search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வண்டலூர் பூங்கா"

    • தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • வெள்ளிக்கிழமை அன்று அனைவரும் வாக்களிக்க ஏதுவாக பொதுவிடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்து இருந்தார்.

    வண்டலூர்:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் ஒரே கட்டமாக வருகிற வெள்ளிக்கிழமை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்படுகிறது.

    தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதையடுத்து, வாக்குப்பதிவு நடைபெறும் வெள்ளிக்கிழமை அன்று அனைவரும் வாக்களிக்க ஏதுவாக பொதுவிடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் வெள்ளிக்கிழமை அன்று வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இயங்காது என நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • குரங்குகளையும் ஊழியர்கள் தனித்தனியே கூண்டில் அடைத்து மருத்துவ குழுவினர் கண்காணித்து வருகிறார்கள்.
    • தப்பிய 2 அனுமன் குரங்குகளும் சிக்கியதால் பூங்கா ஊழியர்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.

    வண்டலூர்:

    வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு விலங்குகள் பரிமாற்ற திட்டத்தில் கான்பூரில் இருந்து 10 அனுமன் குரங்குகள் கொண்டு வரப்பட்டது. அவற்றை ஊழியர்கள் தனியாக கூண்டில் வைத்து கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த வாரம் கூண்டில் இருந்த 2 அனுமன் குரங்குகள் திடீரென பூங்காவில் இருந்து தப்பி சென்றுவிட்டது. அவை ஊரப்பாக்கம் மற்றும் மண்ணிவாக்கம் பகுதியில் சுற்றி வந்தது தெரிந்தது.

    இதைத்தொடர்ந்து அனுமன் குரங்குகளை கூண்டில் உணவு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். நேற்று முன்தினம் மண்ணிவாக்கம் பகுதியில் கூண்டில் உள்ள உணவை சாப்பிட வந்த ஒரு அனுமன் குரங்கை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். மற்றொரு குரங்கு அங்கிருந்து தப்பி சென்று விட்டது. அதனை தொடர்ந்து தேடி வந்தனர்.

    இதற்கிடையே இன்று காலை அய்யஞ்சேரி பகுதியில் கூண்டில் வைக்கப்பட்டு இருந்த பழங்கள் மற்றும் உணவுகளை சாப்பிடுவதற்காக தப்பி சென்ற மற்றொரு அனுமன் குரங்கு வந்தது. கூண்டுக்குள் நுழைந்ததும் அதன் கதவுகள் மூடியதால் அந்த குரங்கும் சிக்கிக்கொண்டது. இதைத்தொடர்ந்து பிடிபட்ட அனுமன் குரங்கை வனத்துறையினர் வண்டலூர் பூங்காவுக்கு கொண்டு சென்றனர்.

    வெளியில் தப்பி மீண்டும் பிடிபட்ட 2 அனுமன் குரங்குகளையும் ஊழியர்கள் தனித்தனியே கூண்டில் அடைத்து மருத்துவ குழுவினர் கண்காணித்து வருகிறார்கள். தப்பிய 2 அனுமன் குரங்குகளும் சிக்கியதால் பூங்கா ஊழியர்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.

    • பூங்காவுக்கு வாரவிடுமுறை என்பதால் குறைந்த அளவிலான ஊழியர்கள் பணியில் இருந்ததாக தெரிகிறது.
    • இன்று 2-வது நாளாக அனுமன் குரங்குகளை தேடும் பணி நடைபெற்றது.

    வண்டலூர்:

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள், விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கடந்த மாதம் விலங்குகள் பரிமாற்ற திட்டத்தில் உத்தர பிரதேச மாநிலம், கான்பூர் உயிரியல் பூங்காவில் இருந்து 10 அனுமன் குரங்குகள், 5 மர ஆந்தைகள், ஒரு ஜோடி இமாலயன் கிரிக்போன் கழுகு, ஒரு ஜோடி எகிப்திய கழுகுகள் கொண்டு வரப்பட்டது. அதனை பரிசோதனை செய்து தனியாக அடைத்து வைத்து பூங்கா ஊழியர்கள் கண்காணித்து வந்தனர். விரைவில் பயணிகள் பார்வைக்கு அவற்றை திறந்து விட திட்டமிடப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் பூங்காவுக்கு வாரவிடுமுறை என்பதால் குறைந்த அளவிலான ஊழியர்கள் பணியில் இருந்ததாக தெரிகிறது. அனுமன் குரங்குகள் அடைத்து வைக்கப்பட்டு இருந்த கூண்டை ஊழியர்கள் சுத்தம் செய்த போது 2 அனுமன் குரங்குகள் அங்கிருந்து தப்பி சென்று விட்டன. அதனை பிடிக்க முயன்றபோது மரங்களில் தாவி சென்று விட்டன. இரவு வரை தேடியும் அந்த அனுமன் குரங்குகளை பிடிக்க முடியவில்லை.

    வண்டலூர் பூங்காவில் உள்ள சூழ்நிலைக்கு அனுமன் குரங்குகள் இன்னும் பழக்கப்படாததால் அதனை பிடிக்க முடியாமல் ஊழியர்கள் திணறிவருகிறார்கள். இன்று 2-வது நாளாக அனுமன் குரங்குகளை தேடும் பணி நடைபெற்றது. ஆனால் ஊழியர்களின் பார்வையில் சிக்காமல் பூங்காவில் உள்ள மரங்களில் பதுங்கிக்கொண்டது. அதனை தேடும் பணி நடந்து வருகிறது.

    இதுகுறித்து பூங்கா அதிகாரி ஒருவர் கூறும் போது, வண்டலூர் பூங்காவை சுற்றி பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளது. அதனை ஆய்வு செய்து வருகிறோம் விரைவில் தப்பி சென்ற 2 அனுமன் குரங்குகளையும் பிடித்து விடுவோம். அவை பூங்காவை விட்டு தப்பி செல்ல வாய்ப்ப்பு இல்லை என்றார்.

    • பறவைகள் வண்டலூர் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.
    • கிரிபோன் கழுகு மற்றும் ஒரு ஜோடி எகிப்திய கழுகுகள் வந்து உள்ளன.

    வண்டலூர்:

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விலங்குகள், பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. விலங்குகள் பரிமாற்றத்தின் படி நாட்டில் உள்ள மற்ற பூங்காவிற்கு தேவையான விலங்குகள், பறவைகளை கொடுத்து அங்கிருந்து விலங்குகளை பெறுவது வழக்கம்.

    அதன்படி உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள உயிரியல் பூங்காவில் இருந்து விலங்குகள், பறவைகள் வண்டலூர் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இதில் 10 அனுமன் குரங்குகள், 5 மர ஆந்தைகள். ஒரு ஜோடி இமாலயன் கிரிபோன் கழுகு மற்றும் ஒரு ஜோடி எகிப்திய கழுகுகள் வந்து உள்ளன.


    இந்த அனுமன் குரங்குள் மற்ற குரங்குகளை விட வித்தியாசமான முக அமைப்பை கொண்டது. அதன் வாய் பகுதி சற்று சிகப்பு நிறமாக இருக்கும். புதிதாக வந்து உள்ள விலங்குகள் மற்றும் பறவைகளின் உடல்நிலையை பூங்காவில் உள்ள கால்நடை மருத்துவர்கள் பரிசோதித்து தனிமைப்படுத்தி தனித்தனியாக அறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளன. தனிமைப்படுத்தும் கால அவகாசம் முடிந்ததும் பூங்காவில் பொது மக்களின் பார்வைக்கு விடப்படும் என்று பூங்கா அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இதற்கிடையே விலங்குகள் பரிமாற்றத்தின் படி வண்டலூர் பூங்காவில் இருந்து கான்பூர் உயிரியல் பூங்காவிற்கு ஒரு ஜோடி கட்ட உடல் மலைப் பாம்புகள், இரண்டு ஜோடி சருகு மான்கள், 3 நெருப்புக்கோழிகள், ஒரு ஜோடி பச்சை உடும்புகள் மற்றும் ஒரு ஆண் சாம்பல் ஓநாய் ஆகிய விலங்குகள் அனுப்பி வைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்து அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வண்டலூரில் அமைந்துள்ளது.
    • வண்டலூர் பூங்காவிற்கு வழக்கமாக செவ்வாய்க்கிழமை விடுமுறை தினமாகும்.

    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்து அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வண்டலூரில் அமைந்துள்ளது. இங்கு 2 ஆயிரத்திற்கும் அதிகமான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. இந்த பூங்காவில் வெள்ளைப் புலிகள் வங்க புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள், யானைகள், மனித குரங்கு காண்டாமிருகம், நீர்நாய், முதலைகள் உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் உள்ளது. இதனை தினந்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பார்த்து செல்கின்றனர்.

    வண்டலூர் பூங்காவிற்கு வழக்கமாக செவ்வாய்க்கிழமை விடுமுறை தினமாகும். இதற்கிடையில், இன்று (செவ்வாய்கிழமை) மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் பூங்காவுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிக அளவில் இருக்கும் என்பதால், வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும் என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று வண்டலூர் உயிரியல் பூங்கா, சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக திறந்திருக்கும்.

    • பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறப்பு மாநகர பஸ்கள் மற்றும் அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
    • புகையிலை பொருட்கள், மது பானங்கள், கத்தி மற்றும் பிற ஆயுதங்கள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    பொங்கல் பண்டிகையையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வருகிற 14-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை சுமார் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சுற்றிப்பார்க்க வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக காணும் பொங்கலான வருகிற 17-தேதி பார்வையாளர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிறப்பு முன்னேற்பாடு பணிகளை செய்வது தொடர்பாக பூங்கா நிர்வாகம் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது.

    இது தொடர்பாக வண்டலூர் உயிரியல் பூங்கா அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    பொங்கல் பண்டிகையையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்பதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறப்பு மாநகர பஸ்கள் மற்றும் அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    மேலும் 100-க்கும் மேற்பட்ட போலீசார், வனத்துறை ஊழியர்கள், தன்னார்வலர்கள் என 500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் மருத்துவ வசதிகளும் செய்து கொடுக்கப்படுகிறது. அவசர சிகிச்சை தேவைப்படும் பொதுமக்களுக்கு உதவ ஆம்புலன்சு ஒன்று தயார் நிலையில் இருக்கும். தீயணைப்பு வாகனமும் நிறுத்தி வைக்கப்பட உள்ளது. பூங்காவுக்கு வரும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக அவர்களின் கையில் அடையாள சீட்டு கட்டுவதற்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை விடுமுறை தினமாகும். பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் 16-ந்தேதி செவ்வாய்க்கிழமை திருவள்ளுவர் தினம் வருவதால் அன்றைய தினம் வண்டலூர் உயிரியல் பூங்கா பொதுமக்கள் பார்வைக்காக திறந்திருக்கும்.

    பூங்காவுக்கு வரும் பார்வையாளர்கள் கரும்பு, பிளாஸ்டிக் மற்றும் பிளாஸ்டிக் பையில் அடைக்கப்பட்ட உணவு பொருட்கள், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள், சிகரெட், புகையிலை பொருட்கள், மது பானங்கள், கத்தி மற்றும் பிற ஆயுதங்கள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    பொதுமக்கள் கூட்ட நெரிசல் இன்றி நுழைவு சீட்டு பெறும் வகையில் கூடுதல் டிக்கெட் கவுண்டர்கள் மூலம் டிக்கெட் வழங்கப்படும். மேலும் பொதுமக்கள், பூங்கா மொபைல் செயலி, இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். டிஜிட்டல் முறையிலும் பணம் செலுத்தி டிக்கெட் பெறும் முறைகளும் அறிமுகப்ப டுத்தப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வண்டலூர் பூங்காவுக்கு பார்வையாளர்கள் வருகை கடந்த ஆண்டின் எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கும்.
    • பார்வையாளர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது என்றார்.

    வண்டலூர்:

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விலங்குகள், பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. வார இறுதிநாள் விடுமுறை மற்றும் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை என்பதால் கடந்த 2 நாட்களாக பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

    ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஒரே நாளில் சுமார் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வண்டலூர் பூங்காவில் குவிந்து இருந்தனர். இதனால் பூங்கா முழுவதும் கூட்டம் களை கட்டியது. வார இறுதி விடுமுறை நாளான கடந்த 2 நாட்களில் பார்வையாளர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது.

    கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விடுமுறையின் போது (டிசம்பர் 24,25 மற்றும் 26-ந்தேதிகளில்) 21 ஆயிரம் பார்வையாளர்கள் வந்திருந்தனர். இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். கிறிஸ்துமஸ் விடுமுறை நாளான இன்று பார்வையாளர்கள் வருகை அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுகுறித்து பூங்கா அதிகாரி ஒருவர் கூறும் போது, வண்டலூர் பூங்காவுக்கு பார்வையாளர்கள் வருகை கடந்த ஆண்டின் எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கும். இதேபோல் புத்தாண்டு வார இறுதியிலும் அதிகமானோர் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். பார்வையாளர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது என்றார்.

    • கனமழை மற்றும் சூறைக்காற்றால் பூங்காவில் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது.
    • மிச்சாங் புயல் காற்றின் தாக்கத்தால் பூங்காவில் உள்ள சில பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.

    வண்டலூர்:

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள், விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மிச்சாங் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் அனைத்து இடங்களும் வெள்ளக்காடாக மாறி உள்ளது.

    புயலின் தாக்குதலுக்கு வண்டலூர் பூங்காவும் தப்ப வில்லை. கனமழை மற்றும் சூறைக்காற்றால் பூங்காவில் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது. சுமார் 30 மரங்கள் முறிந்து விழுந்து உள்ளன. மேலும் 5 இடங்களில் பூங்காவின் சுற்றுச்சுவர் சேதம் அடைந்து விட்டன. இதைத்தொடர்ந்து பூங்காவில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இதனால் இன்று வண்டலூர் பூங்கா மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சேதம் அடைந்த சுற்றுச்சுவர் சீரமைப்பு மற்றும் முறிந்து விழுந்த மரங்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

    புயல் மற்றும் கனமழையின் போது பூங்காவில் உள்ள விலங்குகள் மற்றும் பறவைகள் அனைத்தும் அதன் இருப்பிடங்களில் பாதுகாப்பாக அடைக்கப்பட்டு அதற்கான முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் பாதிப்பு ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இது தொடர்பாக வண்டலூர் பூங்கா நிர்வாகம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மிச்சாங் புயல் காற்றின் தாக்கத்தால் பூங்காவில் உள்ள சில பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. சுமார் 30 மரங்கள் விழுந்து உள்ளன. கனமழையின் போது பூங்கா ஊழியர்களால் சிலர் பணிக்கு வர முடியவில்லை என்ற போதிலும் பூங்காவில் உள்ள ஊழியர்களைப் பயன்படுத்தி விலங்குகளுக்கு உணவளிப்பது மற்றும் விலங்குகளின் அடைப்புகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது. எந்த விலங்குகளும் பாதிக்கப்படவில்லை மற்றும் அனைத்து அடைப்புகளும் அப்படியே பாதுகாக்கப்பட்டன.

    வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையின் இருபுறமும் உள்ள சுவர்களில் 4 இடங்களில் 50 மீட்டர் நீளத்துக்கு சேதமடைந்து உள்ளன. பூங்காவிற்குள் அருகில் உள்ள ஓட்டேரி ஏரியும் நிரம்பி தண்ணீர் வந்ததால் 30 மீட்டர் நீளத்திற்கு சுற்றுச்சுவர் சேதமடைந்தன. மோட்டார் பம்புகள் மூலம் தேங்கிய தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. முறிந்துவிழுந்த மரங்களை அகற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • தீபாவளி தினத்தன்று 7 ஆயிரம் பேர் வந்து இருந்தனர்.
    • வண்டலூர் பூங்காவிற்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை விடுமுறை நாட்களில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது

    வண்டலூர்:

    வண்டலூர் பூங்காவில் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. வண்ணத்துப்பூச்சி பூங்கா, மீன் கண்காட்சியகம், குழந்தைகள் பூங்கா, லயன்சபாரி உள்ளிட்டவை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து உள்ளன. தினந்தோறும் ஏராளமான பார்வையாளர்கள் வந்து விலங்குகள், பறவைகளை ரசித்து செல்கிறார்கள்.

    இந்தநிலையில் தீபாவளி பண்டிகை தொடர்விடுமுறையையொட்டி வண்டலூர் பூங்காவிற்கு பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. நேற்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்ததால் பூங்காவில் ஏராளமானோர் குடும்பத்துடன் குவிந்தனர். நேற்று மட்டும் சுமார் 13 ஆயிரம் பேர் பூங்காவுக்கு வந்திருந்தனர். இதேபோல் தீபாவளி தினத்தன்று 7 ஆயிரம் பேர் வந்து இருந்தனர். தீபாவளி விடுமுறை கடந்த 2 நாளில் மட்டும் 20 ஆயிரம் பேர் பூங்காவிற்கு வந்து உள்ளனர். இதுகுறித்து வண்டலூர் பூங்கா அதிகாரி ஒருவர் கூறும்போது, தீபாவளி விடுமுறையை ஒட்டி கடந்த 2 நாட்களில் 20 ஆயிரம் பேர் வண்டலூர் பூங்காவிற்கு வந்து இருக்கிறார்கள். லயன்சபாரி பார்வையாளர்களை மிகவும் கவர்ந்து உள்ளது. ஏராளமானோர் இதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். வண்டலூர் பூங்காவிற்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை விடுமுறை நாட்களில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றார்.

    • கோவை வ.உ.சி. உயிரியல் பூங்காவின் அங்கீகாரத்தை மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் ரத்து செய்தது.
    • பறவைகள், பாலூட்டிகள் மற்றும் ஊர்வனவற்றை கொண்டு செல்வதற்காக மொத்தம் 15 பெட்டிகள் தயார் செய்யப்பட்டுள்ளன.

    கோவையில் வ.உ.சி. மினி உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு ஏராளமான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. இந்த நிலையில் கோவை வ.உ.சி. உயிரியல் பூங்காவின் அங்கீகாரத்தை மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் ரத்து செய்தது.

    இதையடுத்து அங்கிருக்கும் விலங்குகள் மற்றும் பறவைகள் மற்ற உயிரியல் பூங்காக்களுக்கு மாற்றப்படுகின்றன. இதில் 10-க்கும் மேற்பட்ட விலங்குகள் சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு கொண்டு வரப்படுகின்றன.

    இதுகுறித்து வண்டலூர் உயிரியல் பூங்கா இயக்குனர் ஸ்ரீனிவாஸ் ஆர்.ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோவையில் உள்ள வ.உ.சி. உயிரியல் பூங்காவில் உள்ள 10-க்கும் மேற்பட்ட விலங்குகள் வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட உள்ளன. கோவை மாநகராட்சி நடத்தும் உயிரியல் பூங்காவின் அங்கீகாரத்தை மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் ரத்து செய்ததால், அவை சென்னைக்கு கொண்டு வரப்படுகின்றன.

    கோவை உயிரியல் பூங்காவில் 487 பறவைகள், 62 ஊர்வன பிராணிகள், 8 நாகப்பாம்புகள், 8 சாதாரண வகை பாம்புகள், 5 கட்டு விரியன் பாம்புகள், 11 மலைப்பாம்புகள், 86 பாலூட்டி விலங்குகள் உள்ளன. இதில் கொக்கு, கிளிகள் போன்றவையும் அடங்கும்.

    பாம்பு போன்ற ஊர்வன பிராணிகள் வனப்பகுதியில் விடப்படும் நிலையில், அவற்றில் சில சேலத்தில் உள்ள குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவிற்கும், மற்றொரு வகை விலங்குகள் மற்றும் ஊர்வன பிராணிகள் வேலூரில் உள்ள அமிர்தி உயிரியல் பூங்காவிற்கும் அனுப்பப்படும். பறவைகள், பாலூட்டிகள் மற்றும் ஊர்வனவற்றை கொண்டு செல்வதற்காக மொத்தம் 15 பெட்டிகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இந்த விலங்குகள் 45 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படும். புதிதாக வரும் விலங்குகளை தனிமைப்படுத்துதல் மற்றும் காட்சிப்படுத்துதல் ஆகிய இரண்டிற்கும் தேவையான வசதிகள் மிருகக்காட்சி சாலையில் தயாராக உள்ளன. வண்டலூர் உயிரியல் பூங்கா ஊழியர்கள் பறவைகள், ஊர்வன மற்றும் பாலூட்டிகளை கோவையில் இருந்து வண்டலூருக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். இதற்கு 3 அல்லது 4 நாட்கள் ஆகும்.

    ஜம்மு-காஷ்மீர் உயிரியல் பூங்காவில் இருந்து ஒரு ஜோடி இமயமலை கருப்பு கரடிகளும் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வருகின்றன. ஜம்மு-காஷ்மீரில் இருந்து கரடிகளை கொண்டுவர ஒப்புதல் கிடைத்துள்ளது. கரடிகள் ரெயில் மூலம் சென்னைக்கு வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மஞ்சள் நிற அனகோண்டா பாம்புகள் சுமார் 6 அடி முதல் 7 அடி வரை வளரும் தன்மை கொண்டது.
    • அனகோண்டாக்கள் தற்போது நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளன.

    வண்டலூர்:

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள், விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தினந்தோறும் ஏராளமான பார்வையாளர்கள் இதனை ரசித்து செல்கிறார்கள்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு வண்டலூர் பூங்காவில் 3 ஆண்டுக்கு பிறகு வாகனத்தில் சென்று சிங்கம், மான்களை பார்த்து ரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இதற்கிடையே வண்டலூர் பூங்காவில் புதிதாக பிறந்த 8 மஞ்சள் நிற அனகோண்டா குட்டிகள் பார்வையாளர்கள் பார்வைக்கு விடப்பட்டு உள்ளது. இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. பாறையில் ஏறி அனகோண்டா குட்டிகள் சறுக்கி செல்வதை சிறுவர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர்.

    இதுகுறித்து வண்டலூர் பூங்கா அதிகாரியிடம் கேட்டபோது, இந்த மஞ்சள் நிற அனகோண்டா பாம்புகள் சுமார் 6 அடி முதல் 7 அடி வரை வளரும் தன்மை கொண்டது. கடந்த 2020 -ம் ஆண்டு விலங்குகள் பரிமாற்றம் திட்டத்தில் சென்னை முதலைப் பண்ணையில் இருந்து அனகோண்டா பாம்பு ஜோடி பெறப்பட்டது. இதன் இனப்பெருக்கத்தின் மூலம் 6 குட்டிகள் கிடைத்தது. அதனை தனியாக பராமரித்து வந்தோம். இப்போது நல்ல நிலையில் உள்ள அனகோண்டா குட்டிகளை பார்வைக்கு விட்டுள்ளோம். இதற்கு உணவாக சிறிய கோழி குஞ்சுகள், மூஞ்சூறு எலிகள் வழங்கப்படுகிறது. அனகோண்டாக்கள் தற்போது நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளன.

    பூங்காவில் விலங்குகள் இனப்பெருக்கம் செய்வதற்கான இயற்கை சூழ்நிலை உருவாக்கப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நெருப்பு கோழிகள் வெற்றிகரமாக இனப்பெருக்கம் செய்தன என்றார்.

    • கடந்த ஒரு வாரத்தில் சுமார் 2600 பேர் லயன் சபாரியில் சென்று பார்வையிட்டு உள்ளனர்.
    • இன்னும் இரண்டு வாகனங்கள் கூடுதலாக பெறுவதற்கு டெண்டர் விடுக்கப்பட்டு உள்ளது.

    வண்டலூர்:

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தினந்தோறும் ஏராளமான பார்வையாளர்கள் குடும்பத்துடன் வந்து விலங்குகளை பார்த்து செல்கிறார்கள்.

    கொரோனோ காலகட்டத்தில் கடந்த 3 ஆண்டு முன்பு வண்டலூர் பூங்காவில் வாகனத்தில் சென்று சிங்கங்களை பார்வையிடும் லயன் சபாரி வசதி நிறுத்தப்பட்டது. இதன்பின்னர் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கடந்த 2-ந்தேதி வாகனத்தில் சென்று சிங்கம் மற்றும் மான்களை பார்வையிடும் லயன் சபாரி மீண்டும் தொடங்கப்பட்டது. இதற்காக குளிர்சாதன வசதியுடன் பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஒரே நேரத்தில் ஒரு பஸ்சில் 28 பேர் பயணம் செய்ய முடியும்.

    வண்டலூர் பூங்காவில் 3 ஆண்டுகளுக்கு பின்னர் லயன்சபாரி தொடங்கப்பட்டு இருப்பதால் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்கள் மத்தியில் இது பெரும் வரவேற்பை பெற்று உள்ளது. லயன்சபாரி தொடங்கப்பட்ட நாள் அன்று மட்டும் 18 முறை வாகனங்கள் இயக்கப்பட்டு சுமார் 500 பேர் சிங்கம், மான்களை பார்த்து ரசித்து உள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் சுமார் 2600 பேர் லயன் சபாரியில் சென்று பார்வையிட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த 7-ந்தேதி (சனிக்கிழமை) 25 முறையும், ஞாயிற்றுக்கிழமை 32 முறையும் லயன்சபாரிக்கு வாகனங்கள் சென்று உள்ளன. சனிக்கிழமை சுமார் 650 பேரும், ஞாயிற்றுக்கிழமை 850 பேரும் கண்டுகளித்து உள்ளனர்.

    இதுகுறித்து பூங்கா அதிகாரிகள் கூறும்போது, வாகனத்தில் சென்று சிங்கம், மான்களை பார்வையிடும் வசதி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து உள்ளது. விடுமுறை நாட்களில் லயன்சபாரி செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இப்போது இரண்டு வாகனங்கள் மட்டுமே லயன் சபாரிக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்னும் இரண்டு வாகனங்கள் கூடுதலாக பெறுவதற்கு டெண்டர் விடுக்கப்பட்டு உள்ளது. அடுத்த மாதம் முதல் வாரத்தில் புதிய 2 குளிர்சாதன வசதியுடைய பஸ்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றார்.

    ×