search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    படப்பையில் மிடாஸ் மதுபான ஆலையில் 2-வது நாளாக சோதனை
    X

    படப்பையில் மிடாஸ் மதுபான ஆலையில் 2-வது நாளாக சோதனை

    படப்பையில் உள்ள மிடாஸ் மதுபான ஆலையில் இன்று 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவின் உறவினர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த நவம்பர் மாதம் மெகா வருமானவரி சோதனை நடந்தது.

    சென்னை, தஞ்சை, மன்னார்குடி, கோவை, கொடநாடு, திருச்சி, நாமக்கல் உள்பட 187 இடங்களில் சுமார் 1600 அதிகாரிகள் 5 நாட்கள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டனர். அதில் கைப்பற்றிய ஆவணங்களை கொண்டு சென்றனர்.

    சென்னையில் ஜெயா டி.வி. அலுவலகம், அதன் நிர்வாகி விவேக் வீடு, அவரது சகோதரி கிருஷ்ணபிரியா வீடு, ஸ்ரீபெரும்புதூரை அடுத்த படப்பையில் உள்ள மிடாஸ் மதுபான ஆலை உள்பட பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று மீண்டும் சசிகலா உறவினர் வீடு, நிறுவனங்களில் வருமான வரி சோதனை நடந்தது. ஏற்கனவே நடந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் சென்னை, கோவையில் 6 இடங்களில் சோதனை நடந்தது.

    அடையாறில் உள்ள சசிகலாவின் உறவினர் கார்த்திகேயன் வீடு, மிடாஸ் மதுபான ஆலை, மற்றும் மதுபான ஆலைக்கு அட்டை பெட்டி சப்ளை செய்யும் நிறுவனத்தின் உரிமையாளர் ஜெகநாதன் வீடு, மணிமங்கலத்தில் உள்ள மின்சார சாதனங்கள் சேமித்து வைக்கும் ஸ்ரீசாய் குடோன் ஆகியவற்றில் சோதனை நடந்தது.

    இதற்கிடையே இன்று 2-வது நாளாக படப்பையில் உள்ள மிடாஸ் மதுபான ஆலையில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

    ஏற்கனவே நடந்த சோதனையின்போது மிடாஸ் ஆலையில் கைப்பற்றிய ஆவணங்களை அங்குள்ள அறையில் பூட்டி சீல் வைத்தனர்.

    அந்த ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் ஸ்ரீசாய் குடோன்களிலும் சோதனை நடந்து வருகிறது.

    Next Story
    ×