search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "drunken"

    • பாலாஜி பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
    • மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு பாலாஜி உடன் தகராறில் ஈடுபட்டார்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள அருள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி(வயது 28). இவர் அங்குள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில், பல்லடத்திலிருந்து அருள்புரம் நோக்கி சென்றுள்ளார்.

    பல்லடத்தை அடுத்த பனப்பாளையம் பகுதியில் செல்லும்போது, இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதுவது போல், இன்னொரு மோட்டார் சைக்கிள் முந்தி சென்றது. இதனால் அந்த மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபரை பாலாஜி "பார்த்துப் போ" என்று சொன்னதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு பாலாஜி உடன் தகராறில் ஈடுபட்டார். மேலும் அவர் குடிபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து பாலாஜி கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட ஊர்க்காவல் படை வீரரான பல்லடம் மகாலட்சுமி நகரைசேர்ந்த கார்த்திக் குமார் என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    அறந்தாங்கி அருகே குடிபோதையில் தகராறு செய்த தந்தையை அடித்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா நாகுடி பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் தினமும் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்து, அவருடைய மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம். அதேபோல் அவர் கடந்த 14-ந் தேதி வீட்டில் மனைவி மற்றும் மகள்களிடம் தகராறு செய்துள்ளார்.

    மேலும் அவர்களை, அவர் அடித்து விரட்டியதாக கூறப்படுகிறது. அப்போது வீட்டிற்கு வந்த அவருடைய 17 வயது மகன், எதற்காக எனது தங்கைகள் மற்றும் தாயை அடித்து விரட்டுகிறீர்கள் என்று தந்தையிடம் கேட்டுள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த அவர் வீட்டில் கிடந்த ஒரு கட்டையை எடுத்து, மகனை அடிக்க பாய்ந்தார். அப்போது மகன் கட்டையை பறித்து, தந்தையின் தலையில் அடித்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் இரவு அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலை செய்யப்பட்டவரின் மகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடிபோதையில் தகராறு செய்த தந்தையை, மகன் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு தந்தையை கொன்ற வங்கி ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
    குஜிலியம்பாறை:

    திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகில் உள்ள பகவதியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது50). அவரது மனைவி மகாலட்சுமி (46). அதே பகுதியில் தள்ளுவண்டியில் பிரியாணி கடை நடத்தி வந்தனர்.

    இவர்களுக்கு வினோத்குமார் (26) என்ற மகனும், அபிராமி என்ற மகளும் உள்ளனர். வினோத்குமார் எம்.பி.ஏ. முடித்து விட்டு கோவிலூரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். அபிராமி ஆசிரியர் பயிற்சி முடித்து நாகர்கோவிலில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

    வினோத்குமாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. வினோத்குமாருக்கு குடிபழக்கம் இருந்துள்ளது. நேற்று இரவு போதையில் வீட்டிற்கு வந்த அவர் தந்தையின் தலையில் அம்மி கல்லைபோட்டு கொலை செய்தார். இதை பார்த்ததும் அருகில் இருந்த அவரது தாய் மகாலட்சுமி சத்தம்போட்டார்.

    இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த வினோத்குமார் தனது தாயை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். அவர்களது சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இது குறித்து குஜிலியம்பாறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    வேடசந்தூர் டி.எஸ்.பி. சிவக்குமார் தலைமையில் அங்கு வந்த போலீசார் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மகாலட்சுமியை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் செல்வராஜ் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் செல்வராஜுக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் நபருக்கும் அடிக்கடி தகராறு இருந்து உள்ளது. நேற்று இரவு போதையில் வந்த வினோத்குமார் அவர்களிடம் எதற்காக எங்களது வீட்டில் உள்ளவர்களிடம் தகராறு செய்கிறீர்கள் என சத்தம் போட்டார். இதனால் அவர்களுக்கு கடும் வாக்கு ஏற்பட்டது.

    அப்போது அங்கு வந்த மகாலட்சுமி தனது மகனை வீட்டுக்கு வருமாறு அழைத்தார். ஆனால் அவர் அங்கு வராமல் கத்தியால் தாய் என்று கூட பாராமல் சரமாரியாக குத்தினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த செல்வராஜ் தடுக்க வந்தார். அவரை கீழே தள்ளி அருகில் கிடந்த அம்மிக்கல்லை செல்வராஜ் தலையில் வினோத்குமார் போட்டார். இதில் அவர் சம்பவ இடத்தில் பலியாகி உள்ளார். மேற்கண்டவை விசாரணையில் தெரியவந்து உள்ளது. அதன்பின்னர் வினோத்குமாரை போலீசார் கைது செய்தனர்.
    திருவெறும்பூர் அருகே குடிபோதையில் பாலத்தில் இருந்து தவறி விழுந்து ராணுவ வீரர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து நவல்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருவெறும்பூர்:

    திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணா நகரை சேர்ந்தவர் கருப்பையா (வயது 50). ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மனைவி பாக்கியலட்சுமி. இவர்களுக்கு ராஜேஷ் கண்ணன், ராகுல்கிரண் என்ற 2 மகன்கள் உள்ளனர். கருப்பையாவுக்கு  குடிப்பழக்கம் உண்டு.

    இந்நிலையில் நேற்று மாலையில் கருப்பையா நவல்பட்டு சிலோன் காலனி பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடையில் மது வாங்கி, அந்த பகுதியில் உள்ள கட்டளை வாய்க்கால் பாலத்தில் மீது அமர்ந்து மது குடித்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர் போதையில் பாலத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கருப்பையா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இரவு நேரத்தில் இந்த சம்பவம் நடந்ததால் யாரும் பார்க்கவில்லை.

    இந்நிலையில் இன்று காலை அந்த வழியே நடந்து சென்றவர்கள் கருப்பையா இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் நவல்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கருப்பையாவின் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    இது குறித்து நவல்பட்டு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    திருவட்டார் அருகே குடிபோதையில் தாயாரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்து நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர்.

    திருவட்டார்:

    திருவட்டாரை அடுத்த பெரிஞ்சக்கோணம் பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ். பால்ராஜின் மனைவி மேரி ஹெலன் பாய் (வயது 56). இவர்களின் மகன் மெர்ஜின் ராஜ் (29). கூலி தொழிலாளி. இன்னும் திருமணம் ஆகவில்லை.

    மெர்ஜின் ராஜ், வேலைக்கு சென்று கிடைக்கும் பணத்தை வீட்டில் கொடுப்பதில்லை. அதனை மது குடித்து செலவு செய்து வந்தார். போதைக்கு அடிமையானதால் அடிக்கடி வீட்டில் பணம் கேட்டு தகராறும் செய்தார்.

    மெர்ஜின் ராஜ், வேலைக்கு செல்லாமல் ஊதாரியாக திரிந்ததை அவரது தாயார் மேரி ஹெலன் பாய் கண்டித்தார். இதனால் மேரி ஹெலன் பாயிக்கும், பால் ராஜிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    நேற்றும் இதுபோல தாயாருக்கும் மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு மூண்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த மெர்ஜின் ராஜ், தாயார் மேரி ஹெலன் பாயை சரமாரியாக அடித்து உதைத்தார். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

    மேலும் வீடு முன்பு நின்ற வாழை மரங்களையும் வெட்டி நாசம் செய்தார். இது பற்றி மேரி ஹெலன் பாய், திருவட்டார் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் மெர்ஜின் ராஜின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் அவரை கைது செய்தனர். கைதான மெர்ஜின் ராஜை போலீசார் பத்மநாபபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    சேலம் கன்னங்குறிச்சியில் மது குடிக்க மனைவி பணம் கொடுக்காததால் தற்கொலைக்கு முயன்ற தொழிலாளிக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    சேலம்:

    சேலம் பிரபுநகர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 36) அச்சக தொழிலாளி. குடிப்பழக்கத்திற்கு அடிமையான சீனிவாசன் அடிக்கடி மது குடித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மது குடிப்பதற்கு பணம் இல்லாததால் மனைவி கங்காவிடம் கேட்டார். அவர் பணம் கொடுக்காததால் விரக்தி அடைந்த சீனிவாசன் வீட்டில் உள்ள ஒரு அறையில் சென்று கதவை பூட்டி கொண்டார்.

    மனைவி மற்றும் உறவினர்கள் கதவை தட்டியும் திறக்காததால் கன்னங்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது கதவை திறக்காதால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

    அப்போது சீனிவாசன் தூக்கில் தொங்கிய நிலையில் உயிருக்கு போராடிய படி கிடந்தார். இதை பார்த்த போலீசார் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கன்னங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தூக்கில் தொங்கிய சீனிவாசனுக்க ஆரிஸ் என்ற மகனும், கவுசல்யா என்ற மகளும் உள்ளனர்.
    சென்னை திருவல்லிக்கேணியில் ஆயிரம் ரூபாய்க்கு மது குடித்தால் டி.வி., வாஷிங்மெஷின் இலவசம் என மதுபிரியர்களுக்கு தீபாவளி சலுகை அறிவித்த அ.தி.மு.க. பிரமுகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    சென்னை:

    தீபாவளி பண்டிகையையொட்டி வியாபாரிகள் தங்கள் பொருட்களின் விற்பனையை அதிகரிக்க பல்வேறு சலுகைகளை அறிவித்து இருக்கிறார்கள்.

    அதிக தொகைக்கு பொருட்களை வாங்கினால் பரிசு என்ற அறிவிப்பு வாடிக்கையாளர்களை மிகவும் கவர்கிறது. இதனால் துணி, நகை, வீட்டு உபயோகப்பொருட்கள், பட்டாசு விற்பனை சூடு பிடித்துள்ளது.

    இந்த பொருட்களை வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. பண்டிகை காலங்களில் மது விற்பனையும் அதிகரிக்கும். இந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.320 கோடிக்கு மது விற்பனை செய்ய டாஸ்மாக் இலக்கு நிர்ணயித்துள்ளது.

    இந்தநிலையில் ஆயிரம் ரூபாய்க்கு மது அருந்தினால் பரிசு பொருட்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு ஓட்டல், பார் ஆகியவற்றில் மது அருந்துபவர்களுக்கு குலுக்கல் முறையில் 32 அங்குல கலர்டிவி, குளிர் சாதனப்பெட்டி, வாஷிங் மிஷின் ஆகியவை வழங்கப்படும் என்று விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டன.

    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் என்ற வசனத்துடன் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, வல்லபா அக்ரஹாரம் ஆகிய இடங்களில் பிரம்மாண்ட பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இதில் ஆயிரம் ரூபாய்க்கு மது குடிப்பவர்களுக்கு வழங்கப்படும் பரிசு பொருட்களின் படங்கள் மற்றும் ஓட்டல் பெயருடன் கூடிய வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து போலீசில் பொதுமக்கள் சார்பில் புகார் செய்யப்பட்டது.

    இதையடுத்து, விளம்பர பேனர் வைத்திருந்த பார் மானேஜர் வின்சென்ட் ராஜ் (25), பார் அதிபரின் உதவியாளர் ரியாஸ் அகமது (41) ஆகியோரை ஜாம்பஜார் போலீசார் கைது செய்தனர்.

    பார் உரிமையாளர் முகமது அலிஜின்னா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அ.தி.மு.க. கவுன்சிலரான இவர் தற்போது சேப்பாக்கம் சிறுபான்மை பிரிவு அ.தி.மு.க. மாவட்ட செயலாளராக இருக்கிறார்.

    மதுஅருந்துவோருக்கு குலுக்கல் முறையில் கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த எல்.இ.டி. டி.வி, வாஷிங்மெஷின், குளிர்சாதனபெட்டி, பரிசு குலுக்கலுக்காக வைக்கப்பட்டிருந்த பெட்டி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.
    கீரனூர் அருகே குடிபோதையில் மின்சார டிரான்பார்மரில் ஏறிய தொழிலாளி மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார்.
    கீரனூர்:

    புதுக்கோட்டை மாவட்ட கீரனூர் அருகே உள்ள மேலப்புதுவயல்  கிராமத்தை சேர்ந்தவர் பொன்னையா. இவரது மகன் ஆறுமுகம் (வயது 27). கூலி தொழிலாளி.

    இவர் கடந்த 22-ந் தேதி மது குடித்து விட்டு போதையில் வீட்டிற்கு நடந்து வந்தார். போதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் மேலப்புதுவயல் செல்லும் வழியில் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மரில் ஏறினார். பின்னர் தனது இரண்டு கைகளால் மின்சாரகம்பியை தொட்டார்.  உடனே அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி விசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த ஆறுமுகத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் பரிதாபமாக இறந்தார். 

    இது குறித்து கீரனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாஞ்சில்குமார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    குடிபோதையில் டிரான்ஸ்பார்மரில் ஏறி மின்சாரம் பாய்ந்து இறந்த வாலிபரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    பெங்களூரில் மதுபோதையில் கல்லூரி மாடியிலிருந்து குதித்து மாணவர்கள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    ஓசூர்:

    பெங்களூரு யஷ்வந்த்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் சையத் சோயப் (18) மற்றும் அவரது நண்பர் ஹரீஷ்(18).

    இவர்கள் இருவரும், பெங்களூரு ஜலஹள்ளியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில், பி.காம். முதலாம் ஆண்டு படித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை அவர்கள் இருவரும், மது அருந்திவிட்டு வகுப்புக்கு சென்றதாக தெரிகிறது. அவர்கள் மது அருந்தியிருப்பதை உறுதி செய்து, சக மாணவர்கள் இது குறித்து வகுப்பு ஆசிரியரிடம் தெரிவித்தனர்.

    இதையடுத்து இந்த தகவல், கல்லூரி முதல்வருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் உடனடியாக, மதுபோதையில் இருந்த 2 மாணவர்களையும் வரவழைத்து. அனைவரது முன்னிலையில், புத்திமதி கூறி கடும் எச்சரிக்கை விடுத்தார். பின்னர், முதல்வர் அறையை விட்டு வெளியே வந்த அவர்கள் இருவரையும், சக மாணவர்கள் திட்டி, புத்திமதி கூறினார்கள்.

    இச்சம்பவங்களால், அவமானமும், வேதனையும் அடைந்த சோயப் மற்றும் ஹரீஷ் அன்று மாலை திடீரென கல்லூரியின் 2-வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றனர். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த கல்லூரி ஊழியர்கள் உடனடியாக அவர்களை மீட்டு அருகிலுள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர். தீவிர சிகிச்சைக்கு பின்னர், அவர்கள் இருவரும் உயிர் பிழைத்தனர்.

    இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இது குறித்து ஜலஹள்ளி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
    அரியலூர் அருகே குடிபோதையில் போலீஸ்காரரை தாக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஆர்.எஸ்.மாத்தூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள தூத்தூர் போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோமான்-கடம்பூர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக கோமான் கிராமத்தை சேர்ந்த தேவேந்திரன் (வயது 30) என் பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் அவரை வழி மறித்த போலீசார், வாகனத்திற்கான ஆவணங்களை கேட்டுள்ளனர். இதில் அவர் நான் அவசரமாக ஒரு இடத்திற்கு செல்ல வேண்டியது உள்ளது. ஏன் எனது வண்டியை மறுக்கிறீர்கள் என சப்- இன்ஸ்பெக்டர் தேவராஜன் மற்றும் போலீஸ்காரர்கள் 3 பேருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    மேலும் போலீஸ்காரர் ஒருவரின் சட்டையை பிடித்து இழுத்து தாக்க முயன்றதாக தெரிகிறது. பின்னர் தேவேந்திரனை போலீசார் எச்சரிக்கை செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் மோதல் நடந்தபோது அங்கு நின்ற சிலர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோ காட்சிகள் நேற்று வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது. அதில் தேவேந்திரன், போலீஸ் காரர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது. அதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த போலீஸ் உயர் அதிகாரிகள், தேவேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.

    இதையடுத்து அரசு பணியை செய்யவிடாமல் தடுத்ததாக வழக்குப்பதிவு செய்த தூத்தூர் போலீசார், தேதேவந்திரனை கைது செய்து அரியலூர் கோர்ட்டு நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தினர். காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து போலீசார் தேவேந்திரனை அரியலூர் கிளை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
    விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் அருகே 2 குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    திருநாவலூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் அருகே உள்ள பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசர் (வயது 35), விவசாயி. இவரது மனைவி லட்சுமி (27). இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

    திருநாவுக்கரசர் வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மது குடித்து வந்தார். இதனால் அவரை லட்சுமி கண்டித்தார்.

    இதைத்தொடர்ந்து அவர்களுக்குள் குடும்பத்தகராறு ஏற்பட்டது. நேற்று மாலையும் திருநாவுக்கரசர் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார்.

    குடிப்பழக்கத்தை நிறுத்தி விட்டு ஒழுங்காக வேலைக்கு செல்ல வேண்டியதுதானே என்று லட்சுமி சத்தம்போட்டார். இதனால் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது.

    பின்னர் லட்சுமி கோபித்து கொண்டு அதே பகுதியில் உள்ள தனது தந்தை கலியன் வீட்டுக்கு சென்றார். சிறிது நேரத்தில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து திருநாவலூர் போலீசில் கலியன் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் பரணிதரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    வடமதுரை, அய்யலூர் பகுதியில் குடிமகன்கள் தொல்லையால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
    வடமதுரை:

    வடமதுரை மற்றும் அய்யலூர் பகுதியில் 4 வழிச்சாலை அருகே இயங்கி வந்த டாஸ்மாக் கடைகள் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி அகற்றப்பட்டன. இதனால் குடிமகன்கள் காணப்பாடி, வையம்பட்டி உள்ளிட்ட இடங்களுக்கு சென்று மதுவாங்கி குடித்து வந்தனர். மேலும் பெட்டிக்கடை மற்றும் பழக்கடைகளில் வைத்து மது விற்பனை செய்து வந்ததால் புத்தூர் சாலையில் குடிமகன்கள் ரகளை மற்றும் தகராறில் ஈடுபட்டு வந்தனர்.

    இதனால் அப்பகுதியை கடக்க பள்ளி மாணவ-மாணவிகள் அச்சமடைந்தனர். மேலும் ஒருசில மாணவிகளையும் கடத்திச்சென்றனர். இதனால் அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியானது.

    தற்போது 4 வழிச்சாலை அருகே உள்ள கடைகளிலேயே அதிகவிலை கொடுத்து மதுவாங்கி குடிக்கின்றனர். பின்பு பஸ் நிறுத்தத்தில் தங்களுக்குள் சண்டையிட்டு அரைநிர்வாண கோலத்தில் படுத்துவிடுகின்றனர். இதனால் காலையில் வேலைக்கு செல்லும் பெண்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் பல கூலித்தொழிலாளர்களும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி காலை நேரத்திலேயே வேலைக்கு செல்லாமல் மதுகுடிக்கின்றனர்.

    இதனால் அவர்களது குடும்பம் கடுமையாக பாதிப்படைகின்றது. இதனால் போலீசார் இப்பகுதியில் ரோந்து வந்து அனுமதியின்றி மதுவிற்கும் கும்பல் மீது கடும்நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
    ×