என் மலர்
காஞ்சிபுரம்
பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூரை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மனைவி சாந்தி. இவர்களது மகள் கலைவாணி வயது 14, (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவள் அங்குள்ள ஆதி திராவிடர் அரசு பள்ளியில் 8-வது வகுப்பு படிக்கிறாள்.
அய்யப்பன் இறந்து விட்டார். எனவே குடும்பத்தில் கஷ்டம் ஏற்பட்டது. சாந்தி கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். மகள் கலைவாணியையும் படிக்க வைக்கிறார்.
இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த முரளி (25) என்பவருக்கு தனது மகள் கலைவாணியை திருமணம் செய்து வைக்க சாந்தி முடிவு செய்தார். அதை தொடர்ந்து நேற்று காலை வீட்டில் வைத்து எளிய முறையில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் செங்கல்பட்டில் உள்ள குழந்தைகள் நலவாரியத்துக்கு (சைல்டு வெல்பர்) தகவல் கொடுத்தனர். அதையடுத்து நேற்று காலை வீட்டுக்கு வந்த அதிகாரிகள் சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.
பின்னர் அவளை மீட்டு காப்பகத்துக்கு அழைத்துச் சென்றனர். இதுகுறித்து சங்கர்நகர் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள ஆறுகள், ஏரிகள் போன்ற நீர்நிலைகளில் இருந்து மணல் எடுக்க தடை விதித்து கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழக அரசு உத்தரவிட்டது. ஆண்டுதோறும் நவம்பரில் மணல் எடுக்க தடை நீட்டிப்பதாக அறிவிப்பு வரும்.
இந்நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பில் அடுத்த 3 ஆண்டுகளுக்கு காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள எந்த நீர் நிலைகளிலும் மணல் எடுக்க தடை நீடிப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் தற்போது மாட்டு வண்டிகள், டிராக்டர்கள், இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றில் மணல் திருடப்படுகிறது. மணல் கடத்திய பலர் கைது செய்யப்பட்டனர். பலர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. ஆனாலும் தொடர்ந்து மணல் கடத்தலில் சிலர் ஈடுபட்டு வந்தனர்.
இதையடுத்து மாவட்ட எஸ்.பி. சந்தோஷ் ஹேதிமானி தலைமையில் ஒரு டி.எஸ்.பி., மற்றும் நான்கு இன்ஸ்பெக்டர்கள் கொண்ட தனிப்படை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதுரை அடுத்த வடமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். பெயிண்டர். இவரது மனைவி அனிதா (வயது26). இவர்களது மகள்கள் லத்திகா (3), யாஷிகா (1½).
நேற்று மாலை கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த பிரகாஷ், மனைவி அனிதாவை தாக்கி விட்டு வெளியே சென்று விட்டார்.
சிறிது நேரத்தில் வீட்டில் இருந்து அனிதாவின் அலறல் சத்தம் கேட்டது. சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தபோது, குழந்தைகள் லத்திகா, யாஷிகா ஆகியோர் இறந்து கிடந்தனர். அருகில் அனிதா உயிருக்கு போராடியபடி கிடந்தார்.
அவர் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று இருப்பது தெரிந்தது.
இதையடுத்து அனிதாவை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. 2 குழந்தைகளின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த போது பிரகாஷ் வீட்டில் இல்லாததால் அவரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் நிலையத்துக்கு பிரகாஷ் வந்தார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது.
அனிதாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த உறவினர் ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனை அறிந்த பிரகாஷ் மனைவியை கண்டித்து கள்ளத்தொடர்பை கைவிடுமாறு கூறினார். இதற்கு அனிதா மறுப்பு தெரிவித்தாக தெரிகிறது.
நேற்று மாலை இது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் அனிதாவை தாக்கி விட்டு பிரகாஷ் வெளியில் சென்று விட்டார்.
இதனால் மனவேதனை அடைந்த அனிதா, 2 குழந்தைகளையும் விஷம் கொடுத்து கொன்று, அவரும் தற்கொலைக்கு முயன்று இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.
இது தொடர்பாக பிரகாசிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. அனிதாவிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
கள்ளக்காதல் தகராறில் தாயே 2 மகள்களை விஷம் வைத்து கொன்ற சம்பவம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலக பாரம்பரிய வாரம் வரும் 25-ம் தேதி வரை கடைப்பிடிக்கப்பட உள்ளது. இதற்காக, தொல்லியல் துறை பராமரிக்கும் புராதான சின்னங்களை வரும் 25-ம் தேதி வரை இலவசமாக பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்களை பொதுமக்கள் இலவசமாக பார்க்கலாம்.
கடற்கரை கோவில், கலங்கரை விளக்கம், ஐந்து ரதம் உள்ளிட்டவையை காண ரூ.30 கட்டணம் செலுத்த தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பாரம்பரிய வாரத்தை கொண்டாடும் வகையில் சிறப்பு கண்காட்சி ஆகியவற்றை தொல்லியல் துறை ஏற்பாடு செய்துள்ளது.
சோழிங்கநல்லூர்:
நீலாங்கரை எல்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாபு, தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார்.
இவரும் அதே பகுதியை சேர்ந்த பெண் என்ஜினீயரும் கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்தனர்.
இந்த நிலையில் அந்த பெண்ணின் வீட்டில காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பாபுவிடம் பேசுவதை குறைத்துக் கொண்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பாபு, காதலிக்கு கொலை மிரட்டல் விடுத்தார். தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்தால் முகத்தில் ஆசிட் வீசுவேன் என்று மிரட்டினார்.
இது குறித்து பெண்ணின் பெற்றோர் நீலாங்கரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
புகாரின் பேரில் போலீசார் பாபுவை போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்த போது திருமணம் செய்து கொள்ளும்படி மிரட்டியதை ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து பாபு மீது வழக்குப்பதிவு செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த பண்ருட்டியில் உள்ள குடோன்களில் செம்மரக்கட்டை பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் அப்பகுதியில் உள்ள குடோன்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது ஒரு குடோன் முன்பு நிறுத்தப்பட்டிருந்த லாரியை சோதனை செய்தனர். அதில் செம்மரக் கட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது.
குடோனில் சோதனை செய்தபோது பஞ்சு மூட்டைகளுக்கு நடுவே செம்மரக் கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
லாரி டிரைவரிடம் விசாரணை நடத்திய போது அருகிலுள்ள மற்றொரு குடோனிலும் செம்மரக் கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக கூறினார்.
இதைத் தொடர்ந்து அந்த குடோனிலும் அதிகாரிகள் சோதனையிட்டு செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த 5 லாரிகளையும் கைப்பற்றினர்.
மொத்தம் 30 டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ. 30 கோடி ஆகும். இது தொடர்பாக குடோன் உரிமையாளர்கள் பண்ருட்டியை சேர்ந்த ஒருவரிடமும், சென்னையை சேர்ந்த ஒருவரிடமும் விசாரணை நடந்து வருகிறது. மேலும் 4 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் செம்மரக் கட்டைகள் எப்படி? கிடைத்தது. எங்கு கடத்தப்படுகிறது? இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்-யார்? என்ற விவரத்தை சேகரித்து வருகிறார்கள்.
ஆலந்தூர்:
ஆதம்பாக்கம்- மேடவாக்கம் மெயின் ரோட்டில் சுரேஷ் நகர் உள்ளது. இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த நிலையில் இங்குள்ள 3-வது தெருவில் ‘கேன் குடிநீர்’ சுத்திகரிப்பு மையம் உள்ளது.
இது வடிவேலு என்பவருக்கு சொந்தமானது. இங்கு ஆழ்குழாய் கிணறு மூலம் தண்ணீர் எடுத்து சுத்திகரிப்பு செய்து கேன்களில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது. எனவே, இங்கு தண்ணீர் எடுப்பதை கண்டித்து இன்று அப்பகுதி மக்கள் அங்கு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
‘5எச்.பி’ திறன் கொண்ட மோட்டார்கள் மூலம் தண்ணீர் எடுக்கப்படுவதாகவும் அதனால் குடியிருப்பு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் இப்போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தின் போது ‘கேன் குடிநீர்’ மைய உரிமையாளர் வடிவேலுவுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மெட்ரோ வாட்டர் அனுமதியுடன் தான் இங்கு தண்ணீர் எடுக்கப்படுகிறது என உரிமையாளர் வடிவேலு தெரிவித்தார்.
அதை தொடர்ந்து ‘கேன் குடிநீர்’ மையத்துக்கு வழங்கப்பட்ட அனுமதியை மெட்ரோ வாட்டர் நிர்வாகம் ரத்து செய்ய வேண்டும் இல்லாவிட்டால் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என சுரேஷ் நகர் பகுதி மக்களும், நல சங்கத்தினரும் தெரிவித்தனர்.
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தங்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் மாநில அரசை மக்கள் தேர்ந்தெடுத்து உள்ளனர். அப்படி இருக்கும் போது பா.ஜனதா ஆட்சி செய்யாத மாநிலங்களில் மாநில அரசின் உரிமைகளில் கவர்னர் தலையிடுவது எந்த வகையில் நியாயம். அதற்கான உத்தரவு எங்கிருந்து வருகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் உரிமையில் மத்திய பா.ஜனதா அரசு தலையிடுவது தெளிவாக தெரிகிறது.
மத்திய அரசை பா.ஜனதா ஆட்சி செய்யும் நிலையில் மத்திய அரசு அதிகாரிகளை ஜனாதிபதி அழைத்து ஆலோசனை நடத்த முடியுமா?

மத்திய அரசின் செயல்பாடுகளில் ஜனாதிபதி தலையிட்டால் பிரதமர் மோடி ஏற்றுக்கொள்வாரா?
ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் ஆட்சியில் இருந்தபோது பிரதமர்கள் சென்னை வருவதற்கே யோசித்தனர். அப்படி இருக்கும்போது தற்போது தமிழகத்தில் கவர்னர் ஆய்வு நடத்துவதற்கு அதிகாரம் கொடுத்தது யார்?
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி செயல்பாடு தொடர்பாக விரைவில் நீதிமன்றத்தை நாட உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆலந்தூர்:
இந்திய அணுசக்தி தலைவர் சேகர் பாசு சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கல்பாக்கம் அணுஉலை செயல்பாடுகளில் சிறிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்ய வந்திருக்கிறேன். 2-வது அணுசக்தி நீர் மூழ்கி கப்பல் கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு இந்திய கப்பற்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இன்னும் ஒரிரு மாதத்துக்குள் அது செயல் பாட்டுக்கு வரும். நீர் மூழ்கி அணுசக்தி கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நாள் குறித்து கப்பற்படை முடிவு செய்யும்.
தமிழகத்தில் கூடங்குளம் அணு மின் நிலையம் வெற்றிகரமாக இயங்கி வருகிறது. தேனி மாவட்டத்தில் ‘நியூட்ரினோ’ ஆய்வு மையம் அமைப்பதற்கு தொழில் முறை ஆணையத்தில் அனுமதி கோரியுள்ளோம். அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அது தீர்ந்தவுடன் ஆய்வு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அணு உலைகளில் வெளி வரும் அணு கழிவுகளை அகற்றுவதில் உலக அளவில் பிரச்சினை நிலவி வருகிறது. இது குறித்து உலக நாடுகளுடன் நடந்த கூட்டத்தில் அணு கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க பல வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மாமல்லபுரம்:
கல்பாக்கம் அருகே உள்ள நெய்குப்பியை சேர்ந்தவர் தணிகாசலம், கட்டிட காண்டிராக்டர். இவரது மனைவி ஜோதி.
நேற்று மாலை கணவன்- மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றனர். வீட்டுச் சாவியை வெளியே மறைத்து வைத்திருந்தனர்.
திரும்பி வந்தபோது வீட்டுக்கதவு திறந்து கிடந்தது. பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 40 பவுன் நகை, ரூ. 50 ஆயிரம் ரொக்கம் கொள்ளை போய் இருப்பது தெரிந்தது.
வீட்டின் வெளியே மறைத்து வைத்திருந்த சாவியை மர்ம கும்பல் எடுத்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். எனவே இந்த கொள்ளையில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று தெரிகிறது.
இது குறித்து சதுரங்கப்பட்டினம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுராந்தகம் நகராட்சிக்குட்பட்ட காந்தி நகர் பகுதியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை.
இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் பொது மக்கள் அவதி அடைந்து வந்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலை மதுராந்தகம் தச்சூர் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பொது மக்களின் இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செங்கல்பட்டு டவுண் போலீஸ் நிலையத்திற்கு சென்ற பெண் வக்கீல் தாக்கப்பட்டதை கண்டித்தும், 2 வக்கீல்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் செங்கல்பட்டு கோர்ட்டில் வக்கீல்கள் பணிகளை புறக்கணித்து வருகிறார்கள்.
நேற்று காலை அவர்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் இன்று காலை கோர்ட்டுக்கு வந்த வக்கீல்கள் அனைவரும் மீண்டும் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். அவர்கள் கோர்ட்டு அருகே உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இதில் வக்கீல் சங்க தலைவர் பழனிசாமி, செயலாளர் பாலமுருகன், துணை தலைவர் சதீஷ் உள்ளிட்ட வக்கீல்கள் பங்கேற்றனர்.






