என் மலர்
காஞ்சிபுரம்
காஞ்சீபுரம்:
சின்ன காஞ்சீபுரம் கூட்டுறவு அர்பன் வங்கியில் கூட்டுறவு சங்க நிர்வாககுழு உறுப்பினர்களின் தேர்தல் நேற்று நடந்தது. அப்போது யாரோ மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து வாக்கு சீட்டுகளை சேதப்படுத்தி, ஓட்டிப்பெட்டியில் மை ஊற்றி சேதப்படுத்தி, தேர்தல் பணியாளர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் கூட்டுறவு சங்க தேர்தல் ரத்து ஆனதாக தேர்தல் அதிகாரி ராஜ் நந்தினி அறிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த தி.மு.க.வினர் ஆளும் கட்சியினர்தான் ஓட்டுப்பெட்டியை சேதப்படுத்தியதாக கூறி காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. எழிலரசன் தலைமையில் நகர செயலாளர் சன் பிராண்டு கே.ஆறுமுகம், மாவட்ட பொருளாளர் ஜி.சுகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர் சி.வி.எம்.அ.சேகர் உள்பட ஏராளமான தி.மு.க.வினர் வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். #cooperativesocietieselection
தாம்பரம்:
தாம்பரம் சண்முகம் சாலை பாரதி திடலில் 100-க்கும் மேற்பட்ட நடைபாதை கடைகள் உள்ளன. இங்கு காய்கறிகள், பழங்கள், வளையல்கள், பாசிமணிகள் போன்றவை விற்பனை செய்யப்பட்டு வந்தன. நேற்று இரவு வழக்கம் போல் கடைகளை மூடிவிட்டு அனைவரும் வீட்டுக்கு சென்றுவிட்டனர். இரவு 12 மணியளவில் அங்குள்ள கடைகள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. காற்று வேகமாக வீசியதால் அடுத்தடுத்த கடைகளுக்கு தீ பரவியது.
இதற்கிடையே தீயணைப்பு படையினர் 2 வண்டிகளில் வந்து தீயை போராடி அணைத்தனர். இந்த தீ விபத்தில் 25 கடைகள் எரிந்து சாம்பலாயின. ரூ.20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்தன. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. தீ விபத்தில் எரிந்த கடைகளை எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ. நேரில் சென்று பார்த்தார்.
ஆலந்தூர்:
புதுவை முதல்-மந்திரி நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கில் சென்னை ஐகோர்ட்டு நேற்று கூறிய தீர்ப்பில் சபாநாயகர் அதிகாரத்தில் கோர்ட்டு தலையிட முடியாது என்று தெரிவித்துள்ளது.
ஆனால் புதுவை மாநிலத்தை பொறுத்தவரை சபாநாயகர் உத்தரவில் கோர்ட்டு தலையிட முடியும் என்று கூறியுள்ளது. ஒரே மாதிரியான பிரச்சினையில் நீதிமன்றத்தில் 2 விதமான தீர்ப்பு வந்துள்ளது. இதுபற்றி வாட்ஸ்-அப், பேஸ்புக்கில் விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக புதுவை கொறடா மத்திய அரசு மீது சுப்ரீம் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணைக்கு வரும் போது இந்த முரணான தீர்ப்பு பற்றி நாங்கள் வலியுறுத்துவோம். 2 விதமான தீர்ப்பு பற்றி மக்கள் மன்றம் தான் முடிவு செய்ய வேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழு அமைக்க வேண்டும் என்று தமிழகத்தில் தி.மு.க., காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. அதே போல் புதுவையிலும் நாங்கள் பல போராட்டங்கள் நடத்தியுள்ளோம்.
பிரதமர் மோடி புதுவை வந்த போது காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக நானும், அமைச்சர்களும் கடிதம் கொடுத்துள்ளோம்.
சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம். பிரதமர் மோடி எதற்கும் செவி சாய்க்கவில்லை. பிரதமர் நினைத்திருந்தால் ஒரே நாளில் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திருக்கலாம். ஆனால் காலம் தாழ்த்தி வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார். #CMNarayanasamy #MLADisqualifycase
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரத்தை அடுத்த குருவிமலை பள்ளத்தெரு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.
இங்குள்ள மக்களுக்கு கடந்த 8 மாதங்களாக முறையாக குடிநீர் வழங்கப்பட வில்லை. இதனை கண்டித்து அப்பகுதி பெண்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் காஞ்சீபுரம்- உத்திர மேரூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு மாகரல் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனால் கல்லூரி மாணவர்கள் மற்றும் அலுவலகத்திற்கு செல்வோரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இந்த திடீர் சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மதுராந்தகம் அருகே நல்லாமூர் மலை மேல் சீரடி சாய்பாபா கோவில் உள்ளது. நேற்று இரவு வழக்கம்போல் பூஜை முடிந்ததும் கோவிலை பூட்டி சென்றனர். காவலர் சுப்புராயன் கோவில் வளாகத்தில் வசித்து வருகிறார்.
இன்று காலை வழக்கம் போல் கோவிலை திறந்து விட காவலர் சுப்புராயன் வந்தார். அப்போது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கோவிலில் இருந்த இரண்டு உண்டியல்கள் உடைக்கப்பட்டிருந்தது. மேலும் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 2 பவுன் மதிப்பிலான 4 தங்க தாலிகள் மற்றும் வெள்ளி பொருட்கள் திருடப்பட்டு இருந்தது. உண்டியலில் சுமார் ஒரு லட்சம் பணம் இருந்ததாக தெரிகிறது.
இது குறித்து சித்தாமூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆலந்தூர்:
பிரேசிலில் இருந்து துபாய் வழியாக சென்னை வரும் விமானத்தில் பெரிய அளவில் கடத்தல் நடைபெறுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து பிரேசிலில் இருந்து சென்னை வந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளிடம் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது போர்ச்சுக் கல்லை சேர்ந்த ஒருவர் கொண்டு வந்த கம்ப்யூட்டர் யூ.பி.எஸ். அதிக எடை இருந்தது. அதனை பிரித்து பார்த்த போது 6 பண்டல்களில் போதைப் பொருளான கோஹைன் இருந்தது.
வெளியில் தெரியாமல் இருக்க பண்டல்களை கம்பியால் சுற்றி யூ.பி.எஸ்.சில் மறைத்து கடத்தி வந்தது தெரிந்தது.
மொத்தம் 3 கிலோ கோஹைன் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.9 கோடி ஆகும். அதனை போதைப் பொருள் தடுப்பு பிரிவில் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து போர்ச்சுக்கல் நாட்டுக்காரரை அதிகாரிகள் கைது செய்தனர். பிரேசிலில் இருந்து போதைப் பொருளை வாங்கி சென்னை கடத்தி வந்துள்ளார்.
இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. சென்னையில் யார்? யாருக்கு போதைப் பொருள் சப்ளை செய்யப்பட இருந்தது என்ற விபரத்தையும் அவரிடம் சேகரித்து வருகிறார்கள். #Drugs
சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை மர்ம வாலிபர் ஒருவர் பேசினார்.
அப்போது, "சென்னை விமான நிலையத்தை தகர்க்க தீவிரவாதிகள் திட்டமிட்டு உள்ளனர். அவர்கள் வெடிகுண்டுடன் திரிசூலம் மலையில் உள்ள வீடுகளில் பதுங்கி இருக்கிறார்கள்" என்று கூறி இணைப்பை துண்டித்து விட்டார். இதுபற்றி உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சென்னை விமான நிலையத்துக்கும், பல்லாவரம் போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்து உஷார்படுத்தினர்.
உடனடியாக பல்லாவரம் போலீசார் திரிசூலம் மலைப்பகுதியில் உள்ள வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் மர்ம நபர்கள் யாரும் அங்கு இல்லை என்பதை உறுதிப்படுத்தி நிம்மதி அடைந்தனர். இதையடுத்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் விடுத்து பேசியவரின் செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தினர். அவர் அதே பகுதியில் இருப்பது தெரிந்தது.
இதைத் தொடர்ந்து திரிசூலம் மலைப்பகுதியில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அவர்கள் அங்கு மது போதையில் இருந்த அதே பகுதியை சேர்ந்த முஸ்தபா, அவரது நண்பர்கள் சாமுவேல், அருணகிரி, தினேஷ்குமார் பாலு என்பது தெரிந்தது.
இவர்களில் முஸ்தபா போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு மிரட்டல் குறித்து பேசியது தெரிந்தது. அவர் போலீசாரிடம் கூறும்போது, ‘‘நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திய போது என்னை கிண்டல் செய்தனர். இதில் எங்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது.
எனவே நண்பர்களை போலீசில் சிக்க வைப்பதற்காக வெடிகுண்டுடன் பதுங்கி இருப்பதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்தேன்’’ என்று கூறி உள்ளார்.
இதையடுத்து முஸ்தபா உள்பட 5 பேரையும் போலீசார் கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் திரிசூலம் பகுதி பரபரப்பாக காணப்பட்டது. #Tamilnews
மதுராந்தகம்:
அச்சிறுபாக்கம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது50). மதுராந்தகம் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணி புரிந்து வந்தார்.
இவர் கடந்த 20-ந்தேதி அதிகாலை அச்சிறுபாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் சீனிவாசன் பலத்த காயம் அடைந்தார்.
அவரை மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து இருந்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி சீனிவாசன் பரிதாபமாக இறந்தார்.
காஞ்சீபுரம் செங்குந்தர் தோப்பு தெருவில் தினேஷ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடை உள்ளது. நேற்று மாலை பட்டாசு கடை அருகில் உள்ள குடோன் ஒன்றில் இருந்து திடீரென புகை வந்தது. அதனை பார்த்த கடை ஊழியர்கள் குடோனின் கதவை திறக்க முயற்சி செய்தனர்.
இதற்குள் பட்டாசுகள் வெடித்தன. மேலும் கடையும் தீப்பற்றியது. பட்டாசுகள் வெடித்து சிதறியதால் பதட்டத்துடன் அப்பகுதியில் ஏராளமானோர் திரண்டனர். இது பற்றி உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதற்கிடையே பட்டாசு கடை வழியே சைக்கிளில் சென்ற காஞ்சீபுரம் திருக்காளிமேடு பகுதியைச் சேர்ந்த சதீஷ் (20) என்பவர் மீது வெடித்து சிதறிய பட்டாசுகள் விழுந்தது. இதில் அவரது இரு கால்களிலும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.
இதே போல் கடை ஊழியர் விக்னேசும் தீயில் சிக்கி உடல் கருகினார். தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயிணை அணைத்தனர்.
இந்த விபத்தில் கடைக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றும், 7 மோட்டார் சைக்கிள்களும் எரிந்து சேதம் அடைந்தன.
விபத்தில் காயமடைந்த சதீஷ் மற்றும் கடை ஊழியர் விக்னேஷ் ஆகியோர் காஞ்சீபுரம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து சிவகாஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
குட்கா வழக்கு விசாரணையில் உண்மை வெளிவரும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது, ஆசிரியர்கள் போராட்டம் அனைத்தையும் பார்க்கும்போது இங்கு ஒரு செயல்படாத அரசு இருப்பதுதான் தெரிகிறது.
அவர்களை பொறுத்தவரை அடுத்து தேர்தலில் நிற்க வேண்டும், ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. இருக்கும் நாட்களில் அறுவடை செய்து விட்டு போய்விட வேண்டும் என்று நினைக்கிறார்கள். இந்த ஆட்சியில் எதையும் எதிர்பார்க்க முடியாது.
எது வேண்டுமென்றாலும், எந்த காரியம் ஆனாலும் நாமே சாதிக்க வேண்டும்.

மம்தா பானர்ஜிக்கு தி.மு.க. சார்பில் வாழ்த்து மட்டும்தான் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதரவு தெரிவிப்பது பற்றி செயற்குழு, பொதுக்குழுதான் முடிவு செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விஜயகாந்த், மு.க.ஸ்டாலின் பற்றி தெரிவித்துள்ள கருத்து குறித்து நிருபர்கள் கேட்டதும், “விஜயகாந்த் என்றாலே தெரியாதது போல் யாரு விஜயகாந்தா...? செல்போனில் போடும் பாட்டு பற்றி எல்லாம் கேட்காதீர்கள்” என்றார். #MKStalin #DuraiMurugan #Vijayakanth
சென்னை விமான நிலையத்தில் தமிழக அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க.வில் உள்ள அனைத்து தரப்பினரும் ஒற்றுமையுடன் இந்திய தேர்தல் ஆணையத்தில் வாதங்களை எடுத்து வைத்து அதன் அடிப்படையில் அ.தி.மு.க. இரட்டை இலை எங்களுக்கு தான் என தேர்தல் கமிஷன் தீர்ப்பு வழங்கி உள்ளது. இரட்டை இலை தீர்ப்பு எங்களுக்கு கிடைத்த பின்னர் மற்றவர்கள் அதுபற்றி பேச எந்த தகுதியும் இல்லை.
தமிழகத்தின் காவிரி மற்றும் கச்சத்தீவு போன்ற உரிமைகளை தி.மு.க.வினர் தாரைவார்த்துவிட்டு எங்களை பற்றி குறை கூறுவது ஒத்துக் கொள்ளமுடியாத ஒன்று. ஊழல் பற்றி ஸ்டாலின் பேசுகிறார். உலகத்திலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி என்றால் அது தி.மு.க. ஆட்சி தான். தன் முதுகில் ஊழலை வைத்துக்கொண்டு அடுத்தவரின் முதுகை பார்க்க வேண்டாம்.
கவர்னர் நிர்வாகத்தின் தலைவர் என்ற அடிப்படையில் நிர்வாகத்தின் செயல்பாடுகளை சொல்வதற்கு அவருக்கு அதிகாரம் உண்டு. தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது, வெளிப்படையாக நடக்கிறது என்று கவர்னர் தந்த நற்சான்றிதழ். அந்த நற்சான்றிதழ் கவர்னர் தந்தார் என்பதற்காக ஸ்டாலின் முடிச்சு போடக்கூடாது.

தமிழகத்தில் ஜனநாயகம் இருக்கின்ற காரணத்தில் தான் உணர்வு ரீதியான போராட்டங்கள் நடக்கிறது. அதை நாங்கள் மதிக்கிறோம். போராட்டம் வன்முறை என்ற அளவுகோலை தாண்டக்கூடாது.
தினகரன்-திவாகரன் இடையே உள்ள பிரச்சினை நாட்டிற்கு தேவையில்லாத ஒன்று. உறவினர்களுக்குள் இன்று சண்டை போடுவார்கள் நாளைக்கு ஒன்றாகிவிடுவார்கள். இதனால் அதுபற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை.
நடிகர் கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்த சில நாட்களில் ஒரு வக்கீல் விலகி விட்டார். அதன் வழியில் நடிகை ஸ்ரீபிரியாவும் விலகப்போவதாக செய்தி வந்து கொண்டு இருக்கிறது. ஆரம்பித்த சில நாட்களிலேயே கட்சியில் உள்ள 16 பேரை கட்டி காக்க முடியாத கமல்ஹாசனால் எப்படி ஒரு நாட்டை நிர்வகிக்க முடியும்?
இவ்வாறு அவர் கூறினார். #Kamalhassan #ADMK #MinisterJayakumar
மருத்துவ படிப்பில் சேருவதற்கான ‘நீட்’ தேர்வு மே மாதம் 6-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி இந்த தேர்வில் பங்கு பெற மாணவர்கள் பலரும் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து வருகின்றனர்.
காஞ்சீபுரம் மாவட்டம், திருப்போரூரை சேர்ந்தவர் பெருமாள். தனியார் நிறுவன ஊழியர். இவரது மகள் ஸ்ரீவிஜி (வயது 17). இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வு எழுதி அதன் முடிவுக்காக காத்திருக்கிறார். நேற்று முன்தினம் ஸ்ரீவிஜி, ‘நீட்’ தேர்வு எழுதுவதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தார்.
இதில் தேர்வு மையங்களை தேர்வு செய்யும்போது சென்னை, காஞ்சீபுரம், நெல்லை ஆகிய மண்டலங்களை குறிப்பிட்டு இருந்தார். ஆன்லைன் விண்ணப்ப பதிவேற்றம் முடிந்ததும் அவருக்கு ‘ஹால் டிக்கெட்’ வழங்கப்பட்டது. அதில் கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
தேர்வு மையம் ஒதுக்குவதில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக இவ்வாறு அனுப்பப்பட்டு உள்ளது. இதை பார்த்த மாணவி ஸ்ரீவிஜி அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து மாணவியின் தந்தை பெருமாள் கூறுகையில், ‘எனது மகளுக்கு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு கூட இதுபோன்ற குழப்பங்கள் கிடையாது. இப்போது இந்த தேர்வு மையத்தை மாற்ற முடியுமா? அல்லது அங்கு சென்று தான் தேர்வு எழுத வேண்டுமா? என்று தெரியவில்லை.
‘நீட்’ தேர்வு வேண்டும் என்று கூறும் ஆதரவாளர்கள் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும். இதனால் எனது மகளின் மருத்துவக்கல்வி கனவு என்ன ஆகுமோ? என்ற பயம் எனக்கு ஏற்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆரம்பத்தில் இருந்தே ‘நீட்’ தேர்வு பல்வேறு குளறுபடிகளை சந்தித்து வந்த சூழலில், தமிழக மாணவி ஒருவருக்கு கேரள மாநிலத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு இருப்பது மாணவர்கள் மத்தியில் நீட் தேர்வு குறித்த அச்சத்தை மேலும் அதிகரித்து உள்ளது. #tamilnews #NeetExam






