search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின் உற்பத்தி"

    • முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 133.30 அடியாக உள்ளது.
    • வைகை அணையின் நீர்மட்டம் 68.77 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கைகொடுத்ததால் அனைத்து அணைகளும் நிரம்பி முழு கொள்ளளவை எட்டியது. இதனால் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பாசனத்திற்காக தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

    தற்போது மழை முற்றிலும் நின்று விட்டதாலும், கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதாலும் அணைகளின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. இதனால் பெரியாறு, வைகை அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டு குடிநீருக்காக மட்டும் தண்ணீர் திறக்கப்படுகிறது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 133.30 அடியாக உள்ளது. நீர் வரத்து 437 கனஅடி. நேற்று வரை 1500 கன அடி திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை முதல் 500 கன அடி மட்டும் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 5469 மி.கன அடியாக உள்ளது. கூடுதல் தண்ணீர் திறப்பால் லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் 4 ஜெனரேட்டர்களும் இயக்கப்பட்டு 135 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. தற்போது 2 ஜெனரேட்டர்கள் மட்டும் இயக்கப்பட்டு 46 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 68.77 அடியாக உள்ளது. வரத்து 1251 கன அடி. திறப்பு 69 கன அடி. இருப்பு 5513 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 53.40 அடி. வரத்து 29 கன அடி. திறப்பு 75 கன அடி. இருப்பு 403 மி.கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடி. வரத்து மற்றும் திறப்பு 29 கன அடி. இருப்பு 100 மி.கன அடி.

    • கடந்த ஜூலை ஒன்றாம் தேதி பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டது.
    • முதல் கட்ட உற்பத்தியாக தற்போது 125 மெகாவாட் மின் உற்பத்தி செய்து வருகிறது.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அனுமின் நிலையத்தில் உள்ள இரண்டாம் அணு கடந்த ஜூலை ஒன்றாம் தேதி பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டது. பணிகள் முடிந்தது சோதனை ஓட்டத்திற்கு பிறகு இன்று அதிகாலை மீண்டும் மின்உற்பத்தியை துவங்கியது.

    இதன் முதல் கட்ட உற்பத்தியாக தற்போது 125 மெகாவாட் மின் உற்பத்தி செய்து வருகிறது. இது படிப்படியாக உயர்ந்து ஓரிரு வாரங்களுக்குள் மீண்டும் சராசரியான 220 மெகாவாட் மின் உற்பத்தியை செய்யும் என அனுமின் நிலைய மின்சார உற்பத்தி தொழில்நுட்ப பிரிவு வட்டாரம் தெரிவிக்கிறது.

    • கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வளாக இயக்குனர் எம்.எஸ்.சுரேஷ் தேசியக்கொடி ஏற்றினார்.
    • கூடங்குளத்தில் 3-வது மற்றும் 4-வது அணு உலை களின் கட்டுமானம் மற்றும் உபகரணங்கள் பொருத்தும் பணி இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

    நெல்லை:

    சுதந்திர தின விழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வளாக இயக்குனர் எம்.எஸ்.சுரேஷ் தேசியக்கொடி ஏற்றினார். இதில் அணுமின் நிலைய ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். தொடர்ந்து வளாக இயக்குனர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கூடங்குளம் முதல் அணு உலையில் 2022 -23 ஆண்டில் 14,226 மெட்ரிக் யூனிட் மின்சாரம் தயாரிக்கப்பட்டு ள்ளது . கடந்த ஆண்டு தொடர்ச்சியாக 638 நாட்கள் மின் உற்பத்தி செய்து கூடங்குளம் அணு மின் நிலையம் சாதனை படைத்துள்ளது.

    கூடங்குளத்தில் 3-வது மற்றும் 4-வது அணு உலை களின் கட்டுமானம் மற்றும் உபகரணங்கள் பொருத்தும் பணி இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

    அணுமின் நிலையம் சார்பில் சமூக மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இதுவரை அருகில் உள்ள கிராமங்களுக்கு ரூ.104 கோடி மதிப்பீட்டில் பணிகள் செய்யப் பட்டு உள்ளன. ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் 193 பள்ளி களுக்கு ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை அணுமின் நிலையம் சார்பில் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆற்றின் மையப் பகுதியில் மின் கோபுரம் அமைப்பதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
    • 39 ஏக்கர் அலையாற்றி காடுகளும் அழிக்கப்படும் என்று எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

    பொன்னேரி:

    வடசென்னை அனல்மின் நிலையம் அத்திப்பட்டு புதுநகரில் செயல்படுகிறது. இங்கு 800 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் 3-வது அலகு அமைக்கப்பட்டுள்ளது.

    இங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு கொண்டு செல்ல இடையஞ் சாவடி மின் சேமிப்பு நிலையம் வரை 20 உயர்மின் அழுத்த கோபுரங்கள் நிறுவ வேண்டும்.

    இதில் 2 கோபுரங்கள் கொசஸ்தலை ஆற்றின் நடுப்பகுதியில் அமைகிறது. ஆனால் ஆற்றின் மையப் பகுதியில் மின் கோபுரம் அமைப்பதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும், 39 ஏக்கர் அலையாற்றி காடுகளும் அழிக்கப்படும் என்று எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

    ஏற்கனவே மீனவர்களின் போராட்டங்களை சமாளித்து ஒரு கோபுரம் அமைக்கப்பட்டுவிட்டது. இப்போது அத்திப்பட்டுக்கும் காட்டுக்குப்பத்துக்கும் இடையே ஒரு கோபுரம் மட்டும் அமைக்க வேண்டும். இந்த கோபுரத்தை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சின்னக்குப்பம், தாழங்குப்பம் உள்பட 8 மீனவர் குப்பங்களை சேர்ந்த மீனவர்கள் போராடி வருகிறார்கள்.

    அவர்கள் கூறும்போது, ஆற்றின் நடுவே கோபுரம் அமைக்க மண், ஜல்லிகளை கொட்டி சாலையும் அமைக்கப்படுகிறது. பணிகள் முடிந்து சாலையை அகற்றி விடுவதாக அதிகாரிகள் கூறினாலும் 20 அடி ஆழமுள்ள ஆற்றில் மண் கொட்டி போடப்படும் சாலை முற்றிலுமாக அகற்றப்படாது. இதனால் மீன் பிடிக்க படகுகளில் செல்வது சிரமமாகும். மீன்களின் இனப்பெருக்கமும் குறையும். இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் என்கிறார்கள்.

    அதே நேரம் இந்த கோபுரம் வேறு பாதை வழியாக அமைக்கத்தான் முதலில் திட்டமிடப்பட்டது. அந்த வரைபடமே இருக்கிறது. ஆனால் ஆற்றின் குறுக்கே அமைக்கிறார்கள் என்றனர்.

    இதுபற்றி மின்வாரிய அதிகாரிகள் கூறும்போது, இந்த ஒரு மின் கோபுரம் அமைக்கப்பட்டால்தான் மின்சாரத்தை கொண்டு செல்ல முடியும்.

    ஆற்றில் அமைக்கப்படும் இந்த கோபுரத்தால் சுற்றுச் சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. கோபுரம் அமைக் கப்பட்டதும் சாலை முற்றிலுமாக அகற்றப்படும் என்றனர்.

    இந்த விவாரம் தொடர்பாக மீனவர் சங்க பிரதிநிதிகளும், மின் வாரிய அதிகாரிகளும் இன்று பிற்பகலில் திருவள்ளூர் கலெக்டரை நேரில் சந்தித்து பேசுகிறார்கள்.

    • தமிழகத்தில் குமரி, நெல்லை, தென்காசி, திருப்பூர் மாவட்டம் உடுமலை போன்ற பகுதிகளில் காற்றாலைகள் அதிகம் உள்ளன.
    • காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் மின் உற்பத்தியின் அளவு உயர்ந்துள்ளது.

    கோவை:

    ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு கடந்த 17-ந் தேதி ஆடி மாதம் தொடங்கியது. ஆடி தொடங்கியது முதலே தமிழகம் முழுவதும் காற்று வேகமாக வீசி வருகிறது.

    இதனால் மாநிலம் முழுவதும் உள்ள காற்றாலைகளில் தற்போது மின்சார உற்பத்தி அதிகரித்துள்ளது. குறிப்பாக ஆடி மாதம் தொடங்கிய முதல் நாளில் மட்டும் சுமார் 106 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து வரும் நாட்களில் காற்றாலை மின்சாரம் உற்பத்தி மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழகத்தில் குமரி, நெல்லை, தென்காசி, திருப்பூர் மாவட்டம் உடுமலை போன்ற பகுதிகளில் காற்றாலைகள் அதிகம் உள்ளன. அங்கு மின் உற்பத்தி அதிகரித்துள்ளால் உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் உள்ளது. இதனால் காற்றின் வேகம் சற்று குறைந்து உள்ளது. இருந்தபோதிலும் நாட்கள் செல்ல செல்ல காற்றின் வேகம் அதிகரிக்கும் என்று காற்றாலை உரிமையாளர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

    இதுகுறித்து கோவையைச் சேர்ந்தவரும், இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவருமான கஸ்தூரி ரங்கன் கூறியதாவது:-

    காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் மின் உற்பத்தியின் அளவு உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக காற்றாலைகள் மூலம் முறையே 12 ஆயிரம் மில்லியன் யூனிட் வீதம் ஒட்டுமொத்தமாக 24 ஆயிரம் மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. ஆனாலும் இதனை அரசு போதிய அளவில் கொள்முதல் செய்வது இல்லை. அனல் மின்நிலையங்கள் மூலம் போதியஅளவில் மின்சாரம் கிடைத்து வருகிறது.

    எனவே அரசாங்கம் காற்றாலை மின்சாரத்தை கண்டுகொள்வது இல்லை. மத்திய மாநில அரசுகள் காற்றாலைகள் தயாரிக்கும் மின்சாரத்தை போதிய அளவில் கொள்முதல் செய்ய வேண்டும், எங்களுக்கான சலுகைகளை திரும்ப வழங்க வேண்டும், பழைய காற்றாலைகளின் இயக்கத்துக்கு தடை விதிக்கக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பழைய அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 4 யூனிட்டுகள் செயல்பட்டு வருகிறது.
    • மீதமுள்ள 3 யூனிட்டுகளில் மட்டுமே மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூரில் 600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட புதிய அனல்மின் நிலையமும், 840 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட பழைய அனல் மின் நிலையமும் இயங்கி வருகிறது. பழைய அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 4 யூனிட்டுகள் செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில் தற்போது புதிய அனல்மின் நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக நேற்று மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட்டது .

    இதன் காரணமாக மின் உற்பத்தி அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது.

    இது போன்று பழைய அனல் மின் நிலையத்தில் 1-வது யூனிட்டில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மீதமுள்ள 3 யூனிட்டுகளில் மட்டுமே மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

    அதாவது 840 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட பழைய அனல் மின் நிலையத்தில் தற்போது 630 மெகா வாட் மின் உற்பத்தி மட்டுமே நடை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • தஞ்சாவூர் மின் பகிர்மான வட்டத்தில் குறைதீர்க்கும் நாள் நடைபெற்று வருகிறது.
    • காலை 11 மணிக்கு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் நடத்தப்பட உள்ளது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செயற்பொறியாளர் கலைவேந்தன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தஞ்சாவூர் மின் பகிர்மான வட்டத்தில், மேற்பார்வை பொறியாளர் தலைமையில், ஒவ்வொரு மாதமும் முதல் வியாழக்கிழமை அன்று நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் நடைபெற்று வருகிறது.

    அதன்படி நாளை ( வியாழக்கிழமை ) காலை 11 மணிக்கு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் தஞ்சாவூர் செயற்பொறியாளர் அலுவலகம், எண்.1 வல்லம ரோடு, தஞ்சாவூர் அலுவலகத்தில் மேற்பார்வை பொறியாளர் நளினி தலைமையில் நடத்தப்பட உள்ளது.

    ஆகவே வல்லம், மின்நகர், செங்கிப்பட்டி, வீரமரசன்பேட்டை, கள்ளப்பெரம்பூர், திருக்கானூர்பட்டி, வடக்கு தஞ்சாவூர், குருங்குளம், மருங்குளம், மெலட்டூர், புறநகர் திருவையாறு, நகர் திருவையாறு, புறநகர் திருக்காட்டுப்பள்ளி, நகர் திருக்காட்டுப்பள்ளி, நடுக்காவேரி பகுதி அலுவலகங்களைச் சார்ந்த மின்நுகர்வோர்கள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின், மேற்கண்ட குறைதீர் கூட்டத்தில் நேரில் வந்து தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 2-வது நிலையில் உள்ள இரு அலகுகளில் தலா 600 வீதம் 1200 என மொத்தம் நாளொன்றுக்கு 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
    • பாதிக்கப்பட்ட பகுதியில் கசிவை மின் ஊழியர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு வடசென்னை அனல்மின் நிலையத்தின் இரு நிலைகளில் முதல் நிலையின் 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட் மின் உற்பத்தியும், 2-வது நிலையில் உள்ள இரு அலகுகளில் தலா 600 வீதம் 1200 என மொத்தம் நாளொன்றுக்கு 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் அனல்மின் நிலைய 2-வது நிலையின் 2-வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதியில் கசிவை மின் ஊழியர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • நாளொன்றுக்கு 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
    • 1-வது அலகில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டில் வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளது. இங்குள்ள இரு நிலைகளில் முதல் நிலையில் 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட்டும், 2-வது நிலையில் உள்ள இரு அலகுகளில் தலா 600 வீதம் 1200 மெகாவாட் என மொத்தம் நாளொன்றுக்கு 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் 1-வது நிலையில் உள்ள 1-வது அலகில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த அலகில் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

    • முதல்‌ பிரிவில்‌ தலா 210 மெகா வாட்‌ திறன்‌ கொண்ட 4 அலகுகளும்‌, 2-வது பிரிவில்‌ 600 மெகாவாட்‌ திறன்‌ கொண்ட ஒரு அலகும்‌ உள்ளது.
    • ஊழியர்கள் பழுதை சரி செய்யும்‌ பணிகள்‌ நடைபெற்று வருகின்றன.

    மேட்டூர்:

    மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 2 பிரிவுகள் செயல்பட்டு வருதின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகா வாட் திறன் கொண்ட 4 அலகுகளும், 2-வது பிரிவில் 600 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அலகும் உள்ளது. முதல் பிரிவு மூலம் 840 மெகாவாட் மின்சாரமும், 2-வது பிரிவில் 600 மெகாவாட் மின்சாரமும் என 2 பிரிவுகளிலும் 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுதிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு மேட்டூர் அனல் மின் நிலைய முதல் பிரிவில் ஏற்பட்ட மின் கோளாறு காரணமாக 2-வது பிரிவில் 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி தடைபட்டது. இதை தொடர்ந்து ஊழியர்கள் பழுதை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகள் முடிந்தவுடன் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கும் என்று மேட்டூர் அனல் மின் நிலைய பொறியாளர்கள் தெரிவித்தனர்.

    • அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல்மின் நிலையத்தில் இரு நிலைகளில் மொத்தம் 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.
    • கொதிகலன் கசிவு, தொழில் நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

    பொன்னேரி:

    அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல்மின் நிலையத்தில் இரு நிலைகளில் மொத்தம் 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

    இந்த நிலையில்1-வது நிலையின் 2-வது அலகில் உள்ள கொதிகலனில் கசிவு ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த அலகில் உற்பத்தி செய்யப்பட்ட 210 மெகா வாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

    இதேபோல் 3-வது அலகில் தொழில் நுட்ப கோளாறு காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது. இதன்காரணமாக மொத்தம் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. கொதிகலன் கசிவு, தொழில் நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

    • தற்போது தற்காலிகமாக பஸ்கள் நின்று திரும்புவதால் இப்பணி சற்று தாமதமாகி வருகிறது.
    • மேற்கூரையில் சோலார் மின் உற்பத்தி செய்ய தகடுகள் பதிக்கும் பணி நிறைவடைந்துள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சிக்கு சொந்தமான பஸ் நிலையம் காமராஜ் ரோட்டில் உள்ளது. இதில் ஏறத்தாழ ரூ.40 கோடி செலவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நவீன வசதிகளுடன் கூடிய பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது.பஸ் நிலையத்தில் 45 பஸ்கள் நிற்கும் வசதி, தரை தளத்தில் 84 கடைகள், முதல் தளத்தில் 3உணவு விடுதிகள் அமைந்துள்ளன. இதுதவிர நிர்வாக அலுவலகம், போக்குவரத்து கழக நேரக்காப்பாளர் அலுவலகங்களும் உள்ளன. 4 பகுதிகளில் பொதுக்கழிப்பிடம், எலக்ட்ரிக் வாகனம் சார்ஜிங் ஸ்டேஷன், கண்காணிப்பு கேமரா, பஸ் புறப்பாடு அறிவிப்பு வசதி, பயணிகள் இருக்கை வசதி, தாய்மார்கள் பாலூட்டும் அறை உள்ளிட்ட வசதிகளும் இடம் பெற்றுள்ளன.கடைகளுக்கான ஏலம் முடிந்துள்ளன. வளாகம் முழுவதும் கட்டுமான பணி முற்றிலும் நிறைவடைந்து பெயின்டிங் மற்றும் நகாசு பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன.

    பஸ்கள் நுழையும் மற்றும் வெளியேறும் பகுதியில் இரு பெரிய அளவிலான ஆர்ச் அமைக்கும் பணி தற்போது துவங்கியுள்ளது. ஆர்ச் அமையும் இடத்தில் தற்போது தற்காலிகமாக பஸ்கள் நின்று திரும்புவதால் இப்பணி சற்று தாமதமாகி வருகிறது.

    பஸ் நிைலய பிரதான கட்டடத்தின் மேற்கூரையில் சோலார் மின் உற்பத்தி செய்ய தகடுகள் பதிக்கும் பணி நிறைவடைந்துள்ளது. இதன் மூலம் 50 கே.வி., மின்சாரம் பெறப்படும். அதனை மின் வாரியத்துக்கு நேரடியாக வழங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.வாரியத்துக்கு வழங்கும் மின் அளவுக்கு ஏற்ப மாநகராட்சிக்கு மின் கட்டணத்தில் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.கட்டுமான பணிகள் அதிகபட்சமாக இன்னும் ஒரு மாத காலத்துக்குள் நிறைவடையும் நிலையில் உள்ளது. இதனால் விரைவில் பணிகள் முடிந்து இது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. 

    ×