search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "governor s mansion"

    கவர்னர் மாளிகையில் ரூ.85 லட்சம் முறைகேடு நடந்துள்ளதாக முதல்- அமைச்சர் நாராயணசாமி புகார் தெரிவித்துள்ளார். #cmnarayanasamy #puducherrygovernor

    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    கார்ப்பரேட் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அரசின் வளர்ச்சி திட்டங்களில் பங்கேற்கும் வகையில் சமூக பங்களிப்பு நிதி கமிட்டி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டியின் தலைவராக முதல்-அமைச்சரும், செயலராக மாவட்ட கலெக்டரும் உள்ளனர்.

    புதுவை முதல்-அமைச்சர் அலுவலகம், கலெக்டர் அலுவலகத்தில் இதற்காக நிதி தருவார்கள். காசோலை வழியாக பெறப் படும் இந்த நிதிக்கு உடனடியாக அத்தாட்சி ரசீது வழங்கப்படும்.

    இந்த நிதியின் மூலம் கல்வித்துறையில் ஸ்மார்ட் வகுப்பறைகள், அரசு பள்ளிகளில் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு டெங்கு பரிசோதனை கருவி வாங்குவதற்காக ரூ.13½ லட்சம் நிதியை இந்தியன் வங்கி நிர்வாகத்தினர் அளித்துள்ளனர்.

    கவர்னர் மாளிகையில் இருக்கும் ஊழியர்கள் போன் மூலம் சமூக பங்களிப்பு நிதி தரும்படி கட்டாயப்படுத்துவதாக எங்களுக்கு புகார்கள் வந்துள்ளது. பல தொழிற்சாலைகளிடம் இருந்து ரூ.85 லட்சம் நிதி கட்டாயமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

    இந்த பங்களிப்பு நிதியை பெற்றதற்காக எந்த அத்தாட்சி ரசீதும் தரப்படவில்லை. இந்த நிதியை எதற்காக செலவு செய்யப்போகிறார்கள்? என்ற கணக்கு விபரமும் தெரியவில்லை. இந்த நிதியை வசூலிக்க கவர்னருக்கும், கவர்னர் மாளிகைக்கும் அதிகாரம் கிடையாது.

    அப்படியிருக்க எந்த அடிப்படையில் எந்த விதியின் கீழ் இந்த நிதியை வசூலித்தனர்? இதற்கு கவர்னர் மாளிகையில் விளக்கம் தருவார்கள் என நம்புகிறோம். இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் புகார் செய்யவுள்ளேன்.

    புதுவை கவர்னரின் செயலாளராக தேவநீதிதாஸ் பணியாற்றி வந்தார். இவர் பணி ஓய்வு பெற்றுவிட்டார். இவரை கவர்னர் சிறப்பு அதிகாரியாக நியமித்தார். இதற்காக உள்துறைக்கு கோப்பு அனுப்பினார்.

    இந்த கோப்பிற்கு உள்துறை அனுமதி தரவில்லை. அனுமதி பெறாமலேயே தேவநீதி தாசை தொடர்ந்து சிறப்பு அதிகாரியாக நியமித்து கொண்டார்.

    இதுதொடர்பாக கவர்னருக்கு கடிதம் எழுதினேன். ஆனால், இதுவரை எந்த பதிலையும் கவர்னர் அளிக்கவில்லை. சிறப்பு அதிகாரியாக நியமக்கப்பட்டுள்ள தேவநீதிதாஸ் செயலாளர் அறையையே பயன்படுத்திக்கொண்டு அதிகாரிகளுக்கு உத்தர விட்டு வருகிறார்.

    சிறப்பு அதிகாரிக்கு கவர்னருக்கு ஆலோசனை கூறும் பொறுப்பு மட்டும் தான் உள்ளது. கவர்னர், அதிகாரிகளுடன் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கவோ, அதிகாரிகளை நேரடியாக அழைத்து பேசவோ எந்த அதிகாரமும் கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி நாராயணன், தீப்பாய்ந்தான், ஜெயமூர்த்தி, டெல்லி பிரதிநிதி ஜான்குமார் ஆகியோர் உடனிருந்தனர். #cmnarayanasamy #puducherrygovernor

    ×