என் மலர்
செய்திகள்

முடிச்சூரில் வெள்ள பாதிப்பு: மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்
தாம்பரம்:
வடகிழக்கு பருவ மழையையொட்டி சென்னை புறநகர் பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. வீடுகளில் மழை வெள்ளம் புகுந்ததால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.
தாம்பரத்தை அடுத்த முடிச்சூரில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியேறினர்.
இந்த நிலையில் தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று வெள்ளம் பாதிக்கப்பட்ட முடிச்சூர் பகுதிகளை பார்வையிட்டார்.
அப்போது பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் குடை பிடித்தபடி வரதராஜபுரம், மகாலட்சுமி நகரில் தண்ணீரில் நடந்து சென்று வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்பகுதி பொதுமக்கள், நலச்சங்க நிர்வாகிகளிடம் குறைகளை கேட்டார். அப்போது அவர்கள் மு.க.ஸ்டாலினிடம் வெள்ள பாதிப்புகள் குறித்து விளக்கி கூறினார்கள். அதன்பின் அவர் அங்குள்ள ஒரு கட்டிடத்தில் மேல் ஏறி குடியிருப்புகளை சூழ்ந்துள்ள வெள்ளத்தை பார்வையிட்டார்.

அதன்பின் மு.க.ஸ்டாலின் பெருங்களத்தூர் அரசு பள்ளி முகாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டு இருந்த 500 பேருக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். பிறகு முடிச்சூர் சாலை கிருஷ்ணா நகர் பகுதியையும் பார்வையிட்டார்.
அவருடன் மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன், எம்.எல்.ஏ.க்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, ஒன்றிய செயலாளர் படப்பை மனோகர் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் சென்றனர்.






