என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சீபுரத்தில் ரூ.10 லட்சம் கேட்டு தொழிலதிர் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் 4 பேர் கைது
    X

    காஞ்சீபுரத்தில் ரூ.10 லட்சம் கேட்டு தொழிலதிர் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் 4 பேர் கைது

    காஞ்சீபுரத்தில் ரூ.10 லட்சம் கேட்டு தொழிலதிபரை கத்தியால் வெட்டிய வழக்கில் 4 வழிப்பறி கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர்.
    காஞ்சீபுரம்:

    சின்ன காஞ்சீபுரம் நாகலூத்து மேட்டில் வசிப்பவர் கே.பி.சரவணன் (வயது 43). இவர் தனது வீட்டில் பட்டு ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவருடைய வீட்டிற்கு, பிரபல ரவுடியான சின்ன காஞ்சீபுரம் பொய்யாக்குளத்தை சேர்ந்த தியாகு என்கிற தியாகராஜன் கடந்த மாதம் காஞ்சீபுரத்தை சேர்ந்த 8 ரவுடிகளை அனுப்பி வைத்தார்.

    அந்த 8 ரவுடிகளும் சரவணன் ஜவுளிக்கடைக்கு சென்று ‘எங்களுடைய பாஸ் ரவுடி தியாகு எங்களை அனுப்பி வைத்தார். உடனே ரூ.10 லட்சம் கொண்டு வா’ என்று கத்தியை காட்டி மிரட்டினர்.

    அதற்கு சரவணன் பணம் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த 8 ரவுடிகள் பட்டு தொழிலதிபர் சரவணன் தலையில் கத்தியால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். படுகாயங்களுடன் சரவணன் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்து பட்டு தொழிலதிபர் சரவணன் சின்ன காஞ்சீபுரம் போலீசில் புகார் செய்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி உத்தரவின் பேரில், காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு முகிலன் மேற்பார்வையில், சின்ன காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து ரவுடிகளை வலைவீசி தேடி வந்தார்.

    இந்த நிலையில், சின்ன காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் போலீசாருடன் காஞ்சீபுரம் ரெயில்வே ரோடு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அந்த ரவுடிகள் அந்த வழியாக வந்தனர்.

    இன்ஸ்பெக்டர் சரவணனை பார்த்ததும் அவர்கள் மிரள மிரள விழித்தனர். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் பட்டு தொழிலதிபர் சரவணனை வெட்டியது தெரியவந்தது.

    மேலும் விசாரணையில் பட்டு தொழிலதிபர் சரவணனை கத்தியை காட்டி மிரட்டி பணம் வாங்க சொன்னதாக, பிரபல ரவுடி தியாகு எங்களை அனுப்பியதாகவும், விசாரணையில் ஒப்பு கொண்டனர். இதுகுறித்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    விசாரணையில் அவர்கள் காஞ்சீபுரம் பல்லவர் மேட்டை சேர்ந்த குணா என்கிற குட்டிகாய்லான் வயது (20), ஆரியபெரும்பாக்கத்தை சேர்ந்த மொட்டை என்கிற சரவணன் (23), காஞ்சீபுரம் செட்டியார்பேட்டையை சேர்ந்த சின்ன ராஜூ என்கிற கலர்குஞ்சு (22), காஞ்சீபுரம் புஞ்சையரசந்தாங்கலை சேர்ந்த ராஜேந்திரன் (24) ஆகிய 4 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் கைது செய்யப்பட்ட 4 பேரும் ஏற்கெனவே வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டவர்கள் என்பதும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ஒரு பட்டா கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் மேலும் 4 ரவுடிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    Next Story
    ×