என் மலர்tooltip icon

    செய்திகள்

    தலமலை வனப்பகுதியில் நூதன முறையில் புலியை வேட்டையாடிய கும்பல்
    X

    தலமலை வனப்பகுதியில் நூதன முறையில் புலியை வேட்டையாடிய கும்பல்

    தலமலை வனப்பகுதியில் நூதன முறையில் புலியை வேட்டையாடிய 4 பேரை கைது செய்தனர். மேலும் 5 பேரை பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர்.
    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தலமலை வனப்பகுதியில் மாரிகுடி என்ற இடத்தில் ஆண் புலி இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து சத்தியமங்கலம் புலிகள் காப்பக இணை இயக்குநர் அருண்லால், ஆசனூர் புலிகள் காப்பக இணை இயக்குநர் பத்மா, கால்நடை டாக்டர் மனோகரன் ஆகியோர் அங்கு சென்றனர்.

    புலி உடலை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது வி‌ஷம் வைத்து கொல்லப்பட்ட காட்டெருமை உடலை புலி தின்றதால் இறந்திருப்பது தெரியவந்தது. எனவே காட்டெருமையை வி‌ஷம் வைத்து கொன்ற மர்ம நபர்கள் யார்? என்பது தொடர்பான விசாரணையில் வனத்துறையினர் இறங்கினர்.

    அப்போது வனத்தையொட்டியுள்ள பெஜலட்டி கிராமத்தை சேர்ந்த ஜடைசி, முத்துச்சாமி, வேல்முருகன், சிவாஜி ஆகிய 4 பேர் சந்தேகத்தின் பேரில் வனத்துறையினரிடம் சிக்கினர். அவர்களிடம் விசாரித்தபோது நூதன முறையில் அவர்கள் புலியை வேட்டையாடியது தெரியவந்தது.

    முதலில் காட்டெருமையை வி‌ஷம் வைத்து கொல்வார்கள். அதன் உடலை தின்னும் புலி இறந்து விடும். அந்த புலியின் பற்கள், நகங்கள் ஆகியவற்றை எடுத்து விட்டு புலி உடலை வனப்பகுதியில் புதைத்து விடுவார்கள்.

    இந்த நூதன முறையைத் தான் வனத்துறையினரிடம் சிக்கிய ஜடைசி, முத்துச்சாமி, வேல்முருகன், சிவாஜி ஆகிய 4 பேர் உள்பட 9 பேர் கும்பல் கையாண்டுள்ளது. காட்டெருமையை வி‌ஷம் வைத்து கொன்று போட்டு விட்டு அவர்கள் புலிக்காக புதர் மறைவில் காத்திருந்துள்ளனர்.

    அப்போதுதான் 8 வயது ஆண் புலி அங்கு வந்து காட்டெருமை உடலை தின்றது. இதனால் அந்த புலி இறந்தது. இதைத்தொடர்ந்து புலியின் பற்கள், நகங்களை எடுத்துக் கொண்டு உடலை அதே இடத்தில் புதைத்ததை 4 பேரும் ஒப்புக்கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து ஜடைசி, முத்துச்சாமி, வேல்முருகன், சிவாஜி ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அளித்த தகவலின்பேரில் மேலும் 5 பேரை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    கைதானவர்களிடம் இருந்து புலியை கொல்வதற்கு பயன்படுத்தப்பட்ட அரிவாள், வி‌ஷம் அடங்கிய ஒரு பாட்டில் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டதால் புலி கொல்லப்பட்டாலோ அல்லது உயிரிழந்தாலோ டெல்லி தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்திடம் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்.

    இதன்படி சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அளித்த தகவலின்படி தேசிய புலிகள் காப்பக பாதுகாப்பு ஆணைய பிரதிநிதி கிருஷ்ணகுமார், உலகளாவிய நிதியகத்தின் பிரதிநிதி விஜய் மற்றும் வன ஆர்வலர்கள் ஆகியோர் புலி கொல்லப்பட்ட இடத்தை ஆய்வு செய்தனர்.

    பின்னர் புலியின் உடற்கூறுகள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அதே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
    Next Story
    ×