search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    மணமகன் மதுபோதையில் வந்ததால் திருமணத்தை நிறுத்திய மணமகள்
    X

    மணமகன் மதுபோதையில் வந்ததால் திருமணத்தை நிறுத்திய மணமகள்

    • போதையில் இருந்த மணமகன் திருமணத்தை நடத்துவதற்காக வந்திருந்த பாதிரியாரிடமும், மணமகளின் உறவினர்களிடம் தகராறு செய்தார்.
    • இரு வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இது குறித்து அங்கிருந்த சிலர் போலீசுக்குத் தகவல் தெரிவித்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் கோழஞ்சேரி அருகே தடியூர் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் ஒரு இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமணம் அங்குள்ள ஒரு தேவாலயத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    திருமணத்தன்று காரில் இருந்து இறங்கிய மணமகன் மதுபோதையில் தள்ளாடியபடி மணமேடை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார்.

    இதை பார்த்த மணப்பெண் உள்பட அனைவரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் போதையில் இருந்த மணமகன் திருமணத்தை நடத்துவதற்காக வந்திருந்த பாதிரியாரிடமும், மணமகளின் உறவினர்களிடம் தகராறு செய்தார்.

    இதனை நேரில் பார்த்து கொண்டிருந்த மணமகள் அதிர்ச்சியடைந்தார். ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த மணமகள் 'தனக்கு இந்த திருமணமே வேண்டாம்' என்று கூறி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதனால் திருமணம் நின்றது.

    இதுதொடர்பாக இரு வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இது குறித்து அங்கிருந்த சிலர் போலீசுக்குத் தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து இரு வீட்டாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது மணமகளின் குடும்பத்தினர், தங்களுக்கு இந்தத் திருமணத்தில் விருப்பமில்லை என்றும் திருமணத்துக்காக பெரும் தொகை செலவு செய்ததால் மணமகனின் உறவினர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இல்லையெனில் திருமணத்துக்காக செலவு செய்த தொகையை நஷ்டஈடாக தரவேண்டும் என்றனர்.

    இதை தொடர்ந்து நஷ்ட ஈடாக ரூ.6 லட்சம் கொடுக்க மணமகன் வீட்டார் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் திருமணத்துக்காக தயார் செய்திருந்த உணவு அனைத்தும் வீணானது.

    இதற்கிடையே மதுபோதையில் ரகளை செய்ததாக மணமகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×