search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    யாருக்கும் அடிமையாக இருக்க நாங்கள் சுதந்திரம் பெறவில்லை- நாராயணசாமி ஆவேசம்
    X

    யாருக்கும் அடிமையாக இருக்க நாங்கள் சுதந்திரம் பெறவில்லை- நாராயணசாமி ஆவேசம்

    தலைவர்கள் போராடி புதுவைக்கு சுதந்திரம் பெற்றுத்தந்தது அடிமையாக இருக்க அல்ல என்று முதல்- அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். #narayanasamy

    புதுச்சேரி:

    புதுவைக்கு மாநில அந்தஸ்து கேட்டு கம்பன் கலையரங்கில் நடந்த கருத்தரங்கில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    நாட்டிலேயே டெல்லியும், புதுவையும்தான் சட்டசபை உள்ள யூனியன் பிரதேசங்களாகும். டெல்லியை விட புதுவைக்கு நிலம், நிர்வாகம், நிதி, சட்ட ஒழுங்கு என 4 அதிகாரங்கள் பிற மாநிலங்களைப்போல கொடுக்கப்பட்டுள்ளது.

    கடந்த காலங்களில் நமது உரிமைகளை வலியுறுத்தாததால் நமது ஆட்சியின் உரிமைகளை நமக்கு தெரியாமல் சிலர் திருத்தியுள்ளனர். இதை முறியடிக்க மாநில அந்தஸ்து தேவை.

    டெல்லி முதல்-அமைச்சர் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் கவர்னருக்கு தனிப்பட்ட அதிகாரம் கிடையாது, அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட வேண்டும். அரசு எடுக்கும் முடிவுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

    அரசியலமைப்பு பிரிவில் நீதிமன்றம் தீர்ப்பளித்ததால் இந்த தீர்ப்பு அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும். ஆனால் டெல்லிக்கு அளித்த தீர்ப்பு புதுவைக்கு பொருந்தாது என கவர்னர் கிரண்பேடி தொல்லை கொடுத்து வருகிறார். மாநில நிர்வாகத்தில் தலையிட்டு அதிகாரிகளை மிரட்டியும் வருகிறார்.

    தலைவர்கள் போராடி புதுவைக்கு சுதந்திரம் பெற்றுத்தந்தது அடிமையாக இருக்க அல்ல. நமது மாநிலத்திற்கு பிரச்சினை என்றால் யார் இடையூறாக இருந்தாலும் அவர்களை எதிர்கொள்வோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கருத்தரங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்மாநில செயலாளர் முத்தரசன் பேசியதாவது:-

    மாநில சட்டசபைகளை மத்திய பா.ஜனதா அரசு மதிக்கவில்லை. தமிழகத்திலும், புதுவையிலும் இரட்டை ஆட்சி நடக்கிறது. இதை எதிர்த்து போராடும் துணிவில்லாமல் தமிழக அரசு உள்ளது.

    ஆனால் நாராயணசாமி தலைமையிலான அரசு எதிர்த்து போராடுகிறது. கவர்னரை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் திரும்பிச் செல்லமாட்டார்.

    அவர் விலகிச்செல்ல 5 மாநில தேர்தலில் மணி அடிக்கப்பட்டுள்ளது. புதிய ஆண்டு பிரதமர் மோடிக்கு விடை கொடுக்கும் ஆண்டாக அமையும்.

    இவ்வாறு அவர் பேசினார். #narayanasamy 

    Next Story
    ×