என் மலர்
செய்திகள்

செங்கல்பட்டு அருகே பெண் சப்-இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் லாரி மோதி உயிரிழப்பு
செங்கல்பட்டு:
காஞ்சீபுரத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 52). காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.
அதே அலுவலகத்தில் புவனேஸ்வரி (30) என்பவரும் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றினார்.
நேற்று இரவு அவர்கள் 2 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் திருக்கழுக்குன்றம் போலீஸ் நிலையத்துக்கு பணி சம்பந்தமாக வந்தனர். பின்னர் இருவரும் காஞ்சீபுரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டு இருந்தனர்.
செங்கல்பட்டை அடுத்த பாலூர் அருகே வந்த போது எதிரே வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசன், புவனேஸ்வரி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். விபத்து நடந்ததும் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.
பலியான 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.
விபத்து நடந்த இடத்தை காஞ்சீபுரம் டி.ஐ.ஜி. தேன்மொழி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர்கள் 2 பேரையும் மணல் கடத்தல் கும்பல் லாரி ஏற்றி கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
போலீசார் வருவதை கண்டதும் அவர்கள் மீது லாரியை மோத விட்டார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் சிக்கினால் தான் முழு விவரம் தெரியவரும்.
பலியான வெங்கடேசனுக்கு தனேஷ்வரி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். அவர் காஞ்சீபுரம் கோட்ராம்பாளையத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
புவனேஸ்வரி காஞ்சீபுரம் ஒரிக்கையில் குடும்பத்துடன் தங்கி இருந்தார். இவரது தந்தையும் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஆவார். புவனேஸ்வரி போட்டி தேர்வின் மூலம் நேரடியாக சப்-இன்ஸபெக்டராக தேர்ச்சி பெற்றிருந்தார். அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
விபத்து குறித்து பாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






