search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதைப்பொருள் பறிமுதல்"

    • சென்னை விமான நிலையத்தில் ரூ.28 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • போதைப் பொருள் கடத்திய இளைஞரிடம் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    சென்னை:

    நாடு முழுவதும் போதைப்பொருள் நடமாட்டம் கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்து வருகிறது. போதைப்பொருட்களைக் கட்டுப்படுத்த மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளும், போலீசாரும் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    கடந்த பிப்ரவரி மாதம் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக டெல்லியில் உள்ள ஒரு குடோனில் பதுக்கி வைத்திருந்த 50 கிலோ போதைப்பொருளை டெல்லி சிறப்பு போலீசாரும், மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளும் கைப்பற்றினார்கள்.

    மேலும் அந்த குடோனில் இருந்த 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்தபோது இந்த போதைப்பொருள் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது சென்னையை சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் ரூ.2,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை வெளிநாடுகளுக்கு கடத்தியது தெரியவந்தது. இந்த போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    இந்தச் சம்பவத்துக்கு பிறகு போதைப்பொருள் விவகாரம் நாடு முழுவதும் விஸ்வரூபம் எடுத்தது. இதையடுத்து போதைப்பொருட்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    தமிழகத்திலும் போதைப்பொருள் கடத்தலை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போதைப்பொருள் விற்பவர்கள் மீது போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இந்நிலையில், கத்தார் நாட்டில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.28 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டுஉள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு மிகப்பெரிய அளவில் போதைப்பொருட்களை கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு துறை தனிப்படை அதிகாரிகள் இன்று அதிகாலையில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அந்த நேரத்தில் கத்தார் நாட்டு தலைநகர் தோகாவில் இருந்து விமானம் ஒன்று சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

    அப்போது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த பாரத் வசித்தா (28), என்ற பயணி, தோகாவில் இருந்து சென்னை வந்து விட்டு, மற்றொரு விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லி செல்வதற்காக, டிரான்சிட் பயணியாக சென்னை விமான நிலையத்திற்குள் அமர்ந்திருந்தார்.

    மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் அவரை நிறுத்தி சோதனை நடத்தினார்கள். அவர் வைத்திருந்த பையை பரிசோதித்தபோது அதில் சுமார் ஒரு கிலோ எடை கொண்ட போதைப்பொருள் இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் வாலிபர் பாரத் வசித்தாவின் பயணத்தை ரத்துசெய்தனர். பின்னர் அவரை தனியாக அழைத்துச் சென்று அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள்.

    அவர் கடத்தி வந்த போதை பொருளை பரிசோதித்தபோது, அது மிகவும் விலை உயர்ந்த கோகைன் போதைப்பொருள் என்பது தெரிய வந்தது. அந்த போதைப்பொருளின் மதிப்பு சுமார் ரூ.28 கோடி இருக்கலாம் என்று தெரிகிறது.

    இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் வாலிபர் பாரத் வசித்தாவை கைதுசெய்தனர். அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் போதைப்பொருளை எங்கு கடத்திச் சென்றார் என்பது தொடர்பாக விசாரித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் வாலிபர் பாரத் வசித்தா, சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது.

    எனவே அவர் எவ்வளவு நாட்களாக போதைப்பொருட்களை கடத்தி வருகிறார்? அவருக்கு இந்தியாவில் யார்-யாருடன் தொடர்பு உள்ளது என்பது தொடர்பாக விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

    • 6 கிலோ மெத்த பெட்டமைன் போதை பொருளை சென்னை கொடுங்கையூரில் உள்ள வீட்டில் வைத்துள்ளதாக தெரிவித்தார்.
    • வீட்டிற்கு சென்று போலீசார் தேடியபோது அங்கிருந்த குப்பை தொட்டியில் இருந்து போதைப்பொருளை கைப்பற்றினர்.

    மதுரை:

    சென்னையில் இருந்து செங்கோட்டை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் மெத்தபெட்டமைன் என்ற போதைப்பொருள் கடத்தப்படுவதாக தேசிய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் டெல்லியில் இருந்து புறப்பட்ட பிள்ள மன் பிரகாஷ் என்பவரை அதிகாரிகள் பின் தொடர்ந்தனர். பின்னர் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறிய அவரை மதுரை ரெயில் நிலையத்தில் இறங்க முற்பட்ட போது அதிகாரிகள் மடக்கினர்.

    அவர் வைத்திருந்த பைகளை சோதனை செய்த போது அதில், போதைப்பொருள் 30 கிலோ மதிப்பிலான மெத்த பெட்டமைன் என்ற போதைப்பொருள் இருப்பது தெரிந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவரை கைது செய்த அதிகாரிகள் மதுரை ரெயில்வே பாதுகாப்புபடை போலீசில் ஒப்படைத்தனர்.

    தொடர்ந்து அவரிடம் நடந்த விசாரணையில் பிரகாஷ் சென்னை கண்ணதாசன் நகர் பகுதியை சேர்ந்தவர் என்பதும், அவருடன் தொடர்புகொண்ட ஜேசுதாஸ் என்பவர் போதை பொருளை ரெயிலில் மதுரைக்கு கொண்டு வருமாறு கூறியதாகவும் தெரிவித்தார். பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருளின் சர்வதேச மதிப்பு ரூ.180 கோடியாகும்.

    மேலும் 6 கிலோ மெத்த பெட்டமைன் போதை பொருளை சென்னை கொடுங்கையூரில் உள்ள வீட்டில் வைத்துள்ளதாக தெரிவித்தார். இதனையடுத்து வீட்டிற்கு சென்று போலீசார் தேடியபோது அங்கிருந்த குப்பை தொட்டியில் இருந்து போதைப்பொருளை கைப்பற்றினர்.

    இதையடுத்து பிரகாசின் மனைவி மோனிஷா ஷீலாவை கைது செய்த போலீசார் அவரை விசாரணைக்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு அழைத்து வந்தனர். நேற்று முழுவதும் அவரிடம் அதிரடி விசாரணை நடத்தப்பட்டது. அதன் முடிவில் போதைப்பொருளை கடத்த உத்தரவிட்ட ஜேசுதாஸ் என்பவரும் கைதானார்.

    இதையடுத்து கைது செய்யப்பட்ட பிரகாஷ், அவரது மனைவி மோனிஷா ஷீலா ஆகிய இருவரையும் தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் மதுரையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து அவர்களை 15 நாள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் இருவரும் சென்னைக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டனர்.

    • போர்பந்தருக்கு அருகே ரூ.2000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது
    • சில தினங்களுக்கு முன் ஆளும் கட்சியை சேர்ந்த பிரமுகர் போதைப்பொருள் வழக்கில் சிக்கினார்

    60களில், தமிழகத்தில் குடிப்பழக்கம் என்பது பரவலாக இல்லை.

    ஆனால், அதற்கு பிறகு வந்த தசாப்தங்களில், மெல்ல மெல்ல தமிழ்நாட்டில் பெரும்பான்மையான ஆண்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார்கள்.


    ஒவ்வொரு தேர்தலுக்கு முந்தைய காலகட்டங்களில் எதிர்கட்சிகளுக்கு மதுவிலக்கு பேசுபொருளாகி வருகிறது.

    சமீப சில வருடங்களாக போதைப்பொருள் பழக்கம் தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் வேரூன்ற தொடங்கி உள்ளது.


    2021 செப்டம்பர் 13 அன்று, பிரபல தொழிலதிபர் அதானியால் நடத்தப்படும் முந்த்ரா (Mundra) துறைமுகத்தில், 3000 கிலோகிராம் ஹெராயின் பிடிபட்டது. இதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.20,000 கோடி என கணக்கிடப்பட்டது.

    சில தினங்களுக்கு முன் குஜராத் மாநில போர்பந்தருக்கு அருகே ரூ.2000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.


    இந்தியாவிற்குள் கொண்டு வரும் போதைப்பொருட்களை, கடத்தல்காரர்கள் குஜராத் வழியாக கொண்டு வர முயல்வது தொடர்கதையாகிறது.

    குஜராத் துறைமுகத்தில் ரூ.19 ஆயிரம் கோடி, ரூ.9 ஆயிரம் கோடி, ரூ.21 ஆயிரம் கோடி, ரூ.3 ஆயிரம் கோடி, ரூ.2 ஆயிரம் கோடி, ரூ.9 ஆயிரம் கோடி என அடுத்தடுத்து வெவ்வேறு கால இடைவெளியில் ஹெராயின் பறிமுதல் செய்யப்படுவது அரசு போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லையோ எனும் சந்தேகத்தையே கிளப்புகிறது.

    என்டிபிஎஸ் (Narcotic Drugs and Psychotropic Substances) சட்டத்தின் கீழ் அதிகளவு போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட மாநிலங்களில் ராஜஸ்தான் (1 லட்சம் கிலோ) , ம.பி. (32 ஆயிரம் கிலோ) , குஜராத் (12 ஆயிரம் கிலோ), அரியானா (11 ஆயிரம் கிலோ), உ.பி. (4 ஆயிரம் கிலோ), என பெரும்பாலானவை பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த சில வருடங்களாகவே தமிழகத்திலும் போதைப்பொருள் விற்பனையும், போதை பொருள் கடத்தலும் அதிகரித்து வருவதை காட்டும் வகையில் செய்திகள் வெளிவருவது, தமிழகம் எங்கே செல்கிறது எனும் கேள்வியை எழுப்புகிறது.

    சில தினங்களுக்கு முன் ஆளும் கட்சியை சேர்ந்த ஒரு முக்கிய பிரமுகர் ரூ.2000 கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தேடப்பட்டு வரும் செய்தி வெளியானது.

    தமிழகத்தில் பள்ளியில் படிக்கும் மாணவர்களும் போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருவதாக வீடியோ காட்சிகளுடன் தொலைக்காட்சிகள் மற்றும் சமூக ஊடகங்களில் தினந்தோறும் வரும் தகவல்களை காணும் பொதுமக்கள், இந்த அபாயகரமான சிக்கலை மத்திய மாநில அரசாங்கங்கள் கண்டு கொள்ளாமல் இருக்கின்றனரா என கேள்வி எழுப்பி பதிவிட்டு வருகின்றனர்.


    தென் சென்னை வரை தென்காசி வரை போதைப்பொருள் பழக்கம் பரவியுள்ளதாகவும், பள்ளி மாணவர்களை இப்பழக்கத்திலிருந்து காப்பது பெரும்பாடாக இருப்பதாகவும் பிரபல மென்பொருள் நிறுவனமான ஜோஹோ (Zoho) நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு (Sridhar Vembu) அண்மையில் தெரிவித்தார்.

    ஒரு சில விருந்துகளிலும், கொண்டாட்டங்களிலும், கேளிக்கை நிகழ்ச்சிகளிலும் மதுபானங்களுடன் போதைப்பொருட்களும் பயன்படுத்தப்படுவதாகவும், அவற்றை பெண்களும் உபயோகிப்பதாகவும் அவ்வப்போது வரும் ஊடக சான்றுகள் எதிர்கால இந்தியா குறித்து எதிர்மறை எண்ணங்களையே விதைக்கிறது.


    கடந்த சில வருடங்களாக தமிழகம் உட்பட நாடு முழுவதும் மதுபானம், சிகரெட் போன்றவற்றை விட போதைப்பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருவது சமூக ஆர்வலர்களையும், உளவியல் நிபுணர்களையும், மூத்த குடிமக்களையும் கவலை கொள்ள செய்திருக்கிறது.


    குடிப்பழக்கம், சிகரெட் போன்றவைகளுக்கு அடிமையாகி உடல் ஆரோக்கியத்தையும், எதிர்காலத்தையும் தொலைத்த தமிழக ஆண்களும் அவர்களால் பரிதவிக்கும் குடும்பங்களும் ஏராளம்.

    இந்நிலையில், எளிதாக கிடைக்க கூடிய பொருளாக போதைப்பொருட்கள் மாறினால், அதனால் ஏற்படும் சீரழிவு "வருங்கால தூண்கள்" என கூறப்படும் எதிர்கால தலைமுறையே மீள முடியாத அழிவை சந்திக்க நேரிடும் என்பதே பல பெற்றோர்களின் கவலையாக உள்ளது.

    சிங்கப்பூர், மலேசியா போன்ற ஆசிய நாடுகளிலும், துபாய், கத்தார் உள்ளிட்ட அரபு நாடுகளிலும் போதைப்பொருள் பழக்கத்தையும், கடத்தலையும் தடுக்க கடுமையான சட்டங்களும், அவற்றை அமல்படுத்துவதில் கண்டிப்பும் கடைபிடிக்கப்படுகின்றன.


    மனித வாழ்வின் முக்கிய காலகட்டமான இளமையையே வீணடித்து, உடலாரோக்கியத்தில் எண்ணிப்பார்க்க இயலாத நாசத்தை விளைவித்து, உறவுகளால் வெறுக்கப்பட்டு, நடைபிணங்களாக வாழ வைத்து விடும் இந்த ஆபத்தான பழக்கத்திற்கு இளைஞர்களில் ஒருவர் கூட பலியாகாமல் தடுக்கும் பொறுப்பு, முழுக்க முழுக்க மத்திய-மாநில அரசுகளுக்கே உள்ளது என்பதே அரசியலுக்கு அப்பாற்பட்டு சிந்திக்கும் நடுநிலையாளர்களின் கருத்தாக உள்ளது.

    • போதைப்பொருட்களின் உறைகளில் "பாகிஸ்தானில் உற்பத்தி செய்யப்பட்டது” என எழுதப்பட்டிருந்தது
    • படகை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதில் இருந்த அனைவரையும் கைது செய்தனர்

    குஜராத் கடற்பகுதியில் இரண்டு நாட்கள் கடலில் இருந்த இந்திய கடற்படையின் (Indian Navy) கப்பல் ஒன்றில் இருந்த அதிகாரிகள், சந்தேகத்திற்கிடமான முறையில் ஒரு சிறிய கப்பல் இந்திய கடல் எல்லைக்குள் நுழைய முயன்று போது தடுத்து நிறுத்தினர்.

    இந்திய கடற்படை அதிகாரிகளுடன் இருந்த போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியக (Narcotics Control Bureau) அதிகாரிகள், அதில் இருந்த "பாகிஸ்தானியர்கள்" என சந்தேகிக்கப்படும் சிலரிடம் நடத்திய விசாரணையில், அந்த சிறிய கப்பலில், 3,300 கிலோ போதை பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்தனர்.

    கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் உறைகளில் "பாகிஸ்தானில் உற்பத்தி செய்யப்பட்டது" (Produce of Pakistan) என எழுதப்பட்டிருந்தது.

    இதில் 3,089 கிலோ கஞ்சா, 158 கிலோ, மெத்தாம்ஃபிடமைன் (methamphetamine) மற்றும் 25 கிலோ மார்ஃபைன் (morphine) ஆகியவை இருந்தது.

    சர்வதேச சந்தையில், தற்போது கைப்பற்றப்பட்ட போதை பொருட்களின் மதிப்பு ரூ.2,000 கோடிக்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

    படகை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதில் இருந்த அனைவரையும் கைது செய்தனர். அவர்கள் குஜராத் மாநில போர்பந்தர் (Porbandar) நகருக்கு கொண்டு செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

    இந்திய கடற்படையுடன் குஜராத் மாநில பயங்கரவாத எதிர்ப்பு படை (Anti-Terrorism Squad) இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

    இந்திய துணைக்கண்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட மிக பெரிய போதை பொருள் பறிமுதல் இதுதான் என கூறப்படுகிறது.

    இந்த போதை பொருள் கடத்தல் முயற்சியை கண்டுபிடித்து தடுத்து நிறுத்திய அதிகாரிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டினார்.


    • பாகிஸ்தானைச் சேர்ந்த ஐந்து பேர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • போதைப்பொருள் இல்லாத நாடு என்ற நம்முடைய அரசின் உறுதிப்பாட்டிற்கு இந்த சாதனை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு- அமித் ஷா.

    பாகிஸ்தான் நாட்டில் இருந்து தரைவழி, கடல்வழி, வான்வழியாக இந்திய எல்லைக்குள் போதைப்பொருட்கள் கடத்தப்படும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது.

    கடவழியாக போதைப்பொருட்கள் கடத்துவதை தடுப்பதற்காக இந்திய கடற்படை கப்பல்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன. குஜராத் எல்லையில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவல் அடிப்படையில் இந்திய கடற்படை, இந்திய போதைப்பொருள் தடுப்பு அமைப்பு, குஜராத் காவல்துறை ஆகியவை இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது சிறிய வகை கப்பல் ஒன்று குஜராத் எல்லையில் செல்வதை கடற்படையினர் கண்டுபிடித்தனர். உடனடியாக அந்த சிறிய வகை கப்பலை சுற்றி வளைத்து சோதனை செய்தனர்.

    அப்போது சுமார் 3,300 கிலோ எடை கொண்ட போதைப்பொருட்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த கப்பலில் இருந்த ஐந்து பேர் இருந்தனர். விசாரணையில் அவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்தது. அவர்களையும் அதிகாரிகள் கைது செய்தனர்.

    சமீபத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மிகப்பெரிய அளவிலான சம்பவம் இது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கடந்த வாரம் புனே, டெல்லியில் நடைபெற்ற மிகப்பெரிய சோதனையில் 2500 கோடி ரூபாய் அளவிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஒரு வாரத்திற்குள் தற்போது மிகப்பெரிய அளவில் பொதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    "போதைப்பொருள் இல்லாத நாட்டை உருவாக்குவதில் உறுதிப்பூண்டுள்ள நம்முடைய அரசின் உறுதிப்பாட்டிற்கு இந்த சாதனை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இந்த நேரத்தில் தேசிய போதைப்பொருள் தடுப்பு முகமை, கடற்படை, குஜராத் காவல்துறைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    • தாம்பரம் பகுதியை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவரின் தொலைபேசி எண்ணை வைத்து போலீசார் அவரை தேடி வந்தனர்.
    • போதைப்பொருள் விற்பனையில் சம்பந்தப்பட்ட முகமது ரபிக் மற்றும் யூனுஸ் ஆகியோரை தேடி வருகின்றனர்.

    தாம்பரம்:

    தாம்பரம் ஓஎம்ஆர், கிழக்கு கடற்கரை சாலை, திருவல்லிக்கேணி மற்றும் மயிலாப்பூர் ஆகிய பகுதிகளில் ஐ.டி. ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்வதாக தாம்பரம் பகுதியில் உள்ள சங்கர் நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் தாம்பரம் பகுதியை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவரின் தொலைபேசி எண்ணை வைத்து போலீசார் அவரை தேடி வந்தனர்.

    அப்போது அவர் சென்னை மெரினா கடற்கரையில் இருப்பது தெரியவந்தது. பின்பு சங்கர் நகர் போலீசார் மெரினா கடற்கரையில் அவரை பிடித்து விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணான தகவலை தெரிவித்தார். சந்தேகம் அடைந்த போலீசார் அவரது இருசக்கர வாகனம் மற்றும் கையில் வைத்திருந்த பையை சோதனை செய்து பார்த்தபோது இந்தியாவில் தடை செய்யப்பட்ட போதைப்பொருளான மெத்தமெட்டமைன் வைத்திருந்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து சூரியமூர்த்தியிடம் போலீசார் விசாரித்தபோது கொடுங்கையூரை சேர்ந்த யூனுஸ் என்ற நபரிடம் இருந்து போதைப்பொருளை வாங்கி சூரியமூர்த்தியும், சென்னை ஜாம்பஜாரை சேர்ந்த முகமது ரபீக் என்பவரும் தாம்பரம் ஓஎம்ஆர், கிழக்கு கடற்கரை சாலை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் ஆகிய இடங்களில் உள்ள ஐ.டி. ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து சூரியமூர்த்தியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த ரூ.1 கோடியே 80 லட்சம் மதிப்பிலான 5 கிலோ 800 கிராம் எடை கொண்ட மெத்தபெட்டமைன் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். மேலும் போதைப்பொருள் விற்பனையில் சம்பந்தப்பட்ட முகமது ரபிக் மற்றும் யூனுஸ் ஆகியோரை தேடி வருகின்றனர்.

    • தண்ணீர் கேன்களில் நிரப்பி கொண்டு வந்தது, கொக்கேன் ரக போதை பவுடராக இருக்கலாம் என தெரியவருகிறது.
    • குஜராத் மாநிலத்தில் இருந்து உரம் என்று சென்னை வழியாக கொண்டு வந்திருக்கிறார்கள்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை கடற்கரை சாலையில் நேற்று முன்தினம் இரவு கடலோர போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அந்த காரில் 25 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் கேன்கள் 30 இருந்தன. அதில் அனைத்து கேன்களிலும் வெள்ளை நிற பவுடர் நிரப்பப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அந்த கேன்களை திறந்து அதில் இருந்த பவுடரை எடுத்து சோதித்தனர். அது போதை பவுடர் என தெரியவந்ததால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

    அந்த போதை பவுடரை காரில் ஏற்றி வந்ததாக கீழக்கரை சங்கிலி தெருவை சேர்ந்த நகராட்சி முன்னாள் துணைத்தலைவர் ஜெய்னுதீன் (வயது 45), அவரது தம்பி கவுன்சிலர் சப்ராஸ் நவாஸ்(42) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். போதை பவுடர் கேன்கள், அதை ஏற்றி வந்த ஆடம்பர கார் பறிமுதல் செய்யப்பட்டன. பிடிப்பட்ட போதை பொருள் ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

    இதுதொடர்பான விசாரணையில் கிடைத்த தகவல்கள் குறித்து போலீசார்கூறியதாவது:-

    தண்ணீர் கேன்களில் நிரப்பி கொண்டு வந்தது, கொக்கேன் ரக போதை பவுடராக இருக்கலாம் என தெரியவருகிறது. இதன் மதிப்பு ரூ.300 கோடி இருக்கும். இலங்கைக்கு கடத்துவதற்காக நூதன முறையில் தண்ணீர் கேன்களில் அடைத்து வேதாளை கடற்கரை பகுதிக்கு காரில் கொண்டு வந்துள்ளனர். இந்த கடத்தல் முயற்சியில் தொடர்புடைய மேலும் சிலரை தேடிவருகிறோம். இவர்கள் ஏற்கனவே இதுபோன்று போதை பொருளை இலங்கைக்கு கடத்தி இருக்கிறார்களா? இலங்கையில் யாருக்கு அனுப்பி வைக்க இருந்தார்கள்? என்பது தொடர்பான தகவல்கள் விரைவில் தெரியவரும். குஜராத் மாநிலத்தில் இருந்து உரம் என்று சென்னை வழியாக கொண்டு வந்திருக்கிறார்கள். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கானத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் போதை பொருள் நடமாட்டம் இருப்பதாக தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜுக்கு தகவல் கிடைத்தது.
    • கடந்த 9 மாதங்களாக சென்னை வேளச்சேரி பாரதி நகர் கோதாவரி தெருவில் நைஜீரிய பெண் தங்கி உள்ளார்.

    ஆலந்தூர்:

    சென்னையை அடுத்த கானத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் போதை பொருள் நடமாட்டம் இருப்பதாக தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜுக்கு தகவல் கிடைத்தது.

    அவரது உத்தரவின்பேரில் மதுவிலக்கு உதவி கமிஷனர் ரவிச்சந்திரன், பள்ளிக்கரணை மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் கானத்தூர் சுங்கச்சாவடி அருகே தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆட்டோவில் இருந்து இறங்கிய வெளிநாட்டு பெண் ஒருவர் அங்கிருந்த நபரிடம் ஏதோ ஒரு சிறு பொட்டலத்தை கொடுப்பதை கண்ட போலீசார், அவரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அந்த பெண், நைஜீரியா நாட்டை சேர்ந்த ஆன்யனி மோனிகா (வயது 30) என தெரியவந்தது.

    இவர், கடந்த 9 மாதங்களாக சென்னை வேளச்சேரி பாரதி நகர் கோதாவரி தெருவில் தங்கி உள்ளார். தனது சகோதரரின் புற்றுநோய் சிகிச்சைக்காக நைஜீரியாவில் இருந்து மும்பையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு வந்தார். வந்த இடத்தில் வேலை எதுவும் இல்லாததால் செலவுக்கு பணம் தேவைப்பட்டது. அப்போது ஒருவர், கொக்கைன் போதை பொருளை சென்னையில் விற்பனை செய்து கொடுத்தால் பணம் தருவதாக கூறியதால், சென்னையில் தங்கி போதை பொருள் விற்பனை செய்தது தெரிந்தது.

    ஒரு கிராம் ரூ.2 ஆயிரத்துக்கு வாங்கி வந்து ரூ.5 ஆயிரத்துக்கு விற்பதாகவும் கூறினார். அவரிடம் இருந்த கைப்பையை போலீசார் சோதனை செய்தபோது அதில் தலா ஒரு கிராம் வீதம் 72 சிறு கொக்கைன் பாக்கெட்டுகள் இருந்தன. அவற்றுடன், கொக்கைன் விற்ற ரூ.2 லட்சத்து 50 ஆயிரம், ஒரு செல்போன் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.5 லட்சத்து 75 ஆயிரம் ஆகும்.

    இது குறித்து கானத்தூர் போலீசார் வழக்குப்பதிவு நைஜீரியா நாட்டு பெண்ணை கைது செய்து விசாரித்து வருகின்றனர். திறம்பட செயல்பட்டு கொக்கைன் போதை பொருளை கைப்பற்றி, நைஜீரிய நாட்டு பெண்ணை கைது செய்த தனிப்படை போலீசாரை தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் பாராட்டினார்.

    • முஸ்தபா ஸ்டானிக்சாய், ரஹிமுல்லா ரஹிமி என்ற அந்த இருவரும் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
    • 16 மூட்டைகளில் மெத்தாம்பெட்டமைன் என்ற போதைப்பொருள் இருந்தது. அதன் மொத்த எடை 311.4 கிலோ ஆகும்.

    புதுடெல்லி:

    ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 2 பேர், காரில் டெல்லிக்கு போதைப்பொருளை கடத்திவருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வலை விரித்த போலீசார், டெல்லியின் காலிண்டி கஞ்ச் பகுதியில் அவர்களை மடக்கிப்பிடித்தனர்.

    முஸ்தபா ஸ்டானிக்சாய், ரஹிமுல்லா ரஹிமி என்ற அந்த இருவரும் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

    அவர்களில் ஒருவரிடம் இருந்து 1.360 கிலோ, மற்றொருவரிடம் இருந்து சுமார் 1 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

    அவர்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் மற்றொரு வாகனமும் மடக்கப்பட்டது. அதில் 16 மூட்டைகளில் மெத்தாம்பெட்டமைன் என்ற போதைப்பொருள் இருந்தது. அதன் மொத்த எடை 311.4 கிலோ ஆகும்.

    அந்த ஆப்கானியர்கள் தெரிவித்த தகவலின்படி, உத்தரபிரதேசத்தின் நொய்டாவில் மேலும் மெத்தாம்பெட்டமைனும், ஹெராயினும் கைப்பற்றப்பட்டன. மொத்தம் 312.5 கிலோ மெத்தாம்பெட்டமைனும், 10 கிலோ ஹெராயினும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அதன் சர்வதேச மதிப்பு 1,200 கோடி ரூபாய் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

    ×