என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னிமலை அருகே மதுக்கடையை அகற்ற அதிகாரி மறுப்பு: பெண்கள் சாலை மறியலால் பரபரப்பு
    X

    சென்னிமலை அருகே மதுக்கடையை அகற்ற அதிகாரி மறுப்பு: பெண்கள் சாலை மறியலால் பரபரப்பு

    சென்னிமலை அருகே மதுக்கடையை அகற்ற அதிகாரி மறுப்பு தெரிவித்ததால் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    சென்னிமலை:

    சென்னிமலை அடுத்த ஈங்கூர் பஞ்சாயத்தின் கிராம சபை கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஹேமலதா தலைமையில் நடைபெற்றது. இதில் ஈங்கூரை சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.

    அப்போது சிப்காட் செல்லும் வழியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என கிராம சபையில் தீர்மானத்தில் சேர்க்க கோரி பெண்கள் வலியுறுத்தினார்கள். ஆனால் இதற்கான அதிகாரம் எங்களுக்கு இல்லை என வட்டார வளர்ச்சி அலுவலர் மறுத்து விட்டார்.

    இதனை ஏற்று கொள்ள மறுத்த பெண்கள் ஈங்கூரின் முக்கிய இடமான நால்ரோடு சந்திப்பில் சென்னிமலை- பெருந்துறை மெயின் ரோட்டில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது பற்றிய தகவல் கிடைத்ததும் சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், பெருந்துறை மண்டல துணை தாசில்தார் முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    அப்போது பெண்கள் ‘‘ஈங்கூர் சிப்காட் சாலையில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் மேலும் வங்கிகள் மற்றும் மருத்துவமனைகள் உள்ள அதே பகுதியில் மதுபான கடையும் உள்ளதால் குடிமகன்களால் தொல்லை ஏற்படுகிறது.

    பெருந்துறை டவுன் பகுதியில் கடை இல்லாத காரணத்தால் அந்த பகுதி மது பிரியர்களும் ஈங்கூர் மது கடைக்கு படை எடுப்பதால் இங்கு எப்போதும் கூட்டம் அலை மோதுகிறது. மேலும் அடிக்கடி குடிபோதையில் தகராறு செய்து கொண்டிருப்பதால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அதனால் அந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்’’ என்று ஆவேசமாக கூறினர்.

    இதுகுறித்து மண்டல துணை தாசில்தார் டாஸ்மாக் அதிகாரிகளிடம் பேசி 15 நாட்களில் கடையை அகற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்வதாக உறுதியளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பெண்கள் சாலை மறியலை கைவிட்டு சென்றனர்.
    Next Story
    ×