என் மலர்
செய்திகள்

மாமல்லபுரம் விடுதியில் சென்னை வாலிபர் கொலை: நண்பர் கைது
மாமல்லபுரம்:
சென்னை, கொரட்டூரை சேர்ந்தவர் சஞ்சய் (வயது 33). ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். மனைவியை பிரிந்து வாழ்ந்த அவருக்கு 6 வயதில் மகன் உள்ளான்.
சஞ்சய்யும், பம்மலை சேர்ந்த செந்திலும் நண்பர்களாக பழகி வந்தனர். செந்தில், கிண்டியில் உடலில் பச்சை குத்தும் கடை நடத்தி வருகிறார். அவரது மனைவி சுரேகா கருத்து வேறுபாட்டால் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார்.
நேற்று இரவு சஞ்சய், செந்தில் மற்றும் அவர்களது நண்பர்கள் மாமல்லபுரம் ஒத்தவாடை தெருவில் உள்ள விடுதியில் தங்கி இருந்தனர்.
அப்போது அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதில் சஞ்சய் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். உடனே விடுதி அறையில் தங்கி இருந்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து மாமல்லபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
கொலை தொடர்பாக பம்மலில் பதுங்கிஇருந்த செந்திலை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
செந்திலை அவரது மனைவியுடன் சேர்த்து வைக்கும் முயற்சியில் சஞ்சய் ஈடுபட்டதாக தெரிகிறது. இதற்காக அவர் நேற்று இரவு நண்பர்களுடன் சேர்ந்து புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தார்.
அப்போது செந்திலின் மனைவி சுரேகா விடுதிக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சஞ்சய்க்கும், செந்திலுக்கும் மோதல் ஏற்பட்டு கொலையில் முடிந்ததாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
விருந்து நிகழ்ச்சி நடை பெற்ற விடுதியில் சஞ்சய், செந்திலுடன் அவரது நண்பர்கள் 10-க்கும் மேற்பட்டோர் 5 அறைகளில் தங்கி இருந்து உள்ளனர். அவர்கள் யார்? யார்? என்ற விபரத்தை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.
மேலும் செந்திலின் மனைவி சுரேகாவிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர். இதன் பின்னரே கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது தெரிய வரும்.






