என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    சென்னை விமான நிலையத்தில் சிங்கப்பூர், மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.11½ லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    ஆலந்தூர் :

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள், விமான நிலையத்தில் பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.

    அப்போது மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சென்னை வந்த விமானத்தில் வந்திறங்கிய ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகமது ரபீக்(வயது 24) என்பவருடைய உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் எதுவும் கிடைக்கவில்லை.

    பின்னர் அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர். அப்போது அவரது உள்ளாடையில் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.6 லட்சம் மதிப்புள்ள 200 கிராம் தங்க கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த புதுக்கோட்டையை சேர்ந்த பெண் முத்துநாச்சியார்(44) என்பவரிடம் இருந்த உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவரிடம் இருந்து ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 190 கிராம் எடை கொண்ட 2 தங்க சங்கிலிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதையடுத்து தங்கம் கடத்தி வந்த முகமது ரபீக், முத்துநாச்சியார் ஆகிய 2 பேரிடமும் சுங்க இலாகா அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போக்குவரத்து ஊழியர்களுக்கான 13-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக நடந்த 11-வது கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு எட்டவில்லை. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை ஜனவரி 3-ந் தேதி நடைபெறுகிறது.
    தாம்பரம்:

    போக்குவரத்து ஊழியர்களுக்கான 13-வது ஊதிய ஒப்பந்தம் குறித்து 11-வது கட்டமாக பேச்சுவார்த்தை சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்துக்கழக பயிற்சி மையத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

    போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், போக்குவரத்து துறை கூடுதல் தலைமை செயலர் டேவிதார், நிதித்துறை துணை செயலர் ஆனந்தகுமார், போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர்கள், தொழிலாளர் நலத்துறை தனி துணை கமிஷனர் யாஸ்மின் பேகம் மற்றும் அண்ணா தொழிற்சங்க பேரவை, தொழிலாளர் முன்னேற்ற பேரவை, சி.ஐ.டி.யு. உள்ளிட்ட 45 தொழிற்சங்கத்தினர் இதில் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில், தொழிலாளர்களிடம் பிடிக்கப்பட்ட ரூ.7,500 கோடியை உடனே வழங்கி, அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதிய உயர்வை அறிவிக்க வேண்டும் என தொழிற்சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

    ஆனால் அரசு 3 யோசனைகளை தெரிவித்தது. தரஊதியத்துடன் 2.35 சதவீத உயர்வு என்றால் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறையும், 2.44 சதவீத உயர்வு எனில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறையும், 2.57 சதவீத உயர்வு வழங்கினால் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் ஊதிய ஒப்பந்தம் நிர்ணயிக்கப்படும் என்றது.

    இதையடுத்து தொழிற்சங்கத்தினர் வெளியில் சென்று ஆலோசனை நடத்திவிட்டு, பின்னர் மீண்டும் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர். அப்போது 2.57 சதவீத உயர்வுடன், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒப்பந்தம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.



    போக்குவரத்து துறை அமைச்சரும் அதிகாரிகளுடன் தனியாக ஆலோசனை நடத்திய பிறகு மீண்டும் பேச்சுவார்த்தை தொடர்ந்தது. தொழிற்சங்கத்தினர் தங்களின் கோரிக்கையில் உறுதியாக இருந்தனர். இதுதொடர்பாக முதல்-அமைச்சர் மற்றும் நிதித்துறை செயலாளரிடம் பேசி ஜனவரி 3-ந் தேதி நடைபெறும் அடுத்தகட்ட பேச்சுவார்த்தையின்போது முடிவு அறிவிப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதனால் முடிவு எதுவும் எட்டப்படாமல் இரவு 8.45 மணியளவில் பேச்சுவார்த்தை நிறைவடைந்தது.

    கூட்ட முடிவில் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    சென்ற முறை நடந்த பேச்சுவார்த்தையில் அடிப்படை சம்பளத்தில் 2.35 சதவீதம் ஊதிய உயர்வு கொடுப்பதாக உறுதி அளித்து இருந்தோம். தொழிற்சங்கத்தினர் அது போதாது, அதிகமாக கொடுக்க வேண்டும் என்றனர். இப்போது 2.44 சதவீதம் (4 ஆண்டுக்கு), அதாவது குறைந்தபட்சமாக ரூ.1,468, அதிகபட்சமாக ரூ.6,938 கிடைக்கும் வகையில் அறிவித்தோம்.

    தொழிற்சங்கத்தினர் 2.57 சதவீதம் ஊதிய உயர்வு 3 ஆண்டுக்கு ஒரு முறை ஒப்பந்தம் என கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக முதல்-அமைச்சரிடம் கலந்து பேசி 3-ந் தேதி நடைபெறும் அடுத்தகட்ட பேச்சுவார்த்தையின்போது தெரிவிப்பதாக அறிவித்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    11 தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க தலைவர் சவுந்திரராஜன் கூறுகையில், “நிலுவை தொகையை ஆண்டுக்கு ரூ.1,500 கோடி அளவுக்கு கொடுப்பதாக அமைச்சர் தெரிவித்தார். இப்போது பிடிக்கும் பணத்தை ஏப்ரல் மாதத்தில் இருந்து கட்டுவதாக அமைச்சர் உறுதி அளித்தார். 3-ந் தேதி வரை நாங்கள் காத்திருப்போம். அதன் பின்னரும் அரசு எங்கள் கோரிக்கையை ஏற்க மறுத்தால் போராட்டத்தை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை” என்றார். 
    காஞ்சீபுரம் ரெயில் நிலையத்தில் கோவில் ஓவியங்களை அழித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் புதிய ரெயில் நிலையத்தில் பயணிகளை ஈர்க்கும் வகையிலும், காஞ்சீபுரம் நகரின் பெருமையை விளக்கும் வகையிலும் காமாட்சியம்மன், ஏகாம்பரேஸ்வர், வரதராஜபெருமாள், ஆதிசங்கரர் காஞ்சி மகா பெரியவர் உருவங்கள் கலைநயத்துடன் வரையப்பட்டு இருந்தது.

    கடந்த 21-ந்தேதி இரவு மர்ம நபர்கள் இந்த ஓவியங்களை அழித்து சென்றுவிட்டனர். இச்சம்பவம் காஞ்சீபுரம் பகுதியில் பெரும்பரப்பை ஏற்படுத்தியது.

    இது குறித்து ரெயில் நிலைய மேலாளர் காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். ஓவியங்களை அழித்ததாக பல்வேறு அமைப்புகள் மீதும் புகார் செய்யப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் கோவில் ஓவியங்களை அழித்ததாக மக்கள் மன்றத்தை சேர்ந்த மகேஷ், ஜெசி, அம்பேக்தர் பாலு, தஞ்சை தமிழன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

    இதற்கிடையே ரெயில் நிலைய மேலாளர் சீனிவாசன் பணி இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ரெயில் நிலையத்தில் அழிக்கப்பட்ட ஓவியங்கள் மீண்டும் கலைநயத்துடன் வரையப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    சுங்குவார்சத்திரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    நெய்வேலி பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி, திருத்தணி எஸ்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்தவர் நவீன்குமார்.

    இருவரும் சுங்குவார்சத்திரம் பகுதியில் தங்கி மாம்பாக்கத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தனர்.

    நேற்று மோட்டார்சைக்கிளில் சுங்குவார்சத்திரத்தில் இருந்து வேலைக்கு சென்ற போது சென்னையில் இருந்து காஞ்சீபுரம் நோக்கி சென்ற அரசு பஸ் சுங்குவார்சத்திரம் கூட்டு சாலையில் மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

    இதில் பாலாஜி, நவீன் குமார் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.

    தகவல் கிடைத்ததும் சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடல்களை கைப்பற்றி ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவான பஸ் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
    ஸ்ரீபெரும்புதூர் அருகே லோடு வேன் மீது லாரி மோதலில் 2 மீன் வியாபாரிகள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    காஞ்சீபுரத்தில் இருந்து சென்னை காசிமேடுக்கு இன்று அதிகாலை வியாபாரிகள் மீன் வாங்க லோடு வேனில் புறப்பட்டனர். போகும் வழியில் மற்ற வியாபாரிகளை ஏற்றிக் கொண்டு சென்றனர்.

    இதில் சுங்குவார்சத்திரத்தை அடுத்த சிறுமாங்கோடு பகுதியை சேர்ந்த காலன் (35), காஞ்சீபுரம் தர்மா (30) உள்ளிட்ட 16 பேர் பயணம் செய்தனர்.

    சுங்குவார்சத்திரம் அடுத்த மாம்பாக்கம் பஸ்நிறுத்தம் அருகே வியாபாரி ஒருவரை ஏற்றுவதற்காக வேனை டிரைவர் நிறுத்தி இருந்தார்.

    அப்போது வேலூரில் இருந்து மணல் ஏற்றி வந்த லாரி திடீரென லோடு வேன் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் வேனில் இருந்த காலன், தர்மா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். மேலும் பெண்கள் உள்பட 14 பேர் படுகாயம் அடைந்தனர்.

    விபத்து நடந்ததும் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்ததும் ஸ்ரீபெரும்புதூர் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    படுகாயம் அடைந்த 14 பேரும் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    பலியான 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சிறுமி ஹாசினி கற்பழித்து, எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தஷ்வந்த் செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார்.
    செங்கல்பட்டு:

    சென்னை போரூரை சேர்ந்தவர் தஷ்வந்த். இவர் ஹாசினி என்ற சிறுமியை கடந்த ஆண்டு கற்பழித்து, எரித்து கொலை செய்ததாக தொடரப்பட்ட வழக்கு செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஜாமீனில் வெளிவந்த தஷ்வந்த் தனது தாயை கொலை செய்துவிட்டு தலைமறைவானார். மும்பையில் பதுங்கி இருந்த அவரை தமிழக போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

    இதற்கிடையில், ஹாசினியை கற்பழித்து கொலை செய்த வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்து வந்த தஷ்வந்துக்கு பிடிவாரண்டு பிறப்பித்து, செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டு நீதிபதி வேல் முருகன் உத்தரவிட்டார். இதனையடுத்து, கடந்த 18-ந் தேதி மற்றும் 20-ந் தேதி செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டில் தஷ்வந்த் ஆஜர்படுத்தப்பட்டார்.

    இதனை தொடர்ந்து சிறுமி ஹாசினியை கற்பழித்து, எரித்து கொலை செய்தது தஷ்வந்த் தான் என்பது 50 சதவீதம் உறுதியாகிவிட்டதாக தெரிவித்த நீதிபதி வேல்முருகன், வழக்கின் அடுத்த விசாரணை 26-ந் தேதி (நேற்று) நடைபெறும் என்றும், அன்றைய தினம் தஷ்வந்தை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் கூறி உத்தரவிட்டார்.

    இதையடுத்து வழக்கு விசாரணைக்காக போலீஸ் பாதுகாப்புடன் செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டில் தஷ்வந்த் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக அந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர் சுமதி, தலையாரி மோகன்தாஸ், கோவில் தர்மகர்த்தா பிரபா ஆகியோரிடம் நீதிபதி விசாரணை நடத்தினார். இதையடுத்து இந்த வழக்கு இன்று (புதன்கிழமை) ஒத்திவைக்கப்பட்டது.
    சுனாமி நினைவு தினத்தையொட்டி இன்று கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் உள்ள மீனவர்கள் பால் குடங்களை ஊர்வலமாக எடுத்து சென்று கடலில் ஊற்றியும், மலர்கள் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

    மாமல்லபுரம்:

    கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி ஏற்பட்ட சுனாமி பேரலையால் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட கடற்கரையோர பகுதிகளில் ஏராளமானோர் உயிரிழந்தனர். இதன் 13-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

    இதையொட்டி கோவளம், நெம்மேலி, சூலேரிக்காடு, தேவநேரி, மாமல்லபுரம், கொக்கிலமேடு, வெண்புரு‌ஷம், சதுரங்கப்பட்டினம், கல்பாக்கம், புதுப்பட்டினம், உய்யாலிகுப்பம் போன்ற கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் உள்ள மீனவர்கள் இன்று கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை.

    அவர்கள் குடியிருப்பு பகுதிகளில் இருந்து பால் குடங்களை ஊர்வலமாக எடுத்து சென்று கடலில் ஊற்றியும், மலர்கள் தூவியும் வழிபட்டனர். பின்னர் மெழுகுவர்த்தி ஏந்தி சுனாமியால் இறந்தவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.

    பெருங்குடி அருகே 2½ வயது ஆண்குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சோழிங்கநல்லூர்:

    பெருங்குடியை அடுத்த கல்லுக்குட்டை திருவள்ளுவர் நகரில் வசித்து வருபவர் குருசாமி. இவரது மனைவி பிரேமலதா. இவர்களது 2 ½ வயது மகன் விஷ்வா.

    நேற்று மாலை பிரேமலதா வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது சிறுவன் விஷ்வா வீட்டின் முன்பகுதியில் விளையாடி கொண்டு இருந்தான்.

    திடீரென விஷ்வாவை காணவில்லை. அக்கம் பக்கத்தில் தேடியும் அவனை கண்டுபிடிக்க முடியவில்லை. விஷ்வாவை மர்ம நபர்கள் கடத்தி சென்று இருப்பது தெரிந்தது. இது குறித்து துரைபாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    அப்பகுதியில் கண்காணிப்பு கேமரா இல்லாததால் சிறுவனை கடத்தி சென்றது யார்? என்பதை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    கிழக்கு கடற்கரையில் சுற்றுலா பயணிகளை கவரும் ‘பாராசூட்’ சாகசம் பயணத்துக்கு 15 நிமிடத்துக்கு ரூ.2500 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதனால் வடநெம்மேலி பகுதியில் புதிய சுற்றுலாத்தலமாக மாறி வருகிறது.

    மாமல்லபுரம்:

    சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பொழுதுபோக்கு பூங்கா, கடற்கரையோர விடுதிகள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

    தற்போது வடநெம்மேலி பாம்பு பண்ணை அருகே நடைபெறும் பாராசூட் சாகசம் சுற்றுலா பயணிகளுக்கு திரில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பாலவாக்கத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் பைலட்டாக இருந்து சுற்றுலா பயணிகளை பாராசூட்டில் அழைத்து செல்கிறார். 15 நிமிடத்துக்கு ரூ. 2500 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

    இந்த பாராசூட் சாகசம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 3 மணி முதல் 6 மணி வரை மட்டுமே நடக்கும். 50 கிலோவுக்கு மேல் எடை கொண்ட நபர்கள் மட்டும் இந்த வான் சாகசத்தை அனுபவிக்கலாம்.

    வடநெம்மேலி கடற்கரையில் இருந்து புறப்படும் பாராசூட் கோவளம் வரை கடற்கரை மார்க்கமாக சுற்றி வரும். புறப்பட்ட இடத்திலேயே மீண்டும் தரை இறக்கப்படும்.

    இது குறித்து பாராசூட் சாகசம் செய்தவர்கள் கூறும்போது, இந்த பயணம் திரில்லாகவும், உற்சாகமாகவும் இருந்தது. வான்வெளியில் கடற்கரை அழகை ரசிப்பது வித்தியாசமாக இருந்தது என்றனர்.

    இதுபற்றி பாராசூட்டை இயக்கும் மணிகண்டன் கூறியதாவது:-

    இந்த பாராசூட் சாகச பயணம் மிகவும் பாதுகாப்பானது. இதில் பயணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பு உபகரணம், ஹெல்மெட் வழங்கப்படும். பாராசூட்டில் இரண்டு நபர்கள் அமரும் வகையில் இருக்கை உள்ளது. இதில் ஒன்றில் நானும், மற்றொரு இருக்கையில் சுற்றுலா பயணியும் இருப்போம். காற்றின் வேகத்துக்கு ஏற்ப சாகச பயணம் தொடரும். காற்று வேகம் குறைந்தாலும் பாராசூட்டில் உள்ள மோட்டார் மூலம் சுற்றி வரலாம். எந்த பிரச்சினையும் இருக்காது. எனவே சாகச பயணம் செய்பவர்கள் அச்சப்பட தேவையில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பாராசூட் சாகச பயணத்துக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இதனால் வடநெம்மேலி பகுதியில் கூட்டம் அலைமோதி புதிய சுற்றுலாத்தலமாக மாறி வருகிறது.

    திருவான்மியூர் அருகே பெண்கள் கூட்டத்தில் பைக் சாகசம் செய்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவான்மியூர்:

    சென்னை அமைந்தகரையை சேர்ந்தவர் சண்முகம் (வயது 27)., அரும்பாக்கத்தை சேர்ந்தவர் சேக்சுதீன் (20), சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் ஜான்(20). 3 பேரும் நண்பர்கள். இவர்கள் நேற்று இரவு 1 மணியளவில் 3 மோட்டார் சைக்கிள்களில் பெசன்ட்நகர் சர்ச்சுக்கு புறப்பட்டு சென்றனர். அப்போது கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி பெண்கள் சாலை ஓரமாக பெசன்ட்நகர் சர்ச்சுக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது சண்முகம், சேக்சுதீன், ஜான் ஆகிய 3 பேரும் பெண்கள் கூட்டத்தில் மோட்டார் சைக்கிளை தாறுமாறாக ஓட்டி சாகசத்தில் ஈடுபட்டனர். இதனால் சர்ச்சுக்கு சென்ற பெண்கள் அவதிக்குள்ளானார்கள்.

    அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அடையாறு போலீசார் 3 மோட்டார் சைக்கிள்களையும் மடக்கினார்கள் அப்போது 3 மோட்டார் சைக்கிள்களுக்கும் ஆர்.சி. புத்தகம் இல்லாததை போலீசார் கண்டு பிடித்தனர். மேலும் அவர்களிடம் டிரைவிங் லைசன்சும் இல்லை. ஒரு வண்டிக்கு நம்பர் பிளேட் பொருத்தப்படவில்லை.

    இதையடுத்து 3 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். சண்முகம், சேக்சுதீன், ஜான் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அது அவர்களின் மோட்டார் சைக்கிள் தானா அல்லது திருட்டு மோட்டார் சைக்கிள்களா என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    மதுராந்தகம் அருகே அரசு பஸ் மோதி கார் ஏரியில் பாய்ந்து 5 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுராந்தகம்:

    புதுக்கோட்டை மாவட்டம், செம்பாட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் மாரிக்கண்ணு.இவர் சென்னையில் நடந்த உறவினர் வீட்டு விசே‌ஷ நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக உறவினர்கள் தமிழ்செல்வி (60), தினேஷ் (29), ராதிகா (30), பிரபாவதி (40), சிறுவன் இளம்பரிதி (6) உள்பட 8 பேருடன் காரில் வந்தார். டிரைவர் அஜித் குமார் காரை ஓட்டினார்.

    நிகழ்ச்சி முடிந்ததும் நேற்று இரவு அவர்கள் புதுக்கோட்டை நோக்கி திரும்பி சென்று கொண்டு இருந்தனர்.

    மதுராந்தகம் அருகே அச்சிறுப்பாக்கத்தை அடுத்த தொழப்பேடு அருகே ஆத்தூர் என்ற இடத்தில் கார் வந்தபோது திடீரென டீசல் காலியானது. இதையடுத்து காரை சாலையோரத்தில் நிறுத்தி விட்டு டீசல் வாங்குவதற்காக டிரைவர் அஜித் குமார் சென்றார். காரில் மாரிக்கண்ணு உள்பட 8 பேரும் இருந்தனர்.

    சிறிது நேரம் கழித்து டீசல் வாங்கி வந்த அஜித்குமார், அதனை டேங்கில் ஊற்றி விட்டு காரை இயக்க முயன்றார்.

    அப்போது விழுப்புரம் நோக்கி சென்ற அரசு பஸ் திடீரென காரின் பின்பகுதியில் லேசாக மோதி சென்று விட்டது. கட்டுப்பாட்டை இழந்த கார் சில அடி தூரம் ஓடி சாலையோரத்தில் இருந்த ஆத்தூர் ஏரிக்கரையில் தலைகுப்புற கவிழ்ந்தது.

    கரையோரத்தில் சேறும் சகதியுமாக இருந்ததால் காரில் இருந்தவர்கள் அதில் சிக்கிக் கொண்டனர். மேலும் கார் கவிழ்ந்த போது காயம் அடைந்ததால் அவர்களால் வெளியே வரமுடியவில்லை.

    இதனால் காரில் இருந்த தமிழ்ச்செல்வி அவரது பேரன் தினேஷ், ராதிகா, பிரபாவதி, அவரது மகன் சிறுவன் இளம்பரிதி, டிரைவர் அஜித்குமாரின் தாய் பிரபாவதி, ஆகிய 5 பேரும் பலியானார்கள்.

    அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ள சுங்கச்சாவடியில் பணியாற்றிய ஊழியர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் உயிருக்கு போராடிய டிரைவர் அஜித்குமார், சரோஜா, மாரிக்கண்ணு ஆகியோரை மீட்டனர். அவர்களுக்கு திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    பலியான 5 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.

    விபத்து பற்றி அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி, அச்சுறுப்பாக்கம் போலீசார் விரைந்து வந்து விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டனர். விபத்துக்குள்ளான கார் கிரேன் மூலம் மீட்கப்பட்டது.

    விபத்து நடந்த இடத்தில் இருந்து சுமார் 50 அடி தூரத்தில் சுங்கச்சாவடி உள்ளது. ஏரிக்குள் கார் பாய்ந்த போது அதில் இருந்தவர்கள் காப்பாற்றும்படி கூச்சலிட்டு உள்ளனர். ஆனால் கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதால் ஊருக்கு செல்வதால் கூச்சலிட்டு சென்று இருக்கலாம் என்று நினைத்து சுங்கச்சாவடி ஊழியர்கள் நீண்ட நேரம் மீட்க செல்லாமல் இருந்ததாக தெரிகிறது.

    தொடர்ந்து சத்தம் வந்த பின்னரே விபத்து நடந்து சுமார் ½ மணி நேரத்துக்கு பின்னர் அவர்கள் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு இருக்கிறார்கள். விபத்து நடந்த உடன் மீட்கப்பட்டு இருந்தால் உயிர் பலி எண்ணிக்கை குறைந்து இருக்கும்.

    மேலும் கார் கவிழ்ந்த இடம் ஏரிக்கரை என்பதாலும் மின்விளக்கு இல்லாததாலும் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகளுக்கு கார் கவிழ்ந்து கிடப்பது தெரியவில்லை.

    இதேபோல் கார் இயங்கிய நேரத்தில் பஸ் மோதியதால் இதுபற்றி பஸ்சின் டிரைவருக்கு தெரியவில்லை. இதனால் அவர் பஸ்சை நிறுத்தாமல் சென்றுவிட்டார். அவர் விபத்து நடந்ததும் பஸ்சை நிறுத்தி இருந்தால் அதிலிருந்த பயணிகள் காரில் இருந்தவர்களை மீட்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும்.

    விபத்து குறித்து சுங்கச்சாவடி ஊழியர்கள் கூறும்போது, விபத்து நடந்த இடத்தில் ஏரிக்கரையை ஓட்டி தடுப்பு கம்பிகள் இல்லை. எதிர்புறம் உள்ள விழுப்புரம் சாலையில் மட்டும் ஏரிக்கரையையொட்டி தடுப்புகள் உள்ளது.

    விபத்து நடந்த இடத்தில் தடுப்பு இருந்திருந்தால் அதில் கார் மோதி ஏரிக்குள் விழாமல் தப்பி இருக்கும். எனவே சாலையை ஒட்டி உள்ள ஏரிக்கரையில் தடுப்பு அமைக்க வேண்டும்.

    இதேபோன்று விபத்துக்கள் இங்கு அடிக்கடி நடந்து வருகிறது. எனவே இந்த இடத்தில் சாலையை அகலப்படுத்த வேண்டும்’ என்றனர்.

    ஒரே குடும்பத்தில் 5 பேர் பலியான சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து அச்சிறுப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய அரசு பஸ் பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தாம்பரம் அருகே மேம்பாலத்தில் இருந்து கார் விழுந்தது 4 வாலிபர்கள் படுகாயம்

    தாம்பரம்:

    திருவண்ணாமலையை சேர்ந்தவர்கள் கார்த்திக், ஜீவா, தினேஷ், நாகராஜ். இவர்கள் சென்னையில் நடந்த உறவினர் வீட்டு விசே‌ஷ நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காரில் வந்தனர். பின்னர் நேற்று இரவு அவர்கள் திருவண்ணாமலைக்கு காரில் புறப்பட்டனர்.

    அதிகாலை 2 மணியளவில் தாம்பரத்தை அடுத்த இரும்புலியூர் அருகே மேம்பாலத்தில் கார்வந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென தாறுமாறாக ஓடி பாலத்தின் ஓரத்தில் இருந்த தடுப்பு கம்பிகளை உடைத்துக் கொண்டு கீழே விழுந்தது.

    சுமார் 40 அடி உயரத்தில் இருந்து விழுந்ததில் கார் நொறுங்கியது இதில் காரில் இருந்த கார்த்திக், ஜீவா, தினேஷ், நாகராஜ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் 4 பேருக்கும் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    விபத்து நடந்தது நள்ளிரவு நேரம் என்பதால் பாலத்திலும், அதன் கீழ்பகுதியிலும் அதிக அளவு வாகனங்கன் செல்லவில்லை. இதனால் கார் தாறுமாறாக ஓடி பாலத்தில் இருந்து கீழே விழுந்த போது வாகனங்கள் எதுவும் சிக்க வில்லை. இதனால் பெரிய அளவிலான விபத்து தவிர்க்கப்பட்டது.

    இதுகுறித்து குரோம்பேட்டை போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×