search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்களை திரட்டி போராட்டம் - வைகோ பேட்டி
    X

    ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்களை திரட்டி போராட்டம் - வைகோ பேட்டி

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என்று வைகோ கூறியுள்ளார். #SterliteProtest #Sterlite #Vaiko
    ஆலந்தூர்:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    டெல்டா மாவட்டத்தில் மத்திய அதிவிரைவு படை வீரர்கள் வந்தது எதற்காக? அங்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருக்கிறதா? மத்திய அரசு இப்படிப்பட்ட மிரட்டல் வேலையை விட்டு விடவேண்டும்.

    மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காது நாளைய தீர்ப்பில் எனக்கு நம்பிக்கை இல்லை. எப்படி தீர்ப்பு கொடுத்தாலும் அதன் உள்ளுக்குள் தமிழகத்துக்கு விரோதமாகத்தான் இருக்கும்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமரை சந்திக்க சென்று இருக்கிறார். அதனை பார்த்து அனுதாபப்படுகிறேன். காவிரி பிரச்சினைக்காக அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஒருமனதாக இயற்றிய தீர்மானத்தில், முதல்-அமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் அனைத்துக் கட்சி தலைவர்களுடன் பிரதமரை சந்திக்க வேண்டும் என்று நிறைவேற்றப்பட்டது.

    முதல்-அமைச்சர், பிரதமரை சந்திக்க நேரம் கேட்டது உண்மைதான். அதற்காக தம்பித்துரையும் முயற்சித்து உள்ளார். ஆனால் பிரதமர் நேரம் தரவில்லை. இது தமிழகத்தை அவமானப்படுத்தும் செயல். அதிகார மமதை. தமிழகம் இதை மன்னிக்காது. கசிக்காது.

    காவிரி பிரச்சினையில் உச்சநீதிமன்ற நீதிபதி ஒருதலைப்பட்சமாக தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில் செயல்படுகிறார். ‘ஸ்கீம்‘ என்ற வார்த்தையை ஜாக்கிரதையாக பயன்படுத்தி இருக்கிறார். ஏன் என்றால் ‘ஸ்கீம்‘ என்ற வார்த்தையை எப்படி வேண்டும் என்றாலும் மாற்றிக் கொள்ளலாம்.

    நடுவர் மன்ற தீர்ப்பு என்பது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு சமம். நடுவர்மன்ற தீர்ப்புப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை.

    தமிழகத்தை மத்திய அரசு நீட், நியூட்ரினோ, ஸ்டெர்லைட் ஆலை போன்றவற்றால் வஞ்சித்து வருகிறது. ஸ்டெர்லைட்டுக்கு மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சகத்திடம் இருந்து அனுமதி வந்து விட்டது என்று சொல்கிறார்கள். தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் தமிழக, மாசு கட்டுப்பாட்டு வாரியமும் ஏற்கனவே அனுமதி வழங்கி இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்.

    ஆனால் அமைச்சர் ஒருவர் நாங்கள் அனுமதி அளிக்கவில்லை என்று சொல்லி உள்ளார். இது யாரை ஏமாற்றும் செயல். தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையால் வினைவிதைக்கிறது. ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்களை திரட்டியும், நீதிமன்றம் மூலமாகவும் போராடுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #SterliteProtest #Sterlite #Vaiko #MDMK
    Next Story
    ×