என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இண்டூர் அருகே விபரீதம்:  கம்பத்தில் ஏறி இணைப்பு கொடுக்க   முயன்ற விவசாயி மின்சாரம் தாக்கி பலி
    X

    இண்டூர் அருகே விபரீதம்: கம்பத்தில் ஏறி இணைப்பு கொடுக்க முயன்ற விவசாயி மின்சாரம் தாக்கி பலி

    • மின்வாரிய ஊழியரிடம் தன்னுடைய மின் கட்டணத்தை அபராதத்துடன் செலுத்தி விட்டேன். ஆகையால் மின் இணைப்பு கொடுங்கள் என கேட்டுள்ளார்.
    • அந்த மின் இணைப்புக்கு மேலே உள்ள எச்.டி. இணைப்பை கவனிக்காததால் முனுசாமி மீது மின்சாரம் பாய்ந்தது.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம் கோணங்கிஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி (வயது 35). பட்டதாரியான இவர் தன்னுடைய இரண்டு ஏக்கர் விவசாய நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து விவசாயம் செய்து வந்தார்.

    மேலும் ஆடு மற்றும் மாடுகள் வளர்த்து கொண்டு பட்டதாரியாக இருந்ததால் அரசு தேர்வுக்கு முயற்சி செய்து கொண்டு விவசாயத்தை செய்து கொண்டு தன் குடும்பத்தையும் கவனித்து வந்தார்.

    தன்னுடைய விவசாய நிலத்திற்கு விவசாயத்திற்கான பூந்தோட்ட மின் இணைப்பு பெற்று பயன்படுத்தி மாதா மாதம் மின்கட்டணம் செலுத்தி வந்துள்ளார்.

    இந்நிலையில் விவசாயத்தில் போதிய வருமானம் இன்மையாலும் இரண்டு மாதங்களாக தொடர் மழையின் காரணமாகவும் கடந்த மூன்று மாத காலமாக மின் மோட்டாரை அதிகளவில் பயன்படுத்தாமல் பூந்தோட்ட மின் இணைப்பிற்கு மின் கட்டணம் செலுத்தாமல் இருந்துள்ளார்.

    அதனால் மின்வாரிய ஊழியர்கள் முனுசாமியின் தோட்டத்தில் இருந்த மின் இணைப்பினை கடந்த 20 நாட்களுக்கு முன் துண்டித்துள்ளனர். இதனால் தங்களின் அத்தியாவசிய தேவைகள் விவசாயம் உள்ளிட்டவற்றிற்காக தண்ணீர் தேவைப்பட்டதன் காரணமாக வேறு வழியின்றி அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் கடன் வாங்கி தன்னுடைய மின் இணைப்பிற்கான கட்டணம் மற்றும் அபராத தொகை உள்ளிட்ட அனைத்தையும் செலுத்தியுள்ளார்.

    மின்வாரிய ஊழியரிடம் தன்னுடைய மின் கட்டணத்தை அபராதத்துடன் செலுத்தி விட்டேன். ஆகையால் மின் இணைப்பு கொடுங்கள் என கேட்டுள்ளார். அதற்கு அப்பகுதியை சேர்ந்த மின்வாரிய ஊழியர் தற்பொழுது தான் விடுமுறையில் இருப்பதால் உடனடியாக வர முடியாது ஒரு வாரம் வரை ஆகும். உங்களுக்கு அப்படி உடனே தேவை என்று இருந்தால் நீங்களே மின் இணைப்பினை செய்து கொள்ளுங்கள் என கூறியதாக தெரிவிக்கின்றனர்.

    இதனால் விவசாயி முனுசாமி மின்சார ட்ரான்ஸ்பார்மர் இயக்கத்தை நிறுத்திவிட்டு தன்னுடைய விவசாய நிலத்தில் உள்ள மின்கம்பத்தில் ஏறி மின் இணைப்பினை கொடுக்க முயற்சித்துள்ளார்.

    அப்பொழுது அந்த மின் இணைப்புக்கு மேலே உள்ள எச்.டி. இணைப்பை கவனிக்காததால் முனுசாமி மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் மின் கம்பத்திலிருந்து தூக்கி வீசப்பட்டதில் கீழே விழுந்தது அவர் காயம் அடைந்துள்ளார்.

    உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.

    தற்போது அவருடைய மனைவி செல்வி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர். மெத்தன போக்குடன் செயல்பட்ட மின்வாரிய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனர்.

    இந்த மின் விபத்து குறித்து இண்டூர் உதவி மின் பொறியாளர் அருணகிரியிடம் கேட்ட பொழுது சம்பந்தப்பட்ட விவசாயி மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட பின் மின் கட்டணத்தை செலுத்தி விட்டார். மின் இணைப்பை வழங்க வேண்டும் என கேட்ட பொழுது அப்பகுதியில் இருந்த ஊழியர் மற்ற பகுதியில் பணியில் இருந்ததால் சிறிது நேரம் ஆகும், வந்தபின் மின் இணைப்பை தருகிறேன் எனக் கூறியிருக்கிறார். அதற்குள் முனுசாமி மின்கம்பத்தில் ஏறி மின் இணைப்பு கொடுக்க முயன்ற போது மின்சாரம் பாய்ந்துள்ளது.

    தற்போது மழை காலம் என்பதால் ஒரு சில சமயங்களில் மின் இணைப்பு பணிகளுக்கு சிறிது நேரம் ஆகும் பொழுது பொது மக்கள் சற்று பொறுமை காக்க வேண்டும்.

    அவசரப்பட்டு தாங்களாகவே மின் இணைப்பை சீர் செய்கிறேன் என்று ஈடுபடும் பொழுது இது போன்ற தவிர்க்க முடியாத மின்விபத்துக்கள் ஏற்படுகின்றது. பொதுமக்கள் மின்சார வாரியத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியது மிகவும் முக்கியம் எனவும் தெரிவித்தார்.

    பட்டதாரி விவசாயியான முனுசாமி மின் கம்பத்தில் ஏறி மின் இணைப்பை கொடுக்க முயன்ற பொழுது மின்சாரம் தாக்கி பலியானது குறித்து பென்னாகரம் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×