search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீசார் எச்சரிக்கை"

    • குழந்தை கடத்தல் தொடர்பாக பொய்யான வதந்தி பரப்புவதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.
    • மக்களுக்கு சந்தேகம் இருந்தால் காவல்துறை உதவி எண் 100, 112-ஐ தொடர்பு கொள்ள வேண்டும்.

    சென்னை:

    சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

    * குழந்தைகளை கடத்த முயற்சிப்பது போன்று சமூக வலைதளங்களில் வீண் வதந்தி பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    * குழந்தை கடத்தல் தொடர்பாக பொய்யான வதந்தி பரப்புவதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.

    * மக்களுக்கு சந்தேகம் இருந்தால் காவல்துறை உதவி எண் 100, 112-ஐ தொடர்பு கொள்ள வேண்டும்.

    * 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு சந்தேகங்களை மக்கள் கேட்டறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • காதல் ஜோடியினர் ஒருவரை ஒருவர் கரம் கோர்த்தபடியும், தோளில் கை போட்டபடியும் கடற்கரை பகுதியை வலம் வந்தனர்.
    • காதலர் தினத்தையொட்டி கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    கன்னியாகுமரி:

    ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 14-ந்தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல இந்த ஆண்டு பிப்ரவரி 14-ந்தேதியான இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கோலாகலமாக மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

    குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் இன்று காதல் ஜோடிகளின் கூட்டம் அலைமோதியது. கன்னியாகுமரியிலும் இன்று காதல் ஜோடிகள் குவிந்தனர். கன்னியாகுமரி கடற்கரையில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலி துறை கடற்கரைப் பகுதியில் உள்ள சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சிக்கு சொந்தமான பொழுதுபோக்கு பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரைப் பகுதி, கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் காதல் ஜோடியினர் இன்று காலையிலிருந்தே வந்து குவிய தொடங்கினர்.

    காதல் ஜோடியினர் ஒருவரை ஒருவர் கரம் கோர்த்தபடியும், தோளில் கை போட்டபடியும் கடற்கரை பகுதியை வலம் வந்தனர். கடற்கரையில் நின்றவாறு காதல் ஜோடிகள் விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையின் பின் பகுதியை கவர் செய்து தாங்கள் கன்னியாகுமரிக்கு வந்ததை நினைவுகூரும் வகையில் செல்போன் மூலம் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். கன்னியாகுமரி கடற்கரை பகுதி, காந்தி மண்டபம் பஜார், கடற்கரை சாலை, சன்னதி தெரு, விவேகானந்தராக் ரோடு, ஆகிய பகுதிகளில் உள்ள சங்கு கடைகளில் காதலர்கள் பலரும் கூடி நின்று தங்கள் பெயர்களை கடல் சங்கில் பதிவு செய்து வாங்கிச் சென்றனர்.

    இதேபோல ஒரே அரிசியில் காதல் ஜோடியினர் இருவர் பெயரையும் பதிவு செய்தனர். அவற்றை ஒருவருக்கொருவர் பரிசுப் பொருட்களை வழங்கி மகிழ்ந்தனர். இதனால் பரிசுப்பொருட்கள் கடைகளில் காதல் ஜோடி கூட்டம் அலைமோதியது.

    கடற்கரையிலுள்ள காட்சி கோபுரம் மற்றும் கடற்கரையோரம் அமைக்கப்பட்டுள்ள பூங்காக்களிலும் காதலர்கள் பலர் ஜோடியாக அமர்ந்து கடலின் அழகை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர். அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து இன்று ஏராளமான காதல் ஜோடிகள், மோட்டார் சைக்கிளில் கன்னியாகுமரிக்கு வந்திருந்தனர். அவர்கள் மோட்டார் சைக்கிளில் கடற்கரை சாலையில் ரேஸ் செய்தபடி வலம் வந்தனர்.

    மறைவான இடங்களில் அமர்ந்து அத்துமீறிய சில காதல் ஜோடிகளை போலீசார் பிடித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். ஒரு சில காதல் ஜோடிகள் மறைவான இடங்களில் அமர்ந்து தங்கள் காதல் லீலைகளை அரங்கேற்றினர். கடற்கரை பகுதியில் காதலர்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டிப்பிடித்து முத்தமழை பொழிந்தனர். காதல் ஜோடியினர் ரோஜா மலர்களை ஒருவருக்கொருவர் பரிமாறி காதலர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

    காதலர் தினத்தையொட்டி கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி.மகேஷ்குமார் தலைமையில் போலீசார் கடற்கரை பகுதியில் ரோந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நாகர்கோவில் வேப்பமூடு பூங்காவிலும் காதல் ஜோடிகள் அதிகமானோர் வந்திருந்தனர்.

    • உணவு பாதுகாப்பு அதிகாரிகளுடன் இணைந்து கடை நிரந்தரமாக மூடி சீல் வைக்கப்படும்.
    • 16 பேரின் வங்கி கணக்குகள் உள்ளிட்ட மொத்தம் ரூ. 25 லட்சம் பணம் முடக்கப்பட்டுள்ளது.

    ராயபுரம்:

    கடைகளில் குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனைக்கு தடை உள்ளது. எனினும் தடையை மீறி புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.

    அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தாலும் புகையிலை விற்பனை தொடர்ந்து நீடித்து வருகிறது. மேலும் பள்ளி, கல்லூரி அருகில் உள்ள கடைகளிலும் குட்கா பொருட்கள் விற்கப்படுவதால் மாணவர்கள் போதைக்கு அடிமையாகும் சூழல் ஏற்பட்டு உள்ளது. இதனை தடுக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    வடசென்ைன பகுதியில் குட்கா, புகையிலை விற்பனை தடையை மீறி அதிகஅளவில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் புது வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலைய வளா கத்தில் உள்ள சமுதாய நலக் கூடத்தில் வியாபாரி களுக்கு போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தர வின் படி வண்ணாரப் பேட்டை போலீஸ் துணை கமிஷனர் சக்திவேல் தலை மையில் நடைபெற்றது.

    இதில் வண்ணாரப் பேட்டை, திருவொற்றியூர், புது வண்ணாரப்பேட்டை, ராயபுரம், காசிமேடு, தண்டையார்பேட்டை போன்ற பகுதியை சேர்ந்த பெட்டிக்கடை, டீக்கடை, பழ வியாபாரிகள் என மொத்தம் 150 பேர் கலந்து கொண்டனர்.

    அப்போது போலீசார் பேசும்போது, கடைகளில் தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலை மற்றும் போதை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது.தடையை மீறி விற்பனை செய்தால் வங்கி கணக்குகள் முடக்கப் பட்டு, மாநகராட்சி மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகளுடன் இணைந்து கடை நிரந்தரமாக மூடி சீல் வைக்கப்படும். மேலும் கைது நடவடிக்கை எடுக்கப் படும்.

    பள்ளி, கல்லூரிகள், மற்றும் பொது மக்களுக்கு போலீசாரின் உதவி செல்போன் எண்கள் ஆங்காங்கே வைக்கப்படும். ஏற்கனவே போதைப் பொருட்கள் விற்பனை செய்தவர்கள் மீண்டும் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் வேறு தொழில் செய்யவும் அல்லது வியா பாரம் செய்ய உதவி தேவைப்பட்டால் போலீசார் சார்பில் உதவி செய்து தரப்படும் என்று தெரி வித்தனர்.

    பின்னர் போலீஸ் துணை கமிஷனர் சக்திவேல் நிருபர்களிடம் கூறும்போது, வண்ணாரப்பேட்டை காவல் மாவட்டத்தில் உள்ள பெட்டிக்கடை, டீக்கடை, பழக்கடை போன்ற கடைக ளில் கஞ்சா, மாவா, குட்கா போன்ற பொருட்களை விற்பனை செய்தவர்கள் மீது இதுவரை 42 வழக்குகள் போடப்பட்டுள்ளது. அதில் 51 பேர் கைதாகி உள்ளனர்.

    இதில் 16 பேரின் வங்கி கணக்குகள் உள்ளிட்ட மொத்தம் ரூ. 25 லட்சம் பணம் முடக்கப்பட்டுள்ளது. தடையை மீறி போதைப் பொருட்கள் விற்பனை செய்தால் கைது நடவடிக்கை யை தொடர்ந்து குண்டர் சட்டம் பாயும் என்றார்.

    • மாணவர் தனது பெற்றோரிடம் தனக்கு நடந்த ராகிங் கொடுமைகளை கூறி கதறி அழுதார்.
    • ராகிங் கொடுமை நடந்த கல்லூரி விடுதிக்கு கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சந்தீஷ் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

    கோவை:

    கோவை பீளமேட்டில் தனியார் தொழில்நுட்ப கல்லூரியில் திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்த 18 வயது மாணவர் என்ஜினீயரிங் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி இருந்து கல்லூரியில் படித்து வந்தார்.

    கடந்த 6-ந் தேதி மாணவர் விடுதியில் உள்ள அறையில் இருந்தார். அப்போது அதே கல்லூரியில் 3-ம், 4-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் 7 பேர் வந்தனர். அவர் 2-ம் ஆண்டு மாணவரிடம் மது குடிக்க பணம் கேட்டனர். அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த 7 மாணவர்களும் 2-ம் ஆண்டு மாணவரை யாரும் இல்லாத அறைக்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து 7 பேரும் சேர்ந்து 2-ம் ஆண்டு மாணவரை நிர்வாணப்படுத்தி, மொட்டை அடித்து ராகிங் செய்தனர்.

    மேலும் மாணவரை நிர்வாணப்படுத்தி அவர்களது செல்போன்களில் வீடியோ எடுத்து பணம் கொடுக்கவில்லை என்றால் நண்பர்களுக்கு அனுப்பி விடுவதாக மிரட்டினர். மேலும் நடந்த சம்பவத்தை வெளியே கூறினால் கொலை செய்து விடுவோம் என மிரட்டி சென்றனர்.

    இது குறித்து மாணவர் தனது பெற்றோரிடம் தனக்கு நடந்த ராகிங் கொடுமைகளை கூறி கதறி அழுதார். மாணவரின் பெற்றோர் பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    விசாரணையில் 2-ம் ஆண்டு மாணவரை ராகிங் செய்தது அந்த கல்லூரியில் 3-ம், 4-ம் ஆண்டு படிக்கும் மணிகண்டன் (வயது 20), நித்யானந்தன் (20), ஐயப்பன் (21), தரணிதரன் (20), சந்தோஷ் (21), வெங்கடேஷ் (20), யாஜீஸ் (21) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து பீளமேடு போலீசார் 7 மாணவர்கள் மீதும் ராகிங் செய்தல், ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 7 பேரையும் கைது செய்தனர்.

    பின்னர் அவர்கள் 7 பேரையும் போலீசார் கோவை 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கைதான மாணவர்கள் 7 பேரையும் வருகிற 22-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் ஜெயிலில் அடைக்க நீதிபதி செந்தில்ராஜா உத்தரவிட்டார். இதனையடுத்து போலீசார் 7 மாணவர்களையும் கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    ராகிங் கொடுமை நடந்த கல்லூரி விடுதிக்கு கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சந்தீஷ் நேரில் சென்று விசாரணை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோவையில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் ராகிங் தடுப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்களை இதுபோன்ற ராகிங் செய்வது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    அதேபோல ராகிங் தொடர்பாக மாணவர்கள் புகார் தெரிவிக்கும்போது சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவிக்கவில்லை என்றால் கல்லூரி நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரெயில்களில் பட்டாசுகளை எடுத்து சென்றால் அபராதம்-சிறை என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    • டிக்கெட் எடுக்காமல் பயணித்தவர்களிடம் ரூ.1 கோடி வசூல்.

    மதுரை

    மதுரை ெரயில்வே கோட்டத்தின் அக்டோபர் மாத பயணச்சீட்டு பரிசோ தனை வருமானம் ரூ.ஒரு கோடியை தாண்டி சாதனை படைத்துள்ளது.

    பண்டிகை காலமான அக்டோபர் மாதத்தில் ெரயில் நிலையங்கள், ெரயில்களில் அதிரடி பயணச்சீட்டு சோதனைகள் நடைபெற்றன. இதன் மூலம் மதுரை கோட்டம் பயண சீட்டு பரிசோதனை வருமானமாக ரூ.1 கோடியே 8 லட்சத்து 12 ஆயிரத்து 26 ஈட்டியுள்ளது. பயண சீட்டுகள் இல்லாமலும், குறைபாடுடைய பயணச் சீட்டுகளை வைத்தும் பயணம் செய்த 15 ஆயிரத்து 734 பேர் பிடிக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து பயணக்கட்டணத்துடன் அபராதமாக ரூ.1 கோடியே 6 லட்சத்து 13ஆயிரத்து 680 வசூலிக்கப்பட்டுள்ளது.

    மேலும் பதிவு செய்யாமல் அதிக அளவு உடைமைகளை ெரயில்களில் கொண்டு சென்ற 308 பேர் பிடிக்கப் பட்டு அவர்களிடம் இருந்து அபராதமாக ரூ.1 லட்சத்து 98 ஆயிரத்து 346 வசூலிக்கப் பட்டுள்ளது.

    தீ விபத்துகளை தவிர்க்க ெரயில்களில் பட்டாசு கொண்டு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. இதை மீறுபவர்கள் மீது கடுமை யான நடவடிக்கை எடுக்கப் பட உள்ளது. இந்திய ெரயில்வே சட்டம் 1989-ல் உள்ள பிரிவுகள் 67, 154, 164, 165 ஆகியவற்றின் வாயிலாக கடும் நடவடிக்கை எடுக்கப் படும்.

    இந்த பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட் டால் குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை அல்லது ரூ.1000 அபராதம் அல்லது இந்த 2 தண்டனை களும் சேர்த்து வழங்கப்படும் வாய்ப்பு உள்ளது.

    தீ விபத்தால் ஏற்படும் நஷ்டம், சேதம், உயிரிழப்பு ஆகியவற்றிற்கும் குற்றவாளி பொறுப்பேற்க நேரிடும். இதற்காக தீபாவளி பண்டிகை நாட்களில் பயணச் சீட்டு பரிசோத னையை தீவிரமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது

    தீபாவளி பண்டிகை முடிந்தவுடன் ெரயில்களில் அதிக அளவில் பயணிகள் பயணிக்க வாய்ப்பு இருக்கி றது. இந்த காலத்திலும் நாளை முதல் 30-ந்தேதி வரை சிறப்பு பயண சீட்டு பரிசோதனை நடைபெற உள்ளது. ெரயில்களில் பட்டாசு, மண்எண்ணை, எரிவாயு உருளை, பெட் ரோல் போன்ற எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்வோரை கண்காணித்து நடவடிக்கை எடுக்க ெரயில்வே பாது காப்பு படையும் தீவிர அதிரடி சோதனைகள் நடத்தி வருகிறது.

    • சென்னை நகரம் முழுவதும் தனிப்படை போலீசார் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
    • சென்னையில் இதுவரை அடிதடியில் ஈடுபட்ட 2,644 ரவுடிகள் மீது போலீசார் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

    சென்னை:

    சென்னையில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், சென்னையை குற்றம் இல்லாத நகரமாக மாற்றவும் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சென்னையில், கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற வழக்குகளில் ஈடுபட்டு பல குற்றவாளிகள் தலைமறைவாக இருக்கிறார்கள்.

    இந்த நிலையில் சரித்திர பதிவேடு குற்றவாளிகள், குற்ற பின்னணி கொண்ட ரவுடிகள், குற்றசெயல்களில் ஈடுபட்டு ஜாமீனில் வெளியே வந்தவர்கள், கொலை, கொலைமுயற்சி, கட்டப்பஞ்சாயத்து, அடிதடி உள்ளிட்ட குற்றசெயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சென்னை நகரம் முழுவதும் தனிப்படை போலீசார் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். ஒரே நாளில் இந்த சிறப்பு நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டனர்,

    இந்த அதிரடி வேட்டையின்போது சென்னையில் சட்டம் ஒழுங்குக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு குற்றசெயல்களில் ஈடுபட்டு வந்த 764 ரவுடிகளின் வீடுகளுக்கே சென்று தனிப்படை போலீசார் அதிரடி சோதனை செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும் அவர்களது நடவடிக்கைகளை கவனித்து வருவதாக எச்சரித்தனர். இனி குற்றசெயல்களில் ஈடுபடாமல் இருக்க அறிவுரைகளையும் வழங்கினார்கள்.

    அப்போது குற்றசெயல்களில் ஈடுபட்டதால் கோர்ட்டு மூலம் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த 14 ரவுடிகள் போலீசாரிடம் சிக்கினார்கள். அவர்களை போலீசார் கைது செய்தனர். சென்னையில் இதுவரை அடிதடியில் ஈடுபட்ட 2,644 ரவுடிகள் மீது போலீசார் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

    • மணலி புதுநகர் வழியாக வரும் கனரக வாகனங்கள் சர்வீஸ்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் அதிக அளவில் நிறுத்தப்படுகின்றன.
    • சர்வீஸ் சாலையில் வைக்கப்பட்டு உள்ள தடுப்பு கற்களை அகற்றினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    பொன்னேரி:

    திருெவாற்றியூர்-மீஞ்சூர் இடையே மணலி புதுநகர் வழியாக வரும் கனரக வாகனங்கள் சர்வீஸ்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் அதிக அளவில் நிறுத்தப்படுகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசலும், விபத்துக்களும் அடிக்கடி ஏற்பட்டு வருகின்றன.

    இதனை தடுக்க சர்வீஸ்சாலை பிரியும் இடங்களான கொண்டக்கரை, நாபாளையம், வல்லூர், மணலி புதுநகர், ஆண்டார் மடம் உள்ளிட்ட இடங்களில் சிமெண்டு தடுப்பு கற்கள் வைக்கப்பட்டு உள்ளன. இதனால் கனரக வாகனங்கள் சர்வீஸ் சாலையில் நிறுத்தப்படுவது தடுக்கப்பட்டது.

    எனினும் அந்த தடுப்பு கற்களை சிலர் நகர்த்தி விட்டு கனரக வாகனங்களை தற்போது நிறுத்தி வருகின்றனர். இதையடுத்து செங்குன்றம் போக்குவரத்து உதவி கமிஷனர் மலைச்சாமி போக்குவரத்து ஆய்வாளர் சோபிராஜ் ஆகியோர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். சர்வீஸ் சாலையில் வைக்கப்பட்டு உள்ள தடுப்பு கற்களை அகற்றினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    கடந்த சில நாட்களாக திருவொற்றியூர் முதல் மீஞ்சூர் வரை நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு பாதிப்பாக விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • ஒருவர் மீது ஒருவர் கால்களை தூக்கி போட்டும் தகாத உறவில் ஈடுபட்டனர்.
    • இருவரும் நிற்கக்கூட முடியாமல் கடுமையான போதையில் இருந்ததால் அவர்களை எச்சரித்து அனுப்பினர்.

    பல்லடம் :

    பல்லடம் - பொள்ளாச்சி மெயின் ரோட்டில், தாலுகா அலுவலகம் அருகே ரோட்டின் மேற்கு புறமாக நீரோடை செல்கிறது.இந்த நீரோடையின் கரைகளில் புளிய மரங்கள் நடப்பட்டு வளர்ந்து நிழல் தருகின்றன. இந்த நிலையில் அந்த புளிய மரத்தின் கீழே நேற்று சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண்,பெண் இருவரும் குடிபோதையில், மரத்தின் கீழே படுத்துக்கொண்டு பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டனர்.

    ஆடைகளை களைந்தும், ஒருவர் மீது ஒருவர் கால்களை தூக்கி போட்டும் தகாத உறவில் ஈடுபட்டனர். இதனை அந்த வழியே சென்றவர்கள் பார்த்து பல்லடம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அவர்களை கடுமையாக எச்சரித்து அனுப்பினர்.இருவரும் நிற்கக்கூட முடியாமல் கடுமையான போதையில் இருந்ததால் அவர்களை எச்சரித்து அனுப்பினர்.போக்குவரத்து நெரிசல் மிகுந்த ரோட்டில் குடிபோதையில் அவர்கள் செய்த பாலியல் சீண்டல்கள் அந்த வழியே சென்ற பொது மக்களை முகம் சுளிக்க வைத்தது.மது என்ற அரக்கனால் சமூகத்தில் ஏற்படும் இது போன்ற சீர்கேடுகள் அதிகரித்து வருவது பொதுமக்களை கவலை அடையச் செய்துள்ளது.

    • இளைஞர்கள் அதிக சத்தத்துடன் ஹாரன் அடிப்பதும், மோட்டார் சைக்கி ளை தாறுமாறுமாக ஓட்டுவதுமாக இருந்தனர்.
    • இனி இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள அருள்புரம் உப்பிலிபாளையத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பள்ளி முடிந்து மாணவிகள் செல்லும்போது, மோட்டார் சைக்கிளில் வரும் சில இளைஞர்கள் அதிக சத்தத்துடன் ஹாரன் அடிப்பதும், மோட்டார் சைக்கிளை தாறுமாறுமாக ஓட்டுவதுமாக இருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று பள்ளி ஆசிரியர்கள் அந்த இளைஞர்களை தடுத்து நிறுத்தி எச்சரித்தனர். போதையில் இருந்த இளைஞர்கள் ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து ஆசிரியர்கள், மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் மோட்டார் சைக்கிள்களுடன் இளைஞர்களை சிறைபிடித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

    சம்பவ இடம் வந்த போலீசார், அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று, இனி இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    • உற்சாக மிகுதியில் கேக்குகளை ஒருவர் மீது ஒருவர் வீசியும், நுரைவரும் ஸ்பிரேயை மற்றவர்கள் மீது அடித்தும் கூச்சலிட்டனர்.
    • மாணவிகளின் இந்த செயல் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் நகரில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பஸ்களில் ஆபத்தை உணராமல் படிக்கட்டுகளில் தொங்கியபடி செல்லும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதனால் மாணவ-மாணவிகள் பள்ளி செல்லும் காலை மற்றும் மாலை நேரத்திலும் கண்காணிக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் திருவள்ளூரில் நடுரோட்டில் மாணவிகள் 'கேக்' வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் காமரா ஜர் சிலை அருகே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகள் சுமார் 25-க்கும் மேற்பட்டோர் திரண்டு இருந்தனர். அவர்கள் அருகில் உள்ள ஒரு கடையில் கேக் ஒன்றை வாங்கினர். பின்னர் அவர்கள் தங்களது தோழி ஒருவரது பிறந்தநாளை நடுரோட்டில் கேக் வெட்டி கொண்டாடினர்.

    அப்போது உற்சாக மிகுதியில் கேக்குகளை ஒருவர் மீது ஒருவர் வீசியும், நுரைவரும் ஸ்பிரேயை மற்றவர்கள் மீது அடித்தும் கூச்சலிட்டனர். அந்த நுரை சாலையில் சென்ற பொதுமக்கள் மீது விழுந்தது. இதனை பொதுமக்கள் கண்டித்தும் மாணவிகள் கண்டுகொள்ளாமல் கத்தியபடி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மாணவிகளின் இந்த செயல் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

    பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மாணவ-மாணவிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். மேலும் அந்த மாணவிகளின் விபரத்தை சேகரித்து அவர்களுக்கு அறிவுரை கூற போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

    • அந்தரங்க ஆபாச மோசடியால் ஒவ்வொரு மாதமும் நூற்றுக்கணக்கான வாலிபர்கள் ஏமாற்றப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.
    • ஆன்லைனில் பணத்தை இழந்தால் உடனடியாக 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவியுங்கள்.

    இன்றைய நாகரிக உலகில் எல்லாம் ஆன்லைனில் கிடைக்கிறது. இருந்த இடத்தில் இருந்தே நாம் உண்ணும் உணவில் இருந்து உடுத்தும் உடை வரை அத்தனையும் பெற்றுவிட முடிகிறது.

    இப்படி நல்ல விஷயங்களுக்காக பல்வேறு ஆன்லைன் செயலிகள் செயல்பட்டு வரும் நிலையிலும் மூளையை தவறாக கசக்கி சிந்திக்கும் மோசடி பேர்வழிகள் பலர் சபல எண்ணங்களை கொண்ட வாலிபர்களுக்கு வலை விரிப்பதற்காகவே மோசடியாக பல்வேறு செயலிகளை தொடங்கி பணம் பறித்து வருகிறார்கள்.

    இணையதளங்களில் ஆபாச செயலிகளை தேடி தேடி பார்ப்பவர்கள் யார்? முகநூல் பக்கங்களில் அந்த மாதிரியான பதிவுகளை துணிச்சலுடன் வெளியிடுபவர்கள் யார் என தேடி கண்டுபிடித்து அவர்களது செல்போன் எண்களுக்கு மோசடி செயலி பற்றிய லிங்குகளை அனுப்புகிறார்கள்.

    இந்த லிங்குகளை அழுத்தி அதன் உள்ளே சென்றதும் மறுமுனையில் பெண் ஒருவர் சாட்டிங் செய்வார். அவர் எதிர்முனையில் இருப்பவரின் மனநிலையை புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்படுவார்.

    இந்த 'ஆன்லைன் டேட்டிங்' சில நாட்கள் நீடிக்கும். இதன் பின்னர் தான் இறுதிக்கட்ட காட்சிகள் அரங்கேறும். எதிர்முனையில் பேசிய பெண் 'நீங்கள் என்னை அப்படி பார்க்க விரும்புகிறீர்களா? என கேட்பார். இதனை கேட்டு உஷாராகி தொடர்பை துண்டிக்கும் ஆண்கள் தப்பித்துக்கொள்வார்கள்.

    ஆனால் சல்லாப எண்ணம் கொண்ட ஆண்கள் சிலர் 'ஆம்' என்று பதில் அளித்து தூண்டிலில் சிக்கும் மீன் போல மாட்டிக் கொள்கிறார்கள்.

    எதிர்முனையில் பேசும் பெண் 'வீடியோ காலில் வாங்க' என்று அழைத்ததும் அவசர அவசரமாக அதற்கு தயாராகும் ஆண்கள் ஆசையால் ஆபத்தில் சிக்கிக்கொள்வது தொடர்கதையாகிக்கொண்டே இருக்கிறது.

    பெண்ணின் அழகை ரசிக்கும் ஆவலில் சபல எண்ணம் கொண்ட ஆண்கள் வீடியோ காலில் செல்ல சில நிமிடங்களில் வீடியோ கால் கட் ஆகி விடும். அடுத்த நொடியே வாலிபரின் ரகசிய வீடியோ அந்தரங்கமாக அவருக்கே அனுப்பப்பட்டிருக்கும்.

    இதன் பின்னர்தான் மோசடி பேர்வழி வாலிபரிடம் பேசி பணம் பறிப்பார். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக வாலிபர் ஒருவர் ரூ.37 லட்சம் வரையில் ஆன்லைன் மோசடியில் இழந்துள்ளார்.

    இதுபோன்ற அந்தரங்க ஆபாச மோசடியால் ஒவ்வொரு மாதமும் நூற்றுக்கணக்கான வாலிபர்கள் ஏமாற்றப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

    இது ஒரு புறம் இருக்க... பெண்களை போலவே வசிய குரலில் பேசி பணம் பறிக்கும் மோசடி ஆசாமிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே இருப்பதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கிறார்கள்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் இதுபோன்று மோசடியாக பேசிய வாலிபரை நம்பி இளைஞர் ஒருவர் திருமணம் வரை சென்றுவிட்டது தான் மிகப்பெரிய வேடிக்கை. எதிர்முனையில் தன்னுடன் மாதக்கணக்கில் பெண் குரலில் பேசிக் கொண்டிருப்பவர் ஆண் என்பதையே அறியாமல் அவர் கேட்கும் போதெல்லாம் பணத்தை வாரி இறைத்துள்ளார். அந்த பட்டதாரி இளைஞர்.

    பல லட்சங்களை இழந்த பின்னரே தான் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருப்பதையே அவர் உணர்ந்தார். பின்னர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை பாய்ந்தது.

    இப்படி வக்கிரமாக பேசி மோசடி செயலிகள் மூலம் பணம் பறிக்கும் நபர்கள் இணையதளங்களை ஆக்கிர மித்துள்ள நிலையில் கடன் செயலிகள் மூலமாகவும் மோசடி பேர்வழிகள் ஒரு புறம் அப்பாவி மக்களின் பணத்தை சுரண்டிக் கொண்டே இருக்கிறார்கள்.

    'உங்களுக்கு உடனடி கடன் வேண்டுமா" உடனே கிளிக் செய்யுங்கள் என்கிற போலி செயலிகள் மூலமாக பணத்தேவை அதிகமாக உள்ளவர்கள் தினம் தங்களிடம் இருக்கும் பணத்தையும் இழந்து தவித்துக்கொண்டிருக்கிறார்கள்.

    கடனுக்கான சேவை கட்டணம் என கூறி சில ஆயிரங்களில் தொடங்கி லட்சக்கணக்கில் பணத்தை இழந்த பின்னரே பாதிக்கப்பட்ட பலர் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருப்பதை உணர்கிறார்கள்.

    இவைகள் தவிர... உங்கள் வங்கி கணக்கு பிளாக் ஆகி விடும். ஏ.டி.எம். கார்டு செயல் இழக்கப்போகிறது... என்பது போன்ற பல்வேறு பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டும் ஆன்லைன் மோசடி ஆசாமிகள் உஷாராகிக் கொண்டிருக்கிறார்கள். எனவே நாம் தான் உஷாராக இருக்க வேண்டும் என்கிறார் சைபர் கிரைம் போலீஸ் உயர் அதிகாரி ஒருவர்.

    இதுதொடர்பாக அவர் கூறும்போது, 'பாலியல் ரீதியாக இளைஞர்களை அழைத்து மோசடியை அரங்கேற்றும் குற்றவாளிகள் சமீபகாலமாக பெருகிக் கொண்டே இருக்கிறார்கள். இதுதொடர்பாக சமீபத்தில் 10 புகார்கள் வரை வந்துள்ளன.

    ஆன்லைன் மூலமாக ஏற்படும் இதுபோன்ற தொடர்புகள் நீடித்தால் நிச்சயம் ஆபத்தில் சிக்கிக் கொள்வீர்கள். எனவே அதில் மாட்டிக்கொள்ள வேண்டாம்.

    அதேநேரத்தில் ஆன்லைனில் பணத்தை இழந்தால் உடனடியாக 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவியுங்கள். அப்போது நீங்கள் இழந்த பணம் திரும்ப கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

    காலம் தாழ்த்தி புகார் அளிப்பது பலன் அளிக்காது. சைபர் கிரைம் குற்றவாளிகளின் வங்கி கணக்குக்கு பணம் போகும் முன்பு 24 மணிநேரத்தில் பணத்தை பிளாக் செய்தால் மட்டுமே இழந்த பணத்தை திரும்ப பெற முடியும்' என்றார்.

    உங்கள் போனிலும் தற்போது இதுபோன்ற செயலிகள் இருக்கலாம். உஷாராக இருங்கள்.

    • மீன் பிடிக்க செல்ல கூடாது என்றும் போலீசார் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    • படகுகள் மீனவ கிராமங்களில், கடற்கரை ஓரங்களில் நிறுத்த வைக்கப்பட்டுள்ளன.

    புதுச்சேரி:

    காரைக்கால் கடலோர கிராமங்களில் உள்ள மீனவர்களை பாதுகாப்பாக இருக்கவும், கடலுக்கு மீன் பிடிக்க செல்ல கூடாது என்றும் போலீசார் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

    இதனையடுத்து, காரைக்கால் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்ட் லோகேஸ்வரன் உத்தரவின் பெயரில், மாவட்ட காவல்துறை சார்பில், நேற்று மாலை முதல் இரவு வரை கிளிஞ்சல் மேடு, காரைக்கால் மேடு, கோட்டுச்சேரி மேடு, மண்டபத்தூர், பட்டினச்சேரி உள்ளிட்ட மீனவ கிராமங்களில், கடற்கரை ஓரங்களில் நிறுத்த வைக்கப்பட்டுள்ள படகுகளை பாதுகாப்பான இடத்திற்கு நகர்த்தவும், மீன்பிடி தடவளங்களை பாதுகாப்பான முறையில் வைத்துக் கொள்ளவும், காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லக்கூடாது என்றும் கடலுக்கு மீன் பிடிக்க சென்றவர்கள் கரை திரும்ப வேண்டும் என மீன்வளத்துறை மற்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

    ×