.வினர் அஞ்சலி செலுத்தினர்.

    கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடல்போல் காட்சி அளிக்கும் பல்லாவரம் ஏரி பராமரிக்கப்படாமல் புதர்கள் மண்டி காட்சி அளிக்கிறது. சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    சென்னை:

    பல்லாவரத்தில் இருந்து துரைப்பாக்கம் செல்லும் சாலையில் பல்லாவரம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் அருகிலேயே ஜி.எஸ்.டி. ரோடு உள்ளது.

    கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடல்போல் காட்சி அளிக்கும் இந்த ஏரி பராமரிக்கப்படாமல் புதர்கள் மண்டி பரிதாபமாக காட்சி அளிக்கிறது. அதோடு பக்கத்தில் உள்ள நகராட்சி மற்றும் பஞ்சாயத்து பகுதிகளில் குவியும் குப்பைகளும் தினமும் லாரி லாரியாக இந்த ஏரிக்குள் கொட்டப்படுகிறது.

    பல அடி உயரத்துக்கு மலைபோல் குப்பைகள் குவிந்து ஏரியின் பெரும்பகுதி குப்பைக்கிடங்காக மாறி விட்டது. தண்ணீர் வெளியேறும் கால்வாயும், வரத்து கால்வாயும் காணாமல் போய்விட்டன.

    தற்போது பெய்து வரும் மழையால் ஏரிக்குள் ஆங்காங்கே குட்டைபோல் தண்ணீர் தேங்குகிறது. இந்த ஏரிப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கூறும்போது, “கால்வாய் காணாமல் போய்விட்டது.

    இப்போது ஏரியையும் கொஞ்சம் கொஞ்சமாக நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இதை தூர்வாரி பராமரித்தால் பல மாதங்கள் தண்ணீர் தேக்கி வைப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். இந்த பகுதியில் குடிநீர் பிரச்சினையும் தீரும்” என்றனர்.

    பொதுமக்கள் படும் ஆதங்கம் புரிகிறது. சம்பந்தப்பட்ட துறையினர் கண்களுக்கு தெரியுமா என்பதுதான் இப்போதைய கேள்வி.

    பள்ளிக்கரணை பகுதியில் நாராயணபுரம் ஏரியின் 3 புறமும் புதிதாக கரை கட்டி அதன் மீது நடைபாதை அமைக்க முடிவு செய்துள்ளனர்.

    சென்னை:

    பல்லாவரம் - துரைப்பாக்கம் 200 அடி சாலையில் பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனை அருகே நாராயணபுரம் ஏரி உள்ளது.

    இந்த ஏரி நிரம்பியதும் அதில் இருந்து வெளியேறும் தண்ணீர் பல்லாவரம் கால்வாய் வழியாக கைவேலி செல்லும்.

    இந்த ஏரியின் நடுவே 200 அடி சாலை அமைந்ததால் ஏரி இரண்டாக பிரிந்தது. சரியான பராமரிப்பு இல்லாததால் ஏரியின் கொள்ளளவும் குறைந்தது. தண்ணீர் வெளியேறும் கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டன.

    இதற்கு முன்பு வரை ஏரிக்கு பெரிய அளவில் தண்ணீர் வராததால் ஆபத்து எதுவும் ஏற்படவில்லை. ஆனால் 2015-ம் ஆண்டு பெய்த பெருமழையால் ஏரி நிரம்பி 200 அடிசாலையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. கரையில் உள்ள குடியிருப்பு பகுதிகள் அனைத்தும் தண்ணீர் சூழ்ந்தது. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்கப்பட்டது.

    இந்த சம்பவத்துக்கு பிறகும் இந்த ஏரியை பராமரிக்க கடந்த 2 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இந்த நிலையில் கடந்த வாரம் பெய்த கனமழையால் ஏரி நிரம்பியது. அருகில் உள்ள எல்.ஐ.சி. நகர், அண்ணாநகர் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. உடனே கால்வாய்கள் வெட்டப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இப்போது ஏரியில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட தண்ணீர் வெளியேறி விட்டது.

    கண் முன்னால் பெருகிய தண்ணீர் வீணாகி வருவதை பார்க்கும் பொது மக்கள் இந்த ஏரியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வில்லையே என்று ஆதங்கப்பட்டனர். இந்த பகுதியில் நிவாரண பணிக்காக முகாமிட்டிருக்கும் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிகாரிகள் ஏரியை பார்வையிட்டு கரை கட்டுவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

    இதையடுத்து பொதுப் பணித்துறை என்ஜினீயர்கள் ஏரியை ஆய்வு செய்து திட்ட மதிப்பீடு தயார் செய்துள்ளனர். ஏரியின் 3 புறமும் புதிதாக கரை கட்டி அதன் மீது நடைபாதை அமைக்க முடிவு செய்துள்ளனர். மேலும் தண்ணீர் வெளியேறுவதற்கு புதிய ‌ஷட்டர் அமைக்கப்பட உள்ளது.

    தற்போது ஆக்கிரமிப்பு கால்வாய் வெட்டி விடப்பட்டுள்ளது. இந்த கால்வாயில் மீண்டும் ஆக்கிரமிப்பு வராமல் இருப்பதற்காக இருபுறமும் கரை கட்டவும் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. பருவ மழை முடிந்ததும் இந்த பணிகள் தொடங்கும் என்று அதிகாரி கள் தெரிவித்தனர்.

    ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களிடம் மட்டும் இல்லாமல் அமைச்சர்கள் வீடுகளிலும் சோதனை நடத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

    சோழிங்கநல்லூர்:

    பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சசிகலா, தினகரன் என்று ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் மட்டும் சோதனையிடாமல் அவர்களுக்கு உதவியாக இருந்த ஓ.பி.எஸ்., இ.பி.எஸ், உடன் இருக்கும் அமைச்சர்கள் வீட்டிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட வேண்டும்.

    ஜெயலலிதா மரணம் தொடர்பான சி.டி.யை டி.டி. வி.தினகரன் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு அளித்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.


    குஜராத் தேர்தலை முன்னிட்டு ஜி.எஸ்.டி. வரி குறைப்பு நடந்திருக்கிறது. கைத்தறி மற்றும் கைவினை பொருட்கள் மீதும் ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி உறுதியாக இருக்கிறது என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
    ஆலந்தூர்:

    தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. தலைவர் கருணாநிதி, இந்தியாவின் மூத்த தலைவர். அவரை பிரதமர் சென்று பார்த்தது மரியாதை நிமித்தமான சந்திப்பு. இதில் எந்தவிதமான அரசியலும் இல்லை என தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும், நானும் விளக்கி சொல்லிவிட்டோம்.

    தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி பலமாக, உறுதியாக இருக்கிறது. மோடி சந்தித்ததால் தமிழகத்தில் அரசியல் தாக்கமோ, பாதிப்போ ஏற்படுத்தாது. தி.மு.க.-காங்கிரஸ் கட்சி இடையே எந்த பிரச்சினையும் இல்லை.

    இந்திரா காந்தி நூற்றாண்டு விழா நிறைவு பொதுக்கூட்டம் கோவையில் 18-ந்தேதி நடக்கிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க தி.மு.க. உள்பட அனைத்து கட்சி தலைவர்களையும் அழைத்து உள்ளோம். இதில் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

    அமைச்சர்கள், தலைமை செயலாளர், சேகர் ரெட்டி, அன்புநாதன் உள்பட பலர் வீட்டில் வருமான வரி சோதனை நடந்தது. அதன்பின்னர் யார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது?. ஜெயலலிதா மறைவுக்குப்பின் நடந்தவை, தற்போது நடக்கும் வருமான வரி சோதனைகள் குறித்து தெளிவுபடுத்த வேண்டும்.

    அ.தி.மு.க. உடைவதற்கு முன் இதை செய்திருக்க வேண்டியது தானே. ஒரு தரப்பினரை மட்டும் துரத்தி, துரத்தி சோதனை செய்வது ஏன்?. இரட்டை இலை சின்னம் ஒரு அணிக்கு தர முடிவு செய்துவிட்டார்கள். மற்றொரு தரப்பை பலவீனப்படுத்த வேண்டும்.

    இரட்டை இலை சின்னம் பெறும் அணியுடன் வருங்காலத்தில் கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலை சந்திக்க வேண்டும். இதற்காக ஒரு தரப்பை மிரட்டி பலவீனப்படுத்துவதும், மற்றொரு தரப்பை பலப்படுத்துவமான பணியை மத்திய பா.ஜனதா அரசு செய்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காஞ்சீபுரத்தில் 60 வயது மதிக்கத்தக்க பெண் மர்மமான முறையில் இறந்தார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம், மேற்கு ராஜவீதியில் உள்ள தனியார் பள்ளி அருகே சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெண் உயிருக்கு போராடியபடி கிடந்தார். பெரிய காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக் டர் பழனி மற்றும் போலீசார் அவரை மீட்டு காஞசீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இறந்த பெண் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் எப்படி இறந்தார்? என்பது தெரியவில்லை. அவரது பெயர் நாகம்மாள் என்பது மட்டும் தெரியவந்துள்ளது. இது குறித்து பெரியகாஞ்சீபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காஞ்சீபுரம், ஆஸ்பத்திரி சாலையில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் பிணமாக கிடந்தார். அவர் யார்? எப்படி இறந்தார் என்று தெரியவில்லை. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.     
    ஸ்ரீபெரும்புதூர் அருகே நடந்து சென்று கொத்தனார் ரோட்டில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூரை அடுத்த கடுவன்சேரியை சேர்ந்தவர் பாலுசாமி. கொத்தனார். இவர் நேற்று இரவு பொத்தனூர் திருமலை நகரில் நடந்து சென்ற போது ரோட்டில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்து விட்டார்.

    இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது பற்றி ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    உத்திரமேரூரில் உரக்கடை ஜன்னலை உடைத்து ரூ.3 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    உத்திரமேரூர் பஜார் வீதியில் உரக்கடை நடத்தி வருபவர் வேலாயுதம். இவர் விற்பனை பணம் ரூ. 3 லட்சத்தை கடையில் வைத்து பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார்.

    இன்று காலை கடையை திறக்க வந்தபோது ஜன்னல் உடைந்து கிடந்தது. கடையின் உள்ளே சென்று பார்த்த போது கல்லாப்பெட்டியில் இருந்த ரூ. 3 லட்சத்தை காணவில்லை.

    நள்ளிரவில் வந்த கொள்ளை கும்பல் கடையின் ஜன்னலை உடைத்து புகுந்து பணத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிந்தது.

    இது குறித்து உத்திரமேரூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×