என் மலர்
காஞ்சிபுரம்
பெருங்குடியை சேர்ந்தவர் மணிநாகப்பன். அதே பகுதியில் கேடிப் டெக்னாலஜி என்ற பெயரில் வேலை வாய்ப்பு நிறுவனம் நடத்தி வந்தார்.
இவர் தனது நிறுவனத்துக்கு கனடா, லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளில் தொடர்பு இருப்பதாக கூறி கல்லூரி முடித்து வெளிவரும் மாணவர்கள் மற்றும் வெளி நாட்டில் வேலை தேடுபவர்களை குறிவைத்து இணைய தளம் மூலம் தொடர்பு கொண்டார்.
இதனை நம்பிய திருவான்மியூரை சேர்ந்த என்ஜினீயர் அருண்குமார் என்பவர் மணிநாகப்பனை தொடர்பு கொண்டார்.
அப்போது லண்டனில் வேலை இருப்பதாகவும் இதற்கு ரூ.1 லட்சம் தர வேண்டும் என்றும் மணி நாகப்பன் கூறினார். இதையடுத்து ரூ.1 லட்சத்தை அவரிடம் அருண்குமார் கொடுத்ததாக தெரிகிறது.
ஆனால் மணிநாகப்பன் கூறியபடி வேலை வாங்கி கொடுக்கவில்லை. போலி நியமன ஆணை கொடுத்து ஏமாற்றியது தெரிந்தது.
ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அருண்குமார் இதுபற்றி துரைப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். விசாரணையில் மணி நாகப்பன், வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக ஏராளமானோரிடம் கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது.
வேலை கேட்டு வருபவரிடம் முதலில் பணி ரெடியாகி விட்டது என்று கூறி பணத்தை பெற்று கொள்வதும் பின்னர் சில நாட்கள் கழித்து சான்றிதழ் சரியில்லை என்று கூறி ஏமாற்றி அலைக்கழித்து மோசடியில் ஈடுபட்டு வந்து உள்ளார்.
இதையடுத்து மணிநாகப்பனை போலீசார் கைது செய் தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
அரக்கோணத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு இன்று காலை மின்சார ரெயில் வந்தது. அதன் பின் வந்த ரெயில் மேல்மருவத்தூர் நோக்கி காலை 9 மணிக்கு புறப்பட்டது.
தாம்பரம் ரெயில் நிலையத்துக்கு 9.20 மணிக்கு ரெயில் வந்தபோது மின் வயர் அறுந்து இருப்பதை என்ஜின் டிரைவர் பார்த்தார். உடனே ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து ஊழியர்கள் ரெயில் மீது ஏறி அறுந்து கிடந்த மின் வயரை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனால் பயணிகள் ரெயிலில் இருந்து இறங்கி மாநகர பஸ்சில் சென்றனர்.
இந்த கோளாறால் தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். 1½ மணி நேரத்துக்கு பிறகு அறுந்து விழுந்த மின் வயர் சரிசெய்யப்பட்டு மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டன.
பெங்களூரில் கடுமையான பனி மூட்டம் நிலவி வருகிறது.
நள்ளிரவு முதல் இன்று காலை 9 மணி வரை பனி மூட்டம் நீடித்தது.
பனி மூட்டம் காரணமாக சென்னையில் இருந்து பெங்களூர் செல்ல வேண்டிய 3 விமானங்கள் தாமதமாக புறப்பட்டது.
அதேபோல் பெங்களூரில் இருந்து சென்னை வரவேண்டிய 2 விமானங்கள் தாமதமாக வந்தன. விமானங்கள் செல்வதிலும், வருவதிலும் சுமார் 3 மணி நேரம் வரை தாமதம் ஏற்பட்டது.
லண்டனில் இருந்து பெங்களூர் செல்ல வேண்டிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் சென்னையில் தரை இறங்கியது. அதன் பிறகு இன்று பகல் 12 மணியளவில் பெங்களூர் புறப்பட்டு சென்றது. பெங்களூர் செல்ல வேண்டிய சரக்கு விமானமும் சென்னையில் தரை இறங்கி பின்னர் பெங்களூர் புறப்பட்டு சென்றது.
சென்னை விமான நிலையத்தில் இன்று காலை ஓடுபாதை அருகே நிறுத்தப்பட்டு இருந்த ‘இண்டிகோ ஏர் லைன்ஸ்’க்கு சொந்தமான பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ்சை டிரைவர் இயக்கினார்.
அப்போது திடீரென பஸ்சில் இருந்து கரும்புகை வெளியேறி தீப்பிடித்தது. அதிர்ச்சி அடைந்த டிரைவர் பஸ்சை நிறுத்திவிட்டு கீழே இறங்கி தப்பினார்.
தகவல் அறிந்ததும் விமான நிலையத்தில் உள்ள தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் பஸ்சில் பற்றிய தீயை அணைத்தனர்.
பஸ்சில் இருந்த பேட்டரியில் ஏற்பட்ட கோளாறால் தீப்பிடித்ததாக தெரிகிறது. அதில் பயணிகள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் ஏற்படவில்லை.
இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவத்தால் சென்னை விமான நிலையம் இன்று காலை பரபரப்பாக காணப்பட்டது.
செங்கல்பட்டு:
குன்றத்தூரை சேர்ந்தவர் தஷ்வந்த். இவர் மவுலிவாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தபோது பக்கத்து வீட்டை சேர்ந்த 6 வயது சிறுமி ஹாசினியை கடந்த பிப்ரவரி மாதம் கற்பழித்து கொலை செய்து உடலை எரித்தார்.
இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த தஷ்வந்த் கடந்த 2-ந் தேதி தனது தாய் சரளாவையும் கொலை செய்து தப்பினார். மும்பையில் பதுங்கி இருந்த அவரை தனிப்படை போலீசார் கைது புழல் சிறையில் அடைத்தனர்.
ஹாசினி கொலை வழக்கு விசாரணையின் போது செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டில் ஆஜர் ஆகாமல் இருந்த தஷ்வந்துக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தஷ்வந்தை தொடர்ந்து செங்கல்பட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி வருகிறார்கள்.
இந்த விசாரணையின் போது மாங்காடு கிராம நிர்வாக அலுவலர் தலையாரி, ஹாசினியின் பக்கத்து வீட்டு பெண், ஹாசினி படித்த பள்ளியின் நிர்வாக அதிகாரி உள்ளிட்டோரிடம் நீதிபதி வேல்முருகன் விசாரணை நடத்தினார்.
இந்த வழக்கு விசாரணை இன்று மீண்டும் நடந்தது. இதற்காக புழல் சிறையில் இருந்த தஷ்வந்தை பலத்த பாதுகாப்புடன் போலீசார் செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர்.
அப்போது போலீஸ் வேனில் இருந்து இறங்கிய தஷ்வந்த் நிருபர்களிடம் கூறும்போது, ‘சிறுமி ஹாசினி, எனது தாய் சரளாவை நான் கொலை செய்யவில்லை. அனுமதி பெற்று செய்தியாளர்களை சந்திக்க ஏற்பாடு செய்தால் பேட்டி அளிக்கத் தயார்’ என்றார்.
இதைத் தொடர்ந்து நீதிபதி வேல்முருகன் முன்பு தஷ்வந்தை போலீசார் ஆஜர் படுத்தினர். வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தஷ்வந்தை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போது, ‘விசாரணை வேண்டாம், எனக்கு தண்டனை கொடுங்கள்’ என்றார்.
ஆனால் தற்போது ஹாசினியையும் தனது தாய் சரளாவையும் கொலை செய்யவில்லை என தஷ் வந்த் திடீர் பல்டி அடித்து கூறி இருப்பது போலீசாரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
இதையடுத்து தஷ்வந்துக்கு எதிரான சாட்சியங்களை பலப்படுத்தவும், புதிய சாட்சிகளை சேர்க்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
காஞ்சீபுரம் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி பட்டு நெசவாளர்களுக்கு போனஸ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. 1,252 பட்டு நெசவாளர்களுக்கு ரூ.3 கோடியே 33 லட்சம் போனஸ் தொகையை சங்கத்தின் தலைவர் செல்வராஜ், கைத்தறித்துறை இணை இயக்குனரும், நிர்வாக இயக்குனருமான எஸ்.பிரகாஷ் வழங்கினர்.
நிகழ்ச்சியில் துணைத் தலைவர் ஜி.விஸ்வநாதன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் எஸ்.ரத்தினவேல், பி.சுந்தர மூர்த்தி, எம்.வரதராஜன், ஆர்.காமாட்சி, ஆர்.புனிதா மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் சங்க மேலாளர் டி.ரவி நன்றி கூறினார்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் அருகே பெரும்பாக்கம் செல்லும் சாலையில் ஏராளமான வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ளன. இதனால் சாலை மிகவும் குறுகலாக உள்ளது.
இதையடுத்து காஞ்சீபுரம் நெடுஞ்சாலைத் துறை சார்பில் சாலை விரிவாக்கம் பணி செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக சாலையில் ஆக்கிரமித்து கட்டிய வீடுகளை அகற்ற நோட்டீஸ் அளித்திருந்தனர்.
ஆனால் யாரும் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றவில்லை. இந்த நிலையில் நெடுஞ்சாலைத் துறையினர் சுமார் 15 வீடுகளை ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடித்து தள்ளினர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை பாலுச்செட்டிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகர் மற்றும் போலீசார் செய்திருந்தனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவின் உறவினர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த நவம்பர் மாதம் மெகா வருமானவரி சோதனை நடந்தது.
சென்னை, தஞ்சை, மன்னார்குடி, கோவை, கொடநாடு, திருச்சி, நாமக்கல் உள்பட 187 இடங்களில் சுமார் 1600 அதிகாரிகள் 5 நாட்கள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டனர். அதில் கைப்பற்றிய ஆவணங்களை கொண்டு சென்றனர்.
சென்னையில் ஜெயா டி.வி. அலுவலகம், அதன் நிர்வாகி விவேக் வீடு, அவரது சகோதரி கிருஷ்ணபிரியா வீடு, ஸ்ரீபெரும்புதூரை அடுத்த படப்பையில் உள்ள மிடாஸ் மதுபான ஆலை உள்பட பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் நேற்று மீண்டும் சசிகலா உறவினர் வீடு, நிறுவனங்களில் வருமான வரி சோதனை நடந்தது. ஏற்கனவே நடந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் சென்னை, கோவையில் 6 இடங்களில் சோதனை நடந்தது.
அடையாறில் உள்ள சசிகலாவின் உறவினர் கார்த்திகேயன் வீடு, மிடாஸ் மதுபான ஆலை, மற்றும் மதுபான ஆலைக்கு அட்டை பெட்டி சப்ளை செய்யும் நிறுவனத்தின் உரிமையாளர் ஜெகநாதன் வீடு, மணிமங்கலத்தில் உள்ள மின்சார சாதனங்கள் சேமித்து வைக்கும் ஸ்ரீசாய் குடோன் ஆகியவற்றில் சோதனை நடந்தது.
இதற்கிடையே இன்று 2-வது நாளாக படப்பையில் உள்ள மிடாஸ் மதுபான ஆலையில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
ஏற்கனவே நடந்த சோதனையின்போது மிடாஸ் ஆலையில் கைப்பற்றிய ஆவணங்களை அங்குள்ள அறையில் பூட்டி சீல் வைத்தனர்.
அந்த ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் ஸ்ரீசாய் குடோன்களிலும் சோதனை நடந்து வருகிறது.
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த பிச்சிவாக்கத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இதன் தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த பொன்.முருகேசன் உள்ளார்.
கடந்த ஆண்டு கூட்டுறவு சங்கத்தின் மூலம் 10 பேருக்கு விவசாய கடன் வழங்கப்பட்டது. இதில் 8 பேருக்கு போலி நில ஆவணம் மூலம் ரூ.7.91 லட்சம் கடன் வழங்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கூட்டுறவு சங்க துணை பதிவாளர் வேணு சென்னை வணிக குற்ற புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார். வணிக குற்ற புலனாய்வு ஆய்வாளர் கீதா மற்றும் அதிகாரிகள் கூட்டுறவு சங்கத்தில் ஆய்வு செய்தனர்.
அப்போது போலி நில ஆவணம் மூலம் முருகேசன் தனது உறவினர்களுக்கு ரூ.7 லட்சத்து 91 ஆயிரம் கடன் கொடுத்து மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது. மேலும் அவருக்கு சங்க செயலாளர் ஜோசப்ராஜ் உடந்தையாக இருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து கூட்டுறவு சங்க தலைவர் பொன்.முருகேசன், செயலர் ஜோசப்ராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பொன்.முருகேசன் காஞ்சீபுரம் மாவட்ட அ.தி.மு.க. இலக்கிய அணி செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி வருபவர் ஜேம்ஸ் ஜோசப். கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர்கள் குடியிருப்பு நகரியத்தில் வசித்து வருகிறார்.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அவர் குடும்பத்துடன் சொந்த ஊரான கேரளா சென்றுவிட்டார். இந்த நிலையில் அவரது வீட்டு கதவை உடைத்து புகுந்த கொள்ளையர்கள் பீரோவில் இருந்த பணம்- நகைகள் மற்றும் லேப்டாப் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
ஜேம்ஸ் ஜோசப் வந்த பின்னரே எவ்வளவு பணம்- நகை கொள்ளை போனது என்பது தெரியவரும். இதுகுறித்து கல்பாக்கம் போலீசார் விசாரித்து வருறார்கள்.






