search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கொசஸ்தலை ஆற்றில் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு- மின்சாரத்தை வெளியே கொண்டு வருவதில் சிக்கல்
    X

    கொசஸ்தலை ஆற்றில் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு- மின்சாரத்தை வெளியே கொண்டு வருவதில் சிக்கல்

    • ஆற்றின் மையப் பகுதியில் மின் கோபுரம் அமைப்பதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
    • 39 ஏக்கர் அலையாற்றி காடுகளும் அழிக்கப்படும் என்று எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

    பொன்னேரி:

    வடசென்னை அனல்மின் நிலையம் அத்திப்பட்டு புதுநகரில் செயல்படுகிறது. இங்கு 800 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் 3-வது அலகு அமைக்கப்பட்டுள்ளது.

    இங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு கொண்டு செல்ல இடையஞ் சாவடி மின் சேமிப்பு நிலையம் வரை 20 உயர்மின் அழுத்த கோபுரங்கள் நிறுவ வேண்டும்.

    இதில் 2 கோபுரங்கள் கொசஸ்தலை ஆற்றின் நடுப்பகுதியில் அமைகிறது. ஆனால் ஆற்றின் மையப் பகுதியில் மின் கோபுரம் அமைப்பதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும், 39 ஏக்கர் அலையாற்றி காடுகளும் அழிக்கப்படும் என்று எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

    ஏற்கனவே மீனவர்களின் போராட்டங்களை சமாளித்து ஒரு கோபுரம் அமைக்கப்பட்டுவிட்டது. இப்போது அத்திப்பட்டுக்கும் காட்டுக்குப்பத்துக்கும் இடையே ஒரு கோபுரம் மட்டும் அமைக்க வேண்டும். இந்த கோபுரத்தை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சின்னக்குப்பம், தாழங்குப்பம் உள்பட 8 மீனவர் குப்பங்களை சேர்ந்த மீனவர்கள் போராடி வருகிறார்கள்.

    அவர்கள் கூறும்போது, ஆற்றின் நடுவே கோபுரம் அமைக்க மண், ஜல்லிகளை கொட்டி சாலையும் அமைக்கப்படுகிறது. பணிகள் முடிந்து சாலையை அகற்றி விடுவதாக அதிகாரிகள் கூறினாலும் 20 அடி ஆழமுள்ள ஆற்றில் மண் கொட்டி போடப்படும் சாலை முற்றிலுமாக அகற்றப்படாது. இதனால் மீன் பிடிக்க படகுகளில் செல்வது சிரமமாகும். மீன்களின் இனப்பெருக்கமும் குறையும். இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் என்கிறார்கள்.

    அதே நேரம் இந்த கோபுரம் வேறு பாதை வழியாக அமைக்கத்தான் முதலில் திட்டமிடப்பட்டது. அந்த வரைபடமே இருக்கிறது. ஆனால் ஆற்றின் குறுக்கே அமைக்கிறார்கள் என்றனர்.

    இதுபற்றி மின்வாரிய அதிகாரிகள் கூறும்போது, இந்த ஒரு மின் கோபுரம் அமைக்கப்பட்டால்தான் மின்சாரத்தை கொண்டு செல்ல முடியும்.

    ஆற்றில் அமைக்கப்படும் இந்த கோபுரத்தால் சுற்றுச் சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. கோபுரம் அமைக் கப்பட்டதும் சாலை முற்றிலுமாக அகற்றப்படும் என்றனர்.

    இந்த விவாரம் தொடர்பாக மீனவர் சங்க பிரதிநிதிகளும், மின் வாரிய அதிகாரிகளும் இன்று பிற்பகலில் திருவள்ளூர் கலெக்டரை நேரில் சந்தித்து பேசுகிறார்கள்.

    Next Story
    ×