search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுற்றுலா பயணிகள்"

    • வருகிற 7-ந்தேதி முதல் ஜூன் 30-ந் தேதி வரை நீலகிரிக்கு வருவோர் இ-பாஸ் பெற்றே செல்ல ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    • ஊட்டியில் மலர் கண்காட்சி தொடங்க உள்ளதால், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    கோவை:

    சமவெளி பகுதிகளில் சுட்டெரித்து வரும் வெயிலில் இருந்து தப்பிக்க மக்கள் குளு,குளு மலை பிரதேசங்களான ஊட்டிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஆண்டுதோறும் கோடைவிழா நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கோடை விழா வருகிற 10-ந் தேதி ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியுடன் தொடங்குகிறது. 10-ந் தேதி தொடங்கும் மலர் கண்காட்சி 20-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்க உள்ளது.

    மலர் கண்காட்சியை கண்டு ரசிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவார்கள். சுற்றுலா பயணிகள் தங்களது சொந்த மற்றும் வாடகை வாகனங்கள் மற்றும் அரசு பஸ்களிலும் பயணித்து ஊட்டிக்கு வருகின்றனர். ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் கோவைக்கு வந்தே ஊட்டிக்கு செல்கின்றனர்.

    இந்த நிலையில் வருகிற 7-ந்தேதி முதல் ஜூன் 30-ந் தேதி வரை நீலகிரிக்கு வருவோர் இ-பாஸ் பெற்றே செல்ல ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதனால் ஊட்டிக்கு வரும் பலர் தங்களது சொந்த வாகனங்களை தவிர்த்து அரசு பஸ்களில் பயணிக்க வாய்ப்புள்ளது. பஸ்களிலும் கூட்ட நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.

    இதனை கருத்தில் கொண்டு, கோடை சீசனையொட்டி கோவையில் இருந்து நாளை முதல் 25 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-

    கோவையில் இருந்து ஊட்டி மற்றும் கூடலூர் வரை அரசு பஸ்களின் புறப்பாடு 80 ஆக உள்ளது.

    தற்போது ஊட்டியில் மலர் கண்காட்சி தொடங்க உள்ளதால், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். பஸ்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக நாளை முதல் கோவையில் இருந்து கூடுதலாக 25 சிறப்பு பஸ்களை இயக்க உள்ளோம்.

    எனவே சுற்றுலா பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்த்து, அரசு பஸ்களில் பயணித்து கோடைவிழாவை காண நீலகிரிக்கு செல்லலாம் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • கடந்த 4 மாதமாக ஏற்காடு பகுதியில் மழை இல்லாததால் கடுமையான வறட்சி நிலவியது.
    • 4 மாதத்துக்கு பிறகு ஏற்காட்டில் மீண்டும் மழை பெய்ததால் ஏற்காடு பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ஏற்காடு:

    ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் நிலவும் குளுகுளு சீசனை அனுபவிக்க ஆண்டு தோறும் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்கிறார்கள். குறிப்பாக வாரவிடுமுறை நாட்கள், தொடர் விடுமுறை நாட்கள் மற்றும் ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படும்.

    சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க ஆண்டு தோறும் மே மாதத்தில் கோடை விழா மலர்கண்காட்சி நடத்தப்படும். இதற்காக ஆயிரக்கணக்கான பூந்தொட்டிகளில் பூச்செடிகள் நடவு செய்யப்பட்டு அவை கோடை விழா மலர்கண்காட்சி நேரத்தில் பூத்து குலுங்கும். இந்த மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வார்கள்.

    இந்த நிலையில் கடந்த 4 மாதமாக ஏற்காடு பகுதியில் மழை இல்லாததால் கடுமையான வறட்சி நிலவியது. மேலும் மலைப்பாதையில் உள்ள வனப்பகுதிகளில் மரங்கள், செடிகள், கொடிகளில் இலைகள் உதிர்ந்து சருகாக மாறியது. இதனால் கொளுத்தும் கோடை வெப்பத்தால் அடிக்கடி காட்டுத்தீயும் ஏற்பட்டு வருகிறது.

    ஆனாலும் சமவெளி பகுதிகளில் அனல் காற்று வீசிவருவதால் ஏற்காடுக்கு வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது. மழை இல்லாவிட்டாலும் சுற்றுலா தலங்கள் ஓரளவுக்கு பசுமையாக காட்சி அளித்து வருகிறது.

    கோடை மழை பெய்தால் தான் சுற்றுலா தலங்கள் மீண்டும் தனது பழைய பசுமையை திரும்ப பெறும் என்பதால் கோடை மழையை எதிர்பார்த்து சுற்றுலா பயணிகள் காத்திருந்தனர்.

    நேற்றும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டிற்கு வந்திருந்தனர். அவர்கள் படகு சவாரி செய்தும், அண்ணாபூங்காவில் ஊஞ்சல் விளையாடியும், பூத்து குலுங்கும் மலர்களை கண்டு ரசித்தும் கொண்டு இருந்தனர். அப்போது திடீரென மாலை குளிர்ந்த காற்று வீசி மழை வருவது போல் மேக கூட்டங்கள் திரண்டது. பின்னர் சிறிது நேரத்தில் கோடை மழை பெய்ய தொடங்கியது. இதனால் உற்சாகம் அடைந்த சுற்றுலா பயணிகள் மழையில் நனைத்து கொண்டே படகு சவாரி செய்தும், மழையில் துள்ளி குதித்தும் விளையாடினர். சுமார் 30 நிமிடம் தொடர்ந்து மழை பெய்தது. பின்னர் தொடர்ந்து சாரல் மழை பெய்தது. 4 மாதத்துக்கு பிறகு ஏற்காட்டில் மீண்டும் மழை பெய்ததால் ஏற்காடு பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலையும் ஏற்பட்டது. இது குறித்து ஏற்காடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது. கோடை மழை பெய்ய தொடங்கினாலே சீசன் களை கட்டும். அந்த வகையில் இனி வரும் நாட்களிலும் மாலை நேரங்களில் கோடை மழை பெய்யும். இதனால் வனப்பகுதிகள் மீண்டும் பசுமையாக மாறி சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் என்று கூறினர்.

    • கடந்த 2 நாட்களில் ஊட்டி தாவரவியல் பூங்காவை 50 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டதாக பூங்கா ஊழியர்கள் தெரிவித்தனர்.
    • ஊட்டி ரோஜா பூங்காவில் 4 ஆயிரம் ரகங்களில் 30 ஆயிரம் ரோஜா செடிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

    ஊட்டி:

    தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களிலேயே மிக முக்கியமான சுற்றுலா தலமாக நீலகிரி மாவட்டம் ஊட்டி உள்ளது.

    இங்கு நிலவும் குளுகுளு காலநிலையை அனுபவிப்பதற்காக வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்து செல்கிறார்கள். குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் நிலவும் கோடை சீசனை அனுபவிக்க லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருவது வழக்கம். இந்த ஆண்டுக்கான கோடை சீசன் தொடங்கி உள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதன் காரணமாக வெயிலில் இருந்து தப்பிக்கவும், கோடை கால விடுமுறையை கொண்டாடவும் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

    இதேபோல் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து சுற்றுலா தலங்களை பார்வையிட்டு ரசித்து செல்கிறார்கள்.

    மே தின விடுமுறையை கொண்டாடும் வகையில் கடந்த 30-ந்தேதி முதலே சுற்றுலா பயணிகள் ஊட்டியில் குவிந்தனர். நேற்று காலையும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கார்கள், வேன், பஸ் போன்ற வாகனங்களில் ஊட்டிக்கு வந்தனர்.

    இதனால் நேற்று ஊட்டி தாவரவியல் பூங்கா, படகு இல்லம் மற்றும் ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலைசிகரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த மக்கள், அங்கு மலர் மாடங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள மலர் செடிகளில் பூத்து குலுங்கிய பூக்களை கண்டு ரசித்து, அதன் முன்பு நின்று புகைப்படமும் எடுத்து கொண்டனர்.

    50 ஆயிரம் பேர் பார்வையிட்டனர். மாலை நேரத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. அவர்கள் அங்குள்ள புல்தரையில் குடும்பத்தினருடன் அமர்ந்து பேசி, குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்து பொழுதை கழித்தனர்.

    கடந்த 2 நாட்களில் ஊட்டி தாவரவியல் பூங்காவை 50 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டதாக பூங்கா ஊழியர்கள் தெரிவித்தனர்.

    ஊட்டியில் உள்ள அனைத்து ஓட்டல்கள், லாட்ஜ்கள் மற்றும் தங்கும் விடுதிகள் சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிகின்றன. தொடர்ந்து அதிகளவிலான சுற்றுலா வாகனங்கள் வந்து கொண்டே இருப்பதால், போக்குவரத்து பாதிக்காத வகையில் ஊட்டி நகரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது.

    ஊட்டி ரோஜா பூங்காவில் 4 ஆயிரம் ரகங்களில் 30 ஆயிரம் ரோஜா செடிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கோடை மழை பெய்யாத நிலையில் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சப்பட்டு வருகிறது.

    தற்போது காலதாமதமாக பூங்காவில் பசுமை திரும்பி, ரோஜா மலர்கள் பூத்து குலுங்குகின்றன. ஊட்டிக்கு சுற்றுலா வந்த பயணிகள் ரோஜாபூங்காவில் பூத்து குலுங்கிய ரோஜா மலர்களையும் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். பலர் பூக்களுடன் நின்று செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.

    இந்த ஆண்டுக்கான மலர் கண்காட்சி தாவரவியல் பூங்காவில் வருகிற 10-ந்தேதி தொடங்கி 20-ந்தேதி வரை நடக்கிறது. வழக்கமாக ஒரு வாரத்துக்கு மட்டுமே மலர் கண்காட்சி நடத்தப்படும். முதன்முறையாக தற்போது 10 நாட்கள் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    வெயிலின் தாக்கத்தில் இருந்து மலர் செடிகளையும், மலர்களையும் பாதுகாக்க பூங்கா ஊழியர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவ்வப்போது தண்ணீரை தெளித்து மலர்ச்செடிகளை பாதுகாத்து வருகிறார்கள்.

    • இ-பாஸ் நடைமுறைகளை வகுப்பது குறித்து உயர் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
    • ஊட்டி-கொடைக்கானலுக்கு செல்ல ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை கொண்டு வரப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு 7-ந்தேதி முதல் இ-பாஸ் கட்டாயம் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

    இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை ஓரிரு நாளில் வெளியிட தமிழக அரசு ஏற்பாடு செய்து வருகிறது.

    இதற்காக வருவாய் துறை, சுற்றுலா, வனத்துறை, காவல்துறை, போக்குவரத்து மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட துறைகளை ஒருங்கிணைத்து இ-பாஸ் நடைமுறைகளை வகுப்பது குறித்து உயர் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

    கொரோனா காலத்தில் ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்துக்கு செல்வதற்கு இ-பாஸ் விண்ணப்பித்தது போன்று ஊட்டி-கொடைக்கானலுக்கு செல்ல ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை கொண்டு வரப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தலைமைச் செயலாளர் வழிகாட்டுதல் அடிப்படையில் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் கண்காணிப்பில் வருவாய்த்துறை மூலமாக இ-பாஸ் நடைமுறைகள் விரைவில் வெளியிடப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • இபாஸ் நடைமுறைகள் குறித்து இந்திய அளவில் விரிவான விளம்பரங்கள் கொடுக்க வேண்டும்
    • கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

    உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7 முதல் ஜூன் 30ம் தேதி வரை இ-பாஸ் வழங்கும் முறையை அமல்படுத்த வேண்டும் என நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இதற்கான தொழில்நுட்ப உதவிகளை தமிழ்நாடு அரசு செய்ய வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

    மேலும், உள்ளூர் மக்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் இ-பாஸ் நடைமுறைகள் குறித்து இந்திய அளவில் விரிவான விளம்பரங்கள் கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    • முதுமலைக்கு சென்ற சுற்றுலா பயணிகள் அங்கு யானைகளுக்கு உணவு கொடுக்கும் நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.
    • நீலகிரியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலுமே சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

    ஊட்டி:

    தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. பகல் நேரங்களில் கடுமையான வெயில் நிலவுவதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வரவே அச்சப்படுகின்றனர். அந்தளவுக்கு வெயிலின் உக்கிரம் இருக்கிறது. கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் குளிர்ச்சியான காலநிலை நிலவக்கூடிய மலைபிரதேசங்களான ஊட்டி, கொடைக்கானல் போன்ற பகுதிகளை நோக்கி செல்கின்றனர்.

    மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டத்திற்கு கடந்த சில வாரங்களாக சுற்றுலா பயணிகள் வருகையானது அதிகரித்து காணப்படுகிறது. வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அலைமோதி வந்தது. தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டதை தொடர்ந்து குடும்பம், குடும்பமாக ஊட்டிக்கு வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் அங்குள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலைசிகரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து வருகிறார்கள். படகு இல்லத்தில் படகு சவாரி செய்தும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    முதுமலைக்கு சென்ற சுற்றுலா பயணிகள் அங்கு யானைகளுக்கு உணவு கொடுக்கும் நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர். நீலகிரியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலுமே சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று ஒரே நாளில் நீலகிரியில் உள்ள சுற்றுலா தலங்களை 39 ஆயிரத்து 23 சுற்றுலா பயணிகள் பார்வையிட்டுள்ளது. அதிலும் குறிப்பாக ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு 23 ஆயிரத்து 78 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளது. இதேபோல் காட்டேரி பூங்காவுக்கு 1,011 பேரும், தேயிலை பூங்காவுக்கு 1,100 பேரும், ரோஜா பூங்காவுக்கு 8 ஆயிரத்து 868 பேரும், குன்னூர் சிம்ஸ் பூங்காவுக்கு 4 ஆயிரத்து 680 பேரும், மரவியல் பூங்காவுக்கு 286 பேரும் வந்து பார்வையிட்டு சென்றுள்ளனர். 

    • கடந்த 3 மாதமாகவே வெப்பம் அதிகரித்து காணப்படும் நிலையில் கடந்த சில நாட்களாக உச்ச நிலை அடைந்துள்ளது.
    • தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களிலும் கூட்டம் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    ஏற்காடு:

    தமிழகம் முழுவதும் தற்போது வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். குறிப்பாக குழந்தைகள், வயதானவர்கள் வீட்டில் இருந்தாலும் வெப்பத்தின் தாக்கம் காரணமாக சோர்வடைந்து காணப்படுகின்றனர். இதன் காரணமாக அவர்கள் அதிகளவில் நீர், மோர், பழங்கள், கரும்பு பால், இளநீர், நுங்கு ஆகியவற்றை சாப்பிட்டு வெப்பத்தை தணித்து வருகிறார்கள்.

    குறிப்பாக சேலம் மாவட்டத்தில் கடந்த 3 மாதமாகவே வெப்பம் அதிகரித்து காணப்படும் நிலையில் கடந்த சில நாட்களாக உச்ச நிலை அடைந்துள்ளது. இதனால் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. பகலில் வெப்பம் நிலவி வந்தாலும், இரவிலும் அதன் தாக்கம் குறையவில்லை. இரவில் பேன், ஏர்கூலர் போட்டாலும் வெப்ப காற்றாகவே வருகிறது. இதனால் பொதுமக்கள் தூங்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.


    இதனால் பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக குளு குளு பிரதேசங்களை நோக்கி படையெடுகின்றனர். குறிப்பாக சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் இன்று ஏற்காட்டுக்கு வந்தனர். காலை நேரத்திலேயே சுற்றுலா தலங்களில் கூட்டம் அலைமோதியது. சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் படகு சவாரி செய்தும், பூங்காவில் உள்ள ஊஞ்சலில் விளையாடியும் மகிழ்ந்தனர். மேலும் தற்போது பூக்க தொடங்கியுள்ள டேலியா மலர்கள் முன்பு நின்றும் போட்டோ எடுத்து கொண்டனர். மலைப்பாதையில் கடுமையான வறட்சி நிலவினாலும் ஏற்காடு மலை பகுதியில் களை கட்டும் சீசனை அனுபவிக்க கூட்டம் அலைமோதியது. தற்போது தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருப்பதால் இனிவரும் நாட்களில் சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்படும். இதனால் வியாபாரிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களிலும் கூட்டம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. ஏற்காட்டில் கோடை மழை பெய்தால் சீசன் இன்னும் களை கட்டும் எனவே கோடை மழையை எதிர்நோக்கி வியாபாரிகள் உள்ளனர். 

    • கடந்த டிசம்பர் மாதம் பெய்த வரலாறு காணாத கனமழையால் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
    • ஆண்கள், பெண்கள் குளிப்பதற்கு தனி தனியாக தடுப்பு கம்பிகள், காங்கிரீட் அமைப்பது உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    கல்லிடைக்குறிச்சி:

    நெல்லை மாவட்டம் அம்பை அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மாவட்டத்தின் பிரதான சுற்றுலா தலமான மணிமுத்தாறு அருவியில் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம், வெளி மாநிலத்தில் இருந்தும் சுற்றுலா பயணிகள் தினமும் குளித்து சென்றனர்.

    இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த வரலாறு காணாத கனமழையால் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

    இதில் மணிமுத்தாறு அருவியில் பொதுமக்கள் குளிக்கும் தடாகம், தடுப்பு கம்பிகள் உள்ளிட்டவை கடும் சேதமாகின. தொடர்ந்து வனத்துறை சார்பில் மணிமுத்தாறு அருவியில் ஆண்கள், பெண்கள் குளிப்பதற்கு தனி தனியாக தடுப்பு கம்பிகள், காங்கிரீட் அமைப்பது உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    தொடர்ந்து தற்போது பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்று முதல் பொதுமக்கள் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை வனவிதிகளுக்கு உட்பட்டு குளிக்க வனத் துறையினர் அனுமதித்தனர்.

    அதன்படி வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும் வழக்கத்தைவிட ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பம் குடும்பமாக குவிந்தனர். தொடர்ந்து அவர்கள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். 

    • எழில் கொஞ்சும் வெனிஸ் நகரை படகுகளில் அமர்ந்து சவாரி செய்தவாறு ரசிப்பதற்காகவே வெளிநாட்டினர் பலர் இங்கு சுற்றுலா வருவர்.
    • 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், நகரவாசிகள், ஆராய்ச்சி மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    இத்தாலியில் உள்ள பிரபல சுற்றுலா நகரமாக வெனிஸ் விளங்குகிறது. ஏரிகளால் சூழ்ந்த இந்த நகரம், அதன் இயற்கையான அமைப்புக்கும், கலை கட்டுமானத்திற்கும் பெயர் போனதாக விளங்குகிறது. பல்வேறு கால்வாய்களை உள்ளடக்கிய இந்த நகரில் படகு போக்குவரத்து சேவைவே முக்கிய போக்குவரத்து அம்சமாக உள்ளது.

    எழில் கொஞ்சும் வெனிஸ் நகரை படகுகளில் அமர்ந்து சவாரி செய்தவாறு ரசிப்பதற்காகவே வெளிநாட்டினர் பலர் இங்கு சுற்றுலா வருவர். இந்தநிலையில் சுற்றுலா பயணிகளின் வருகையை கட்டுப்படுத்த நகர நிர்வாகம் கட்டண நடைமுறையை அமல்படுத்தி உள்ளது.

    வெனிஸ் நகரை சுற்றிப்பார்க்க ஒருநாள் கட்டணமாக 447 ரூபாய் (5 யூரோ) வசூலிக்கப்பட உள்ளது. 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், நகரவாசிகள், ஆராய்ச்சி மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சீசன் நாட்களில் கட்டணத்தை அதிகரிக்கும் எண்ணமும் உள்ளதாக நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை சுற்றுலா ஆர்வலர்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆஸ்டர், மேரி கோல்டு, பேன்சி வகைகள், பெட்டுன்னியா, குட்டை ரக சால்வியா, கேலண்டுல்லா, பிளாக்ஸ், டேலியா மற்றும் ரோஜா உள்ளிட்ட பூக்கள் ம‌ல‌ர் ப‌டுகைக‌ளில் பூக்க‌த் தொடங்கியுள்ளது.
    • சுற்றுலா பயணிகள் பிரையண்ட் பூங்காவில் பூத்துக்குலுங்கும் பல வண்ண மலர்களை ஆர்வமுடன் கண்டு ரசித்து அதன் அருகில் நின்று புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் ஏப்ரல், மே மாதங்கள் சீசன் காலங்களாகும். இந்த காலக்கட்டத்தில் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகளை மகிழ்விக்க நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள பிரையண்ட் பூங்காவில் மே மாதம் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெறுவது வழக்கம்.

    இந்த வருடம் 61வது மலர்கண்காட்சி நடைபெற உள்ளதால் பூங்கா நிர்வாகத்தினர் அதற்கான பராமரிப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு 3 கட்டமாக ஊட்டி, பெங்களூரு, கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட முக்கிய பெருநகரங்களில் சுமார் 2½ லட்சம் மலர் நாற்றுகள் வரவழைக்கப்பட்டு நடவு செய்யப்பட்டது. அந்த நாற்றுகள் தற்போது பூக்கள் பூக்கத் தொடங்கியுள்ளது. இதில் சால்வியா,பாப்பி, டெல்பினியம், ஆஸ்டர், மேரி கோல்டு, பேன்சி வகைகள், பெட்டுன்னியா, குட்டை ரக சால்வியா, கேலண்டுல்லா, பிளாக்ஸ், டேலியா மற்றும் ரோஜா உள்ளிட்ட பூக்கள் மலர் படுகைகளில் பூக்கத் தொடங்கியுள்ளது.

    இது பார்ப்பவர்களின் கண்களை கவரும் வகையிலும் அமைந்துள்ளது. மேலும் வரும் வாரங்களில் லட்சக்கணக்கான பூக்கள் பூத்து குலுங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பல வண்ணங்களில், பல்வேறு வகைகளில் பூக்கள் பூத்து குலுங்க தொடங்கியுள்ளது. கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் பிரையண்ட் பூங்காவில் பூத்துக்குலுங்கும் பல வண்ண மலர்களை ஆர்வமுடன் கண்டு ரசித்து அதன் அருகில் நின்று புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

    மேலும் மலர்கண்காட்சி நடைபெறும் தேதி அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும் என தோட்டக்கலை துறை துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

    • வெளியூர்களில் வேலை நிமித்தமாக குடும்பத்துடன் குடியிருப்பவர்கள் அன்றைய தினம் புதுச்சேரி வந்தனர்.
    • புஸ்சிவீதி, அண்ணாசாலை, நேருவீதி உள்ளிட்ட முக்கிய சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவையில் வார இறுதி நாட்களில் வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது. அதற்காக வெளியூர்களில் வேலை நிமித்தமாக குடும்பத்துடன் குடியிருப்பவர்கள் அன்றைய தினம் புதுச்சேரி வந்தனர்.

    தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை என்பதால், நேற்று மீண்டும் பணிக்கு திரும்புவதற்கு ஆயத்தமானார்கள். அத்துடன் வார இறுதி நாளான நேற்று வெளி மாநிலசுற்றுலா பயணிகள் கூட்டமும் அதிகரித்து இருந்தது.

    அவர்கள் புதுவையில் கடற்கரை, பாரதி பூங்கா, படகு குழாம், மணக்குள விநாயகர், அரவிந்தர் ஆசிரமம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்றனர்.

    புதுச்சேரி கடற்கரைசாலை, பாண்டி மெரினா பீச்சில் பகலில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் காணப்பட்டது. ஆனால் மாலையில் கூட்டம் அலை மோதியது.

    அங்கு அவர்கள் கடலில் இறங்கி விளையாடி மகிழ்ந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அவர்களை எச்சரித்து கடலில் இருந்து வெளியேற்றினர்.

    புஸ்சிவீதி, அண்ணாசாலை, நேருவீதி உள்ளிட்ட முக்கிய சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    ஒயிட்டவுன் பகுதிகளில் நாகரீக உடை அணிந்த பெண்கள் ஒய்யாரமாக நடந்தது வந்ததை காண முடிந்தது. அங்குள்ள கட்டிடங்களில் வரைந்திருக்கும் ஒவியங்களின் முன்பு நின்று சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். சண்டே மார்க்கெட் செயல்படும் காந்திவீதியில் சுற்றுலா பயணிகள், மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. அவர்கள் தங்களுக்கு விருப்பமான பொருட்களை பேரம் பேசி வாங்கி சென்றனர்.

    தொடர் விடுமுறை முடிவடைந்த நிலையில் வாக்களிக்க வந்தவர்கள், சுற்றுலா வந்தவர்கள் நேற்று மாலை முதல் தங்கள் சொந்த ஊர்களுக்கு திருப்பினர்.

    இதனால் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலை மோதியது.

    • சுற்றுலா பயணிகள் வருகையால் ஊட்டியில் உள்ள காட்டேஜ்கள், ஓட்டல்கள், விடுதிகள் நிரம்பி வழிகின்றன.
    • மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூம்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று இயற்றை எழில் கொஞ்சும் காட்சிகளை கண்டு ரசித்தனர்.

    ஊட்டி:

    சுற்றுலா தலமான நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெயில் சுட்டெரிக்கும் கோடை காலம் என்பதால் குளிர் சீதோஷ்ணநிலை நிலவும் ஊட்டிக்கு லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள். இதனால் இந்த 2 மாதங்கள் சீசன் காலங்களாக கருதப்படுகிறது.

    கடந்த ஒரு மாதமாக பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தலைவர்களின் பிரசாரம் மற்றும் பறக்கும் படை அதிகாரிகளின் சோதனை என நீடித்தது. இதனால் நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து காணப்பட்டது. நேற்றுமுன்தினம் பாராளுமன்ற தேர்தல் நிறைவு பெற்றதை தொடர்ந்து தற்போது நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    சனிக்கிழமையான நேற்று ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஊட்டியில் குவிந்து இருந்தனர். அதேபோல ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்றும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டியில் குவிந்தனர்.

    அங்குள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா, குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகம் இருந்தது. தாவரவியல் பூங்காவில் வெளியூர்களில் இருந்து குடும்பம், குடும்பமாக வந்திருந்த சுற்றுலா பயணிகள் ஆங்காங்கே அமர்ந்து மகிழ்ச்சியுடன் பொழுதை கழித்தனர்.

    சுற்றுலா பயணிகள் வருகையால் ஊட்டியில் உள்ள காட்டேஜ்கள், ஓட்டல்கள், விடுதிகள் நிரம்பி வழிகின்றன. மேலும் ஊட்டியில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. மேட்டுப்பாளையம்- ஊட்டி சாலையில் வாகனங்கள் ஊர்ந்தபடி பயணித்தன. நீண்ட வரிசையில் பலமணி நேரம் காத்திருந்து வாகனங்கள் சென்றன.

    இதேபோல மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் மற்றும் குன்னூரில் இருந்து ஊட்டிக்கு இயக்கப்படும் மலை ரெயிலிலும் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பயணித்தனர். மலைரெயிலில் பயணிக்க முன்பதிவு செய்வது அவசியம் ஆகும். இந்த ரெயிலில் அடுத்த மாதம் முன்பதிவு நிரம்பி விட்டதாக ரெயில்வே ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

    மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலிலும் சுற்றுலாபயணிகள் கூட்டம் அலைமோதியது. முக்கிய சுற்றுலா இடங்களான குணா குகை, பைன் பாரஸ்ட், மோயர் பாயிண்ட் தூண்பாறை, பசுமை பள்ளத்தாக்கு, பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, வெள்ளி நீர் வீழ்ச்சி, கோக்கர்ஸ் வாக் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    மேலும் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் உற்சாகமாக படகு சவாரியும், ஏரிச்சாலையில் சைக்கிள் மற்றும் குதிரை சவாரியும் செய்து மகிழ்ந்தனர். இதே போல் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூம்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று இயற்றை எழில் கொஞ்சும் காட்சிகளை கண்டு ரசித்தனர்.

    மேலும் வாகனங்கள் வருகையால் கொடைக்கானலில் இன்று போக்குவரத்து நெரிசலும் நிலவியது.

    ×