search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Can water"

    நிலத்தடி நீர் எடுப்பது குறித்து தெளிவான உத்தரவு வரும்வரை லாரிகளை ஓட்டமாட்டோம் என்று தண்ணீர் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். #WaterCan #DrinkingWater
    சென்னை:

    தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம் குறித்து தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு தலைவர் நிஜ லிங்கம் கூறியதாவது:-

    3-வது நாளாக நீடித்து வரும் வேலை நிறுத்தத்தால் அடுக்குமாடி குடியிருப்பு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே சப்ளை செய்த தண்ணீர் 2 நாட்கள் வரை இருந்தது.

    இன்று முதல் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் சிறிய, பெரிய ஓட்டல்கள், நட்சத்திர ஓட்டல்கள் போன்றவற்றிற்கு தினமும் 100 முதல் 200 லாரிகள் வரை தண்ணீர் தேவைப்படும். அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு 50 லாரிகளில் தண்ணீர் சப்ளை செய்வோம். லாரிகள் ஓடாததால் குடிநீர் இல்லாமல் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    சோழிங்கநல்லூர், ஓ.எம்.ஆர், பள்ளிக்கரணை, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் தங்கியுள்ள வெளிமாநில மற்றும் வெளிநாட்டினரும் பாதிக்கப்படக்கூடிய நிலை ஏற்பட்டு வருகிறது. ஓட்டல்களை மூடுகின்ற நிலை உருவாகி உள்ளது.

    குடிநீர் வாரியத்தால் முழுமையாக தண்ணீர் சப்ளை செய்ய முடியாது. தினமும் 20 ஆயிரம் லோடுகள் தண்ணீர் சப்ளை செய்யப்படும். 4200 தனியார் லாரிகள் இந்த பணியில் ஈடுபட்டன.

    வேலைநிறுத்தம் காரணமாக அனைத்து லாரிகளும் பல்வேறு பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளன. குடிநீரை அரசு எடுக்க சொன்னால் நாங்கள் எடுத்து வினியோகிக்க தயாராக இருக்கிறோம். அரசு சொல்லாமல் தண்ணீர் எடுத்தால் எங்கள் மீது வழக்குப்பதிவு நடவடிக்கை எடுக்கிறார்கள். அதனால் நிலத்தடி நீர் எடுப்பது குறித்து தெளிவான உத்தரவு வரும்வரை லாரிகளை ஓட்டமாட்டோம்

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் வெங்கடசுப்பு கூறியதாவது:-

    தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக ஓட்டல்கள், தங்கும்விடுதிகளை மூடக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையில் பாதி ஓட்டல்கள், ரெஸ்ட்டாரண்ட்டுகள் மூடப்பட்டுவிட்டன. இந்த பிரச்சனை இன்று முடிவுக்கு வராவிட்டால் நாளை முழுமையாக மூடக்கூடிய நிலை உருவாகும்.

    சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால் ஓட்டல்களில் ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் எடுக்க முடிவதில்லை. தனியார் லாரிகளின் மூலம் தான் வெளியூரில் இருந்து கொண்டுவரப்படும் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. நட்சத்திர ஓட்டல் முதல் சிறிய ஓட்டல் வரை தனியார் லாரி தண்ணீரை நம்பிதான் உள்ளன.


    தண்ணீர் இல்லாமல் ஓட்டல்களை நடத்த முடியாது. அதனால் ஓட்டல் உரிமையாளர்கள், லாட்ஜ் உரிமையாளர்கள் மற்றும் தண்ணீர் லாரி உரிமையாளர்களுடன் நேற்று பேச்சு வார்த்தை நடத்தினோம். இதில் அரசின் முடிவை தெரிவிக்காதவரை லாரிகளை இயக்க மாட் டோம் என்று கூறிவிட்டனர்.

    அதனால் இன்று நிலைமை மேலும் மோசமாகும். அமைச்சர்களுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளோம். தனியார் தண்ணீர் லாரி பிரச்சனையில் முடிவு தாமதம் ஆனால் பொது மக்கள், ஓட்டல், லாட்ஜ், ஐ.டி. நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கும்நிலை ஏற்படும்.

    சொந்த லாரிகள் மூலம் அரசு வழங்கும் தண்ணீரை எடுத்தால் ஸ்டிரைக்கில் ஈடுபட்டவர்கள் லாரியை மடக்குகிறார்கள். நேற்று வரை கேன் வாட்டரை பயன்படுத்தி வந்தோம். தற்போது கேன் வாட்டரும் சப்ளை இல்லாததால் ஓட்டல்களை நடத்த முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னை தி.நகர், கிண்டி, வேளச்சேரி, ஓ.எம்.ஆர்., பகுதியில் உள்ள ஓட்டல்கள் தண்ணீர் இல்லாமல் மூடப்பட்டுள்ளன. #WaterCan #DrinkingWater
    ×