என் மலர்
செய்திகள்

ஈரோடு ஆஸ்பத்திரியில் அரசு டாக்டர்கள் உண்ணாவிரதம்
ஈரோடு:
மருத்துவ பட்ட மேற்படிப்பில் அரசு டாக்டர்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு வழங்க கோரி அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் டாக்டர்கள் கடந்த 20-ந் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகிறார்கள். 20-ந் தேதி 2 மணி நேர வேலை புறக்கணிப்பு போராட்டமும், 21, 22-ந தேதிகளில் தர்ணா போராட்டமும் நடத்தினர்.
24-ந் தேதி ஒட்டுமொத்த விடுப்பு எடுத்து போராட்டமும், 25,26-ந் தேதிகளில் தர்ணா போராட்டமும் நடந்தது. கடந்த 27-ந் தேதி அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் விடுப்பு எடுத்து போராட்டம் செய்தனர்.
28-ந் தேதி ஈரோடு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் டாக்டர்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். நேற்று அரசு டாக்டர்கள் ஆஸ்பத்திரி வளாகம் முன்பு அமர்ந்து கோரிக்கை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தனர். இன்று (புதன்கிழமை) அவர்கள் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதில் ஏராளமான அரசு டாக்டர்கள் கலந்து கொண்டனர்.
டாக்டர்கள் போராட்டம் பற்றி தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் கூறியதாவது:-
“கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடந்து வருகிறது. வருகிற 5,6-ந் தேதிகளில் சென்னையில் மருத்துவ கல்வி இயக்குநர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடக்கிறது.
இந்த போராட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து டாக்டர்கள் வந்து கலந்து கொள்கிறார்கள். வருகிற 8-ந் தேதி ஈரோடு மாவட்டம் முழுவதும் டாக்டர்கள் ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்துகிறார்கள்”
இவ்வாறு அவர் கூறினார்.






