என் மலர்
காஞ்சிபுரம்
கூவத்தூரை அடுத்த கீலார்கொள்ளை பாலாற்றில் மணல் கொள்ளை நடப்பதாக வருவாய் ஆய்வாளர் சீனிவாசனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று அதிகாலை 3 மணியளவில் சீனிவாசன் தனது பைக்கில் சக ஊழியர்களுடன் பாலாற்று பகுதிக்கு சென்றார். அப்மணல் ஏற்றி வந்த லாரியை அவர்கள் மறித்தனர்.
ஆனால் லாரியை டிரைவர் நிறுத்தாமல் மோட்டார் சைக்கிள் மீது மோதினார். இதில் அதிர்ஷ்டவசமாக சீனிவாசன் உயிர்தப்பினார்.
இதையடுத்து அவர் அதிகாரிளுடன் மணல் லாரியை மடக்கி பிடித்து லாரி டிரைவர் முகையூர் தண்டபாணி என்பவரை கைது செய்தார். லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக கூவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பல்லாவரம் கவுல் பஜார் பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி. பரங்கிமலை ஒன்றிய தே.மு.தி.க. பொருளாளராக உள்ளார். நேற்று நள்ளிரவு இவரது வீட்டு முன்பு இருந்த 4 மோட்டார்சைக்கிள்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
உடனே முனுசாமி மற்றும் அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்தனர். ஆனாலும் 4 மோட்டார்சைக்கிள்களும் தீயில் கருகி நாசமானது. மோட்டார்சைக்கிளுக்கு மர்ம கும்பல் தீவைத்ததாக தெரிகிறது.
கடந்த ஆண்டும் முனுசாமி வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது.
இதுகுறித்து முனுசாமி சங்கர்நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தார்களா? அல்லது தானாக தீபிடித்து எரிந்ததா? என்று விசாரித்து வருகிறார்கள்.
பல்லாவரத்தை அடுத்த பம்மல் சீத்தலைசாத்தனார் தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். டிரைவர்.
இவர் இன்று அதிகாலை 4.30 மணியளவில் குன்றத்தூர்- பல்லாவரம் சாலையில் உள்ள டீக்கடையில் ரோட்டோரம் நின்று டீ குடித்து கொண்டிருந்தார். அவருடன் குன்றத்தூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் செல்வமும் டீ குடித்தபடி பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது திண்டிவனத்தில் இருந்து கோழிகளை ஏற்றிக் கொண்டு மினி லாரி ஒன்று வந்தது. திடிரென்று லாரி டிரைவரின் கட்டுப் பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
ரோட்டோரம் டீ குடித்துக் கொண்டிருந்த ராதாகிருஷ்ணன், செல்வம் மீது லாரி மோதியது. அதன் பின் டிரைவர் லாரியை நிறுத்தினார்.
இந்த விபத்தில் ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். படுகாயம் அடைந்த செல்வத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பலியானார்.
இது குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து போலீசார் வழக்குபதிவு செய்து லாரி டிரைவர் ராஜவேலை கைது செய்தனர். #tamilnews
காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் குழந்தைகளை கடத்தும் வட மாநில கும்பல் பதுங்கி இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது.
இதனால் சந்தேகத்திற்கிடமான வடமாநில வாலிபர்கள் தாக்கப்படும் சம்பவம் அதிகரித்து உள்ளது.
நேற்று முன்தினம் காஞ்சீபுரத்தில் 2 இடங்களில் வட மாநில வாலிபர்கள் தாக்கப்பட்டனர். இதே போல் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியிலும் தாக்குதல் நடந்தது.
குழந்தை கடத்தும் கும்பல் பீதியால் காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
இதற்கிடையே காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
காஞ்சீபுரம் மாவட்டத்தில் சந்தேகத்திற்கிடமாக நடமாடும் அடையாளம் தெரியாத அப்பாவி மக்களை கடத்தல் காரர்கள் என நினைத்து தாக்குவது சமீபகாலமாக நடந்து வருகிறது.
சமூக வலைத்தளங்களில் வட மாநிலத்தவர்கள் குழந்தைகளை கடத்துவதாகவும் மற்றும் திருட வந்திருப்பதாகவும் வெளியான செய்திகளை அடுத்து பொதுமக்கள் இவ்வாறு ஆவேசமடைந்து சந்தேக நபர்களை தாக்குவதினால் அவர்கள் பலத்த காயமடைந்து உயிர்சேதம் ஏற்படக்கூடிய நிலைக்கு ஆளாகின்றனர்.
இத்தகைய செயலினால் அப்பாவி பொதுமக்களும் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை ஏற்படுவதுடன், தாக்குதல் நடத்தும் பொது மக்களும் சட்டபூர்வ நடவடிக்கைக்கு ஆளாகும் நிலை ஏற்படும்.
எனவே பொதுமக்கள் சந்தேகமான நபர்கள் யாரையாவது கண்டாலோ அல்லது பிடித்தாலோ அவர்களை தாக்கி காயப்படுத்தாமல் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்படுகிறது.
காஞ்சீபுரம் உட்கோட்டம் செல் நம்பர் 9498100261, 044-27234184, 27233100, ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டம் செல் நம்பர் 9498100262, 044-27162202, செங்கல்பட்டு உட்கோட்டம் செல் நம்பர் 9498100263, 044-27431424, மதுராந்தகம் உட்கோட்டம் செல் நம்பர் 9498100264, 044-27553180, மாமல்லபுரம் உட்கோட்டம் செல் நம்பர் 9498100265, 044-27442100, வண்டலூர் உட்கோட்டம் செல் நம்பர் 9498100306, 044-27462133, போலீஸ் கட்டுப்பாட்டு அறை எண் 044-27222000, 27222100, காஞ்சீபுரம் தனிப்பிரிவு அலுவலகம் 044-27238001 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
இந்த எண்களில் தொடர்பு கொண்டால், போலீசார் உடனடியாக அங்கு வந்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்வார்கள். இதன் மூலம் பொது மக்களும் தங்களது கடமையை செய்வதுடன் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவது அல்லது தாக்கப்படுவது தவிர்க்கப்படும்.
இவ்வாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதி மானி தெரிவித்துள்ளார்.
மாவட்டம் முழுவதும் கிராமங்களில் போலீசார் ஆட்டோக்களில் சென்று பொதுமக்களுக்கு இதே கருத்தினை வேண்டுகோள் விடுக்கும் வகையில் ஆட்டோ மூலம் தெரிவித்து வருகின்றனர். #tamilnews
கல்பாக்கம் அடுத்த வாயலூர் பாரத் நகரில் வசித்து வந்தவர் பாபுராவ் பட்டேல் (வயது 61). கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் அணு ஆராய்ச்சி விஞ்ஞானியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவர் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 13-ந் தேதி வீட்டில் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு கிடந்தார். வீட்டில் இருந்த நகை, சிலிண்டர், லேப்டாப், கம்ப்யூட்டர் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இது குறித்து சதுரங்கப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். ஆனால் அவர்கள் பற்றிய எந்த துப்பும் கிடைக்காமல் இருந்தது.
இந்த நிலையில் பெண் ஒருவர் கல்பாக்கத்தில் தனது செல்போன் திருடு போனதாகவும், அதை ஒருவர் பயன்படுத்தி வருவதாகவும் சதுரங்கபட்டினம் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் அந்த செல்போன் நம்பரை கண்காணித்து அதனை பயன்படுத்திய புதுப்பட்டினத்தை சேர்ந்த விஜய் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் கடந்த 2016-ம் ஆண்டு கூட்டாளிகளுடன் சேர்ந்து அணுமின் நிலைய விஞ்ஞானி பாபுராவ் பட்டேலை கொலை செய்து அவரது வீட்டில் கொள்ளையடித்ததாகவும், மேலும் பல வீடுகளில் கொள்ளையில் ஈடுபட்டு வந்ததையும் ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் கூட்டாளிகளான புதுப்பட்டினம் முபாரக்அலி, பூந்தண்டலம் பாலா, மற்றும் ஒருவரை கைது செய்தனர். கைதான 4 பேரும் திருக்கழுகுன்றம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். #Tamilnews
காஞ்சீபுரத்தை அடுத்த உத்திரமேரூர் அருகே உள்ள திருமுக்கூடலில் வட மாநிலத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் கணவருடன் தங்கி உள்ளார். அவர்கள் கூலி வேலை பார்த்து வருகிறார்கள்.
சம்பவத்தன்று இளம்பெண் மட்டும் வீட்டில் இருந்தார். அவரது கணவர் வேலைக்காக வெளியில் சென்று விட்டார்.
இதனை நோட்டமிட்ட அதே பகுதியைச் சேர்ந்த பிரவீண்குமார் (23) என்பவர் திடீரென வீட்டுக்குள் புகுந்தார். அவர் இளம்பெண்ணை மிரட்டி கற்பழித்தார். மேலும் இதுபற்றி வெளியில் சொல்லக்கூடாது என்று கூறி சென்று விட்டார்.
தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து இளம்பெண் கணவரிடம் கூறி கதறி துடித்தார். அதிர்ச்சி அடைந்த அவர் இதுபற்றி சாலவாக்கம் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவீண்குமாரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
வீட்டில் தனியாக இருந்த வட மாநில இளம்பெண் கற்பழிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் இருந்து குழந்தைகளை கடத்தி சென்று ஆந்திராவில் நரபலி கொடுப்பதற்காக கும்பல் ஒன்று காஞ்சீபுரம், திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி சுற்றுவட்டார பகுதிகளில் பதுங்கி இருப்பதாக சமூக வலைத் தளங்களில் தகவல் பரவி வருகிறது.
இது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சீபுரத்தை அடுத்த சின்னையன் சத்திரம் பகுதியில் நேற்று இரவு ஒரு வீட்டின் பின்புறம் வடமாநில ஒருவர் நின்றார்.
அவர் குழந்தையை கடத்த பதுங்கி இருப்பதாக அப்பகுதியில் தகவல் பரவியது. இதையடுத்து அப்பகுதி மக்கள் ஏராளமானோர் திரண்டு வந்து வடமாநில வாலிபரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதில் அவரது உடலில் இருந்து ரத்தம் கொட்டியது. அவரை போலீசார் மீட்டு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இச்சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் காஞ்சீபுரத்தை அடுத்த தாயார் அம்மன் குளம் அருகே நடந்த திருவிழாவில் 2 வடமாநில வாலிபர்களை பொது மக்கள் குழந்தை திருட வந்ததாக நினைத்து சுற்றிவளைத்து தாக்கினர். இதில் இருவரும் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தனர்.
இதில் ஒருவன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். மற்றொருவனை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். விசாரணையில் அவன் அஸ்வித் புஜிர் என்பதும் அவர் கீழம்பி பகுதியில் அரிசி ஆலையில் வேலை பார்த்து வந்ததும் தெரிந்தது.
இதேபோல் அதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்த வட மாநிலத்தவர் தோற்றத்தில் இருந்த ஒருவரையும் தாக்கினர். அவர் காஞ்சீபுரம் ஆலடி தெருவை சேர்ந்த தீபக் என்பது தெரிந்தது.
சமூக வளைதளத்தில் பரவும் வடமாநில வாலிபர்கள் குறித்த தகவலால் காஞ்சீபுரம் பகுதியில் பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வாலிபர்கள் ரோந்து சுற்றி வருகிறார்கள்.
திருவள்ளூர் மாவட்டத்திலும இதேபோல் குழந்தை கடத்தில் பீதி ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூரை அடுத்த புன்னப்பாக்கம் கிராமம் வழியாக நேற்று இரவு 45 வயது மதிக்கத்தக்க வடமாநில வாலிபர் ஒருவர் சென்றார். அவரை குழந்தை கடத்த வந்தவர் என்று நினைத்து அப்பகுதி மக்கள் சரமாரியாக தாக்கினர். பலத்த காயம் அடைந்த அவருக்கு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரை பற்றிய விவரத்தை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.
பொன்னேரி அருகே உள்ள ஆலாடு பூந்தோட்ட காலனியில் நேற்று இரவு கையில் சாக்குப் பையுடன் சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்த பெண்ணை பொதுமக்கள் விரட்டி பிடித்து தாக்கினர். அவரிடம் விசாரித்த போது மொத்தம் 5 பேர் அங்கு வந்ததாக தெரிவித்தார்.
இதனையடுத்து குழந்தைகளை கடத்தி நரபலி கொடுக்கும் கும்பல் தங்கள் கிராமத்தில் ஊடுருவியதாக அப்பகுதியில் பீதி ஏற்பட்டது. பொன்னேரி மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள கிராம மக்கள் ஊருக்குள் தேடுதல் வேட்டை நடத்தினர்.
ஆனால் யாரும் சிக்கவில்லை. இதற்கிடையே பிடிபட்ட பெண்ணை பொன்னேரி போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர் சோழிங்கநல்லூர் பகுதியை சேர்ந்த நவநீதம் என்பது தெரியவந்தது. அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
குழந்தை கடத்தல் கும்பல் பீதியால் லட்சுமிபுரம், ஆலாடு, மத்ராவேடு, தேவனாஞ்சேரி கிராம மக்கள் வீட்டிற்கு ஒருவர் இரு சக்கரவாகனம் மூலம் இரவு நேரங்களில் கையில் தடியுடன் தேடுதல் வேட்டை நடத்தினர்.
இதனால் பொன்னேரி பகுதி பரபரப்பாக காணப்படுகிறது. போலீசாரும் வடமாநில கும்பல் குறித்து ரகசிய விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் இளம்பெண்கள், மாணவிகள் அதிக அளவில் மாயமாகி இருப்பது குறிப்பித்தக்கது.
பாராளுமன்ற துணை சபாநாயகரும், அ.தி.மு.க.வின் மூத்த தலைவருமான தம்பிதுரை, சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
நீட் தேர்வுக்கு தி.மு.க-காங்கிரஸ் கட்சிகள்தான் காரணம். 2012-ம் ஆண்டு மத்திய அரசில் நீட் தேர்வு கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் அ.தி.மு.க.வின் கொள்கையாகும். நீட் தேர்வுக்காக நடக்கும் பலிகள் தி.மு.க.வினால்தான் ஏற்பட்டு உள்ளது.
தான் செய்த தவறுகளை மறைக்க தி.மு.க. நாடகம் ஆடிக்கொண்டு இருக்கிறது. தமிழக உரிமைகள் பறிபோவதற்கும் அவர்கள்தான் காரணம். தி.மு.க. ஆட்சியில்தான் கல்வி பொதுபட்டியலில் சேர்க்கப்பட்டது. அவர்கள் நினைத்து இருந்தால் கல்வியை மாநில பட்டியலில் சேர்த்து இருக்க முடியும்.
மத்தியில் ஆட்சியில் இருந்தபோது நீட் தேர்வுக்கு காரணமான தி.மு.க., தற்போது அ.தி.மு.க. மீது குறை சொல்லி திசை திருப்புவதை மக்கள் நம்பமாட்டார்கள். நீட் தேர்வுக்காகத்தான் தமிழக கல்வியில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர முதல்-அமைச்சர் மற்றும் கல்வி அமைச்சர் நடவடிக்கை எடுத்து புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளனர்.
மாணவர்களுக்கு எந்த மன உளைச்சலும் ஏற்படாத வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும். மத்திய பாடத்தைவிட தரமான கல்வியை தர தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட தீவிபத்தில் 94 மாணவ- மாணவிகள் உடல் கருகி இறந்தனர். பலியானவர்களின் குடும்பங்களுக்கு ரு.5 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை இழப்பீடு வழங்க கமிட்டி பரிந்துரை செய்து இருந்தது. பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் கிழக்கு தாம்பரம், விஜயரங்கன் தெருவில் வசித்து வரும் வக்கீல் தமிழரசன் ஆஜராகி வந்தார்.
இதற்கிடையே இழப்பீடு தொகை தங்களுக்கு முறையாக வந்து சேரவில்லை என்றும், தங்களுக்காக வாதாடிய வக்கீல் தமிழரசன் முறைகேடாக எடுத்துக் கொண்டதாக பாதிக்கப்பட்ட பெற்றோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.
இந்த நிலையில் கிழக்கு தாம்பரத்தில் உள்ள வக்கீல் தமிழரசன் வீட்டுக்கு இன்று காலை 7 மணியளவில் தஞ்சாவூர் சி.பி.சி.ஐ.டி போலீஸ் டி.எஸ்.பி. தங்கவேல் தலைமையில் 14 அதிகாரிகள் வந்தனர்.
அப்போது தமிழரசனின் வீடு பூட்டப்பட்டு இருந்தது. தமிழரசன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் வெளியூர் சென்று இருப்பது தெரிந்தது. இதையடுத்து பக்கத்து வீட்டில் வசிப்பவரிடம் கொடுத்து இருந்த வீட்டின் சாவியை வாங்கி அதிகாரிகள் தமிழரசன் வீட்டுக்குள் சென்றனர். அங்கு சோதனை நடத்தினர்.
கும்பகோணம் பள்ளி தீவிபத்து இழப்பீடு தொகையில் முறைகேடு தொடர்பாக இந்த சோதனை நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வக்கீல் தமிழரசன் வீட்டு முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இன்று மதியம் வரை இந்த சோதனை நீடித்தது.
சென்னை:
காஞ்சீபுரத்தில் த.வெள்ளையன் தலைமையில் நடந்த வணிகர் சங்க பேரவை மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து வணிகர்கள் குவிந்தனர். மாநாட்டில் முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்ஹா, சத்ருகன் சின்ஹா பங்கேற்றனர்.
தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மே 5-ந் தேதி வணிகர் தினவிழா கொண்டாடப்படுகிறது.
35-வது வணிகர் தினவிழா வணிகம், விவசாயம் மற்றும் சுயதொழில்கள் மீட்பு மாநாடு காஞ்சீபுரம் பல்லவன் பொறியியல் கல்லூரி வளாகம் வெள்ளகேட் அருகில் இன்று (5-ந் தேதி) காலை 9 மணிக்கு நடந்தது. மாநாட்டுக்கு மாநில தலைவர் த.வெள்ளையன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் கே.தேவராஜ் வரவேற்றார்.
மாநாட்டில், அகில இந்திய வர்த்தக சங்க தலைவர் ஷியாம் பிகாரி மிஸ்ரா, முன்னாள் மத்திய மந்திரிகள் யஷ்வந்த் சின்ஹா, சத்ருகன் சின்ஹா, வர்த்தக சங்க பொதுச் செயலாளர் விஜய் பிரகாஷ் ஜெயின், உலக தமிழர் பேரமைப்பு நிறுவனர் பழ.நெடுமாறன், பொதுவுடமை இயக்க தலைவர் இரா.நல்லக்கண்ணு.
வங்கி ஊழியர் சம்மேளனம் சி.பி.கிருஷ்ணன், விவசாய சங்க கூட்டு இயக்க தலைவர் பி.கே.தெய்வசிகாமணி, மீத்தேன் எதிர்ப்பு இயக்கம் இரா.லெனின், சட்ட ஆலோசகர் வக்கீல் கே.பாலு, திரைப்பட இயக்குனர் கவுதமன், தமிழ்த் தேசிய பேரியக்கம் பெ.மணியரசன், புதுச்சேரி வர்த்தக சங்க தலைவர் எம்.கே.ராமன், தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளனம் மாநில செயலாளர் சி.கே.மதிவாணன், பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்க தலைவர் ஜி.சங்கரன் உள்பட பலர் சிறப்புரையாற்றினார்கள்.
மாநாட்டில் கூடங்குளம் சுப.உதயகுமார், தூத்துக்குடி பேராசிரியை பாத்திமா பாபு ஆகியோர் தலைமையில் என்ன செய்யப்போகிறோம்... நாம்? என்ற தலைப்பில் விவாத அரங்கம் நிகழ்ச்சி நடந்தது.
முன்னதாக காலை 9 மணிக்கு மாநாட்டு பந்தலில் காஞ்சீபுரம் எம்.கோபால் நாயக்கர் தேசிய கொடி ஏற்றினார். ஆர்.நாராயணன் செட்டியார் வணிகக் கொடி ஏற்றினார். மாநாட்டு பந்தலை பல்லவன் பொறியியல் கல்லூரி தாளாளர் பா.போஸ் திறந்து வைத்தார். தங்கம் வெள்ளையன், ஸ்ரீதேவி ராமகிருஷ்ணன், நர்மதா சம்பத், செல்வி விஸ்வநாதன், ஜெயராணி ராஜகோபால் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினார்கள்.
மாநாட்டில் மத்திய சென்னை மாவட்ட தலைவர் ப.தேவராஜ், காஞ்சி மேற்கு மாவட்ட தலைவர் எம்.ராமகிருஷ்ணன், வியாசை மணி, மணலி டி.ஏ.சண்முகம், எச்.ஹாரூண் ரஷித், ஜி.அரிகிருஷ்ணன், மீஞ்சூர் டி.ஷேக் அகமது, பி.தனசேகரன், எஸ்.ஆர்.பி. ராஜன், தங்கதுரை, பெரம்பூர் ரெங்கசாமி நாடார், ஓட்டேரி ஜோதிராம் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் த.வெள்ளையன் பேசியதாவது:-
உலக வர்த்தக ஒப்பந்தத்தால் நமது நாட்டுக்கு கேடு ஏற்பட்டுள்ளது. பாரம்பரிய வணிகம், விவசாயம், அழிந்து வருகிறது. அந்நிய ஆதிக்கத்தால் சுய தொழில்கள் பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. நாட்டின் அனைத்து துறைகளிலும் அந்நிய ஆதிக்கம் வலுப் பெற்றுள்ளது. ஆட்சியாளர்களின் உறுதுணை இருப்பதால் நமது தொழில்களில் பாதிப்பு ஏற்பட்டு தொழில் சுதந்திரத்தை இழக்கும் இக்கட்டான நிலை ஏற்பட்டு இருக்கிறது.
இந்த நிலை தொடருமானால் அந்நிய சக்திகளின் ‘கை’ மேலோங்கும் அது நம் நாட்டின் தற்சார்பு பொருளாதாரத்தை வீழ்த்தி அந்நிய பொருளாதாரத்தை புதை குழியில் சிக்க வைத்து விடும். இறுதியில் நம் நாட்டின் சுதந்திரத்தை நாம் இழக்க நேரிடும்.
வணிகர்கள், விவசாயிகள், சுயதொழில் புரிவோர், ஒருங்கிணைந்து போராடினால் மட்டுமே அந்நிய ஆதிக்கத்தை வீழ்த்த முடியும். இந்த நோக்கத்தின் அடிப்படையில் தான் 35-வது வணிகர் தின விழா மாநில மாநாடு வணிகம், விவசாயம் மற்றும் சுய தொழில்கள் மீட்பு மாநாடாக நடைபெற்று வருகிறது.
நம் நாட்டு சில்லரை வணிகத்தை எப்படியாவது அழித்து விட வேண்டும் என்றே ஆன்லைன் வணிகத்தை அனுமதித்து உள்ளனர். நமது ஆட்சியாளர்கள் அந்நியரின் ஆதரவாளர்களாகவே இருக்கின்றனர். நாட்டையும், நம்மையும் அழிவுப்பாதைக்கு அவர்கள் கொண்டு செல்கிறார்கள்.
மக்கள் பாதிக்கப்படுவதையும், மக்களின் சுயதொழில்கள் அந்நியரின் கைகளில் சிக்கி கொள்வதையும், பொதுத் துறைகள் அந்நியரின் ஆதிக்கத்துக்குள் செல்வதையும் தடுக்க வணிகர்கள் ஓரணியில் திரள வேண்டும்.
இவ்வாறு த.வெள்ளையன் பேசினார். #vanigarsangam #vellaiyan
காஞ்சீபுரம்:
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுக்கா உக்கல் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீராமலு. இவரது மகன் மணிகண்ணன் (20). மாங்கால் கூட் ரோட்டில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் மானம்பதி மருத்துவமனைக்கு எதிரே வாயில் நுரை தள்ளி மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு மருத் துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மணிகண்ணன் திருமண ஏக்கத்தில் இருந்ததாகவும், அவர் வீட்டிலிருந்து கொக்கு மருந்தை சாப்பிட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பெருநகர் போலீசார்வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
தாம்பரம்:
செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை ரெயில் நிலையத்துக்கு அதிவிரைவு மின்சார ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் குறிப்பிட்ட ரெயில் நிலையங்களில் மட்டுமே நிற்கும்.
இதனால் காலை நேரங்களில் வேலைக்கு செல்வோர் இந்த அதிவிரைவு மின்சார ரெயிலை பயணம் செய்வது வழக்கம். இதனால் பயணிகள் கூட்டம் எப்போதும் இந்த ரெயிலில் நிரம்பி வழியும். இந்த நிலையில் கடந்த 3 வாரமாக அதிவிரைவு மின்சார ரெயில் தாமதமாக வந்தது. மேலும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தாம்பரம் வரை அதிவேக ரெயிலாக இயக்கப்பட்டு அதன் பிறகு சாதாரண மின்சார ரெயிலாக இயக்கப்பட்டது.
இதனால் வேலைக்கு செல்வோர் கடும் அவதிக்குள்ளார்கள். இதுபற்றி அவர்கள் ரெயில் நிலைய அதிகாரியிடம் புகார் செய்தனர். ஆனாலும் தொடர்ந்து மின்சார ரெயில் தாமதமாகவே வந்தது. இந்த நிலையில் இன்று காலை அதிவிரைவு மின்சார ரெயில் தாமதமாக தாம்பரம் ரெயில் நிலையத்துக்கு வந்தது. அப்போது ரெயில் நிலையத்தில் காத்திருந்த 100-க்கும் மேற்பட்ட பயணிகள் திடீரென தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
உடனே ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பயணிகளிடம் சமாதான பேச்சு நடத்தினார்கள். மின்சார ரெயில் தாமதமின்றி இயக்குவதாக தெரிவித்தனர்.






