search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்சாரம் தாக்கி பலி"

    • மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    • சோழவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த ஞாயிறு ஊராட்சி கன்னியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன்கள் விஷ்வா (12) சூர்யா (9).

    இருவரும் இன்று காலை வீட்டின் அருகில் உள்ள வயல் வெளிக்கு சென்றனர். அப்போது பம்பு செட்டின் அறையில் அருகில் கீழே கிடந்த இரும்பு பைப்பை இருவரும் மிதித்தனர். அதன் வழியாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    நீண்ட நேரம் ஆகியும் குழந்தைகள் வராததால் தேடிய பெற்றோர்கள் குழந்தை வயல்வெளியில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அருகில் உள்ளவர்கள் உதவியுடன் மின்சாரத்தை துண்டித்து சோழவரம் காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்து போலீசார் உடலை கைப்பற்றினார்.

    இருவரின் உடல்களை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    இதுகுறித்து சோழவரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். பள்ளி செல்லும் சகோதர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • தொங்கி கொண்டிருந்த வயரில் மின்சாரம் கசிந்து இருந்தது. இதனை அறியாமல் சம்பத் குமார் அந்த மின்வயரை தொட்டதாக தெரிகிறது.
    • போலீசார் வழக்கப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்திவருகிறார்கள்.

    அம்பத்தூர்:

    கொரட்டூர், பாடி யாதவா தெருவை சேர்ந்தவர் சம்பத் குமார் (வயது57).தி.மு.க.பிரமுகரான இவர் சென்னை ஐகோர்ட்டில் அரசு வக்கீலாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி சுந்தர தேவி, அம்பத்தூர் நகராட்சி முன்னாள் கவுன்சிலர் ஆவார்.

    சம்பத்குமார் தினமும் காலையில் அப்பகுதியில் நடைபயிற்சி செல்வது வழக்கம். இன்று காலை 6 மணியளவில் வழக்கம்போல் அவர் கொரட்டூர் ஜம்பு கேஸ்வரர் நகர் பகுதியில் உள்ள சிவன் கோவிலை சுற்றி நடைபயணம் மேற்கொண்டார்.

    அப்போது திடீரென மழை பெய்தததால் அருகில் உள்ள இரும்பு பட்டறை தொழிற்சாலை வாசலில் ஒதுங்கி நின்றார். அந்த நேரத்தில் அங்கு தொங்கி கொண்டிருந்த வயரில் மின்சாரம் கசிந்து இருந்தது. இதனை அறியாமல் சம்பத் குமார் அந்த மின்வயரை தொட்டதாக தெரிகிறது. இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே சம்பத் குமார் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கொரட்டூர் போலீசார் வழக்கப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்திவருகிறார்கள்.

    • பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
    • வழக்கு பதிவு செய்து மின்வாரிய அதிகாரிகள் மற்றும் லைன் மேனை கைது செய்தனர்.

    பெங்களூரு:

    கடலூர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (24). இவர் பெங்களூருவில் உள்ள ஒரு பர்னிச்சர் ஷோரூமில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சவுந்தர்யா (23). இவர்களுக்கு சுவிஷா என்ற 9 மாத பெண் குழந்தை இருந்தது. இவர்கள் பெங்களூரு காடுகோடி அருகே உள்ள ஏ.கே.கோபால் காலனி என்ற பகுதியில் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை கொண்டாட சந்தோஷ்குமார் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் சொந்த ஊரான கடலூருக்கு வந்தார். அங்கு தீபாவளி பண்டிகையை கொண்டாடிய அவர் பின்னர் மீண்டும் நேற்று முன்தினம் இரவு பெங்களூருவுக்கு குடும்பத்துடன் சென்றார்.

    நேற்று அதிகாலை 5 மணி அளவில் அவர்கள் பெங்களூருவுக்கு சென்றனர். பின்னர் சந்தோஷ்குமார் தனது குடும்பத்துடன் சவுந்தர்யாவின் தாய் வீட்டிற்கு நடந்து சென்றார். முதலில் சவுந்தர்யா தனது குழந்தையை தூக்கிக் கொண்டு சென்றார். அவர்களை தொடர்ந்து சந்தோஷ்குமார் சென்றார்.

    அப்போது அந்த பகுதியில் 11 கே.வி. திறன் கொண்ட மின் வயர் அறுந்து கிடந்தது. இதை கவனிக்காமல் சவுந்தர்யா மிதித்து விட்டார். இதில் அவரையும், அவரது குழந்தையையும் மின்சாரம் தாக்கியது. பின்னர் திடீரென அவர்களது உடலில் தீப்பற்றியது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சந்தோஷ்குமார் தனது மனைவி மற்றும் குழந்தையை காப்பாற்ற முயன்றார். ஆனால் முடியவில்லை.

    இதையடுத்து மின்வாரியத்துக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பின்னர் மீட்பு குழுவினர் வந்து பார்த்தபோது மின்சாரம் தாக்கி தீ பிடித்ததில் சவுந்தர்யா தனது குழந்தையுடன் இறந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் பற்றி தெரிய வந்ததும் கர்நாடக மாநில எரிசக்தி துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ், லைன்மேன் மஞ்சுநாத், உதவி பொறியாளர் சேத்தன், உதவி செயற்பொறியாளர் ராஜண்ணா ஆகிய 3 பேரையும் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். மேலும் பலியான சவுந்தர்யாவின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவித்தார். மேலும் இதுதொடர்பாக காடுகோடு போலீசார் மின்வாரியத்தினர் மீது அலட்சியத்தால் மரணம் விளைவித்ததாக வழக்கு பதிவு செய்து மின்வாரிய அதிகாரிகள் மற்றும் லைன் மேனை கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

    இதுகுறித்து சவுந்தர்யாவின் கணவர் சந்தோஷ்குமார் கூறியதாவது:-

    தீபாவளி பண்டிகை முடிந்து சொந்த ஊரில் இருந்து நேற்று காலை தான் பெங்களூரு வந்தோம். அதிகாலை 5 மணி அளவில் நாங்கள் சவுந்தர்யாவின் தாய் வீட்டிற்கு நடந்து சென்றோம். அப்போது பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. முதலில் எனது மனைவியும், குழந்தையும் சென்றனர். அவர்களை பின்தொடர்ந்து நான் சென்றேன். அப்போது அறுந்து கிடந்த மின் கம்பியை பனிப்பொழிவின் காரணமாக கவனிக்காமல் எனது மனைவி மிதித்தார். இதில் தூக்கிவீசப்பட்டதில் என் கண்முன்னே எனது மனைவியும், குழந்தையும் தீப்பிடித்து இறந்து விட்டனர். பெங்களூரு போன்ற சாப்ட்வேர் நிறுவனங்கள் நிறைந்த பெரு நகரங்களில் மின்சார கம்பிகள் அறுந்து கிடக்கும் என்று ஒருபோதும் நான் நினைக்கவில்லை என்று உருக்கமாக கூறினார்.

    மின்வாரியத்தின் அலட்சியத்தை கண்டித்து நேற்று மதியம் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அப்போது இந்த விவகாரம் குறித்து எரிசக்தி துறை அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் வீட்டு முன்பு போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்தனர். மேலும் இதுகுறித்து அவர்கள் கூறும்போது, 11 கே.வி. திறன் கொண்ட மின் வயர் அதிகாலை 1.30 மணி முதல் அறுந்து கிடந்துள்ளது. இதுகுறித்து எந்த வித முன் எச்சரிக்கையும் செய்யாமல் மின்சார துறையினர் அலட்சியத்துடன் செயல்பட்டுள்ளனர் என்றும் குற்றம் சாட்டினர்.

    • மின்சாரம் தாக்கியததில் புஷ்பா பரிதாபமாக இறந்தார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சோழிங்கநல்லூர் அடுத்த பெரும்பாக்கம், எழில் நகரில் வசித்து வந்தவர் புஷ்பா (வயது54). இவர் நேற்று இரவு ஹீட்டர் பயன்படுத்தி வாளியில் வெந்நீர் வைத்தார். சிறிது நேரம் கழித்து வெந்நீர் சூடாகிவிட்டதா என்று அவர் தொட்டு பார்த்ததாக தெரிகிறது. அப்போது மின்சாரம் தாக்கியததில் புஷ்பா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பெரும்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட கனகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
    • சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

    பொன்னேரி:

    சோழவரம் அடுத்த பூதூர், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கனகா (வயது55). கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்த இவர் 100 நாள் வேலை திட்டத்தில் தொழிலாளியாக வேலைக்கு சென்று வந்தார்.

    நேற்று இரவு வழக்கம்போல் கனகா வீட்டில் தூங்கினார். நள்ளி ரவில் வீட்டின் அருகே சென்ற உயர் அழுத்த மின்கம்பி ஒன்று அறுந்து கனகா வீட்டின் முன்பு விழுந்தது. நள்ளிரவு நேரம் என்பதால் இதனை யாரும் கவனிக்க வில்லை.

    இந்த நிலையில் இன்று அதிகாலை கனகா வீட்டில் இருந்து வெளியே வந்தார். அப்போது அவர் வீட்டு முன்பு அறுந்து கிடந்த மின்கம்பியை கவனிக்காமல் மிதித்தார். இதில் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட கனகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இதுபற்றி போலீசாருக்கும், மின்வாரிய ஊழியர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். உடனடியாக அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    போலீசார் பலியான கனகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கடந்த சில நாட்களாக சோழவரம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதில் ஏற்கனவே சேதம் அடைந்து இருந்த மின்கம்பி அறுந்து விழுந்து இருக்கலாம் என்று தெரிகிறது.

    இந்த பகுதியில் மின்கம்பத்தில் உள்ள கம்பிகள் பழுதடைந்த நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு சேதம் அடைந்த மின்கம்பிகளை ஆய்வு செய்து அதனை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுகுறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

    • வீரம்மாளை மீட்டு செங்குன்றத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே உள்ள வாணியன் சத்திரம், அண்ணா நகர் பகுதியில் வசித்து வருவபர் சீனிவாசன். இவரது மனைவி வீரம்மாள் (வயது47). இவர்களது வீட்டில் உள்ள பிரிட்ஜில் மின்சாரம் கசிந்து இருந்தது. இதனை கவனிக்காமல் வீரம்மாள் பிரிட்ஜை திறந்தார். இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசியது. சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் உயிருக்கு போராடிய வீரம்மாளை மீட்டு செங்குன்றத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து வெங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முருகேசன் பலத்த காயம் அடைந்தார்.
    • சம்பவ இடத்திலேயே வீரமணி பலியானார்.

    திருவொற்றியூர்:

    எர்ணாவூர்,அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் வீரமணி (வயது45).மின்வாரிய ஊழியர். நேற்று இரவு எண்ணூர் முதல் திருவொற்றியூர் வரை மின்தடை ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து மின்தடையை சரிசெய்ய வீரமணி மற்றும் உடன் வேலை பார்த்து வரும் திருவொற்றியூர் அன்னை சிவகாமி நகரை சேர்ந்த முருகேசன் (55) உள்பட 4 ஊழியர்கள் வந்தனர். அவர்கள் திருவொற்றியூர், ஜீவன்லால் நகர் பகுதியில் உள்ள டிரான்ஸ் பார்மரில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டனர். வீரமணியும், முருகேசனும் டிரான்ஸ்பார்மரில் ஏறி சரிசெய்து கொண்டு இருந்தனர். அப்போது திடீரென வீரமணி, முருகேசன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே வீரமணி பலியானார்.

    முருகேசன் பலத்த காயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலியான வீரமணிக்கு பாணு என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். ஊழியர்கள் பழுதுபார்த்துக் கொண்டு இருந்தபோது டிரான்ஸ்பார்மரில் மின்சப்ளை எப்படி வந்தது? என்பது தெரியவில்லை.

    இந்த நிலையில் இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி வீரமணியின் உறவினர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட ஏராளமானோர் அ.தி. மு. க. கவுன்சிலர் கார்த்திக் தலைமையில் இன்று காலை திருவொற்றியூர் அஜாக்ஸ் பஸ்நிலையம் அருகே உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    அவர்களிடம் திருவொற்றியூர் போலீசார் மற்றும் மின்வாரிய உதவி இயக்குனர் உதயசூரியன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர்.

    • அயன்சிங்கம்பட்டி பகுதியை சேர்ந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • தந்தை, மகன் இருவரும் மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அயன்சிங்கம்பட்டி கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    கல்லிடைக்குறிச்சி:

    நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியை அடுத்த மணிமுத்தாறு அருகே உள்ள அயன் சிங்கம்பட்டி மடத்து தெருவை சேர்ந்தவர் பேச்சி முத்து (வயது 55). இவருக்கு தங்கமணி என்ற மனைவியும், வனராஜ் (28) மற்றும் சரவணன் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். வனராஜிக்கு திருமணமாகவில்லை.

    இவர்களுக்கு சொந்தமான வயல் மணிமுத்தாறு 40 அடி கால்வாயை ஒட்டியுள்ள பகுதியில் உள்ளது. இந்நிலையில் வயலில் போட்டிருந்த பயிருக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காகவும், காட்டு விலங்குளிடம் இருந்து பயிரை பாதுகாக்க காவல் பணிக்காகவும் நேற்று இரவு 10.30 மணியளவில் பேச்சிமுத்து தனது மகன் வனராஜை அழைத்துக் கொண்டு வயலுக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

    இந்நிலையில் அவர்கள் இருவரும் இன்று அதிகாலை 1.30 மணியளவில் அங்குள்ள வயலை ஒட்டிய ஓடையில் இறந்து கிடந்தனர். அதனை சிலர் பார்த்து பேச்சிமுத்து குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் காட்டுத்தீ போல் அயன்சிங்கம்பட்டி கிராமம் முழுவதும் பரவியது. இதனால் கிராம மக்கள் காட்டுக்கு சென்று பார்த்தனர்.

    அப்போது தந்தை-மகன் 2 பேரும் இறந்து கிடப்பதை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர். தகவல் அறிந்து மணிமுத்தாறு போலீசார் அங்கு விரைந்து வந்து உயிரிழந்த 2 பேர் உடலையும் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து நடத்திய விசாரணையில், இரவு நேரங்களில் வயலுக்கு வனவிலங்குள் வருவதை அறிந்து கால்வாயில் வைத்து அவற்றை வேட்டையாடுவதற்காக சிலர் மின்வேலி அமைத்துள்ளனர். அந்த வேலிக்கு மின்சாரம் செலுத்த அருகில் சென்ற தாழ்வழுத்த மின்கம்பியில் அந்த மர்ம நபர்கள் கொக்கி போட்டு வயர் மூலமாக மின்சாரம் செலுத்தி வைத்திருந்தது தெரிய வந்தது.

    இதனை அறியாமல் பேச்சிமுத்துவும், வனராஜூவும் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சியபோது, மர்ம நபர்கள் போட்டிருந்த மின்வயர், மின்வேலியில் தண்ணீர் பட்டு, அதில் மின்சாரம் பரவி உள்ளது. இதனால் அங்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்த தந்தை-மகன் மீதும் மின்சாரம் பாய்ந்து அவர்கள் பலியானது தெரியவந்தது.

    இதுதொடர்பாக அயன்சிங்கம்பட்டி பகுதியை சேர்ந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தந்தை, மகன் இருவரும் மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அயன்சிங்கம்பட்டி கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    • கால்வாய்கள் மற்றும் ஆறுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
    • மகள் ஆதிராவுக்கு திருமணமாகி 8 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாகவே பெய்து வந்த சாரல் மழை தற்போது கனமழையாக மாறியுள்ளது. கடந்த 4 நாட்களாகவே மாவட்டம் முழுவதும் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது.

    கால்வாய்கள் மற்றும் ஆறுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. குமரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குருந்தன்கோட்டில் 134 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    மழை பகுதிகளிலும், அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் பெய்து வரும் கனமழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

    கனமழை காரணமாக திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    தொப்பவிளையை சேர்ந்தவர் சேம் (வயது47). இவர் வாழைக்குலை வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு ஜெயசித்ரா (45) என்ற மனைவியும், ஆதிரா (24) என்ற மகளும், அஸ்வின் (21) என்ற மகனும் இருந்தனர். மகன் அஸ்வின் கன்னியாகுமரி அருகே உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். மகள் ஆதிராவுக்கு திருமணமாகி 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். இதையடுத்து அவர் தனது தாய் வீட்டில் தங்கியிருந்தார்.

    இந்தநிலையில் நேற்று சேம் வியாபாரம் தொடர்பாக வெளியூர் சென்றிருந்தார். மாலை 6 மணியளவில் அந்த பகுதியில் மழை பெய்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் இவர்களது பக்கத்து வீட்டின் தகர கூரை மீது மின்ஒயர் பட்டு மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்துள்ளது. இந்தநிலையில், அஸ்வின் வீட்டில் இருந்த இரும்பு கம்பியுடன் வெளியே வந்தார். அந்த கம்பி எதிர்பாராமல் பக்கத்து வீட்டில் உள்ள தகர கூரையின் மீது உரசியது. இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து அலறினார். உடனே தாய் ஜெயசித்திரா மற்றும் சகோதரி ஆதிரா ஆகியோர் ஓடி வந்து அவரை பிடித்து காப்பாற்ற முயன்றனர். இதில் அவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது. 3 பேரும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    • டிரான்ஸ்பார்மர் பழுதை சரி செய்ய அருள்ஜோதி நேற்று மதியம் 3 மணி அளவில் அங்கு சென்றார்.
    • மின்சாரம் தாக்கி வயர் மேன் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பேரம்பாக்கம்:

    பேரம்பாக்கம் அருகே உள்ள நரசிங்கபுரம் சின்னத்தெருவை சேர்ந்தவர் அருள்ஜோதி (வயது 51). இவர் பேரம்பாக்கம் துணை மின் நிலையத்தில் வயர் மேன்னாக பணிபுரிந்து வருந்தார். இவருக்கு திருமணமாகி சாவித்திரி (38) என்கின்ற மனைவியும், கலையரசன் (21), தர்ஷினி (17) என்கின்ற ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த சில தினங்களாக திருவள்ளூர் மாவட்டத்தில் மழை பெய்து வரும் நிலையில் நேற்று பேரம்பாக்கம் அருகே உள்ள கொண்டஞ்சேரி, மேட்டு கண்டிகை திடீர் நகர் பகுதியில் டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்பட்டது.

    இது குறித்து அங்கிருந்தவர்கள் பேரம்பாக்கம் துணை மின் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து டிரான்ஸ்பார்மர் பழுதை சரி செய்ய அருள்ஜோதி நேற்று மதியம் 3 மணி அளவில் அங்கு சென்றார்.

    அப்போது அவர் டிரான்ஸ்பார்மர் மீது ஏரி பழுதை சரி செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது. இதில் டிரான்ஸ்மார்மரில் இருந்து தூக்கி வீசப்பட்ட அருள்ஜோதி உயிருக்கு போராடினார். இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துபோனார் என தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் குறித்து மப்பேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இது சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மின்சாரம் தாக்கி வயர் மேன் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • சுவிட்சை போட்டபோது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது.
    • எம்.கே.பி.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    ஆர்.கே.நகர்:

    சென்னை எம்.கே.பி.நகர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார். இவர் சொந்தமாக டெம்போ வாகனம் வைத்து ஓட்டி வருகிறார். இவரது மனைவி இந்துமதி(வயது25). 9 மாத கர்ப்பிணியான இவர் அப்பகுதியில் 16-வது கிழக்கு குறுக்கு தெருவில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்திருந்தார்.

    நேற்று இரவு இவர் மோட்டார் போடுவதற்காக சென்றார். சுவிட்சை போட்டபோது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட இந்துமதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மகளை பார்க்க சென்ற இந்துமதியின் பெற்றோர் அவர் பிணமாக கிடந்ததை பார்த்து கதறி துடித்தனர். இந்த சம்பவம் குறித்து எம்.கே.பி.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டின் முன்பு மேற்கூரை அமைக்கப்பட்டு வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கும் பணி நடந்தது.
    • கணவரை காப்பாற்ற முயன்ற மனைவி மின்சாரம் தாக்கி பலியானார்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்ைட அருகில் உள்ள குளத்துப்பட்டியை சேர்ந்தவர் பாண்டி(37). டிரைவராக வேலைபார்த்து வருகிறார். இவர் தற்போது மீனாட்சிபுரம் பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டின் முன்பு மேற்கூரை அமைக்கப்பட்டு வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கும் பணி நடந்தது.

    நேற்றுஇரவு பாண்டி கட்டிடத்திற்கு தண்ணீர் ஊற்றும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் அலறி துடித்தார். இதைபார்த்ததும் அவரது மனைவி உதயசூரியா(30) என்பவர் தனது கணவரை காப்பாற்றுவதற்காக முயன்றார். கணவரை தள்ளிவிட்ட மனைவி மீது மின்சாரம் பாய்ந்தது. பலத்த காயத்துடன் 2 பேரையும் நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் வழியிலேயே உதயசூரியா இறந்துவிட்டார்.

    கணவரை காப்பாற்ற முயன்ற மனைவி மின்சாரம் தாக்கி பலியானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பாண்டி பலத்த காயத்துடன் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து நிலக்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×