என் மலர்
காஞ்சிபுரம்
மதுராந்தகம்:
காஞ்சிபுரம் மாவட்டம், அச்சிறுபாக்கம் மழை மலை மாதா ஆலயம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, ஒரு காரின் நம்பர் அழிக்கப்பட்டு இருந்தது. காரில் இருந்த டிரைவரிடம் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணான தகவல் கூறினார். அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் புதுச்சேரி மாநிலம், லாசுபேட்டை சேர்ந்த குணசேகரன் என்பதும் வாடகைக்கு கார் எடுத்து டிரைவரை தாக்கி காரிலிருந்து வெளியே தள்ளி காரை கடத்துவோம் என்று கூறினார்.
புதுச்சேரி மாநிலம் கரிக்கலாம் பாக்கத்தைச் சேர்ந்த சுரேஷ், குமார், ஜோசப் ஆகியோருடன் இணைந்து கார்களை கடத்தி விற்போம் எனக் கூறினார்.
குணசேகரன் கூறிய தகவலின் அடிப்படையில் அச்சிறுபாக்கம் போலீஸார் விழுப்புரம் மாவட்டம், வானூரில் உள்ள அவரது வீட்டில் இருந்த மினி லாரியும் கைபற்றி பறிமுதல் செய்து, சுரேஷ் மற்றும் குமார் கைது செய்தனர்.மற்றொரு குற்றவாளி ஜோசப் புதுச்சேரி மாநிலத்தில் வேறு ஒரு வழக்கில் சிறை உள்ளார். அச்சிறுபாக்கம் போலீஸ் வழக்கு பதிவு 3 பேரையும் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி செய்து சிறையில் அடைத்தனர்.
மாமல்லபுரம்:
கல்பாக்கத்தை அடுத்த கூவத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் திருவாலீஸ்வரர் கோவில் உள்ளது. கடந்த 22-ந் தேதி இரவு மர்ம கும்பல் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளையடித்தனர். அப்போது அலாரம் ஒலித்ததால் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
இதேபோல் அதே பகுதியில் பல கோவில்களில் கொள்ளை சம்பவம் நடந்தது. இதையடுத்து கூவத்தூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில் கோவிலில் கொள்ளையில் ஈடுபட்டது மரக்காணத்தை சேர்ந்த சுதாகர், நெரும்பூர் ஆனந்த், பாண்டியன் என்பது தெரிந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மாமல்லபுரம்:
சென்னை, கொரட்டூரை சேர்ந்தவர் சஞ்சய் (வயது 33). ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். மனைவியை பிரிந்து வாழ்ந்த அவருக்கு 6 வயதில் மகன் உள்ளான்.
சஞ்சய்யும், பம்மலை சேர்ந்த செந்திலும் நண்பர்களாக பழகி வந்தனர். செந்தில், கிண்டியில் உடலில் பச்சை குத்தும் கடை நடத்தி வருகிறார். அவரது மனைவி சுரேகா கருத்து வேறுபாட்டால் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார்.
நேற்று இரவு சஞ்சய், செந்தில் மற்றும் அவர்களது நண்பர்கள் மாமல்லபுரம் ஒத்தவாடை தெருவில் உள்ள விடுதியில் தங்கி இருந்தனர்.
அப்போது அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதில் சஞ்சய் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். உடனே விடுதி அறையில் தங்கி இருந்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து மாமல்லபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
கொலை தொடர்பாக பம்மலில் பதுங்கிஇருந்த செந்திலை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
செந்திலை அவரது மனைவியுடன் சேர்த்து வைக்கும் முயற்சியில் சஞ்சய் ஈடுபட்டதாக தெரிகிறது. இதற்காக அவர் நேற்று இரவு நண்பர்களுடன் சேர்ந்து புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தார்.
அப்போது செந்திலின் மனைவி சுரேகா விடுதிக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சஞ்சய்க்கும், செந்திலுக்கும் மோதல் ஏற்பட்டு கொலையில் முடிந்ததாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
விருந்து நிகழ்ச்சி நடை பெற்ற விடுதியில் சஞ்சய், செந்திலுடன் அவரது நண்பர்கள் 10-க்கும் மேற்பட்டோர் 5 அறைகளில் தங்கி இருந்து உள்ளனர். அவர்கள் யார்? யார்? என்ற விபரத்தை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.
மேலும் செந்திலின் மனைவி சுரேகாவிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர். இதன் பின்னரே கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது தெரிய வரும்.
திருப்போரூர்:
திருக்கழுக்குன்றம் அடுத்த இரும்புலிச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து சோழிங்க நல்லூரில் உள்ள தனியார் சாப்ட்வேர் கம்பெனிக்கு பணியாளர்களை ஏற்றிக் கொண்டு ஒரு தனியார் வேன் இன்று காலை மானாம்பதி வழியாக திருப்போரூர் நோக்கி வந்து கொண்டிருந்தது.
வேனில் 14 பெண்கள் உள்பட 17 பேர் இருந்தனர். வேனை இரும்புலிச்சேரியை சேர்ந்த அசோக் ஓட்டிச் சென்றார்.காலை 7 மணி அளவில் திருப்போரூரை அடுத்த சிறுதாவூர் கிராமம் அருகே வந்தபோது வேனின் பின்பக்க டயர் திடீரென வெடித்தது. இதில் வேன் கட்டுபாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதி கவிழ்ந்தது.
வேனில் வந்தவர்கள் இடிபாடுக்குள் சிக்கி அலறினர் உடனடியாக அக்கம்பக்கத்தினர் வேனில் இருந்த அனைவரையும் வேன் கதவை உடைத்து மீட்டனர். இதில் டிரைவர் அசோக்கின் இடுப்பு எலும்பு முறிந்தது.
தகவல் அறிந்து வந்த திருப்போரூர் போலீசார் காயம் அடைந்த அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலந்தூர்:
டி.டி.வி.தினகரன் இன்று சென்னை விமான நிலையத்தில் நிருபர்களி டம் கூறியதாவது:-
ஆர்.கே.நகர் தேர்தல் தொடர்பான கருத்து கணிப்பு எங்களுக்கு முக்கியம் இல்லை. மக்களின் கருத்துதான் முக்கியம். மக்கள் என் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். ஆர்.கே.நகர் தொகுதியில் அவர்கள் எனக்கு வெற்றியை தருவார்கள்.
தமிழ்நாட்டில் நடை பெறும் மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர ஆர்.கே.நகர் தேர்தல் தொடக்கமாக அமையும்.
எம்.ஜி.ஆர். தேர்தலில் நின்றபோது தி.மு.க. அடக்கு முறையை கையாண்டது. அதே அடக்கு முறையை எடப்பாடி பழனிசாமி அரசு இப்போது எனக்கு எதிராக மேற்கொள்கிறது. தேர்தலில் அவர்கள் மண்ணை கவ்வுவார்கள்.
தேர்தலில் பணம் கொடுத்து வெற்றி பெற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. பணம் தருவதாக கடன் சொல்லி யாராவது ஓட்டு கேட்பார்களா? நான் அப்படி ஓட்டு கேட்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
மாமல்லபுரம்:
கூவத்தூர் பழைய காலனி பகுதியில் பாண்டிச்சேரி மதுபானம் மற்றும் சாராயம் பதுக்கி வைத்து விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று முத்து லட்சுமி என்பவர் வீட்டில் சோதனையிட்ட போது அங்கு சாராய பாக்கெட்டுகள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
போலீசார் அனைவரையும் அவருக்கு உதவியாக இருந்த குமாரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 2 ஆயிரம் லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
காஞ்சீபுரம்:
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை சேர்ந்தவர் அம்ஜத்கான். இவர் கடந்த மாதம் 10-ந் தேதி கிருஷ்ணகிரியில் இருந்து சென்னைக்கு காரில் வந்தார்.
நள்ளிரவு வாலாஜா அருகே உள்ள டோல்கேட் பகுதியில் வந்து கொண்டிருந்த போது 4 பேர் கும்பல் காரை நிறுத்தினர். அவர்கள் அம்ஜத்கானிடம் கத்தியை காட்டி மிரட்டி காரை கடத்தி சென்றுவிட்டனர்.
இது குறித்து பாலுசெட்டி சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். காரின் பதிவு எண்ணை வைத்து டோல்கேட்டு மற்றும் சாலையோர கடைகள் உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவின் பதிவுகளை ஆய்வு செய்தனர்.
இதில் ஒரு சுங்கச் சாவடியில் இருந்த கண்காணிப்பு காமிராவில் கடத்தல் கும்பலின் உருவம் பதிவாகி இருந்தது.
இதனை வைத்து ராணிப்பேட்டை, முத்துக்கடை பகுதியில் பதுங்கி இருந்த கார் கடத்தல் கும்பலான வேலூர் மாவட்டம் மாந்தாங்கல் மோட்டூர் கிராத்தைச் சேரந்த தீனா என்ற தீனதயாளன், புளியன்கள் கிராமத்தை சேர்ந்த பாலாஜி, பாலு என்ற பாலசுப்பிரமணியன், தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கார், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களை போலீசார் காஞ்சீபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.
செங்கல்பட்டு:
காஞ்சீபுரத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 52). காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.
அதே அலுவலகத்தில் புவனேஸ்வரி (30) என்பவரும் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றினார்.
நேற்று இரவு அவர்கள் 2 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் திருக்கழுக்குன்றம் போலீஸ் நிலையத்துக்கு பணி சம்பந்தமாக வந்தனர். பின்னர் இருவரும் காஞ்சீபுரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டு இருந்தனர்.
செங்கல்பட்டை அடுத்த பாலூர் அருகே வந்த போது எதிரே வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசன், புவனேஸ்வரி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். விபத்து நடந்ததும் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.
பலியான 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.
விபத்து நடந்த இடத்தை காஞ்சீபுரம் டி.ஐ.ஜி. தேன்மொழி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர்கள் 2 பேரையும் மணல் கடத்தல் கும்பல் லாரி ஏற்றி கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
போலீசார் வருவதை கண்டதும் அவர்கள் மீது லாரியை மோத விட்டார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் சிக்கினால் தான் முழு விவரம் தெரியவரும்.
பலியான வெங்கடேசனுக்கு தனேஷ்வரி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். அவர் காஞ்சீபுரம் கோட்ராம்பாளையத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
புவனேஸ்வரி காஞ்சீபுரம் ஒரிக்கையில் குடும்பத்துடன் தங்கி இருந்தார். இவரது தந்தையும் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஆவார். புவனேஸ்வரி போட்டி தேர்வின் மூலம் நேரடியாக சப்-இன்ஸபெக்டராக தேர்ச்சி பெற்றிருந்தார். அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
விபத்து குறித்து பாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தாம்பரம்:
திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் சரண்ராஜ் (வயது25). இவர் மறை மலைநகரில் உள்ள கார் தொழிற்சாலையில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
இதே தொழிற்சாலையில் திருவண்ணாமலையைச் சேர்ந்த ராஜேந்திரன் (54) என்பவர் காவலாளியாக வேலை பார்த்தார்.
நேற்று இரவு கம்பெனியில் வேலை பார்க்கும் ஊழியர்களை சரண்ராஜும், ராஜேந்திரனும் காரில் அழைத்துச் சென்று வீடுகளில் விட்டனர்.
பின்னர் அவர்கள் அதே காரில் தாம்பரத்தில் இருந்து கிண்டி நோக்கி சென்று கொண்டிருந்தனர். நள்ளிரவு 12.50 மணியளவில் கார் குரோம்பேட்டை பஸ் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தது.
அப்போது குரோம்பேட்டையைச் சேர்ந்த டீ வியாபாரி தியாகராஜன் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். கார் டிரைவர் சரண்ராஜ் தூக்க கலக்கத்தில் இருந்ததால் கார் தறிகெட்டு ஓடி டீ வியாபாரி தியாகராஜன் மீது மோதியது.
பின்னர் கார் வேகமாக ஓடி சாலை ஓரம் பழுதாகி நின்ற லாரி மீது மோதி நின்றது. இதில் கார் டிரைவர் சரண்ராஜ், காவலாளி ராஜேந்திரன் ஆகிய இருவரும் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.
டீ வியாபாரி தியாகராஜன் படுகாயம் அடைந்தார். அவர் சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.






