என் மலர்
ஈரோடு
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தலமலை வனப்பகுதியில் மாரிகுடி என்ற இடத்தில் ஆண் புலி இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து சத்தியமங்கலம் புலிகள் காப்பக இணை இயக்குநர் அருண்லால், ஆசனூர் புலிகள் காப்பக இணை இயக்குநர் பத்மா, கால்நடை டாக்டர் மனோகரன் ஆகியோர் அங்கு சென்றனர்.
புலி உடலை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது விஷம் வைத்து கொல்லப்பட்ட காட்டெருமை உடலை புலி தின்றதால் இறந்திருப்பது தெரியவந்தது. எனவே காட்டெருமையை விஷம் வைத்து கொன்ற மர்ம நபர்கள் யார்? என்பது தொடர்பான விசாரணையில் வனத்துறையினர் இறங்கினர்.
அப்போது வனத்தையொட்டியுள்ள பெஜலட்டி கிராமத்தை சேர்ந்த ஜடைசி, முத்துச்சாமி, வேல்முருகன், சிவாஜி ஆகிய 4 பேர் சந்தேகத்தின் பேரில் வனத்துறையினரிடம் சிக்கினர். அவர்களிடம் விசாரித்தபோது நூதன முறையில் அவர்கள் புலியை வேட்டையாடியது தெரியவந்தது.
முதலில் காட்டெருமையை விஷம் வைத்து கொல்வார்கள். அதன் உடலை தின்னும் புலி இறந்து விடும். அந்த புலியின் பற்கள், நகங்கள் ஆகியவற்றை எடுத்து விட்டு புலி உடலை வனப்பகுதியில் புதைத்து விடுவார்கள்.
இந்த நூதன முறையைத் தான் வனத்துறையினரிடம் சிக்கிய ஜடைசி, முத்துச்சாமி, வேல்முருகன், சிவாஜி ஆகிய 4 பேர் உள்பட 9 பேர் கும்பல் கையாண்டுள்ளது. காட்டெருமையை விஷம் வைத்து கொன்று போட்டு விட்டு அவர்கள் புலிக்காக புதர் மறைவில் காத்திருந்துள்ளனர்.
அப்போதுதான் 8 வயது ஆண் புலி அங்கு வந்து காட்டெருமை உடலை தின்றது. இதனால் அந்த புலி இறந்தது. இதைத்தொடர்ந்து புலியின் பற்கள், நகங்களை எடுத்துக் கொண்டு உடலை அதே இடத்தில் புதைத்ததை 4 பேரும் ஒப்புக்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து ஜடைசி, முத்துச்சாமி, வேல்முருகன், சிவாஜி ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அளித்த தகவலின்பேரில் மேலும் 5 பேரை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கைதானவர்களிடம் இருந்து புலியை கொல்வதற்கு பயன்படுத்தப்பட்ட அரிவாள், விஷம் அடங்கிய ஒரு பாட்டில் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டதால் புலி கொல்லப்பட்டாலோ அல்லது உயிரிழந்தாலோ டெல்லி தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்திடம் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்.
இதன்படி சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அளித்த தகவலின்படி தேசிய புலிகள் காப்பக பாதுகாப்பு ஆணைய பிரதிநிதி கிருஷ்ணகுமார், உலகளாவிய நிதியகத்தின் பிரதிநிதி விஜய் மற்றும் வன ஆர்வலர்கள் ஆகியோர் புலி கொல்லப்பட்ட இடத்தை ஆய்வு செய்தனர்.
பின்னர் புலியின் உடற்கூறுகள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அதே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் வனப் பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகிறது. தற்போது நிலவி வரும் கடும் வறட்சியால் உணவு மற்றும் தண்ணீர் தேடி யானைகள் கூட்டம் கூட்டமாக வெளியேறி ஊருக்குள் புகுந்து விடுகிறது.
பவானிசாகர் அணையும் வறண்டு போய் விட்டதால் எங்கேயாவது சிறிதாவது தண்ணீர் இருக்காதா? என யானைகள் பட்டாளம் பவானிசாகர் அணைக்குள் சுற்றி திரிகிறது.
இதில் ஒரு யானை புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள நால்ரோடு பகுதிக்கு நுழைந்தது. அங்கு செல்வம் என்பவரது வாழை தோட்டத்துக்குள் அந்த ஒற்றை யானை புகுந்தது.
தோட்டத்தில் உள்ள 200 வாழைகளை அந்த யானை மிதித்தும் தின்றும் நாசப்படுத்தியது. பிறகு அந்த யானை அதிகாலையில் அங்கிருந்து காட்டுக்குள் நுழைந்தது.
இன்று தோட்டத்துக்கு வந்த விவசாயி செல்வம் 200-க்கும் மேற்பட்ட வாழைகள் உருக்குலைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். செய்வதறியாது திகைத்தார். இது குறித்து பவானிசாகர் வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தற்போது மீண்டும் யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்வதால் விவசாயிகள் மிகவும் வேதனையுடன் உள்ளனர்.
“யானைகளை ஊருக்குள் விடாமல் தடுக்க வேண்டும். யானைகளால் சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்” என விவசாயிகள் கேட்டுள்ளனர்.
சென்னிமலை:
சென்னிமலையில் பாட்டில் விலையினை விட அதிக விலைக்கு பிராந்தி விற்பதாக கூறி மது குடிப்பவர்கள் ஒருங்கிணைந்து விற்பனையாளர்களை மிரட்டி மது கடையினை மூடி தகராறு செய்தனர்.
பரபரப்பான இந்த சம்பவம் பற்றிய விபரம் வருமாறு:-
ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியில் 6 மது கடைகள் மூடப்பட்டு விட்டது எந்த கடையினையும் பொதுமக்கள் மாற்று இடத்தில் திறக அனுமதிக்க வில்லை தற்போது டவுன் பகுதியில் ஊத்துக்குளி ரோடு, அரச்சலூர் ரோடு என இரண்டு இடத்தில் தான் கடை உள்ளது.
இந்த கடைகள் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ளது இதையும் அகற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்து போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் அரச்சலூர் ரோட்டில் உள்ள கடையில் நேற்று மாலை 6 மணிக்கு குடிமகன்கள் திரண்டு வந்தனர். கேட்டும் சரக்கு கொடுப்பதில்லை அதுவும் குவாட்டர் பாட்டிலுக்கு ரூ.10, பீர் பாட்டிலுக்கு ரூ.20 அதிகம் பெறுகிறாய் என புகார் கூறி கடையில் விற்பனையில் இருந்த சேல்ஸ்மேன் மற்றும் சூப்பர்வைசரிடம் தகராறு செய்தனர். பிறகு அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி கடையினை மூடி விட்டனர்.
இதற்கு இப்பகுதி மக்களும் ஆதரவு கொடுத்தனர். இது குறித்து டாஸ்மாக் கடை விற்பனையாளர்கள் சென்னிமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் வெங்கடாச்சலம் ‘குடி’ மகன்களிடம் சமதானம் பேசி மீண்டும் கடையினை திறந்தனர் இனி மேல் இங்கு பாட்டில் விலையினை விட அதிகம் கேட்க மாட்டார்கள் என குடி மக்களுக்கு வாக்குறுதி கொடுத்தும் விற்பனையாளர், சூப்பர் வைசர்களிடம் அதிக விலைக்கு விற்பனை செய்ய வேண்டாம் என கண்டிப்பு காட்டியும் சென்றார்.
இதனால் குடி மகன்களுக்கு ஏக கொண்டாட்டம். இந்த மது கடையினை அப்புறப்படுத்த கோரி விரைவில் மாபெரும் போராட்டம் வெடிக்கும் என மக்கள் சபதம் எடுத்து உள்ளனர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் விழா நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி பக்தர்கள் நேற்று காலை காவிரி ஆற்றிற்கு சென்று தீர்த்தக்குடம் எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் முனியப்பசாமிக்கு அபிஷேகம் நடந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மேலும், பக்தர்கள் பலர் அலகு குத்தி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து சாமியை வழிபட்டனர். பிறகு கோவிலில் உள்ள அரிவாளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் அந்த அரிவாளை பக்தர்கள் பிடித்துக்கொண்டனர். அந்த அரிவாள் மீது பூசாரி கருப்பசாமி ஏறி நின்று அருள்வாக்கு கூறினார். அப்போது ஏராளமான பக்தர்கள் பூசாரியிடம் அருள்வாக்கு கேட்டனர்.
விழாவில் பக்தர்கள் கிடா பலியிட்டு வேண்டுதலை நிறைவேற்றினார்கள். திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (வியாழக்கிழமை) மாலை நடக்கும் மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.
முதல்-அமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தவர் தோப்பு வெங்கடாச்சலம்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ.வான இவர் ஈரோடு மாவட்டத்தில் ஒரே அமைச்சராக இருந்தார். இதனால் ஈரோடு மாவட்டத்தில் செல்வாக்கு மிக்கவராகவும் திகழ்ந்தார்.
தொடர்ந்து 2-வது முறையாக ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்ற பிறகு தனக்கு மீண்டும் அமைச்சர் பதவி கிடைக்கும் என்று அசைக்க முடியாத நம்பிக்கையில் இருந்தார். பெருந்துறை தொகுதியில் மீண்டும் தோப்பு வெங்கடாச்சலம் அமோக வெற்றி பெற்றதையொட்டி அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என அவரது ஆதரவாளர்களும் நம்பிக்கையுடன் இருந்தனர்.
ஆனால் அவருக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பு அதே சுற்றுச்சுழல் துறை அமைச்சர் பதவி பவானி தொகுதி எம்.எல்.ஏ கே.சி.கருப்பணனுக்கு வழங்கப்பட்டது. இதற்கு அப்போதைய நெடுஞ்சாலை துறை அமைச்சரும் இப்போது முதல்-அமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி காரணம் என்று கூறப்பட்டது.
தனக்கு கிடைக்க வேண்டிய அமைச்சர் பதவி நழுவி கருப்பணன் கைக்கு போய் விட்டதே என்று அப்போதே தோப்பு வெங்கடாச்சலம் இடிந்து போய்விட்டார். எனினும் அப்போது ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்ததால் வேறு வழியின்றி அமைதியாக இருந்து விட்டார். வழக்கம்போல் கட்சி பணி மக்கள் பணி என்று சுறுசுறுப்பாகத்தான் இருந்தார்.
ஆனால் முதல்- அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கொங்கு மண்டலத்தில் மதிப்புமிக்க நபராக கே.ஏ.செங்கோட்டையன் திகழ்ந்தார். அவரை நம் பக்கம் வைத்து கொள்ள வேண்டும் என டி.டி.வி.தினகரனும் சசிகலாவும் நினைத்தனர். இதனால் புதிய மந்திரி சபையில் அவருக்கு பள்ளி கல்விதுறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. கட்சியிலும் சரி ஆட்சியிலும் சரி எந்த ஒரு கூட்டத்திலும் சரி எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்த இடத்தில் கே.ஏ.செங்கோட்டையன் காணப்பட்டார். மீண்டும் அவரது செல்வாக்கு பல மடங்கு உயர்ந்தது.
இப்படி செங்கோட்டையனின் வளர்ச்சி ஈரோடு மாவட்டத்தில் ஒரே அமைச்சராக இருந்த பெருந்துறை எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாச்சலத்துக்கு கலக்கத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.
புதிய மந்திரி சபையில் தனக்கு மீண்டும் அமைச்சர் பதவி கிடைக்கும் என்று நம்பி இருந்த தோப்பு வெங்கடாச்சலத்துக்கு பெருத்த ஏமாற்றத்தையும் கொடுத்தது.
இதை வெளி காட்டத்தான் ஈரோட்டில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்ட கல்லூரி விழாவை புறக்கணித்தார். இத்தனைக்கும் அவர் பெருந்துறையில்தான் இருந்தார். இதனால் எடப்பாடிக்கு எதிராக அவர் போர்க்கொடி தூக்கி இருப்பது உறுதியாகி விட்டது.
இதற்கிடையே மேலும் நெருக்கடி கொடுக்க தயாரான தோப்பு வெங்கடாச்சலம் தற்போது கொங்கு மண்டலத்தை சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்களை தனக்கு ஆதரவாக சேர்த்து அரசுக்கு எதிராக கொம்பு சீவி வருகிறார்.
ஈரோடு மாவட்டத்தில் தோப்பு வெங்கடாச்சலத்துடன் சேர்த்து மொத்தம் 8 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இவர்களில் இவருக்கு ஆதரவாக 2 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கூறினர். அவர்களில் ஒருவருக்கு தொகுதியில் போட்டியிட மேலிடத்திடம் சீட்டு வாங்கி கொடுத்தாராம். மேலும் இன்னொரு எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலத்தின் நண்பர் ஆவார்.
மேலும் தோப்பு வெங்கடாச்சலத்துடன் சேர்ந்து வெளியேற கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு முக்கிய எம்.எல்.ஏ.வும் இருப்பதாக கூறுகிறார்கள். இவர் முன்னாள் அமைச்சராகவும் இருந்தார். அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி போராட்டத்திலும் குதித்தவர்.
தோப்பு வெங்கடாச்சலத்திடம் முதலில் 5 எம்.எல்.ஏ.க்கள் இருந்ததாகவும் இப்போது அதிகமாகி 15 எம்.எல்.ஏ.க்கள் மறைமுக ஆதரவு தர இருப்பதாகவும் அவரது ஆதரவாளர்கள் கூறி உள்ளனர். இப்படி தனக்கு என்று ஆதரவு பட்டாளத்தை திரட்டி வரும் அவர் எப்போது கோதாவில் இறங்கப் போகிறாரோ... அப்போது தமிழக அரசியலில் சூறாவளி புயலை உண்டாக்கும் எனவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
ஈரோடு:
மருத்துவ பட்ட மேற்படிப்பில் அரசு டாக்டர்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு வழங்க கோரி அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் டாக்டர்கள் கடந்த 20-ந் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகிறார்கள். 20-ந் தேதி 2 மணி நேர வேலை புறக்கணிப்பு போராட்டமும், 21, 22-ந தேதிகளில் தர்ணா போராட்டமும் நடத்தினர்.
24-ந் தேதி ஒட்டுமொத்த விடுப்பு எடுத்து போராட்டமும், 25,26-ந் தேதிகளில் தர்ணா போராட்டமும் நடந்தது. கடந்த 27-ந் தேதி அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் விடுப்பு எடுத்து போராட்டம் செய்தனர்.
28-ந் தேதி ஈரோடு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் டாக்டர்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். நேற்று அரசு டாக்டர்கள் ஆஸ்பத்திரி வளாகம் முன்பு அமர்ந்து கோரிக்கை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தனர். இன்று (புதன்கிழமை) அவர்கள் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதில் ஏராளமான அரசு டாக்டர்கள் கலந்து கொண்டனர்.
டாக்டர்கள் போராட்டம் பற்றி தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் கூறியதாவது:-
“கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடந்து வருகிறது. வருகிற 5,6-ந் தேதிகளில் சென்னையில் மருத்துவ கல்வி இயக்குநர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடக்கிறது.
இந்த போராட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து டாக்டர்கள் வந்து கலந்து கொள்கிறார்கள். வருகிற 8-ந் தேதி ஈரோடு மாவட்டம் முழுவதும் டாக்டர்கள் ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்துகிறார்கள்”
இவ்வாறு அவர் கூறினார்.
அம்மாபேட்டை:
ஈரோடு மாவட்டம் அம்மபேட்டை அருகேஉள்ள பூனாட்சி புதுவலவு காலனியை சேர்ந்தவர் வேலு (வயது 35). கட்டிட கூலித் தொழிலாளி. இவரது மனைவி பெயர் ஈஸ்வரி.
வேலு நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை அடுத்த தட்டாங்குட்டையில் உள்ள தனது மாமனார் வீட்டில் குடும்பத்துடன் தங்கி அப்பகுதியில் கட்டிட வேலைக்கு சென்று வந்தார்.
அவர் வேலை செய்யும் இடத்தில் சுமதி (30) என்ற பெண் சித்தாள்ஆக வேலை பார்த்தார். இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பிறகு இதுகள்ளக்காதலாக மாறியது. இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்து வந்தனர். இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் வெளி உலகுக்கு தெரியவந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கள்ளக்காதல் ஜோடி மோட்டார் சைக்கிளில் ஈரோடு வந்தனர். பஸ் நிலையம் அருகே உள்ள இருசக்கர வாகன ஸ்டேண்டில் வண்டியை நிறுத்திய அவர்கள் பிறகு பஸ்சில் அம்மாபேட்டை வந்தனர்.
பிறகு அங்கிருந்து பூனாட்சி ஏரிக்கரைக்கு சென்ற கள்ளக்காதல் ஜோடி ஈரோட்டில் வாங்கி வந்த விஷத்துடன் சர்க்கரையும் கலந்து குடித்தனர்.
சிறிது நேரத்தில் இருவரும் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர். நேற்று இரவு அவர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளனர்.
இன்று காலை ஏரிக்கரை வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து அம்மா பேட்டை போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
உடனே சம்பவ இடத்துக்கு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர். அங்கு விசாரணை நடத்திய சப்-இன்ஸ்பெக்டர் பிறகு இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
இது குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தங்களின் கள்ளக்காதல் விவகாரம் இருவரது வீட்டுக்கும் தெரிந்து விட்டதால் மனம் உடைந்து கள்ளக்காதல் ஜோடி தற் கொலை செய்திருக்கலாம் என கருதப்படுகிறது.
சென்னிமலை அடுத்த ஈங்கூர் பஞ்சாயத்தின் கிராம சபை கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஹேமலதா தலைமையில் நடைபெற்றது. இதில் ஈங்கூரை சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.
அப்போது சிப்காட் செல்லும் வழியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என கிராம சபையில் தீர்மானத்தில் சேர்க்க கோரி பெண்கள் வலியுறுத்தினார்கள். ஆனால் இதற்கான அதிகாரம் எங்களுக்கு இல்லை என வட்டார வளர்ச்சி அலுவலர் மறுத்து விட்டார்.
இதனை ஏற்று கொள்ள மறுத்த பெண்கள் ஈங்கூரின் முக்கிய இடமான நால்ரோடு சந்திப்பில் சென்னிமலை- பெருந்துறை மெயின் ரோட்டில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது பற்றிய தகவல் கிடைத்ததும் சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், பெருந்துறை மண்டல துணை தாசில்தார் முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது பெண்கள் ‘‘ஈங்கூர் சிப்காட் சாலையில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் மேலும் வங்கிகள் மற்றும் மருத்துவமனைகள் உள்ள அதே பகுதியில் மதுபான கடையும் உள்ளதால் குடிமகன்களால் தொல்லை ஏற்படுகிறது.
பெருந்துறை டவுன் பகுதியில் கடை இல்லாத காரணத்தால் அந்த பகுதி மது பிரியர்களும் ஈங்கூர் மது கடைக்கு படை எடுப்பதால் இங்கு எப்போதும் கூட்டம் அலை மோதுகிறது. மேலும் அடிக்கடி குடிபோதையில் தகராறு செய்து கொண்டிருப்பதால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அதனால் அந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்’’ என்று ஆவேசமாக கூறினர்.
இதுகுறித்து மண்டல துணை தாசில்தார் டாஸ்மாக் அதிகாரிகளிடம் பேசி 15 நாட்களில் கடையை அகற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்வதாக உறுதியளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பெண்கள் சாலை மறியலை கைவிட்டு சென்றனர்.
பெருந்துறையில் அ.தி.மு.க.சார்பில் மே தின விழா நடந்தது. இதையொட்டி பெருந்துறை கட்சி அலுவலகத்தில் இருந்து மே தின பேரணி தொடங்கியது.
இதில் முன்னாள் அமைச்சரும், பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ.வுமான தோப்பு வெங்கடாச்சலம் கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்து நடந்து சென்றார். பேரணி முக்கிய வீதிகளின் வழியாக சென்று பழைய பஸ் நிலையத்தை அடைந்தது. அங்கு தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சி தமிழகத்தை பீடு நடை போட்டு கொண்டு சென்றது. ஜெயலலிதாவின் திட்டங்களை இந்தியாவே உற்று கவனித்தது. அப்படி ஒரு சிறந்த ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருந்தது. ஆனால் இப்போது உள்ள சூழ்நிலை கவலை அளிக்கக்கூடியதாக உள்ளது.
இப்போது உள்ள நிலையில் அ.தி.மு.க.வை நாம் காப்பாற்ற வேண்டும். பிரிந்தவர்கள் மீண்டும் சேர வேண்டும். இரு அ.தி.மு.க. அணிகளும் ஓரணியில் இணைய வேண்டும்.
இப்போது புரட்சித்தலைவி மீட்டெடுத்த இரட்டை இலை சின்னத்தை காப்பாற்ற வேண்டும். அ.தி. மு.க. மீண்டும் வலுபெற வேண்டும். அதற்காக இரு அணி தலைவர்களும் பிரமுகர்களும் தங்களுக்குள் உள்ள கருத்து வேறு பாட்டை மறந்து விருப்பு வெறுப்பை துறந்து இணைந்து செயல்பட்டு புரட்சித்தலைவியின் இரட்டை இலை சின்னத்தை மீட்க வேண்டும். இதை அனைவரும் லட்சியமாக கொண்டு செயல்பட வேண்டும்.
அ.தி.மு.க. ஆட்சி தொடர்ந்து 4 ஆண்டுகள் நீடிக்கும். அடுத்த தேர்தலிலும் மற்ற கட்சிகளை தலை தூக்கவிடாமல் அ.தி.மு.க.வே மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும். இதுதான் எனது ஆசை.
இவ்வாறு தோப்பு வெங்கடாச்சலம் பேசினார்.
கோவை மாவட்டம் சூலூரை அடுத்த காசிபாளையம் பகுதியை சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளர்கள் தங்கள் ஆடுகளை ஈரோடு மாவட்டம் கொடிவேரி, மாக்கினாம்கொம்பை, அரசூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மேய்த்து வருகிறார்கள்.
வழக்கம்போல இன்று காலை கோபி அடுத்த காசிபாளையத்தில் இருந்து கொடிவேரிக்கு மேய்ச்சலுக்காக ஆடுகளை அழைத்து வந்தனர். மருதாசலம் (வயது 52) உள்பட 6 பேர் ஆட்டு மந்தையை ரோட்டின் ஓரமாக ஓட்டி வந்தனர்.
ஈரோடு-சந்தி ரோட்டில் கொடிவேரி அணை பிரிவு அருகே சென்றபோது சத்திய மங்கலத்தில் இருந்து கோபி நோக்கி வந்த மினி வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடி ஆட்டு மந்தைக்குள் புகுந்தது.
இதை சற்றும் எதிர்பாராத தொழிலாளர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். ஆடுகளும் ஆங்காங்கே சிதறி ஓடின. ஆனாலும் மந்தைக்குள் புகுந்த வேகத்தில் ஏராளமான ஆடுகள் மினி வேன் சக்கரத்தில் சிக்கின.
கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் 40 ஆடுகள் உடல் சிதறி ரத்த வெள்ளத்தில் பலியாகின. மந்தையை ஓட்டி வந்த மருதாசலம் மீதும் மினி வேன் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட மருதாசலம் அதே இடத்தில் பலியானார். மற்ற 5 தொழிலாளர்களும் சுதாரித்துக் கொண்டு ஓட்டம் பிடித்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இந்த விபத்தில் பலியான ஆடுகளின் மொத்த மதிப்பு ரூ. 4 லட்சம் இருக்கும். இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த விபத்து இன்று காலை அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தங்கள் கண் முன்பே மினி வேனில் சிக்கி பலியான சக தொழிலாளி மருதாசலம் மற்றும் ஆடுகள் பலியானதை கண்டு ஆடு மேய்க்கும் தொழிலாளர்கள் கண்ணீர் வடித்ததை பார்க்க பரிதாபமாக இருந்தது.
கோபி:
கோபி அரசு போக்குவரத்து கிளை அலுவலகம் முன் இன்று மே தின விழா நடந்தது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு மே தின கொடி ஏற்றி பேசினார்.
அரசு பஸ் டிரைவர்-கண்டக்டர்களுக்கு ஓய்வூதியம் இன்னும் கிடைக்கவில்லை என்கிறார்கள். இன்னும் 6 மாதத்தில் அவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கும். தொழிலாளர் நலன் காக்க இந்த அரசு பாடுபடும். பள்ளி கல்வித்துறை மறுமலர்ச்சி துறையாக மாற்றி அமைக்கப்படும்.
பள்ளி மாணவ- மாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த கார்டில் மாணவர்கள் பற்றிய அனைத்து விவரமும் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதை தொடர்ந்து அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறும் போது, ‘‘மறைந்த முதல்வர் ஜெயலலிதா வகுத்த அரசு திட்டங்கள் தொடர்ந்து செயல் படுத்தப்படும். நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம்’’ என்று கூறினார்.
ஈரோட்டில் நடந்த ஒரு கல்லூரி விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு பேசினார்.
மாணவர்கள் தவறான வழிக்கு செல்லாத வகையில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் இணைந்து செயலாற்ற வேண்டும். ஆசிரியர்- மாணவர்-பெற்றோர் உறவு ஒரு முக்கோண தத்துவத்தை போன்றது. ஒருவரையொருவர் புரிந்து அன்போது சகிப்புத்தன்மையோடு வாழ்ந்தால் மாணவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் உண்டு.
தமிழகம் வீறு பெற்று உலக அரங்கில் தனி சிறப்புடன் விளங்க வேண்டும் என்றால் உயர்கல்வி வளர்ச்சி பெற வேண்டும். அந்த வகையில் மறைந்த ஜெயலலிதா தொலைநோக்கு பார்வையுடன் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார்.
இங்கே இருக்கிற நான் மேலும் மற்ற அமைச்சர்கள் எல்லாம் விவசாய குடும்பங்களை சேர்ந்தவர்கள். எங்களது கடின உழைப்பால் இன்று உயர்ந்த நிலையை அடைந்திருக்கிறோம். உழைத்தால் வெற்றி கிடைக்கும் என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். நான் படிக்கும்போது எனது சொந்த ஊரிலிருந்து 35 கி.லோ மீட்டர் தூரம் கடந்து கல்லூரிக்கு வர வேண்டும். அதுவும் காவிரி ஆற்றை கடந்துதான் வர வேண்டும். அப்போது பாலமோ அதிக சாலை வசதியோ கிடையாது. ஆனால் இப்போதோ 3 நிமிடத்துக்கு ஒரு பஸ் வருகிறது.
தமிழ்நாட்டில் இப்போது உயர் கல்வி பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பள்ளி முதல் கல்லூரி வரை மாணவர்களுக்கு பல்வேறு அரசு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. கல்விக்காக அதிக அளவில் அரசு நிதி ஒதுக்கி உள்ளது. இதனால் தமிழகத்தில் கல்லூரியில் புரட்சி-மறுமலர்ச்சி ஏற்பட்டு உள்ளது.
பெண்கள் அதிக அளவில் பட்டம் பெறும் மாநிலமாக தமிழகம் உள்ளது. இது மிகவும் பெருமையாக உள்ளது.
இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.






