என் மலர்
செய்திகள்

நாராயணபுரம் ஏரியில் புதிதாக கரை கட்டப்படுகிறது
சென்னை:
பல்லாவரம் - துரைப்பாக்கம் 200 அடி சாலையில் பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனை அருகே நாராயணபுரம் ஏரி உள்ளது.
இந்த ஏரி நிரம்பியதும் அதில் இருந்து வெளியேறும் தண்ணீர் பல்லாவரம் கால்வாய் வழியாக கைவேலி செல்லும்.
இந்த ஏரியின் நடுவே 200 அடி சாலை அமைந்ததால் ஏரி இரண்டாக பிரிந்தது. சரியான பராமரிப்பு இல்லாததால் ஏரியின் கொள்ளளவும் குறைந்தது. தண்ணீர் வெளியேறும் கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டன.
இதற்கு முன்பு வரை ஏரிக்கு பெரிய அளவில் தண்ணீர் வராததால் ஆபத்து எதுவும் ஏற்படவில்லை. ஆனால் 2015-ம் ஆண்டு பெய்த பெருமழையால் ஏரி நிரம்பி 200 அடிசாலையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. கரையில் உள்ள குடியிருப்பு பகுதிகள் அனைத்தும் தண்ணீர் சூழ்ந்தது. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்கப்பட்டது.
இந்த சம்பவத்துக்கு பிறகும் இந்த ஏரியை பராமரிக்க கடந்த 2 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் கடந்த வாரம் பெய்த கனமழையால் ஏரி நிரம்பியது. அருகில் உள்ள எல்.ஐ.சி. நகர், அண்ணாநகர் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. உடனே கால்வாய்கள் வெட்டப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இப்போது ஏரியில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட தண்ணீர் வெளியேறி விட்டது.
கண் முன்னால் பெருகிய தண்ணீர் வீணாகி வருவதை பார்க்கும் பொது மக்கள் இந்த ஏரியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வில்லையே என்று ஆதங்கப்பட்டனர். இந்த பகுதியில் நிவாரண பணிக்காக முகாமிட்டிருக்கும் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிகாரிகள் ஏரியை பார்வையிட்டு கரை கட்டுவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
இதையடுத்து பொதுப் பணித்துறை என்ஜினீயர்கள் ஏரியை ஆய்வு செய்து திட்ட மதிப்பீடு தயார் செய்துள்ளனர். ஏரியின் 3 புறமும் புதிதாக கரை கட்டி அதன் மீது நடைபாதை அமைக்க முடிவு செய்துள்ளனர். மேலும் தண்ணீர் வெளியேறுவதற்கு புதிய ஷட்டர் அமைக்கப்பட உள்ளது.
தற்போது ஆக்கிரமிப்பு கால்வாய் வெட்டி விடப்பட்டுள்ளது. இந்த கால்வாயில் மீண்டும் ஆக்கிரமிப்பு வராமல் இருப்பதற்காக இருபுறமும் கரை கட்டவும் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. பருவ மழை முடிந்ததும் இந்த பணிகள் தொடங்கும் என்று அதிகாரி கள் தெரிவித்தனர்.






