என் மலர்tooltip icon

    செய்திகள்

    சொத்து வரி, குடிநீர் வரி செலுத்தாததால் காஞ்சீபுரம் நகராட்சிக்கு ரூ.42 கோடி வரி பாக்கி
    X

    சொத்து வரி, குடிநீர் வரி செலுத்தாததால் காஞ்சீபுரம் நகராட்சிக்கு ரூ.42 கோடி வரி பாக்கி

    காஞ்சிபுரம் நகராட்சிக்கு சொத்து வரி மற்றும் குடிநீர் வரி செலுத்தாததால் ரூ.42 கோடி நிலுவையில் உள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் பெருநகராட்சி ஆணையரும் தனி அதிகாரியுமான சர்தார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காஞ்சீபுரம் நகராட்சி முழுவதும் 51 வார்டுகளிலும் 157 டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்களை கொண்டு வீடு வீடாக சென்று டெங்கு ஒழிப்பு பணி செய்து டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    காஞ்சீபுரம் நகராட்சி பகுதியில் டெங்கு கொசு ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் வசூலாகியுள்ளது. மீதி வசூல்செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    நகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் சீராக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    காஞ்சீபுரம் நகராட்சியில் உள்ள 51 வார்டுகளிலும் நகராட்சியை சேர்ந்த பில் கலெக்டர்கள், நகராட்சி வருவாய் அதிகாரிகள், நகர அபிவிருத்தி அதிகாரிகள் வீடு வீடாக சென்று மக்கள் தொகை கணக்கெடுத்து வருகின்றனர்.

    இந்த தொகை கணக்கெடுக்கப்பட்டு அதன்படி நகர வார்டுகள் சீரமைக்கப்பட உள்ளது. தற்போது நகராட்சியில் 2 லட்சத்து 34 ஆயிரம் பேர் உள்ளனர். இந்த கணக்கெடுப்பு முடிந்ததும் மேலும் 50 ஆயிரம் பேர் கூடுதலாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    காஞ்சீபுரம் நகராட்சியில் வழங்கப்படும் பிறப்பு-இறப்பு சான்றிதழ்கள் கட்டணம் உயர்ந்து இன்று முதல் ரூ.100 (வியாழக்கிழமை) வசூலிக்கப்படும். மேலும் இந்த பிறப்பு-இறப்பு சான்றிதழ்களை இலவசமாக இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கான வசதி நகராட்சியில் செய்யப்பட்டுள்ளது.

    நகராட்சியை சேர்ந்தவர்கள் தங்கள் நகராட்சி இணையத்தளத்தில் தங்களது குடும்ப அட்டை, தொலைபேசி எண், ஆதார் எண் இணைத்து தனி கணக்கு தொடங்கி அதற்காக வழங்கப்படும் கடவு எண்ணை (பாஸ்வேர்டு) பயன்படுத்தி பிறப்பு-இறப்பு சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யலாம். மேலும் இதன் மூலம் வரியையும் செலுத்திக் கொள்ளலாம்.

    காஞ்சீபுரம் நகராட்சியில் வணிகளர்கள் பாதாள சாக்கடை இணைப்புகளுக்கான பராமரிப்பு கட்டணம் செலுத்தாமல் உள்ளனர்.

    வணிகர்களுக்கான 7 ஆயிரம் பாதாள சாக்கடை இணைப்புகளில் 5 ஆயிரம் பாதாள சாக்கடை இணைப்புகளுக்கான கட்டணம் செலுத்தாமல் உள்ளனர். இதனால் இவர்களுடைய இணைப்பு துண்டிக்கும் பணி தொடங்கப்பட உள்ளது.

    காஞ்சீபுரம் நகராட்சியில் சொத்துவரி ரூ.22 கோடியே 80 லட்சமும், குடிநீர் வரி ரூ.7 கோடியே 35 லட்சமும், பஸ்நிலையம், நகராட்சி இடங்களில் உள்ள கடைகளில் வாடகை பாக்கி ரூ.4 கோடியே 19 லட்சமும், பாதாள சாக்கடை பராமரிப்பு கட்டணம் ரூ.8 கோடியே 25 லட்சமும் நிலுவையில் உள்ளது.

    எனவே காஞ்சீபுரம் பெருநகராட்சியை சேர்ந்த பொதுமக்கள் சொத்துவரி, குடிநீர்வரி, பாதாள சாக்கடை கட்டணம், வாடகை பாக்கி ஆகியவற்றை செலுத்தாதவர்கள் உடனடியாக செலுத்தி நடவடிக்கையை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×