என் மலர்
காஞ்சிபுரம்
காஞ்சீபுரம்:
பெரிய காஞ்சீபுரம் கூட்டுறவு நகர வங்கியில் கூட்டுறவு தேர்தல் வேட்பு மனுதாக்கல் கடந்த 30-ந்தேதி நடந்தது. 11 நிர்வாகக்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கு அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க.வினர் மொத்தம் 35 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இதில் 15 மனுக்கள் மட்டும் பரிசீலனையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. வேட்புமனு பரிசீலனை நாளான நேற்று தேர்தல் அதிகாரி வராததையும், முறையாக பரிசீலனை செய்யப்படவில்லை என்று கண்டித்தும் தி.மு.க. மற்றும் பா.ம.க.வினர் வங்கியை முற்றுகையிட்டனர்.
தேர்தல் நடத்தும் அதிகாரியின் அறைக்குள் காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. எழிலரசன் தலைமையில் தி.மு.க. நகர செயலாளர் சன்பிராண்டு கே.ஆறுமுகம், தலைமை செயற்குழு உறுப்பினர் சி.வி.எம்.அ.சேகர், ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.குமார், சிறுவேடல் செல்வம் மற்றும் பா.ம.க. மாவட்ட செயலாளர் வ.உமாபதி உள்ளிட்டோர் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.#CooperativeSocietieselection
மாமல்லபுரம்:
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் உள்ள 2 அணு உலையில் தலா 220 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.
முதல் உலையின் ரியாக்டரில் கடந்த ஜனவரி 31-ந் தேதி நீர்க்கசிவு ஏற்பட்டதால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
இதை சரி செய்ய மகாராஷ்டிரா மாநிலம் தாராபூரில் இருந்து அணுமின் நிலைய சிறப்பு ரியாக்டர் என்ஜினீயர்கள் வந்து ஆய்வு நடத்தினர்.
ஆனால் இன்று வரை 3 மாதங்கள் ஆகியும் நீர்க் கசிவை அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் மின்உற்பத்தி முடங்கி உள்ளது.
பழுதான ரியாக்டர் 35 ஆண்டுகள் பழமையான தொழில்நுட்பம் என கூறப்படுகிறது. முதல் அணுஉலை பழுதால் தமிழகத்துக்கு வழங்கி வந்த 75 சதவீத மின்சாரம் தடைபட்டுள்ளது. எனவே கோடையில் மின்சாரம் பற்றாக்குறை ஏற்படும். அபாயம் ஏற்பட்டுள்ளது. #tamilnews
சென்னை:
தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மே 5-ந் தேதி வணிகர் தினவிழா கொண்டாடப்படுகிறது.
35-வது வணிகர் தினவிழா வணிகம், விவசாயம் மற்றும் சுயதொழில்கள் மீட்பு மாநாடு காஞ்சீபுரம் பல்லவன் பொறியியல் கல்லூரி வளாகம் வெள்ளகேட் அருகில் நாளை (5-ந் தேதி) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. மாநாட்டுக்கு மாநில தலைவர் த.வெள்ளையன் தலைமை வகிக்கிறார். பொதுச் செயலாளர் கே.தேவராஜ் வர வேற்புரையாற்றுகிறார்.
மாநாட்டில், அகில இந்திய வர்த்தக சங்க தலைவர் ஷியாம் பிகாரி மிஸ்ராம், முன்னாள் மத்திய மந்திரிகள் யஷ்வந்த் சின்ஹா, சத்ருகன் சின்ஹா, வர்த்தக சங்க பொதுச் செயலாளர் விஜய் பிரகாஷ் ஜெயின், உலக தமிழர் பேரமைப்பு நிறுவனர் பழ.நெடுமாறன், பொதுவுடமை இயக்க தலைவர் இரா.நல்லக்கண்ணு.
வங்கி ஊழியர் சம்மேளனம் சி.பி.கிருஷ்ணன், விவசாய சங்க கூட்டு இயக்க தலைவர் பி.கே.தெய்வசிகாமணி, மீத்தேன் எதிர்ப்பு இயக்கம் இரா.லெனின், சட்ட ஆலோசகர் வக்கீல் கே.பாலு, திரைப்பட இயக்குனர் கவுதமன், தமிழ்த் தேசிய பேரியக்கம் பெ.மணியரசன், புதுச்சேரி வர்த்தக சங்க தலைவர் எம்.கே.ராமன், தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளனம் மாநில செயலாளர் சி.கே.மதிவாணன், பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்க தலைவர் ஜி.சங்கரன் உள்பட பலர் சிறப்புரையாற்றுகின்றனர்.
மாநாட்டில் கூடங்குளம் சுப.உதயகுமார், தூத்துக்கடி பேராசிரியை பாத்திமா பாபு ஆகியோர் தலைமையில் என்ன செய்யப்போகிறோம்... நாம்? என்ற தலைப்பில் விவாத அரங்கம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
முன்னதாக காலை 9 மணிக்கு மாநாட்டு பந்தலில் காஞ்சீபுரம் எம்.கோபால் நாயக்கர் தேசிய கொடி ஏற்றுகிறார். ஆர்.நாராயணன் செட்டியார் வணிகக் கொடி ஏற்றுகிறார். மாநாட்டு பந்தலை பல்லவன் பொறியியல் கல்லூரி தாளாளர் பா.போஸ் திறந்து வைக்கிறார். தங்கம் வெள்ளையன், ஸ்ரீதேவி ராமகிருஷ்ணன், நர்மதா சம்பத், செல்வி விஸ்வநாதன், ஜெயராணி ராஜகோபால் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றுகிறார்கள்.
மாநாட்டில் மத்திய சென்னை மாவட்ட தலைவர் ப.தேவராஜ், காஞ்சி மேற்கு மாவட்ட தலைவர் எம்.ராமகிருஷ்ணன், வியாசை மணி, மணலி டி.ஏ.சண்முகம், எச்.ஷாரூண் ரஷித், ஜி.அரிகிருஷ்ணன், மீஞ்சூர் டி.ஷேக் அகமது, பி.தனசேகரன், எஸ்.ஆர்.பி. ராஜன், தங்கதுரை, பெரம்பூர் ரெங்கசாமி நாடார், ஓட்டேரி ஜோதிராம் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொள்கிறார்கள்.
மாநாடு குறித்து த.வெள்ளையன் கூறியதாவது:-
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் நாளை காஞ்சீபுரத்தில் நடைபெறும் மாநில மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து 10 லட்சம் வணிகர்கள் கார், வேன், பஸ்களில் வந்து கலந்து கொள்கிறார்கள்.
மாநாட்டை முன்னிட்டு நாளை (5-ந் தேதி) தமிழகம் முழுவதும் அனைத்து கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. வணிகர்கள், வியாபாரிகள் குடும்பத்தினருடன் பங்கேற்கிறார்கள். மாநாட்டுக்கு வரும் வணிகர்களுக்கு உணவு, குடிநீர், அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
மாநாட்டையொட்டி பல்லவன் பொறியியல் கல்லூரி வளாகத்தில் பிரம்மாண்ட பந்தல், அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
மாநாட்டில், அந்நிய ஆதிக்கத்தால் பாதிக்கப்படும் பாரம்பரிய வணிகம், விவசாயம், சுயதொழில்களை பாதுகாக்க முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப் படுகின்றன.
இவ்வாறு த.வெள்ளையன் கூறினார். #tamilnews
சின்ன காஞ்சீபுரம் நாகலூத்து மேட்டில் வசிப்பவர் கே.பி.சரவணன் (வயது 43). இவர் தனது வீட்டில் பட்டு ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவருடைய வீட்டிற்கு, பிரபல ரவுடியான சின்ன காஞ்சீபுரம் பொய்யாக்குளத்தை சேர்ந்த தியாகு என்கிற தியாகராஜன் கடந்த மாதம் காஞ்சீபுரத்தை சேர்ந்த 8 ரவுடிகளை அனுப்பி வைத்தார்.
அந்த 8 ரவுடிகளும் சரவணன் ஜவுளிக்கடைக்கு சென்று ‘எங்களுடைய பாஸ் ரவுடி தியாகு எங்களை அனுப்பி வைத்தார். உடனே ரூ.10 லட்சம் கொண்டு வா’ என்று கத்தியை காட்டி மிரட்டினர்.
அதற்கு சரவணன் பணம் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த 8 ரவுடிகள் பட்டு தொழிலதிபர் சரவணன் தலையில் கத்தியால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். படுகாயங்களுடன் சரவணன் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து பட்டு தொழிலதிபர் சரவணன் சின்ன காஞ்சீபுரம் போலீசில் புகார் செய்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி உத்தரவின் பேரில், காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு முகிலன் மேற்பார்வையில், சின்ன காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து ரவுடிகளை வலைவீசி தேடி வந்தார்.
இந்த நிலையில், சின்ன காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் போலீசாருடன் காஞ்சீபுரம் ரெயில்வே ரோடு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அந்த ரவுடிகள் அந்த வழியாக வந்தனர்.
இன்ஸ்பெக்டர் சரவணனை பார்த்ததும் அவர்கள் மிரள மிரள விழித்தனர். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் பட்டு தொழிலதிபர் சரவணனை வெட்டியது தெரியவந்தது.
மேலும் விசாரணையில் பட்டு தொழிலதிபர் சரவணனை கத்தியை காட்டி மிரட்டி பணம் வாங்க சொன்னதாக, பிரபல ரவுடி தியாகு எங்களை அனுப்பியதாகவும், விசாரணையில் ஒப்பு கொண்டனர். இதுகுறித்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் காஞ்சீபுரம் பல்லவர் மேட்டை சேர்ந்த குணா என்கிற குட்டிகாய்லான் வயது (20), ஆரியபெரும்பாக்கத்தை சேர்ந்த மொட்டை என்கிற சரவணன் (23), காஞ்சீபுரம் செட்டியார்பேட்டையை சேர்ந்த சின்ன ராஜூ என்கிற கலர்குஞ்சு (22), காஞ்சீபுரம் புஞ்சையரசந்தாங்கலை சேர்ந்த ராஜேந்திரன் (24) ஆகிய 4 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.
மேலும் கைது செய்யப்பட்ட 4 பேரும் ஏற்கெனவே வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டவர்கள் என்பதும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ஒரு பட்டா கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் மேலும் 4 ரவுடிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே நடைபெற்ற மே தின பொதுக்கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தி.மு.க. மேல் முறையீடு செய்யப் போகின்றதே எனக் கேட்டதற்கு செய்யட்டுமே எனவும், அரசியலில் 3-வது அணி உருவாகும் என தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளதைப் பற்றி கேட்டதற்கு 3-வது அணி தேசிய அளவிலா அல்லது தமிழக அளவிலா என அவர் தெளிவுபடுத்தட்டும்.
காவிரிக்காக தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்கள் குறித்து கூறுகையில் அரசியலுக்காக போராட்டம் நடத்தக்கூடாது. போராட்டத்தின் நோக்கம் சரியாக இருக்க வேண்டும்.
குட்கா வழக்கு குறித்து கேட்கையில், வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் பேசக்கூடாது. ராகுல் காந்தி, திருமாவளவன் சந்திப்பு குறித்து கூறுகையில், அரசியலில் யாரும் யாரையும் சந்திக்கலாம் என்றார். நான் நிறைய நாடகங்கள் பார்ப்பேன் தினகரன் - திவாகரன் விவகாரத்தினையும் நாடகமாகத் தான் பார்க்கின்றேன்.
சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கவில்லையே எனக் கேட்டதற்கு அவர் சிறைக்குச் செல்லும் போதே அந்தத் தகுதியினை இழந்து விட்டார்.
இவ்வாறு அவர் கூறினார். #Sasikala #OPanneerselvam
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
டெல்டா மாவட்டத்தில் மத்திய அதிவிரைவு படை வீரர்கள் வந்தது எதற்காக? அங்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருக்கிறதா? மத்திய அரசு இப்படிப்பட்ட மிரட்டல் வேலையை விட்டு விடவேண்டும்.
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காது நாளைய தீர்ப்பில் எனக்கு நம்பிக்கை இல்லை. எப்படி தீர்ப்பு கொடுத்தாலும் அதன் உள்ளுக்குள் தமிழகத்துக்கு விரோதமாகத்தான் இருக்கும்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமரை சந்திக்க சென்று இருக்கிறார். அதனை பார்த்து அனுதாபப்படுகிறேன். காவிரி பிரச்சினைக்காக அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஒருமனதாக இயற்றிய தீர்மானத்தில், முதல்-அமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் அனைத்துக் கட்சி தலைவர்களுடன் பிரதமரை சந்திக்க வேண்டும் என்று நிறைவேற்றப்பட்டது.
முதல்-அமைச்சர், பிரதமரை சந்திக்க நேரம் கேட்டது உண்மைதான். அதற்காக தம்பித்துரையும் முயற்சித்து உள்ளார். ஆனால் பிரதமர் நேரம் தரவில்லை. இது தமிழகத்தை அவமானப்படுத்தும் செயல். அதிகார மமதை. தமிழகம் இதை மன்னிக்காது. கசிக்காது.
காவிரி பிரச்சினையில் உச்சநீதிமன்ற நீதிபதி ஒருதலைப்பட்சமாக தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில் செயல்படுகிறார். ‘ஸ்கீம்‘ என்ற வார்த்தையை ஜாக்கிரதையாக பயன்படுத்தி இருக்கிறார். ஏன் என்றால் ‘ஸ்கீம்‘ என்ற வார்த்தையை எப்படி வேண்டும் என்றாலும் மாற்றிக் கொள்ளலாம்.
நடுவர் மன்ற தீர்ப்பு என்பது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு சமம். நடுவர்மன்ற தீர்ப்புப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை.
தமிழகத்தை மத்திய அரசு நீட், நியூட்ரினோ, ஸ்டெர்லைட் ஆலை போன்றவற்றால் வஞ்சித்து வருகிறது. ஸ்டெர்லைட்டுக்கு மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சகத்திடம் இருந்து அனுமதி வந்து விட்டது என்று சொல்கிறார்கள். தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் தமிழக, மாசு கட்டுப்பாட்டு வாரியமும் ஏற்கனவே அனுமதி வழங்கி இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்.
ஆனால் அமைச்சர் ஒருவர் நாங்கள் அனுமதி அளிக்கவில்லை என்று சொல்லி உள்ளார். இது யாரை ஏமாற்றும் செயல். தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையால் வினைவிதைக்கிறது. ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்களை திரட்டியும், நீதிமன்றம் மூலமாகவும் போராடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார். #SterliteProtest #Sterlite #Vaiko #MDMK
மாமல்லபுரம்:
வேலூர் பொன்னை பகுதியை சேர்ந்தவர் போஸ் குமார் (வயது 20). கூவத்தூரை அடுத்த சீக்கினாங்குப்பத்தில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் தங்கி 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் உடன் படிக்கும் நண்பர் அருண் லோகேசுடன் மோட்டார் சைக்கிளில் அருகே உள்ள கடை வீதிக்கு சென்றுவிட்டு விடுதிக்கு திரும்பி வந்தார். சீக்கினாங்குப்பம் கிழக்கு கடற்கரை சாலையில் வந்த போது பாண்டிச் சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பஸ் திடீரென பைக் மீது மோதியது.
இதில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே போஸ் குமார் உயிரிழந்தார். படுகாயம்அடைந்த அருண் லோகேஷ் செங்கல்பட்டு அரசு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.
இது குறித்து கூவத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ளது சூணாம்பேடு. இங்குள்ள காவல் நிலையத்திற்கு சிற்றரசு (45) என்பவரை வழக்கு தொடர்பான விசாரணைக்காக போலீசார் அழைத்து வந்தனர்.
இந்நிலையில் அவர் காவல் நிலையத்தில் இன்று தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். அவரை போலீசார் அடித்துக்கொன்றதாக உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #tamilnews
சோழிங்கநல்லூரை அடுத்த செம்மஞ்சேரி ரோபாட் நட்சத்திர ஓட்டல் இயங்கி வருகிறது.
இங்கு டார்ஜிலிங்கைச் சேர்ந்த யுனஸ், அணில்குரு ஆகிய 2 பேர் ஊழியர்களாக வேலை செய்து வந்தனர். அவர்களிடையே வாடிக்கையாளர்களிடம் ‘டிபஸ்’ வாங்குவது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
நேற்று இரவும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இருவரும் கடுமையாக வாக்குவாதம் செய்தனர்.
ஆத்திரம் அடைந்த அணில்குரு, ஓட்டலில் இருந்த கத்தியை எடுத்து யுனஸ்சை சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த யுனஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதை பார்த்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்து அலறியடித்து ஓட் டம் பிடித்தனர்.
இதுகுறித்து செம்மஞ்சேரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு வந்து யுனஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையாளி அணில் குருவை கைது செய்து போலீசார் அழைத்து சென்றனர். இது தொடர்பாக ஓட்டல் ஊழியர்கள், நிர்வாகிகளிடமும் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
மேலும் ஓட்டலில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளையும் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் அருகே உள்ள சின்னையன் சத்திரம் பகுதிக்கு நேற்று மதியம் சுமார் 25 வயது மதிக்கத்தக்க வடமாநில வாலிபர் வந்தான். அவன் அங்குள்ள ஒரு வீட்டின் முன்பு விளையாடிய குழந்தையை தூக்கிக் கொண்டு செல்ல முயன்றான்.
குழந்தையின் அழுகுரல் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், வடமாநில வாலிபரிடம் விசாரித்தனர். ஆனால் அவனுக்கு அப்பகுதி மக்கள் பேசியது புரியவில்லை. மேலும் அவன் வடமாநில மொழியில் பதில் கூறினான்.
இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் குழந்தையை கடத்த வந்ததாக கூறி வடமாநில வாலிபரை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கினர். இதில் அவனது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடலிலும் ரத்தம் கொட்டியது.
இதுகுறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார், படுகாயம் அடைந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் இருந்து அந்த வாலிபர் திடீரென தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வந்தனர். இதற்கிடையே ஆஸ்பத்திரியில் இருந்து சிறிது தூரத்தில் ரெயில்வே சாலையில் உள்ள மின் வாரிய அலுவலகம் அருகே வடமாநில வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார்.
விசாரணையில் அவன் ஆஸ்பத்திரி யில் இருந்து தப்பி ஓடியவன் என்பது தெரிந்தது. பொது மக்கள் தாக்கியதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவன் இறந்து இருப்பது தெரியவந்தது.
அவனது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையுண்ட வாலிபர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்து உள்ளது. அவரை பற்றிய மற்ற விபரங்கள் தெரியவில்லை.
குழந்தை கடத்தலில் ஈடுபட அவன் கூட்டாளிகளுடன் வந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுதொடர்பாக அவனுடன் வந்த கூட்டாளிகள் எங்கே? இதே போல் வேறு எங்கேனும் குழந்தை கடத்தலிலும் ஈடுபட்டு உள்ளனரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குழந்தையை கடத்த முயன்ற வடமாநில வாலிபர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை பல்லவன் குடியிருப்பு கண்ணகி நகரை சேர்ந்தவர் மோகன். இவரது மகன் தருண்குமார் (வயது 17). இவர் சமீபத்தில் பிளஸ்-2 தேர்வு எழுதிவிட்டு சென்னை கந்தன் சாவடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
சென்னை தரமணி எம்.ஜி.ஆர் தெருவை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரது மகன் ரஞ்சித்குமார் (17), சென்னை பல்லவன் குடியிருப்பு கண்ணகி நகர் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரது மகன் பார்த்திபன் (19), பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியை சேர்ந்த சந்திரசேகர் என்பவரது மகன் அருண்(17). இவர்கள் 4 பேரும் ஒரே வகுப்பில் படித்து வந்தனர்.
இவர்களில் பார்த்திபனின் சொந்த ஊர் திருக்கழுக்குன்றம் அடுத்துள்ள கொத்தி மங்கலம் கிராமம். நேற்று இவர்கள் 4 பேரும் கொத்தி மங்கலத்தில் நடந்த கோவிலில் பொங்கலிடும் நிகழ்ச்சிக்கு சென்றனர்.
மதியம் திருக்கழுக்குன்றம் பைபாஸ் சாலை, ஏரிகரையில் உள்ள கிணற்றில் அனைவரும் குளித்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக தருண்குமாரும், ரஞ்சித்குமாரும் தண்ணீரில் மூழ்கி மூச்சுத்திணறி தத்தளித்தனர். அதிர்ச்சி அடைந்த பார்த்திபன் மற்றும் அருண் தண்ணீரில் மூழ்கிய நண்பர்களை மீட்க உதவி கேட்டு கூச்சல் எழுப்பினர்.
இந்த நிலையில் நீரில் மூழ்கியவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்த திருக்கழுக்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன் மற்றும் போலீசார் விரைந்து வந்து கிணற்றில் மூழ்கி உயிரிழந்த 2 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையிலான விவசாயிகள், வேதாரண்யத்தில் இருந்து திருவாரூர் வரை தமிழகம் முழுவதும் மோட்டார் சைக்கிள் பேரணி மேற்கொண்டு வருகிறார்கள்.
அந்த விவசாயிகள் குழுவினர் நேற்று காஞ்சீபுரத்துக்கு வந்தனர். காஞ்சீபுரம் சங்கரமடம் முன்பு காஞ்சீபுரம் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பி.ஆர்.பாண்டியன் மற்றும் விவசாயிகள் குழுவினருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக விவசாயிகளும், பொதுமக்களும் ஒன்றுபட்டு போராட களமிறங்குவதை பொறுத்துக்கொள்ள முடியாத மத்திய அரசு, போலீசாரை தன்வசப்படுத்தி சென்னைக்குள் எங்களை நுழைய விடாமல் தடை விதித்து உள்ளதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
தமிழக அரசு போலீசாரை வைத்து அச்சுறுத்தலாம் என்று நினைத்தால் மண்ணைத்தான் கவ்வவேண்டும். விவசாயிகளின் மோட்டார் சைக்கிள் பேரணி, பொதுக்கூட்டத்துக்கு மாநில அரசு தடை விதித்துள்ளது.
தமிழக அரசு இவ்வாறு தடை விதிப்பதன் மூலம் விவசாயிகளுக்கு துரோகம் இழைத்துள்ளது. இதன் மூலம் மத்திய அரசுக்கு மாநில அரசு துணைபோகிறது. விவசாயிகள் மோடி அரசுக்கு புத்தி கொடுப்பதற்கு, மோடி அரசை வேறெடுப்பதற்கு, தமிழக வாழ்வாதாரத்தை பாதுகாக்க, அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க முன்வந்து ஒன்றுபட்டு உள்ளார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு கவுரவ தலைவர் பாலசுப்பிரமணியன், பொதுச்செயலாளர் ஏ.சி.வெங்கடேசன், மாநில பொருளாளர் நாகை எஸ்.ஸ்ரீதர் உள்பட ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.
இந்த மோட்டார் சைக்கிள் பேரணி காஞ்சீபுரம் அடுத்த பாலுச்செட்டிசத்திரத்தில் இருந்து காஞ்சீபுரம், வாலாஜாபாத், திருமுக்கூடல் வழியாக செங்கல்பட்டுக்கு சென்றது.






