என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மணமகள்"

    • மணமகன் மீது சந்தேகம் ஏற்பட்டது.
    • மணமகள் ஆவேசமடைந்து திருமணத்தை நிறுத்தி விட்டு மண்டபத்தில் இருந்து வெளியேறினார்.

    பீகார் மாநிலம் மேற்கு சாம்பரான் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் பைதாபூர் பகுதியை சேர்ந்த மணமகனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து திருமணத்திற்காக மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் பேண்ட் வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக மேற்கு சாம்பரானுக்கு சென்றனர்.

    தொடர்ந்து திருமண சடங்குகள் நடைபெற்ற நிலையில் மணமகன் வெகுநேரமாக கண்ணாடி அணிந்திருந்ததை மணமகள் கவனித்துள்ளார். அவருக்கு மணமகன் மீது சந்தேகம் ஏற்பட்டது. ஆனாலும் உடனடியாக அதை வெளிக்காட்டவில்லை.

    ஆனால் திருமண சடங்குகள் நடைபெற்ற போது மணமகன் கண்ணாடியை கழற்றிய போது தான் அவருக்கு கண் குறைபாடு இருப்பது தெரியவந்தது. இதை மறைத்து அவர் திருமணம் செய்ய முயன்றது தெரியவந்தது. இதையறிந்த மணமகள் ஆவேசமடைந்து திருமணத்தை நிறுத்தி விட்டு மண்டபத்தில் இருந்து வெளியேறினார்.

    இதனால் திருமண மண்டபத்தில் குழப்பம் நிலவியது. இதுகுறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகியது.

    • மணமகள் ஆவணி காரை ஓட்டிச் சென்றார்.
    • கார் மரத்தின்மீது மோதி விபத்தில் சிக்கியது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் தும்போலி அருகே முதலசேரி பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ். இவருடைய மகள் ஆவணி (25).

    தனியார் பள்ளி ஆசிரியையான இவருக்கும், தும்போலி பகுதியைச் சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி பேராசிரியர் ஷாரோன் (32) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இவர்களது திருமணம் நேற்று ஆலப்புழாவில் உள்ள ஒரு மண்டபத்தில் நடைபெற இருந்தது.

    மணமகள் ஆவணி ஒப்பனை செய்வதற்காக அவரது அத்தையுடன் அருகே உள்ள அழகு நிலையத்துக்கு காரில் சென்றார்.

    காரை ஆவணி ஓட்டிச் சென்றார். அங்கு செல்லும் வழியில் கார் மரத்தின்மீது மோதி விபத்தில் சிக்கியது. இதில் ஆவணி மற்றும் அவரது அத்தையும் காயமடைந்தனர்.

    விபத்தில் படுகாயம் அடைந்த 2 பேரையும் எர்ணாகுளம் அருகே உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இந்நிலையில், மருத்துவமனைக்குச் சென்ற மணமகன் ஷாரோன் அங்கு மணமகள் ஆவணிக்கு தாலி கட்டினார்.

    ஆனாலும், திருமணத்தில் கலந்துகொள்வதற்காக மண்டபத்துக்கு வந்தவர்களுக்கு அங்கிருந்தவர்கள் விருந்து உபசரித்தனர்.

    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மணமகளுக்கு மணமகன் தாலி கட்டிய சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    • புகைப்படங்களை தம்பதியினர் பார்த்த போது மிஷேல் அதிர்ச்சி அடைந்தார்.
    • மணமக்களின் அருகே நின்ற ஒருவர் யாரென்றே மிஷேல்- ஜான் தம்பதிக்கு தெரியவில்லை.

    திருமண விழாக்களுக்கு மணமக்களின் குடும்பத்தினர், அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் வருவார்கள். சில திருமணங்களில் அழையா விருந்தாளிகளாக முன்பின் தெரியாதவர்களும் கூட வந்து விருந்து சாப்பிட்ட நிகழ்வுகள் நடந்துள்ளன.

    இந்நிலையில் ஸ்காட்லாந்தை சேர்ந்த மிஷேல் வைலி என்ற பெண்ணுக்கும் ஜான் என்பவருக்கும் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடந்தது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தம்பதியினர் பார்த்த போது மிஷேல் அதிர்ச்சி அடைந்தார். காரணம் மணமக்களின் அருகே நின்ற ஒருவர் யாரென்றே மிஷேல்- ஜான் தம்பதிக்கு தெரியவில்லை. அவர் யார் என்ற மர்மத்தை கண்டுபிடிக்க மிஷேல் முயற்சி செய்தார். ஆனாலும் தீர்வு கிடைக்கவில்லை.

    இந்நிலையில் மிஷேலின் இந்த மர்மத்துக்கு பேஸ்புக் மூலம் தீர்வு கிடைத்துள்ளது. அந்த புகைப்படத்தில் இருந்தவர் அயர்ஷையரை சேர்ந்த ஓவியரான ஆண்ட்ரூ ஆவார். அவர் தனது மனைவியுடன் வேறு ஒரு திருமணத்திற்கு செல்ல இருந்த நிலையில், தவறுதலாக இடம் மாறி மிஷேல் திருமணத்திற்கு சென்று விட்டதாக பேஸ்புக்கில் வேறு ஒரு நண்பருடன் உரையாடியதை மிஷேல் பார்த்துள்ளார். அப்போது தான் அவரின் 4 வருட மர்மத்துக்கு விடை கிடைத்ததாக அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.

    • கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மணப்பெண்ணை ஒரு இளம்பெண் செல்போனில் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.
    • மணமேடையில் மணமகன் அமர்ந்திருந்தபோது, மணப்பெண் ஒருவித குழப்பத்துடனேயே அருகில் வந்து அமர்ந்தார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவருக்கும் ராதாபுரம் பகுதியை சேர்ந்த 27 வயது கார் டிரைவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெற்றோரால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

    நேற்று இவர்களது திருமணம் மணமகள் வீட்டில் வைத்து நடைபெற இருந்தது. இருதரப்பினரும் தடல்புடலாக திருமண ஏற்பாடுகளை நடத்தி வந்தனர்.

    கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மணப்பெண்ணை ஒரு இளம்பெண் செல்போனில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அப்போது மணமகனுக்கும், தனக்கும் நீண்டகாலம் தொடர்பு இருப்பதாக கூறியுள்ளார்.

    இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மணப்பெண் உடனே மணமகனை செல்போனில் தொடர்புகொண்டு நடந்த விவரத்தை கூறியுள்ளார். ஆனால், அந்த பெண் தனக்கு தங்கை மாதிரி. அவளுடன் அப்படித்தான் பழகினேன் என்றார்.

    இதை ஏற்க மறுத்த மணமகள், அந்த பெண்ணுடனான தொடர்பை துண்டிக்குமாறு கூறினார். ஆனால் மணமகன், அந்த பெண்தான் தனக்கு மிகவும் முக்கியம், அவளுடன் தொடர்பை கைவிடமுடியாது என்றார்.

    இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மணமகள் செய்வதறியாமல் திகைத்தார். இந்த திருமணத்தில் விருப்பமில்லை என மணமகள் தனது பெற்றோரிடம் கூறினார். அவர்களும் இதைக்கேட்டு செய்வதறியாமல் புலம்பினர்.

    இந்த குழப்பத்திலேயே திருமணம் நடைபெற இருந்த நாளும் வந்தது. நேற்று காலையிலேயே மணமகன் வீட்டில் இருந்து அனைவரும் வந்தனர். மணமேடையில் மணமகன் அமர்ந்திருந்தபோது, மணப்பெண் ஒருவித குழப்பத்துடனேயே அருகில் வந்து அமர்ந்தார்.

    அப்போது மணமகன் தாலியை கையில் எடுத்த நேரத்தில், திடீரென இளம்பெண் தனக்கு இந்த மணமகனை பிடிக்கவில்லை. திருமணத்தை நிறுத்துங்கள் என்றார்.

    இதைக்கேட்டு மணமகன் உள்பட அனைவரும் ஒரு நிமிடம் நிலைகுலைந்தனர். என்ன நடந்தது? ஏன் திருமணத்தை நிறுத்துகிறாய்? என மணமகளிடம் கேட்டனர்.

    அப்போது, அவர் மணமகனுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு உள்ளது. எனவே, நான் இவரை திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என மணமகள் கூறினார்.

    இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே அங்கிருந்தவர்கள் திசையன்விளை போலீசாருக்கு தகவலளித்தனர். போலீசார் விரைந்து வந்து இருதரப்பினரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மணமகனை திருமணம் செய்ய மாட்டேன் என்பதில் மணமகள் உறுதியாக இருந்ததால் வேறு வழியின்றி திருமணம் நிறுத்தப்பட்டது.

    இதனால் மணமகன் வீட்டார் கடும் ஆவேசத்துடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

    • டீஜே என்று அழைக்கப்படும் ஆட்டம்பாட்டத்துடன் இசை கொண்டாட்டம் உச்சக்கட்டத்தை தொடங்கியது.
    • மாப்பிள்ளையின் நண்பர்கள் மதுபோதையில் மேடையில் ஏறி குத்தாட்டம் போட தொடங்கினர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு தடபுடலாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மறுநாள் திருமண வைபோகம் காணவேண்டிய அந்த மண்டபத்தில் வரவேற்பு விழாவில் இருவீட்டாரும் மும்முரமாக இருந்தனர்.

    மருத்துவம் சார்ந்த டிப்ளமோ படித்த இளம்பெண்ணுக்கும், ஓசூரில் தனியார் நிறுவனத்தில் வேலைபார்க்கும் டிப்ளமோ படித்த வாலிபருக்கும் தான் இந்த திருமண வரவேற்பு மாலை 6 மணிக்கு தொடங்கியது. இரவு 9.30 மணி வரை எந்தவித பிரச்சனையும் இன்றி வரவேற்பு விழா நடந்தது. அதன்பிறகு தான் டீஜே என்று அழைக்கப்படும் ஆட்டம்பாட்டத்துடன் இசை கொண்டாட்டம் உச்சக்கட்டத்தை தொடங்கியது.

    அப்போது அங்கு வந்த மாப்பிள்ளையின் நண்பர்கள் மதுபோதையில் மேடையில் ஏறி குத்தாட்டம் போட தொடங்கினர். ஒரு கட்டத்தில் மாப்பிள்ளையையும் அவர்கள் மேடைக்கு ஏற்றி ஆட வைத்தனர். அத்துடன் நின்றிருந்தால் பரவாயில்லை என்ற ரீதியில் மாப்பிள்ளையின் நண்பர்களில் சிலர் மணமகளையும் மேடைக்கு வருமாறு வற்புறுத்தி குரல் எழுப்பினர்.

    ஆனால் தனக்கு இதுபோன்று நடனம் ஆடி பழக்கம் இல்லை என்றும், பொது இடங்களில் நான் இதுபோன்று நடனம் ஆட விரும்பவில்லை என்றும் அவர் கூறினார். ஆனால் அவர் கூறுவதை காது கொடுத்து கேட்காத அந்த வாலிபர்கள் தொடர்ந்து வற்புறுத்திய நிலையில், மணமகளின் உறவினர்கள் சிலர், அப்படி எல்லாம் எங்கள் வீட்டு பெண் ஆட வரமாட்டாள் என்று வாலிபர்களை கண்டித்தனர்.

    அதை சொல்ல நீங்கள் யார் என்று மாப்பிள்ளையின் நண்பர்களில் சிலர் மணமகளின் உறவினர்களுடன் திடீரென கைகலப்பில் ஈடுபட்டு உள்ளனர். என்ன நடக்கிறது என்று இரு வீட்டாரும் யோசித்து பார்க்கும் முன்பு இந்த கைகலப்பு தகராறாக முற்றியது.

    இதை பார்த்த மணமகள், மாப்பிள்ளையின் குடிகார நண்பர்களின் அற்ப வேண்டுகோளையும், அதற்காக அவர்கள் தனது உறவினர்களை தாக்கியதையும் நினைத்து இனி இந்த மாப்பிள்ளையை நான் கட்ட மாட்டேன். திருமண ஏற்பாடுகளை நிறுத்துங்கள் என்று அதிரடியாக கழுத்தில் அணிந்திருந்த மாலையை கழற்றி வீசினார். இதனால் வரவேற்புடன் திருமணம் நின்றது.

    உடனே மண்டபத்தில் கட்டப்பட்டிருந்த பேனர்கள், அலங்கார வளைவுகள் போன்றவை அவசர, அவசரமாக இரவோடு இரவாக அகற்றப்பட்டு விட்டன. மேலும் மணமகன், மணமகள் வீட்டாரும் ஊருக்கு திரும்பினார்கள்.

    • முகூர்த்த நேரம் நெருங்கியதும் மணமகன், மணமகள் வீட்டார், உற்றார்-உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் திருமண மண்டபத்தில் கூடியிருந்தனர்.
    • மணமகன் வீட்டார் சம்பவம் பற்றி ஹாசன் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    ஹாசன்:

    தாலிக்கட்டும் நேரத்தில் காதலனிடம் இருந்து வந்த செல்போன் அழைப்பால் திருமணத்தை மணமகள் நிறுத்திவிட்டார். இதனால் மணமகனான அரசு பள்ளி ஆசிரியர், அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

    சினிமா காட்சியை மிஞ்சும் வகையில் அரங்கேறிய இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

    கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் ஆலூரை சேர்ந்தவர் அரசு பள்ளி ஆசிரியர். இவருக்கு பெற்றோர் ஹாசன் அருகே பூவனஹள்ளி கிராமத்தை சேர்ந்த முதுகலைப்பட்டம் பெற்ற பெண்ணை திருமணம் பேசி நிச்சயம் செய்திருந்தனர். இவர்களது திருமணம் நேற்று காலை நடத்த திட்டமிட்டு இருந்தது.

    இதனால் நேற்று முன்தினம் இரவே மணமகள், மணமகன் வீட்டார் ஹாசனில் உள்ள ஆதிசுஞ்சனகிரி திருமண மண்டபத்திற்கு வந்துவிட்டனர். இல்லற வாழ்வில் இணையப்போகும் சந்தோஷத்தில் மணமகன் மகிழ்ச்சியில் திளைத்தப்படி இருந்தார். ஆனால் மணமகளோ அமைதியாக இருந்துள்ளார்.

    நேற்று காலை முகூர்த்த நேரம் நெருங்கியதும் மணமகன், மணமகள் வீட்டார், உற்றார்-உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் திருமண மண்டபத்தில் கூடியிருந்தனர். முதலில் மணமகன் திருமண மேடையில் அமர்ந்தார். அதைத்தொடர்ந்து மணமகள் பட்டுப்புடவை உடுத்தி, ஆபரணங்கள் அணிந்து மணக்கோலத்தில் மணமேடைக்கு அழைத்து வரப்பட்டார்.

    இதையடுத்து புரோகிதர் மந்திரங்கள் ஓத கெட்டிமேளம் ஒலிக்க மணமகன் தனது கைகளில் தாலியை எடுத்து, மணமகளின் கழுத்தில் தாலிக்கட்ட முயன்றார். இதற்கிடையே முகூர்த்த நேரத்திற்கு சற்று முன் மணமகளுக்கு ஒரு செல்போன் அழைப்பு வந்துள்ளது.

    அந்த செல்போன் அழைப்பை ஏற்று பேசி முடித்தார். உடனே மணமகன் தாலிக்கட்ட நெருங்கியபோது, திடீரென்று மணப்பெண் தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என கூறி அணுகுண்டு வார்த்தையை வீசினார். இதனால் திருமண மண்டபம் களேபரமானது.

    இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மணமகன், மணமகளிடம் என்னை திருமணம் செய்ய ஏன் மறுக்கிறாய்? என கேள்வி கேட்டார். அதற்கு அவர், நான் ஒருவரை காதலித்து வருகிறேன். ஆனால் அவரை எனது வீட்டில் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் வேறுவழியில்லாமல் திருமணம் செய்து கொள்ள சம்மதித்தேன்.

    எனது காதலன் தான் தற்போது செல்போனில் பேசி திருமணத்தை நிறுத்திவிட்டு வா. நாம் திருமணம் செய்து கொள்வோம் என்று கூறினார். நான் காதலனை திருமணம் செய்ய இருப்பதாக கூறினார்.

    இதனால் மணமகன் மேற்கொண்டு பேச முடியாமல் வாயடைத்து போய் நின்றார். இதை கவனித்த மணப்பெண்ணின் பெற்றோர், உறவினர்கள் அவரை சமாதானம் செய்ய முயன்றனர். உடனே மணமேடையில் இருந்து இறங்கி ஓடிய மணமகள், திருமண மண்டபத்தில் இருந்த மணமகள் அறைக்குள் சென்று கதவை உட்புறமாக பூட்டிக்கொண்டார். இதன் காரணமாக மணமகனும் இனி நான் இந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என திட்டவட்டமாக கூறினார்.

    இதனால் திருமணத்திற்கு வந்தவர்கள் மத்தியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது. ஒவ்வொருவரும் ஒரு கருத்தை வெளிப்படுத்தினர்.

    பின்னர் மணமகன் வீட்டார் சம்பவம் பற்றி ஹாசன் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் இருவீட்டாரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    ஆனால் மணமகள் தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை. நான் காதலனை கரம்பிடிக்க போகிறேன். இந்த திருமணத்தை நிறுத்திவிடும்படி கூறினார். இதனால் அவரது பெற்றோர் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். இருப்பினும் மணமகள் திட்டவட்டமாக திருமணம் செய்ய சம்மதிக்காததால், அவரது விருப்பப்படி விடும்படி போலீசார் கூறினர். இந்த முடிவால் மணமகன் வீட்டார் ஏமாற்றம் அடைந்தனர். திருமணத்திற்கு செய்த செலவு தொகையை பெற்றுத்தர அவர்கள் போலீசாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பெரும்பாலும் திரைப்படங்களில் தான் தாலிகட்டும் நேரத்தில் மணமகளோ அல்லது மணமகனோ திருமணத்தை நிறுத்தும் பரபரப்பு காட்சிகள் வரும். ஆனால் திரைப்படத்தை மிஞ்சும் வகையில் ஹாசனில் காதலன் செல்போனில் அழைத்து பேசியதை தொடர்ந்து திருமணத்தை இளம்பெண் நிறுத்திய சம்பவம் மக்கள் மத்தியில் பேசுபொருளாகிவிட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வீடியோவில் மணமகளின் அருகே மணமகன் அமைதியாக ஒன்றும் தெரியாதது போல் அமர்ந்திருக்கிறார்.
    • மணமகள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் அருகே உள்ள சேலம்பூர் பகுதியை சேர்ந்த மணமகள் ஒருவர் மணமேடையில் அமர்ந்தவாறு வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. அந்த வீடியோவில் மணமகளின் அருகே மணமகன் அமைதியாக ஒன்றும் தெரியாதது போல் அமர்ந்திருக்கிறார். ஆனால் மணமகள் தனது கைத்துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி 4 முறை சுடுகிறார்.

    இந்த சம்பவம் கடந்த 7-ந்தேதி நடந்துள்ளது. துப்பாக்கியால் சுட்ட பிறகு அந்த துப்பாக்கியை மணமகள் தனது அருகில் இருப்பவரிடம் கொடுக்கிறார். இந்த வீடியோக்கள் வைரலானதை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக மணமகள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருமணத்தின் போது கோவில்களில் சாமி தரிசனம் செய்துவிட்டு மணமகன் மற்றும் மணமகள் அழைப்பு நடைபெறும்.
    • ஆந்திர திருமண மண்டபத்தில் இருதரப்பினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.

    திருப்பதி:

    திருமணத்தின் போது கோவில்களில் சாமி தரிசனம் செய்துவிட்டு மணமகன் மற்றும் மணமகள் அழைப்பு நடைபெறும்.

    ஆனால் தற்போது சினிமா குத்து பாடல்களுக்கு நடனமாடியபடி மணமகன் மற்றும் மணமகளை அழைத்து வருகின்றனர்.

    வரவேற்பு நிகழ்ச்சிகளில் மணமகன் மணப்பெண்களை நடனமாட வைத்து வீடியோ எடுக்கின்றனர்.

    இது போன்ற ஒரு சம்பவத்தால் ஆந்திர திருமண மண்டபத்தில் இருதரப்பினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.

    ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராமச்சந்திரபுரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவருக்கும் தல்லாகுடி அடுத்த கஜ்ரம் பகுதியை சேர்ந்த பூஜிதாவுக்கும் திருமணம் நேற்று முன்தினம் நடந்தது.

    இரவு மணமக்களின் உறவினர்கள் நண்பர்கள் ஏராளமானோர் திருமண மண்டபத்தில் குவிந்து இருந்தனர்.

    பிரம்மாண்டமாக திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. திருமண வரவேற்பின் போது பாட்டு கச்சேரியுடன் ஆடல் பாடல் நிகழ்ச்சியுடன் திருமண மண்டபம் களை கட்டியது.

    நேற்று காலை மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்டினார். விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    அப்போது மணமகன் வீட்டார் மணப்பெண்ணை சினிமா பாடலுக்கு ஏற்றவாறு நடனம் ஆட வேண்டும் என தெரிவித்தனர். மணப்பெண் தனக்கு நடனமாட தெரியாது என கூறினார்.

    மணமகள் வீட்டாரும் மணமகளுக்கு நடனமாட தெரியாது என்றனர்.

    இதனால் மணமகன் மணமகள் வீட்டாருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. மணமகன் வீட்டார் மணமகள் மற்றும் அவரது உறவினர்களை அங்கிருந்த சேர்களை தூக்கி வீசி எரிந்து தாக்கினர். இதில் மணமகளின் உறவினர் பெண் ஒருவருக்கு தலை மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. ஒருவருக்கு கை முறிந்தது.

    மேலும் 3 பேர் காயமடைந்தனர். கொடு கொண்ட போலீசார் சம்பவம் இடத்திற்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இரு தரப்பை சேர்ந்தவர்களும் ஒருவர் மீது ஒருவர் புகார் கொடுக்க போலீஸ் நிலையம் முன்பு குவிந்தனர்.

    இதனால் அங்கும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் இருதரப்பினரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    • இரண்டு ஆண்டுகள் காதலித்து வந்துள்ளதால் தைரியமாக மணப்பெண் காத்திருந்தார்
    • மணமகன் திருமண ஆடை அணியாமல் தாலி கட்டினார்

    உத்தர பிரதேச மாநிலம் பெரேலி பகுதியில் வசித்து வந்த இருவருக்கு திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இருவரும் சுமார் இரண்டரை ஆண்டுகள் பழகி வந்தனர். இதனால் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இந்த நிலையில் திடீரென திருமண நாள் அன்று மணமகன் திருமணம் நடக்கும் இடத்தில் இருந்து ஓடிவிட்டார்.

    இதனால், மணமகள் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், இரண்டரை ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்ய இருந்த மணமகள் கவலைப்படாமல் மணமகனுக்காக காத்திருந்தார்.

    நேரம் செல்ல செல்ல அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் போன் செய்து, எங்கு இருக்கிறார்?, திருமணத்திற்கு இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கும் நிலையில் எங்கு சென்றாய்? என்று கேட்டுள்ளார்.

    திருமணத்திற்கு எனது தாயாரை அழைத்து வர சென்றுள்ளேன் என மணமகன் சமாளித்துள்ளார். ஆனால், மணமகள் அதை நம்பாமல், மணமகனை உறவினர்களுடன் சேர்ந்து தேட ஆரம்பித்துள்ளார். அப்போது பெரேலி நகரின் புறநகரில் உள்ள ஒரு பஸ் நிலையில் பேருந்தில் உட்கார்ந்து இருந்தது கண்டுபிடித்தனர். சுமார் 20 கி.மீ. தூரத்தில் இருக்கும் அந்த பேருந்து நிலையத்தில் இருந்து மணமகனை அழைத்து வந்தனர்.

    பின்னர், ஒரு கோவில் முன் வைத்து திருமணம் நடைபெற்றது. மணமகள் திருமண உடையில் இருந்தாலும், மணமகன் திருமண ஆடை அணியவில்லை.

    திருமணத்திற்கு வந்த நபர்கள், மணமகள் மனம் தளாராமல் ஓடிய மணமகனை பிடித்து திருமணம் செய்த தைரியத்தை வெகுவாக பாராட்டிச் சென்றனர்.

    மணமகனுக்கு சளி பிடித்துள்ளதாகவும், அதனால் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

    • மணமகனின் நண்பர்கள் மேடைக்கு கீழே நாற்காலியில் அமர்ந்தவாறு சில திட்டங்களை தீட்டுவது போன்று காட்சி உள்ளது.
    • சிறிது நேரத்தில் மணமேடைக்கு சென்று மாப்பிள்ளைக்கு மதுபானம் கலந்த குளிர்பானத்தை கொடுக்கிறார்கள்

    திருமணத்தின் போது மணமகனுக்கு அவரது நண்பர்கள் செய்யும் வேடிக்கையான செயல்கள் சமூக வலைதளங்களில் வைரலாவது உண்டு. அந்த வகையில் தற்போது வேகமாக பரவும் வீடியோ ஒன்றில் மணமகனுக்கு அவரது நண்பர்கள் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அதில், மணமக்கள் மேடையில் இருப்பதையும், விருந்தினர்களின் வாழ்த்துக்களை ஏற்றுக் கொள்வதையும் காண முடிகிறது. அப்போது மணமகனின் நண்பர்கள் மேடைக்கு கீழே நாற்காலியில் அமர்ந்தவாறு சில திட்டங்களை தீட்டுவது போன்று காட்சி உள்ளது. பின்னர் அவர்கள் ஒரு குளிர்பானத்தில் மது பானத்தை கலக்கிறார்கள்.

    சிறிது நேரத்தில் மணமேடைக்கு சென்று மாப்பிள்ளைக்கு மதுபானம் கலந்த குளிர்பானத்தை கொடுக்கிறார்கள். அதை குடித்த மணமகன் சிரிக்க தொடங்குகிறார். இதை பார்த்த மணமகளும் விஷயத்தை புரிந்து கொண்டு சிரிப்பது போன்று காட்சிகள் உள்ளன.

    இந்த வீடியோ வேடிக்கையாக இருந்தாலும், சமூக வலைதளங்களில் ஏராளமான கமெண்டுகளை பெற்று வருகிறது. 26 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை குவித்துள்ளது. இப்படிப்பட்ட நண்பர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று ஒரு பயனரும், மாப்பிள்ளையின் ரியாக்ஷன் வேறு லெவல் என ஒருவரும் பதிவிட்டுள்ளனர்.

    • நேற்று காலையில் மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்டினார்.
    • மணமகளிடம், அவரது பெற்றோர் சமாதானம் பேசினர்.

    போளூர்:

    போளூரில் உள்ள ஒரு வங்கியில் வேலை செய்யும் வாலிபருக்கும், போளூரை அடுத்த ஒரு கிராமத்தில் வசிக்கும் பட்டதாரி இளம் பெண்ணுக்கும் பெரியோர்களால் நிச்சயம் செய்யப்பட்டு நேற்று காலை போளூரில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் நடைபெற்றது.

    முன்னதாக நேற்று முன்தினம் இரவு மணப்பெண் அழைப்பும் நடந்தது. இந்த நிலையில் நேற்று காலையில் மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்டினார். அடுத்த வினாடியே மணமகள், எனக்கு மணமகனை பிடிக்கவில்லை என்று தாலியை கழற்றி வீசினாா். இதனால் திருமணத்திற்கு வந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் போளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் மற்றும் போலீசார் அங்கு சென்று மணமகளிடம் விசாரித்தனர்.

    அப்போது அவர் எனக்கு மணமகனை பிடிக்கவில்லை என்று கூச்சலிட்டவாறு திரும்ப திரும்ப விடாப்பிடியாக கூறினார். அதற்கு, மணமகனை பிடிக்கவில்லை என்றால் முதலிலேயே சொல்லி திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டியது தானே. தாலி கட்டிய பிறகு மணமகனை பிடிக்கவில்லை என்றால் என்ன என்று போலீசார் கேட்டனர். அதற்கு மணமகள் வாயை திறக்காமல் மவுனமாக இருந்தார். பின்னர் மணமகளிடம், அவரது பெற்றோர் சமாதானம் பேசினர். ஆனால் அதற்கு அவர் சம்மதிக்கவில்லை. அதைத் தொடர்ந்து மணமகளையும், பெண் வீட்டாரையும் எச்சரித்து போலீசார் அங்கிருந்து அனுப்பினர்.

    பின்னர் உறவினர் ஒருவரின் பெண்ணுடன் மணமகனுக்கு திருமணம் நடைபெற்றது.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • போதையில் இருந்த மணமகன் திருமணத்தை நடத்துவதற்காக வந்திருந்த பாதிரியாரிடமும், மணமகளின் உறவினர்களிடம் தகராறு செய்தார்.
    • இரு வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இது குறித்து அங்கிருந்த சிலர் போலீசுக்குத் தகவல் தெரிவித்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் கோழஞ்சேரி அருகே தடியூர் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் ஒரு இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமணம் அங்குள்ள ஒரு தேவாலயத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    திருமணத்தன்று காரில் இருந்து இறங்கிய மணமகன் மதுபோதையில் தள்ளாடியபடி மணமேடை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார்.

    இதை பார்த்த மணப்பெண் உள்பட அனைவரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் போதையில் இருந்த மணமகன் திருமணத்தை நடத்துவதற்காக வந்திருந்த பாதிரியாரிடமும், மணமகளின் உறவினர்களிடம் தகராறு செய்தார்.

    இதனை நேரில் பார்த்து கொண்டிருந்த மணமகள் அதிர்ச்சியடைந்தார். ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த மணமகள் 'தனக்கு இந்த திருமணமே வேண்டாம்' என்று கூறி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதனால் திருமணம் நின்றது.

    இதுதொடர்பாக இரு வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இது குறித்து அங்கிருந்த சிலர் போலீசுக்குத் தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து இரு வீட்டாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது மணமகளின் குடும்பத்தினர், தங்களுக்கு இந்தத் திருமணத்தில் விருப்பமில்லை என்றும் திருமணத்துக்காக பெரும் தொகை செலவு செய்ததால் மணமகனின் உறவினர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இல்லையெனில் திருமணத்துக்காக செலவு செய்த தொகையை நஷ்டஈடாக தரவேண்டும் என்றனர்.

    இதை தொடர்ந்து நஷ்ட ஈடாக ரூ.6 லட்சம் கொடுக்க மணமகன் வீட்டார் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் திருமணத்துக்காக தயார் செய்திருந்த உணவு அனைத்தும் வீணானது.

    இதற்கிடையே மதுபோதையில் ரகளை செய்ததாக மணமகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×