search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருமணம் நிறுத்தம்"

    • இன்று திருமணம் நடைபெறுவதையடுத்து சென்னையில் இருந்து மணமகன் ஊருக்கு வந்திருந்தார்.
    • திருமணம் நிறுத்தப்பட்டது பற்றி தகவல் தெரியாத உறவினர்கள் பலரும் இன்று திருமண வீட்டிற்கு வந்திருந்தனர்.

    நாகர்கோவில்:

    சுசீந்திரம் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் சென்னையில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். அவருக்கு திருமணம் செய்து வைக்க உறவினர்கள் ஏற்பாடு செய்தனர். பூதப்பாண்டி பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் என்ஜினீயருக்கும் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

    இதையடுத்து இருவருக்கும் இன்று திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதனால் என்ஜினீயரின் வீட்டாரும் மணமகளின் வீட்டாரும் திருமண அழைப்பிதழ் அச்சிட்டு உறவினர்களுக்கு வழங்கினார்கள். இன்று திருமணம் நடைபெறுவதையடுத்து சென்னையில் இருந்து மணமகன் ஊருக்கு வந்திருந்தார்.

    நேற்று காலையிலேயே திருமண வீட்டிற்கு உறவினர்கள் சிலர் வந்து இருந்தனர்.அவர்களுடன் மாப்பிள்ளை அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார். திருமண வீட்டுக்கு உறவினர்கள் பலரும் வந்திருந்ததால் திருமண வீடு களைகட்டி இருந்தது.

    இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டில் இருந்து திடீரென புதுமாப்பிள்ளை மாயமானார். மாலை வரை அவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து சுசீந்திரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் மணமகளின் வீட்டுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மணமகளின் குடும்பத்தார் இதை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். திருமணம் நடைபெற இருந்த நிலையில் மாப்பிள்ளை மாயமானதால் என்ன செய்வதென்று அறியாமல் திகைத்தனர். இந்த நிலையில் இன்று நடைபெறுவதாக இருந்த திருமணத்தை நிறுத்த முடிவு செய்தனர். இதையடுத்து திருமணம் நிறுத்தப்பட்டது.

    திருமணம் நிறுத்தப்பட்டது பற்றி தகவல் தெரியாத உறவினர்கள் பலரும் இன்று திருமண வீட்டிற்கு வந்திருந்தனர். பின்னர் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதே போல் மணமகள் வீட்டிற்கு வந்த உறவினர்களும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். மாயமான மாப்பிள்ளையை போலீசார் தேடி வருகிறார்கள்.

    திருமண நாளில் மாப்பிள்ளை எதற்காக மாயமானார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரை கண்டுபிடித்தால் தான் எதற்காக மாயமானார் என்ற விவரம் தெரியவரும். திருமண நாளில் மணமகன் மாயமான சம்பவம் சுசீந்திரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • டெல்லியில் இருந்து இரவு 8 மணி அளவில் மணமகன் குடும்பத்தினர் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.
    • மணமகனும் அவரது குடும்பத்தினரும் குழப்பம் அடைந்தனர்.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், டெல்லி சீமாபுரி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

    இவர்களது திருமணம் கடந்த சனிக்கிழமை இரவு நடைபெற இருந்த நிலையில் மணமகள் வீட்டார் அதற்கான ஏற்பாடுகளை தடபுடலாக செய்திருந்தனர்.

    அதன்படி டெல்லியில் இருந்து இரவு 8 மணி அளவில் மணமகன் குடும்பத்தினர் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.


    இந்நிலையில் மணமகனின் வயதான பாட்டி உட்காருவதற்காக ஒரு நாற்காலி கேட்டுள்ளார். ஆனால் மணமகளின் உறவினர்கள் அவருக்கு நாற்காலி வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றியுள்ளது. இதுபற்றி பாட்டி மணமகனிடம் முறையிட்டுள்ளார். இதனால் இந்த விவகாரம் பெரிதாகியது. இதையடுத்து மணமகனும் அவரது குடும்பத்தினரும் குழப்பம் அடைந்தனர்.

    அவர்கள் மணமகளிடம் சென்று நீ எங்களுடன் வீட்டுக்கு வந்தால் கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் இரு குடும்பத்தினருக்கும் வாக்குவாதம் மேலும் அதிகரித்தது.

    இதைத்தொடர்ந்து திருமணத்தை நிறுத்துவதாக மணமகன் அறிவித்தார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. திருமண வரவேற்புக்காக தாங்கள் செலவழித்த தொகையை தந்த பின்னரே இடத்தை விட்டு போகுமாறு மணமகனின் குடும்பத்தினரிடம் மணமகள் வீட்டார் கூறினர்.

    அதன்படி மணமகன் குடும்பத்தினர் நஷ்டஈடு தொகையை கொடுக்க ஒப்புக்கொண்டனர். அதன் பிறகு மணமகன் வீட்டார் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

    இதுகுறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக எங்களுக்கு எந்த ஒரு புகாரும் வரவில்லை என அப்பகுதியை சேர்ந்த உதவி போலீஸ் சூப்பிரண்டு அனுக்ரிதிசர்மா கூறினார்.

    • திருமண நிச்சயதார்த்ததிற்கான ஏற்பாடுகளை பெண் வீட்டார் செய்தனர்.
    • விருந்தில் நல்லி எலும்பு கறி இல்லாதது தங்களை அவமதிக்கும் செயலாக உள்ளது என மணமகன் வீட்டார் கூறியுள்ளனர்.

    மணப்பெண்ணின் வீட்டார் நிச்சயதார்த்த நிகழ்வில் நல்லி எலும்பு வழங்காததால் மணமகன் குடும்பத்தினர் கோபமடைந்து திருமணத்தை நிறுத்தியுள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.

    அதன் விவரம் வருமாறு:-

    நிஜாமாபாத்தை சேர்ந்த பெண்ணுக்கும், ஜக்தியாலைச் சேர்ந்தவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. விரைவில் திருமணமும் நடைபெற இருந்தது. இதையடுத்து திருமண நிச்சயதார்த்ததிற்கான ஏற்பாடுகளை பெண் வீட்டார் செய்தனர்.

    நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் மணமகளின் குடும்பத்தினர், அவர்களது குடும்பத்தினர் மற்றும் மணமகனின் உறவினர்கள் உள்ளிட்ட விருந்தினர்களுக்கு அசைவ உணவு வகைகளை ஏற்பாடு செய்திருந்தனர்.

    நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்குப் பிறகு, ஆட்டிறைச்சியின் நல்லி எலும்பு வழங்கப்படவில்லை என்று விருந்தினர்கள் சுட்டிக்காட்டியதால் சண்டை வெடித்தது. விருந்தில் நல்லி எலும்பு கறி இல்லாதது தங்களை அவமதிக்கும் செயலாக உள்ளது என மணமகன் வீட்டார் கூறியதை தொடர்ந்து இருதரப்பினரிடையே வாக்குவாதம் முற்றி, திருமணம் நிறுத்தப்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திருமணத்திற்காக மணமகனும், மணமகளும் தயாராகினர்.
    • பெற்றோர், உறவினர்கள், சமாதானம் செய்தும் ஐஸ்வர்யா திருமணத்திற்கு மறுத்து விட்டார்.

    சித்ரதுர்கா:

    கர்நாடக மாநிலத்தில் மணமகன் தாலி கட்ட இருந்த நேரத்தில் மணமகள் ஒருவர் தனது திருமணத்தை நிறுத்தியுள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அதன் விவரம் வருமாறு:-

    சித்ரதுர்கா மாவட்டம் ஹோசதுர்கா தாலுகாவை சேர்ந்த மஞ்சுநாத்துக்கும், சல்லகெரே தாலுகாவை சேர்ந்த ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் செய்ய பெற்றோர்களால் பேசப்பட்டது. இதை தொடர்ந்து திருமணத்திற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.

    இந்நிலையில், 6-ந்தேதி மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. மறுநாள் காலை திருமணத்திற்காக மணமகனும், மணமகளும் தயாராகினர். சம்பிரதாயங்கள் முடிந்த நிலையில், மணமகன் மஞ்சுநாத் தாலிகட்ட நெருங்கி வந்தபோது, திடீரென திருமணம் செய்து கொள்ள மணமகள் ஐஸ்வர்யா எதிர்ப்பு தெரிவித்தார்.

    இதை தொடர்ந்து பெற்றோர், உறவினர்கள், சமாதானம் செய்தும் ஐஸ்வர்யா திருமணம் செய்ய மறுத்து விட்டார். மேல்படிப்பு படிக்க வேண்டும் என்பதால் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று ஐஸ்வர்யா திட்டவட்டமாக தெரிவித்தார்.

    சம்பவம் குறித்து போலீசார் விசாரித்தபோது, திருமண பேச்சின் ஆரம்பத்தில் மணமகள் சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால், திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு, பிசிஏ படிக்க அவருக்கு சீட் கிடைத்துள்ளது. இதனால், தான் மேல்படிப்பு படிக்க வேண்டும் என மணமகள் கூறியபோது, பெற்றோர் மற்றும் உறவினர்கள் கட்டாயப்படுத்தி மணமேடை வரை அவரை அழைத்து வந்துள்ளனர் என்பது தெரியவந்தது.

    திருமண ஏற்பாடுகளுக்கு மணமகன் வீட்டார் செய்த செலவுக்காக ரூ.3 லட்சம் தருவதாக பெண்ணின் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

    • நேற்று காலையில் மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்டினார்.
    • மணமகளிடம், அவரது பெற்றோர் சமாதானம் பேசினர்.

    போளூர்:

    போளூரில் உள்ள ஒரு வங்கியில் வேலை செய்யும் வாலிபருக்கும், போளூரை அடுத்த ஒரு கிராமத்தில் வசிக்கும் பட்டதாரி இளம் பெண்ணுக்கும் பெரியோர்களால் நிச்சயம் செய்யப்பட்டு நேற்று காலை போளூரில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் நடைபெற்றது.

    முன்னதாக நேற்று முன்தினம் இரவு மணப்பெண் அழைப்பும் நடந்தது. இந்த நிலையில் நேற்று காலையில் மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்டினார். அடுத்த வினாடியே மணமகள், எனக்கு மணமகனை பிடிக்கவில்லை என்று தாலியை கழற்றி வீசினாா். இதனால் திருமணத்திற்கு வந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் போளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் மற்றும் போலீசார் அங்கு சென்று மணமகளிடம் விசாரித்தனர்.

    அப்போது அவர் எனக்கு மணமகனை பிடிக்கவில்லை என்று கூச்சலிட்டவாறு திரும்ப திரும்ப விடாப்பிடியாக கூறினார். அதற்கு, மணமகனை பிடிக்கவில்லை என்றால் முதலிலேயே சொல்லி திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டியது தானே. தாலி கட்டிய பிறகு மணமகனை பிடிக்கவில்லை என்றால் என்ன என்று போலீசார் கேட்டனர். அதற்கு மணமகள் வாயை திறக்காமல் மவுனமாக இருந்தார். பின்னர் மணமகளிடம், அவரது பெற்றோர் சமாதானம் பேசினர். ஆனால் அதற்கு அவர் சம்மதிக்கவில்லை. அதைத் தொடர்ந்து மணமகளையும், பெண் வீட்டாரையும் எச்சரித்து போலீசார் அங்கிருந்து அனுப்பினர்.

    பின்னர் உறவினர் ஒருவரின் பெண்ணுடன் மணமகனுக்கு திருமணம் நடைபெற்றது.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மணமகளின் வீட்டில் இருந்து மணமகன் வீட்டிற்கு சீர்வரிசை பொருட்களும் சென்று இறங்கிவிட்டன.
    • கோவிலில் உறவினர்கள் முன்னிலையில், மணப்பெண்ணே தாலியை பறித்து திருமணத்தை நிறுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

    தொண்டி:

    ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 29 வயதான பட்டதாரி வாலிபர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்திருந்தார். அவருக்கு பக்கத்து கிராமத்தை சேர்ந்த 21 வயதான பட்டதாரி பெண்ணை பேசி முடித்து, இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் செய்துள்ளனர். ஒரு மாதத்திற்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்தது. இதை தொடர்ந்து இரு வீட்டாரும் திருமணத்துக்கான ஏற்பாடுகளை மும்முரமாக செய்து வந்தனர்.

    நேற்று காலை திருவாடானையில் ஒரு கோவிலில் இவர்களது திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக மணமக்கள் வீட்டார், உறவினர்கள் முகூர்த்த நேரத்திற்கு கோவிலுக்கு வந்து விட்டனர்.

    கோவிலில் உள்ள அலுவலகத்தில் இருதரப்பினரின் முன்னிலையில் மணமக்கள் திருமண பதிவேட்டில் கையொப்பமிட்டனர். அதன் பின்னர் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து மணமகளும், மணமகனும் திருமணம் நடத்தப்படும் இடத்திற்கு வந்தனர்.

    அங்கு உறவினர்கள் முன்னிலையில் மாலை மாற்றுதல் உள்ளிட்ட சடங்குகள் நடைபெற்றன. இந்த நிலையில் மணமகன், மணமகளின் கழுத்தில் தாலியை அணிவிக்க முயன்றார். அப்போது திடீரென்று மணப்பெண், மணமகனிடம் இருந்து தாலியை பறித்து கையில் வைத்துக் கொண்டார். மணப்பெண்ணின் இந்த செயலால் மணமகன் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனே அங்கிருந்த உறவினர்கள், அந்தப் பெண்ணிடம் தாலியை கொடுக்குமாறு கூறினர். ஆனால் அந்தப் பெண் விடாப்பிடியாக தாலியை தர மாட்டேன். உண்டியலில் தான் போடுவேன் எனக்கூறி போடச் சென்றதால் அனைவரும் திகைத்தனர். பின்னர் அந்த பெண், எனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்று கூறினார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகன், "உனது சம்மதத்தோடு தானே எல்லா ஏற்பாடுகளும் செய்தோம். அப்போது எல்லாம் எதுவும் கூறாமல் முகூர்த்த நேரத்தில் திடீரென இப்படி செய்தால் எப்படி?" என்று கேட்டுள்ளார். அதற்கு மணப்பெண், எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. எனது பெற்றோர்தான் இதற்கு ஏற்பாடு செய்தார்கள் என்று கூறினார்.

    இதைத்தொடர்ந்து அங்கிருந்த பிரமுகர்கள், உறவினர்கள் இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. உடனே மணமகன் இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீசாரும், கோவிலுக்கு வந்து விசாரணை நடத்தினர். அதன் பிறகு இரு தரப்பினரும் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர்.

    "திருமண ஏற்பாடுகளுக்காக ரூ.3 லட்சத்துக்கு மேல் பணம் செலவாகி உள்ளது. எனக்கு மிகுந்த மனஉளைச்சல் ஏற்பட்டு உள்ளது. எனவே மணப்பெண், அவருடைய பெற்றோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மணமகன் புகார் செய்துள்ளார்.

    மணப்பெண்ணோ, "தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை. பெற்றோர் கட்டாயத்தினால் சம்மதம் தெரிவித்தேன்" என புகார் அளித்திருக்கிறார்.

    இதற்கிடையே மணமகளின் வீட்டில் இருந்து மணமகன் வீட்டிற்கு சீர்வரிசை பொருட்களும் சென்று இறங்கிவிட்டன.

    மாப்பிள்ளை வீட்டில் திருமண விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் அங்கு சென்றவர்கள், நடந்த நிகழ்வுகள் பற்றி அறியாமல் அங்கு சாப்பிட்டு விட்டு மொய் எழுதி சென்றதும் நடந்துள்ளது.

    கோவிலில் உறவினர்கள் முன்னிலையில், மணப்பெண்ணே தாலியை பறித்து திருமணத்தை நிறுத்தியது அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    • மணமகனும் அடிக்கடி நிச்சயமான மணமகளிடம் செல்போனில் பேசி பழகி வந்தார்.
    • புது மாப்பிள்ளை இரவு முழுவதும் வீட்டு வாசலில் படுத்து கிடக்க நேரிட்டது.

    கோவை:

    கோவை சூலூரை சேர்ந்த ஒரு தொழில் அதிபர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, தனது மகனுக்கு பெரிய இடத்தில் சம்பந்தம் பேசி முடித்தார். இதனை தொடர்ந்து இருதரப்பு பெற்றோரும் திருமண ஏற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

    மணமகனும் அடிக்கடி நிச்சயமான மணமகளிடம் செல்போனில் பேசி பழகி வந்தார். அந்த ஜோடியின் திருமணம் இன்று நடப்பதாக இருந்தது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சூலூர் தொழில் அதிபர், தனது மகனிடம் தாடியை எடுத்து விடு, அதுதான் உனக்கு நன்றாக இருக்கும் என்று கூறி உள்ளார். இதன்படி புதுமாப்பிள்ளை சலூனுக்கு புறப்பட்டார்.

    அப்போது அவருக்கு மணமகளிடம் இருந்து செல்போன் அழைப்பு வந்தது. உங்களுக்கு தாடி அழகாக உள்ளது. எனவே அதை எடுக்க வேண்டாம். டிரிம் செய்து கொள்ளுங்கள். அது போதும் என்று அறிவுரை கூறி உள்ளார்.

    இதனை தொடர்ந்து புது மாப்பிள்ளை சலூனுக்கு சென்று மணமகளின் விருப்பப்படி தாடியை டிரிம் செய்தார். அதன்பிறகு வீட்டுக்கு வந்தார். அப்போது தந்தை வீட்டில் இருந்தார்.

    அவருக்கு மகன் தாடியுடன் இருந்தது ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே அவர், நான் சொன்ன பிறகும் ஏன் தாடியை எடுக்கவில்லை என்று சத்தம் போட்டார்.

    அதற்கு புது மாப்பிள்ளை, மணமகளின் விருப்பப்படி தாடியை டிரிம் செய்ததாக தெரிவித்து உள்ளார். இது தந்தையை மேலும் ஆத்திரத்துக்கு உள்ளாக்கியது.

    நான் தாடியை சேவிங் பண்ண சொன்னேன். ஆனால் நீ அந்த பெண்ணின் விருப்பப்படி தாடியை டிரிம் செய்து உள்ளாய். என்னை மதிக்க தவறி விட்டாய் என்று சத்தம் போட்டு உள்ளார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மகன் எவ்வளவோ சமாதானப்படுத்தி பார்த்து உள்ளார். இருந்தபோதிலும் தந்தை மனம் இரங்கவில்லை. வீட்டில் இருந்து மகனை வெளியே தள்ளி கதவை பூட்டிக் கொண்டார்.

    இதனால் புது மாப்பிள்ளை இரவு முழுவதும் வீட்டு வாசலில் படுத்து கிடக்க நேரிட்டது. இந்த நிலையில் அவர் மணமகளுக்கு போன் போட்டு நடந்த விவரங்களை தெரிவித்து உள்ளார். இது அந்த பெண்ணுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே அவர் தந்தையிடம் கூறி மணமகனின் தந்தையை சமாதானப்படுத்தும்படி கேட்டுக்கொண்டு உள்ளார். இதன்படி அவர் மணமகனின் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.

    அப்போது அங்கு இருந்த தொழில் அதிபரிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். இருந்தபோதிலும் அவர் சமரசம் ஆகவில்லை. எனவே மணமகளின் தந்தை புறப்பட்டு போய் விட்டார்.

    இதற்கிடையே மணமகனின் தந்தை சமூகவலைதளத்தில், எனது மகனின் திருமணம் நின்று விட்டது. எனவே திருமண மண்டபத்துக்கு யாரும் வர வேண்டாம் என்று பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். இது மணமகள் வீட்டாரை அதிர்ச்சி அடைய வைத்தது.

    எனவே இன்று நடப்பதாக இருந்த திருமணம் பாதியிலேயே நின்று போனது. இதற்கிடையே ஊர் பெரியவர்கள் மற்றும் இருதரப்பு உறவினர்கள் அனைவரும் மணமகனின் பெற்றோரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மணமகனின் தந்தை மிகவும் சுத்தமாக இருப்பதை விரும்புவாராம். அதனால் தன்னிடம் பணியாற்றும் ஊழியர்கள் கண்டிப்பாக முகச்சவரம் செய்து கொள்ள வேண்டும், முடியை நீளமாக வளர்க்கக் கூடாது என அறிவுறுத்துவாராம். அதையே அவரும் கடைபிடித்து வந்துள்ளார். ஆனால் அவரது மகனோ திருமண நிச்சயத்துக்கு பிறகு தந்தையின் பேச்சை கேட்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. அதனால் ஆத்திரம் அடைந்து அவர் தனது மகன் திருமணத்தை நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவம் சூலூர் பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    • மொட்டை தலையுடன் இருந்த மணமகன் அதனை விக் வைத்து மறைத்து ஏமாற்றி திருமணம் செய்ய முயன்று உள்ளார்.
    • மணமகன் தன்னை மன்னித்து விடுமாறு கைகளை கூப்பி கெஞ்சினார்.

    பாட்னா:

    பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் உள்ள இக்பால்பூர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், அங்குள்ள டோபி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பஜவுரா கிராமத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் நிச்சயிக்கப்பட்டு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றது.

    அப்போது மணமக்கள் மேடைக்கு வந்தனர். விழாவின் போது மணமகன் பாரம்பரிய வழக்கப்படி 'செஹ்ரா' என்ற தலையை மறைக்கும் கவசம் அணிவது வழக்கம். அதன்படி தலைக்கவசம் அணிய முயன்ற போது அவர் விக் வைத்து மறைத்து திருமணம் செய்ய முயன்றது அம்பலமானது.

    அதாவது மொட்டை தலையுடன் இருந்த மணமகன் அதனை விக் வைத்து மறைத்து ஏமாற்றி திருமணம் செய்ய முயன்று உள்ளார். இதை கண்ட மணமகள் குடும்பத்தினர் அதிர்ச்சியும், ஆவேசமும் அடைந்தனர்.

    அவர்கள் மணமகனை சரமாரியாக அடித்து உதைத்து தாக்கினர். அப்போது மணமகன் தன்னை மன்னித்து விடுமாறு கைகளை கூப்பி கெஞ்சினார்.

    ஆனாலும் மணமகள் குடும்பத்தினர் தொடர்ந்து அவரை தாக்கினர். மேலும் அந்த மணமகன் ஏற்கனவே திருமணமானவர் என்பதும், முதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணத்திற்கு ஏற்பாடு செய்ததும் தெரியவந்தது.

    இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த மணமகளின் குடும்பத்தினர் தொடர்ந்து அவரை சரமாரியாக தாக்கினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவுகிறது.

    • சிவநாதபுரம் மலை அடிவாரத்தில் இருந்த தனிப்படை போலீசார், சங்கரை மடக்கி அரியூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
    • திருமணம் நின்று போனதால் மலைவாழ் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு பகுதியில் 80-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. குருமலை அடுத்துள்ள அணி மலை கிராமத்தில் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த மலை கிராமத்தின் நாட்டாமையாக சேகர் என்கிற சங்கர் உள்ளார். இவரது அண்ணன் மகனின் திருமணம், அணி மலையில் நேற்று நடைபெற இருந்தது.

    இதற்காக நாட்டாமை சங்கர் தனது குடும்பத்தினருடன் திருமண விழாவிற்கு தாலி உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்காக கடந்த 5-ந்தேதி ஊசூர் பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது.

    அப்போது சிவநாதபுரம் மலை அடிவாரத்தில் இருந்த தனிப்படை போலீசார், சங்கரை மடக்கி அரியூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    பின்னர் சங்கர் மீது சாராயம் காய்ச்சி விற்றதாக வழக்கு பதிவு செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவரை ஜெயிலில் அடைத்தனர்.

    இதையறிந்த அப்பகுதி மக்கள், எங்கள் வழக்கப்படி திருமணத்தின்போது நாட்டாமை தான் மணமகனிடம் தாலி எடுத்து கொடுப்பார். அப்போது தான் திருமணத்தை நடத்த முடியும்.

    எனவே அவரை விடுவிக்க வேண்டும் என்று போலீசாரிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனாலும் சங்கரை விடுவிக்கவில்லை.

    இதற்கிடையில் அத்தியூர் ஊராட்சி தலைவரும், அணி மலை மக்களும் சேர்ந்து நாட்டாமை சங்கரை திருமணத்துக்கு ஜாமீனில் அழைத்து வர முயற்சித்தனர். ஆனால் சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் அந்த முயற்சியும் தோல்வி அடைந்தது.

    இதனால் மலை கிராம வழக்கப்படி மணமகன் கையில் தாலி எடுத்து கொடுக்க நாட்டாமை இல்லாத நிலையில் நேற்று நடைபெற இருந்த திருமணத்தை அவரது குடும்பத்தினர் நிறுத்தி விட்டனர்.

    திருமணம் நின்று போனதால் மலைவாழ் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பெண்ணிற்கு அவரது பெற்றோர் வேறொரு மாப்பிள்ளையை பார்த்து நிச்சயித்தனர்.
    • திருமணத்திற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வந்தது.

    பல்லடம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மேட்டுப்பட்டியை சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகன் தரணிதரன்(வயது 29). இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அம்மாபாளையம் பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் தங்கி பணிபுரிந்து வந்தார்.

    அப்போது அங்கு பணிபுரிந்த இளம்பெண்ணுக்கும் தரணிதரனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது. இருவரும் நெருங்கி பழகி வந்தனர். இந்தநிலையில் பழகிய சில நாட்களில் தரணிதரனின் நடவடிக்கைகள் பிடிக்காததால் அந்த பெண் தரணிதரனிடம் பேசுவதை நிறுத்தி விட்டார்.

    மேலும் அந்த பெண்ணிற்கு அவரது பெற்றோர் வேறொரு மாப்பிள்ளையை பார்த்து நிச்சயித்தனர். திருமணத்திற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வந்தது.

    இதையறிந்த தரணிதரன், தனது காதலியை தொடர்பு கொண்டு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார். இல்லாவிட்டால் 2பேரும் சேர்ந்து இருந்த புகைப்படங்களை மாப்பிள்ளைக்கு அனுப்பி வைத்து விடுவேன் என்று மிரட்டியதுடன், அந்த புகைப்படங்களை காதலிக்கு பார்த்திருந்த மாப்பிள்ளையின் செல்போனுக்கு அனுப்பினார். இதனால் அந்த பெண்ணின் திருமணம் தடைப்பட்டது.

    மேலும் காதலியை தொடர்பு கொண்ட தரணிதரன் ரூ.3 லட்சம் பணம் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நாம் இருவரும் சேர்ந்திருந்த படங்களை இணைய தளத்தில் வெளியிடுவேன் என மிரட்டி உள்ளார். இதனால் பயந்து போன அந்தப்பெண் அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார்.

    உடனே இது குறித்து பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி தரணிதரனை கைது செய்தனர். தொடர்ந்து அவர் இது போல் வேறு பெண்களை ஏமாற்றியுள்ளாரா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உன்னைத் தவிர வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டால், தற்கொலை செய்து கொள்வேன் என சுவேதா கதறி அழுதபடி தெரிவித்துள்ளர்.
    • போலீசார் விரைந்து சென்ற , திருமண மண்டபத்தில் இருந்த மணப்பெண் சுவேதாவிடம் விசாரித்தனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள மின்னாம் பள்ளி பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மகள் சுவேதா (வயது 21), பி.காம். பட்டதாரி. அதே பகுதியை சேர்ந்தவர் கவியரசன்.

    இருவரும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மலர்ந்தது. இருவரும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்து, வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க வரன் பார்த்து வந்தனர்.

    அதன்படி சுவேதாவுக்கும், வாழப்பாடியை அடுத்த சோமம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மல்லிகா மகன் எம்.பி.ஏ. பட்டதாரி லோகநாதன் (27) என்பவருக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர்களால் பேசி நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது.

    இருவருடைய திருமணம் நேற்று காலை நடைபெறவிருந்த நிலையில், காதலன் கவியரசனுக்கு சுவேதா செல்போனில் தொடர்பு கொண்டு, எனக்கு திருமணத்தில் விருப்பமில்லை.

    உன்னைத் தவிர வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டால், தற்கொலை செய்து கொள்வேன் என சுவேதா கதறி அழுதபடி தெரிவித்துள்ளர்.

    இதனால் காவல் துறையின் உதவி எண் 100-க்கு கவியரசன் தொடர்பு கொண்டு, தனது காதலிக்கு சம்மதம் இல்லாமல் கட்டாயப்படுத்தி வேறு ஒருவருக்கு பெற்றோர் திருமணம் செய்து வைக்க உள்ளனர். எனவே உடனடியாக தடுத்து நிறுத்தி என்னையும், காதலியையும் சேர்த்து வையுங்கள் என தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து காவல் துறை கட்டுப்பாடு அறை மூலமாக வாழப்பாடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு இதுபற்றி தகவல் கொடுக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் விரைந்து சென்று, திருமண மண்டபத்தில் இருந்த மணப்பெண் சுவேதாவிடம், விசாரித்தனர். இதில் அவருக்கு விருப்பம் இல்லாமல் திருமணம் நடக்க இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து வாழப்பாடி மகளிர் போலீசார், சுவேதாவை மீட்டு காதலன் கவியரசனுடன் சேர்த்து வைத்தனர். மேலும் பாதுகாப்பு கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    அதே சமயம் பாதிக்கப்பட்ட மணமகன் தரப்பினர், திருமணம் நிறுத்தப்பட்டதால் தங்கள் குடும்பத்தினர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். திருமணத்துக்கு நிறைய செலவு செய்துள்ளோம், என புகார் கொடுத்தனர். இதுபற்றியும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • விடுமுறை முடிந்து வெளிநாடு சென்ற பின்னர் லெனின் கிராஸ், ரிமோலின் விண்ணரசிக்கு செலவுக்கு பணம் அனுப்பினார்.
    • காதலன் தன்னை கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வார் என்று ரிமோலின் விண்ணரசி நம்பிக்கொண்டிருந்தார்.

    குளச்சல்:

    மணவாளக்குறிச்சியை அடுத்த பிள்ளைதோப்பு பகுதியை சேர்ந்தவர் லெனின் கிராஸ் (வயது 29).

    என்ஜினீயரிங் படித்துள்ள லெனின் கிராஸ், வளைகுடா நாட்டில் பணிபுரிந்து வருகிறார், அவர் ஒரு வாட்ஸ் அப் குழுவும் நடத்தி வந்தார்.

    இந்த குழுவில் நெல்லை மாவட்டம் பணக்குடியை சேர்ந்த ரிமோலின் விண்ணரசி (24) என்ற பெண்ணும் இடம் பெற்றிருந்தார். குழுவில் கருத்துக்களை பதிவு செய்வதன் மூலம் லெனின் கிராசுக்கும், ரிமோலின் விண்ணரசிக்கும் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. அதன்பின்பு வெளிநாட்டில் இருந்து லெனின் கிராஸ் ஊருக்கு வந்ததும், அவர் ரிமோலின் விண்ணரசியை நேரில் சந்தித்து பேசினார். அதன் பின்னர் இருவரும் அடிக்கடி வெளியூர்களுக்கும் சென்றனர்.

    அப்போது ரிமோலின் விண்ணரசியை திருமணம் செய்தவதாக கூறி அவருடன் உல்லாசமாக இருந்தார். விடுமுறை முடிந்து வெளிநாடு சென்ற பின்னர், ரிமோலின் விண்ணரசிக்கு அங்கிருந்து செலவுக்கு பணமும் அனுப்பி கொடுத்தார்.

    இதனால் காதலன் தன்னை கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வார் என்று ரிமோலின் விண்ணரசி நம்பிக்கொண்டிருந்தார். லெனின் கிராஸ் ஒரு பெண்ணை காதலித்து வருகிறார் என்ற தகவல், அவரது பெற்றோருக்கு தெரியாது.

    இதனால் அவர்கள் லெனின் கிராசுக்கு திருமணம் செய்து வைக்க பெண் தேடினர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு குளச்சல் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் பேசி நிச்சயம் செய்தனர். இந்த தகவல் லெனின் கிராசுக்கும் தெரிவிக்கப்பட்டது. அவரும் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டார்.

    இதையடுத்து கடந்த வாரம் இவர்களின் திருமணம் ஆலயத்தில் நடக்க இருந்தது. இதற்காக லெனின் கிராஸ் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்தார். உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தனது திருமண அழைப்பிதழை கொடுத்தார். அவர்கள் மூலம் இந்த தகவல் பணக்குடியில் இருந்த ரிமோலின் விண்ணரசிக்கு தெரியவந்தது.

    பதறிபோன அவர் அங்கிருந்து காதலனின் திருமணம் நடக்க இருந்த ஆலயத்திற்கு விரைந்து வந்தார். திருமண சடங்குகள் தொடங்கும் முன்பு ஆலய பாதிரியாரை சந்தித்து தானும், லெனின் கிராசும் காதலிக்கும் விபரத்தை தெரிவித்தார்.

    லெனின் கிராஸ் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பல இடங்களுக்கு அழைத்து சென்றதையும், அங்கு இருவரும் ஒன்றாக இருக்கும் படங்களையும் காட்டினார். இதனை பார்த்ததும், ஆலய பாதிரியார், லெனின் கிராசுக்கு நடக்க இருந்த திருமணத்தை நிறுத்தி விட்டார்.

    இதையடுத்து ரிமோலின் விண்ணரசி குளச்சல் போலீஸ் நிலையம் சென்று அங்கும் புகார் கொடுத்தார். போலீசார் இருதரப்பினரையும் அழைத்து விசாரித்தனர்.

    இதற்கிடையே லெனின் கிராஸ், காதலி ரிமோலின் விண்ணரசியை அருகில் அழைத்து அவரது செல்போனை வாங்கி கொண்டார். பின்னர் அதில் அவர்கள் இருவரும் இணைந்த எடுக்கப்பட்ட அனைத்து புகைப்படங்களையும் அழித்து விட்டார்.

    அதன்பின்பு அந்த செல்போனை ரிமோலின் விண்ணரசியிடம் கொடுத்துவிட்டு எதுவுமே தெரியாதது போல் நின்று கொண்டார்.

    அதன்பின்பு போலீசார், ரிமோலின் விண்ணரசியிடம் இருவரும் சேர்ந்திருக்கும் படங்களை காட்டுமாறு கூறியபோதுதான், அதில் இருந்த படங்கள் அழிக்கப்பட்டிருப்பதை பார்த்தார்.

    உடனே இடிந்து போகாமல் அவர் போட்டோ ரெக்கவரி சாப்ட்வேர் மூலம் அழிக்கப்பட்ட படங்களை மீண்டும் மீட்டெடுத்தார். அதனை போலீசாரிடம் காட்டியபோது, லெனின் கிராஸ் அதிர்ந்து போனார். உடனே அவர் ரிமோலின் விண்ணரசியை காதலித்ததை ஒப்புக்கொண்டார்.

    இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் திருமணம் செய்து சேர்ந்து வாழுமாறு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    அதன்பின்பு அவர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள ஆலயம் முன்பிருந்த குருசடியில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். காதலித்து ஏமாற்றிய காதலனை போராடி கரம் பிடித்த ரிமோலின் விண்ணரசியின் செயல் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×