search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதலமைச்சர் நாராயணசாமி"

    புதுவை அரசு மகளிர்- குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் சர்வதேச பெண் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. இதில் மாணவர் ஒருவர் கேட்ட கேள்வியால் கவர்னர்- முதல்வர் அதிர்ச்சி அடைந்தனர். #narayanasamy

    புதுச்சேரி:

    புதுவை அரசு மகளிர்- குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் சர்வதேச பெண் குழந்தைகள் தின விழா ஜெயராம் திருமண நிலையத்தில் நடைபெற்றது. அதில், ஏராளமான பெண்கள், கல்லூரி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    அப்போது மாணவர்கள் கவர்னர், முதல்-அமைச்சர், அமைச்சருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    மாணவர்கள் கேள்வி கேட்டால் அதற்கு கவர்னர் பதில் அளிப்பார் என்று அதிகாரிகள் அறிவித்தனர்.

    அப்போது தாகூர் கலைக்கல்லூரி மாணவர் தினேஷ் மேடைக்கு வந்தார். அவரிடம் மைக் கொடுக்கப்பட்டது. அவர் கேட்ட முதல் கேள்வியே மேடையில் சலசலப்பை ஏற்படுத்தும் விதமாக இருந்தது.

    இந்த அரசு முறையாக செயல்படுகிறதா? என்று தனது முதல் கேள்வியை அவர் கேட்டார். கேள்வி சர்ச்சைக்குரிய அளவில் இருந்ததால் கவர்னரோ, முதல்-அமைச்சரோ யாரும் பதில் அளிக்க முன்வர வில்லை.

    அப்போது சுதாரித்து கொண்ட அதிகாரிகள் இதுபோன்ற கேள்விகளை எல்லாம் கேட்க கூடாது. இது, பெண் குழந்தைகள் தொடர்பான விழா. எனவே, பெண்கள் சம்பந்தமான உரிமைகள், அதிகாரங்கள் பற்றி கேள்வி கேட்கலாம் என்று கூறினார்கள்.

    உடனே அந்த மாணவர் பெண்களுக்கு இந்த அரசு என்ன திட்டங்களை செய்து இருக்கிறது? என்று கேட்டார்.

    அதற்கு கவர்னர் பதில் அளிப்பதற்கு முன்பாக முதல்-அமைச்சர் நாராயணசாமி தலையிட்டு அரசு சம்பந்தமான கேள்வி என்பதால் நான் பதில் அளிக்கிறேன் என்று கூறி பதில் அளிக்க தொடங்கினார்.

    புதுவையில் பெண்கள் சொத்து வாங்கினால் 50 சதவீதம் பதிவு கட்டணம் மானியம் வழங்கப்படுகிறது. பெண்கள் தொழில் தொடங்கினால் அவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது என்று பல தகவல்களை கூறினார்.

    இந்த கேள்விக்கு பதில் சொன்னதும் மேற்கொண்டு கேள்விகளுக்கு பதில் அளிக்காத வகையில் கவர்னர் அங்கிருந்து வெளியேறி விட்டார்.

    அதைத்தொடர்ந்து முதல்- அமைச்சர், சபாநாயகர், அமைச்சரும் வெளியேறி விட்டனர்.

    இதனால் விழாவுக்கு வந்திருந்த மாணவர்களிலும் பெரும்பாலானோர் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டனர். அதன் பிறகு சில மாணவர்கள் கேள்வி கேட்க, அதற்கு அதிகாரிகள் பதில் அளித்தனர். #narayanasamy #puducherrygovernor

    ×