search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேன் மோதியதில் ரோட்டில் பலியாகி சிதறி கிடக்கும் ஆடுகள்
    X
    வேன் மோதியதில் ரோட்டில் பலியாகி சிதறி கிடக்கும் ஆடுகள்

    கோபி அருகே மந்தைக்குள் புகுந்த வேன் மோதி தொழிலாளி - 40 ஆடுகள் பலி

    கோபி அருகே மந்தைக்குள் புகுந்த வேன் மோதி தொழிலாளி, 40 ஆடுகள் பலியான சம்பவம் குறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கோபி:

    கோவை மாவட்டம் சூலூரை அடுத்த காசிபாளையம் பகுதியை சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளர்கள் தங்கள் ஆடுகளை ஈரோடு மாவட்டம் கொடிவேரி, மாக்கினாம்கொம்பை, அரசூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மேய்த்து வருகிறார்கள்.

    வழக்கம்போல இன்று காலை கோபி அடுத்த காசிபாளையத்தில் இருந்து கொடிவேரிக்கு மேய்ச்சலுக்காக ஆடுகளை அழைத்து வந்தனர். மருதாசலம் (வயது 52) உள்பட 6 பேர் ஆட்டு மந்தையை ரோட்டின் ஓரமாக ஓட்டி வந்தனர்.

    ஈரோடு-சந்தி ரோட்டில் கொடிவேரி அணை பிரிவு அருகே சென்றபோது சத்திய மங்கலத்தில் இருந்து கோபி நோக்கி வந்த மினி வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடி ஆட்டு மந்தைக்குள் புகுந்தது.

    இதை சற்றும் எதிர்பாராத தொழிலாளர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். ஆடுகளும் ஆங்காங்கே சிதறி ஓடின. ஆனாலும் மந்தைக்குள் புகுந்த வேகத்தில் ஏராளமான ஆடுகள் மினி வேன் சக்கரத்தில் சிக்கின.

    கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் 40 ஆடுகள் உடல் சிதறி ரத்த வெள்ளத்தில் பலியாகின. மந்தையை ஓட்டி வந்த மருதாசலம் மீதும் மினி வேன் மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட மருதாசலம் அதே இடத்தில் பலியானார். மற்ற 5 தொழிலாளர்களும் சுதாரித்துக் கொண்டு ஓட்டம் பிடித்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    இந்த விபத்தில் பலியான ஆடுகளின் மொத்த மதிப்பு ரூ. 4 லட்சம் இருக்கும். இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த விபத்து இன்று காலை அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தங்கள் கண் முன்பே மினி வேனில் சிக்கி பலியான சக தொழிலாளி மருதாசலம் மற்றும் ஆடுகள் பலியானதை கண்டு ஆடு மேய்க்கும் தொழிலாளர்கள் கண்ணீர் வடித்ததை பார்க்க பரிதாபமாக இருந்தது.





    Next Story
    ×