என் மலர்
செய்திகள்

புதுவையில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை- நாராயணசாமி அறிவிப்பு
புதுச்சேரி:
கோவா மாநிலம் மற்றும் புதுவை உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களுக்கான மின் கட்டணத்தை நிர்ணயம் செய்ய மத்திய இணை ஒழுங்குமுறை மின்சார ஆணையம் என்ற அமைப்பு உள்ளது.
இந்த ஆணையத்திடம் ஆண்டு தோறும் யூனியன் பிரதேச அரசுகள் புதிய நிதி ஆண்டுக்கான மின்சார வினியோகம் தொடர்பாக வரவு - செலவு கணக்குகளை தாக்கல் செய்யும்.
இதன் அடிப்படையில் மின் கட்டணத்தை உயர்த்தவும் அனுமதி கோரப்படும். கடந்த ஜனவரி மாதம் புதுவையில் மின் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் மின் கட்டணம் தற்போதைய நிலையிலேயே நீடிக்கும் என முடிவு செய்யப்பட்டது. இதனால் புதுவையில் மின் கட்டணம் உயரவில்லை.
இந்த நிலையில் புதுவையில் மின் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்த கையோடு கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வருகிற 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இணை மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் பரிந்துரைப்படி 4.59 சதவீதம் வரை மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
அதே போல் தற்காலிகமான துணை கூடுதல் கட்டணம் 4 சதவீதம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எலக்ட்ரிக் வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் நிலையங்களுக்கு மத்திய அரசு வரையறுத்துள்ள விதிகளின்படி சராசரியாக யூனிட்டுக்கு ரூ.5.68 வசூலிக்கப்பட உள்ளது.
வீட்டு உபயோக பயன் பாட்டுக்கு தற்போது ரூ.40 நிரந்தர கட்டணத்துடன் 100 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.1.30 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது, யூனிட்டுக்கு ரூ.1.50 ஆக உயர்த்தப்படுகிறது.
அதேபோல் 101 முதல் 200 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ.2.25-ல் இருந்து ரூ.2.50 ஆகவும், 201 முதல் 300 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ.3.95-ல் இருந்து ரூ.4.35 ஆகவும், 300 யூனிட்டுக்கு மேல் யூனிட்டுக்கு ரூ.5.10-ல் இருந்து ரூ.5.60 ஆகவும் உயர்கிறது.
வர்த்தக பயன்பாட்டுக்கு நிரந்தர கட்டணம் ரூ.120 சேர்த்து 100 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ.5.15-ல் இருந்து ரூ.5.50 ஆகவும், 101 முதல் 250 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ.6.15-ல் இருந்து ரூ.6.50 ஆகவும், 250 யூனிட்டுக்கு மேல் யூனிட்டுக்கு 6.85-ல் இருந்து ரூ.7.20 ஆகவும் அதிகரிக்கிறது.
குடிசை தொழில் பயன் பாட்டுக்கு ரூ.40 நிரந்தர கட்டணத்துடன் 100 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ.1.30-ல் இருந்து ரூ.1.50 ஆகவும், 101 முதல் 200 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ.2.25-ல் இருந்து ரூ.2.50 ஆகவும், 201 முதல் 300 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ.3.95-ல் இருந்து ரூ.4.35 ஆகவும், 300 யூனிட்டுக்கு மேல் யூனிட்டுக்கு ரூ.5.10-ல் இருந்து ரூ.5.60 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
பாராளுமன்ற தேர்தலில் புதுவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் மக்களின் அமோக ஆதரவால் சுமார் 2 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
ஆனால், தேர்தல் முடிவு அறிவித்த மறுநாளே மின் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறார்கள். இது, மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஒழுங்குமுறை ஆணையம் சிபாரிசு செய்தும் அதை ஏற்க மறுத்த புதுவை அரசு தேர்தல் முடிந்ததும் அதை அமல்படுத்தியது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
இது சம்பந்தமாக முதல்-அமைச்சர் நாராயணசாமியிடம் கேட்ட போது, புதுவையில் உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்தை குறைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இது சம்பந்தமாக அதிகாரிகளுடன் கலந்து பேசி விட்டு கட்டண குறைப்பு முடிவை அறிவிப்போம் என்று கூறினார். எனவே, கட்டணம் குறைக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.