search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிநீர் வரி"

    • பேரூராட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக சொத்துவரி, குடிநீா் கட்டணம் உள்ளிட்ட வரி இனங்கள் செலுத்தாமல் இருந்தனர்.
    • 2 வீடுகளில் குடிநீா் இணைப்பை நிா்வாகத்தினா் துண்டித்தனா்.

    அவிநாசி

    அவிநாசி பேரூராட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக சொத்துவரி, குடிநீா் கட்டணம் உள்ளிட்ட வரி இனங்கள் செலுத்தாமல் உள்ளவா்களை உடனடியாக செலுத்தக் கோரி செயல் அலுவலா் ராமலிங்கம் உத்தரவிட்டிருந்தாா். இதையடுத்தும் சொத்து வரி மற்றும் குடிநீா் கட்டணம் செலுத்தாத 2 வீடுகளில் குடிநீா் இணைப்பை பேரூராட்சி நிா்வாகத்தினா் சனிக்கிழமை துண்டித்தனா்.

    மேலும் 2022, 2023-ம் ஆண்டு வரையிலான நிலுவையிலுள்ள சொத்துவரி, குடிநீா் உள்ளிட்ட வரியினங்களை பொதுமக்கள் உடனடியாக செலுத்த வேண்டும் என நிா்வாகத்தினா் அறிவுறுத்தியுள்ளனா்.

    • இணையதளத்தின் முழுமையான செயல்பாடுகள் நாளையில் இருந்து நடைமுறைக்கு கொண்டு வரப்பட உள்ளது.
    • கிராம ஊராட்சிகள் எந்த கட்டணத்தையும் இனிமேல் ரொக்கமாக பெறக்கூடாது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் அனைத்து கிராம ஊராட்சிகளின் சேவையை கணினி மூலம் செயல்படுத்துமாறு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம் ஆணையர் தாரேஷ் அஹமது உத்தரவிட்டுள்ளார்.

    இதுகுறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அவர் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஊரகப் பகுதிகளில் பொதுமக்கள் மனைப் பிரிவுகளுக்கான அனுமதி, கட்டிட அனுமதி, தொழிற்சாலைகள் தொடங்க மற்றும் தொழில் நடத்தத் தேவையான அனுமதிகளை எளிதில் பெற ஒற்றைச் சாளர முறையில் இணைய தளம் மூலம் வழங்கப்படும் என்றும் கிராம ஊராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் கட்டணங்கள் இணைய வழி மூலம் செலுத்தும் வசதி உருவாக்கப்படும் என்றும் சட்டசபையில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    கிராம ஊராட்சிகளுக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய வீட்டு வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் போன்றவற்றை தற்போது ஊராட்சி அலுவலகங்களுக்கு நேரில் சென்றோ, ஊராட்சி செயலர் மூலமோ செலுத்த வேண்டியுள்ளது. இச்சேவைகள் அனைத்தும் இணைய வழியில் பெறும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

    மேற்காணும் அறிவிப்புகளுக்கு இணங்க கிராம ஊராட்சிகளில் பொதுமக்கள் எளிதாக தங்களது வரி மற்றும் வரியில்லா வருவாய் இனங்களைச் செலுத்துவதற்கு ஏதுவாக http://vptax.tnrd.tn.gov.in/ எனும் இணையதளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த இணையதளத்தின் முழுமையான செயல்பாடுகள் நாளையில் இருந்து நடைமுறைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

    இதன் மூலம் வீட்டு உரிமையாளர்கள், பயனர்கள், செலுத்த வேண்டிய வீட்டுவரித் தொகை, குடிநீர் கட்டணம், தொழில் வரி ஆகியவை இவ்விணைய தளத்தில் கிராம ஊராட்சிகளில் உள்ளீடு செய்யப்பட்டு உள்ளன. இதன்படி சுமார் 1.38 கோடி தரவுகள் உள்ளீடு செய்யப்பட்டு உள்ளன.

    இவ்விணையதளத்தின் மூலமாக கிராம ஊராட்சிகளுக்கு பொதுமக்கள் கீழ்காணும் வரி மற்றும் வரியில்லா வருவாய் இனங்களைச் செலுத்த இயலும்.

    வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, தொழில் உரிமக்கட்டணம், இதர வரியில்லா வருவாய் இனங்கள் என அனைத்து கட்டிட அனுமதிகளும் இணைய வழியாக மட்டுமே தரப்பட வேண்டும். இதற்காக http://online.ppa.tn.gov.in/ என்ற முகவரி உருவாக்கப்பட்டு உள்ளது.

    ஊரக பகுதிகளில் கட்டிட அனுமதி வழங்கிடும் பொறுப்பு கிராம ஊராட்சியின் செயல் அதிகாரிக்கு வழங்கப்பட்டு உள்ளது.

    கிராம ஊராட்சிகள் எந்த கட்டணத்தையும் இனிமேல் ரொக்கமாக பெறக்கூடாது. ஆன்லைன் மூலம்தான் பெற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த சில மாதங்களாக சோதனை அடிப்படையில் பரிசோதிக்கப்பட்டது.
    • குறைபாடுகள் சரி செய்யப்பட்ட பிறகு கியூ.ஆர்.குறியீட்டை பயன்படுத்துவது தொடர்பான அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையில் கியூ.ஆர்.குறியீட்டை பயன்படுத்தி சொத்துவரி, குடிநீர் வரி செலுத்துவதற்கான வசதி தொடங்கப்பட்டுள்ளது. மின்ஆளுமை மற்றும் ஜி.ஐ.எஸ். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கியூ.ஆர். குறியீடு மூலம் பொது மக்கள் சேவைகளை செயல்படுத்துவதற்கான மாநில அரசின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த புதிய வசதி தொடங்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

    சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை குடிநீர் வாரியம் ஆகியவற்றில் 80 லட்சம் நுகர்வோர் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரின் வீடுகளிலும் கியூ.ஆர். குறியீடு ஒட்டப்படும். அதன் மூலம் பொதுமக்கள் ஸ்கேன் செய்து குடிநீர் வரி, சொத்து வரியை கட்டலாம்.

    மாநகராட்சி பணிகள் தொடர்பாக ஏதேனும் புகார் இருந்தாலும் இந்த கியூ.ஆர். குறியீடு மூலம் தெரிவிக்கலாம்.

    இதற்கு முன்பு மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரியத்துக்கு குறைகள் தொடர்பாக புகார் செய்ய ஒவ்வொரு முறையும் அதிகாரிகளின் நம்பரை தேடி கண்டுபிடிக்க வேண்டும். அல்லது நேரில் செல்ல வேண்டும். இவை இரண்டுமே கடினமானது.

    இந்த பிரச்சினைகளை தடுக்க கோடை வெயில் மற்றும் பருவமழை காலத்தில் இந்த வசதி பயனுள்ளதாக அமையும்.

    கடந்த சில மாதங்களாக இந்த முறை சோதனை அடிப்படையில் பரிசோதிக்கப்பட்டது. அதில் உள்ள குறைபாடுகள் சரி செய்யப்பட்ட பிறகு கியூ.ஆர்.குறியீட்டை பயன்படுத்துவது தொடர்பான அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.

    சொத்துவரி, குடிநீர் வரி செலுத்துதல், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் பெறுதல், பொதுவான குறைகளை பதிவு செய்தல், திட்டங்களுக்கு ஒப்புதல் பெறுதல், வர்த்தக உரிமம் பெறுதல் போன்றவை தொடர்பாகவும் கியூ.ஆர். குறியீடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

    குடியிருப்புகள் தவிர பஸ் நிலையங்கள், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், மயானங்கள், சமூக நல மையங்கள் மற்றும் பொது கழிப்பறைகளிலும் கியூ.ஆர். குறியீடு ஒட்டப்படும்.

    இது தொடர்பாக கட்டுப்பாட்டு மையத்தில் புகார்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தீர்வு காண்பதற்காக அனுப்பப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • குடியிருப்புகள், காலியிடங்களுக்கு வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.
    • குடிநீர் வரி இதுவரை ரூ.6 கோடி வசூலாகி உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சியில் 4 மண்டலங்களில் 60 வார்டுகள் உள்ளன. மாநகராட்சி பகுதிகளில் உள்ள குடியிருப்புகள். காலியிடங்களுக்கு சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி மற்றும் மாநகராட்சி குத்தகை இனங்க ளுக்கான அனுமதிப்பதற்கான வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.

    இதில் மாநகராட்சிக்கு சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி போன்றவை பிரதான வரி வருவாய் ஆகும். இந்த வரி இனங்கள் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை முதல் தவணையிலும் அக்டோபர் முதல் மார்ச் வரை 2-வது தவணையிலும் ஆண்டு தோறும் வசூலிக்கப்பட்டு வருகிறது.

    தற்போது 2-வது தவணை காலம் கடந்த 31 ந் தேதியுடன் முடி வடைந்தது. இதற்காக கடந்த மார்ச் மாதத்தில் வரிபாக்கி வைத்துள்ள வர்களிடம் வரி வசூலிக்க மாநகராட்சி அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்தனர்.

    இதன் பேரில் 2022-2023-ம் ஆண்டில் மாநகராட்சி பகுதியில் சொத்து வரி ரூ.51 கோடி விதிக்கப்பட்டது. அதில் தற்போது 83 சதவீதம் அதாவது ரூ.42 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

    இதில் குடிநீர் வரி ரூ.7 கோடி விதிக்கப்பட்ட நிலையில் இதுவரை ரூ.6 கோடி வசூலாகி உள்ளது. அதாவது 84 சதவீதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தொழில் வரியாக ரூ.13 கோடி விதிக்கப்பட்டதில் ரூ.6 கோடி அதாவது 43 சதவீதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

    குத்தகை, ஏலம் இனங்கள் போன்ற இதர வரி இனங்களுக்கு ரூ.34 கோடி விதிக்கப்பட்டதில் ரூ.22 கோடி அதாவது 60 சதவீதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு மாநகராட்சிக்கு வரி தொகையை நிலுவை வைத்துள்ளவர்கள் வரும் 30-ந் தேதிக்குள் செலுத்திட கடைசி நாள் ஆகும். அதன்பிறகும் வரி தொகையை செலுத்தாமல் இருந்தால் நீதிமன்ற நடவடி க்கை மூலம் சொத்துக்கள் ஜப்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

    • மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
    • குடிநீர் வரி செலுத்தாத 23 வீடுகளில் குடிநீர் இணைப்புகளை பேரூராட்சி அதிகாரிகள் அதிரடியாக துண்டித்தனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்தநிலையில் 2022-23ம் ஆண்டிற்கான குடிநீர் வரியை ஏராளமான குடியிருப்பாளர்கள் செலுத்தவில்லை. இதுகுறித்து பேரூராட்சி ஊழியர்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு பலமுறை சொல்லியும் நிலுவைத்தொகை செலுத்தப்படவில்லை.

    இந்த நிலையில் குடிநீர் வரி செலுத்தாத 23 வீடுகளில் குடிநீர் இணைப்புகளை பேரூராட்சி அதிகாரிகள் அதிரடியாக துண்டித்தனர். வருகிற 28-ந்தேதிக்குள் குடிநீர் கட்டண வரி செலுத்தாத அனைத்து வீடுகளிலும் குடிநீர் இணைப்பு முழுவதும் துண்டிக்கப்படும் என பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றி அரசு தெரிவித்து உள்ளார்.

    • குடிநீர், கழிவுநீர் வடிகால் வரிகளை கட்டாமல் இழுத்தடிப்பதாக கூறப்படுகிறது.
    • போலீசார் பாதுகாப்புடன் சப்தி நடவடிக்கை எடுக்கப்படும் என ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகிறார்கள்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் சிறப்பு நிலை பேரூராட்சி பகுதியில் வணிகம் சார்ந்த விடுதிகள், ரிசார்ட், ஹோட்டல், கடைகள் ஏராளமாக உள்ளது., சுற்றுலா பயணிகள் மூலம் வருவாய் வரும் இவர்களில் சிலர் நீண்ட நாட்களாக பேரூராட்சி நிர்வாகத்திற்கு கட்ட வேண்டிய குடிநீர், கழிவுநீர் வடிகால் வரிகளை கட்டாமல் இழுத்தடிப்பதாக கூறப்படுகிறது.

    இதனால் பேரூராட்சி நிர்வாகம் இன்று அதிரடியாக வரும் 15ம் தேதிக்குள் கட்ட வேண்டும்., இல்லை எனில் இணைப்புகள் துண்டிப்பதுடன், போலீசார் பாதுகாப்புடன் சப்தி நடவடிக்கை எடுக்கப்படும் என ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகிறார்கள். வீடுகளுக்கும் இதே அறிவிப்பை கூறியுள்ளனர்.

    • சொத்து வரி உயர்த்தப்படும் போது அதன் அடிப்படையில் குடிநீர் வரியும் உயர்த்தப்படுவது வழக்கம்.
    • சொத்தின் ஆண்டு மதிப்பை கணக்கிட்டு 30 சதவீதம் வரி உயர்த்தப்பட்டது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கட்டிடங்கள், குடியிருப்புகளுக்கு சொத்து வரி கடந்த ஏப்ரல் மாதம் உயர்த்தப்பட்டது. இதற்கு மாநகராட்சி மன்ற ஒப்புதல் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    சென்னை நகரின் பழைய பகுதிகளுக்கு சொத்து வரி அதிகமாகவும், விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளுக்கு குறைவாகவும் சொத்துவரி உயர்த்தப்பட்டது. ஆண்டு மதிப்பு மற்றும் சொத்து அமைந்து உள்ள தெருவின் மதிப்பு அடிப்படையில் சொத்து வரி உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. முதல்-அரையாண்டுக்கான சொத்து வரி வசூல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    ஏப்ரல்-செப்டம்பர் மாதத்திற்கான சொத்துவரி இந்த மாத இறுதிக்குள் செலுத்த வேண்டும். சென்னையில் 12½ லட்சம் சொத்துவரி உரிமையாளர்கள் உள்ளனர்.

    சொத்துவரியை தொடர்ந்து மின்கட்டணமும் உயர்த்தப்பட்டது. அவை இந்த மாதம் முதல் நடைமுறைக்கு வருகின்றது.

    இந்த நிலையில் குடிநீர் மற்றும் கழிவுநீர் வரியும் 7 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது. சொத்து வரி உயர்த்தப்படும் போது அதன் அடிப்படையில் குடிநீர் வரியும் உயர்த்தப்படுவது வழக்கம். சொத்தின் ஆண்டு மதிப்பை கணக்கிட்டு 30 சதவீதம் வரி உயர்த்தப்பட்டது.

    இதில் 23 சதவீதம் சொத்துவரியாக மாநகராட்சி வசூலிக்கிறது. 7 சதவீதம் குடிநீர் வரியாக சென்னை குடிநீர் வாரியம் வசூலிக்கிறது. குடிநீர் வரி உயர்வும் கடந்த ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வந்துவிட்டது.

    எப்போதெல்லாம் சொத்து வரி உயர்த்தப்படுகிறதோ அப்போது குடிநீர் வரியும் உயரும் என்று குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரிய உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:-

    சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் 7.75 லட்சம் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் உள்ளன. சொத்துவரி உயர்த்தப்பட்ட அளவில் 7 சதவீதம் குடிநீர் வரி வசூலிக்கப்படும்.

    உதாரணத்துக்கு ஒருவருக்கு சொத்துவரி ரூ.1000-ல் இருந்து ரூ.1500 ஆக உயர்ந்து இருக்குமானால் உயர்த்தப்பட்ட ரூ.500-க்கு 7 சதவீதம் குடிநீர் வரி உயர்வு கணக்கிடப்படும். இது வழக்கமான நடைமுறை தான். கடந்த 10 வருடத்திற்கு மேலாக குடிநீர் வரி உயர்த்தப்படவில்லை.

    2022-23 நடப்பு ஆண்டிற்கான முதல் அரையாண்டு குடிநீர் வரி தற்போது வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.120 கோடி வருவாய் கூடுதலாக கிடைக்கும்.

    உயர்த்தப்பட்ட குடிநீர் வரி குறித்து தகவல் எஸ்.எம்.எஸ். மூலம் நுகர்வோருக்கு அனுப்பப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினர்.

    ×