என் மலர்tooltip icon

    ஈரோடு

    தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கணவருடன் கோபித்து கொண்டு மனைவி தாய் வீட்டுக்கு சென்றதால் மனம் உடைந்த கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ஈரோடு:

    ஈரோடு பெரியசேமூரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது38). இவரது மனைவி மங்களா(32). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

    செந்தில்குமார் நில புரோக்கர் வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டில் வறுமை வாட்டியது. இதனால் செந்தில்குமார் குடிப்பழக்கத்துக்கும் அடிமையானார் என்று கூறப்படுகிறது.

    குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் மங்களா கணவருடன் கோபித்து கொண்டு வீரப்பன்சத்திரத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்து விட்டார்.

    இதனால் செந்தில்குமார் விரக்தியில் இருந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று தற்கொலை செய்ய முடிவெடுத்து வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதே போன்று தண்ணீர்பந்தல் பாளையம் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி(76). இவரது மனைவி இறந்து விட்டார். கருப்பசாமிக்கு 4 மகன்கள் உள்ளனர். அவர்களது பராமரிப்பில் கருப்பசாமி இருந்து வந்தார்.

    கருப்பசாமிக்கு முதுமை காரணமாக அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் சிகிச்சை எடுத்து கொண்டார். எனினும் குணமாகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சம்பவத்தன்று கருப்பசாமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த இரண்டு சம்பவம் குறித்தும் வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    சென்னிமலையில் இன்று நடக்க இருந்த குழந்தை திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்திய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியை பிரேம்குமார் (வயது 17). 10ம் வகுப்பு படித்து முடித்து விட்டு டிப்ளமோ படிக்கிறார். இவரும், அதே பகுதியை சேர்ந்த வாசுகி (18) என்ற இளம்பெண்ணும் காதலித்து வந்தனர்.

    வாசுகி பிளஸ்-2 முடித்துள்ளார். இவர்களுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். இன்று அவர்களது திருமணம் சென்னிமலையில் நடக்க இருந்தது. அதற்கான ஏற்பாடுகளை பெற்றோர் செய்தனர்.

    திருமண வயதை எட்டாத 2 பேருக்கும் திருமணம் நடக்க இருக்கும் தகவல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுக்கும், சைல்டு லைன் அமைப்புக்கும் தகவல் வந்தது.

    இதைத்தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு அலகு தலைமை அதிகாரி சுரேஷ், சைல்டு லைன் அமைப்பு இயக்குனர் அருண், ஒருங்கிணைப்பாளர் ஜெகன் ஆகியோர் சென்னிமலைக்கு சென்றனர்.

    பிரேம்குமார், வாசுகி ஆகியோரின் பெற்றோரிடம் பேசினர். 2 பேரும் திருமண வயதை எட்டவில்லை. எனவே அவர்களது திருமணம் செல்லாது. மீறி நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி எச்சரித்து அறிவுரை வழங்கினர்.

    இதைத்தொடர்ந்து திருமணம் நிறுத்தப்பட்டது. பிரேம்குமார், வாசுகி ஆகியோரின் பெற்றோரிடம் எழுதியும் வாங்கினர்.

    தமிழக சட்டசபை கூட்டத்தில் கல்வித்துறை மானியத்தின்போது 41 புதிய திட்டம் அறிவிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
    கோபி:

    கோபி தாலுகா அலுவலகத்தில் வருவாய்த்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடந்தது. இதில் 170 பயனாளிகளுக்கு ரூ.22 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:-

    மக்கள் பாராட்டும் வகையில் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மத்திய அரசிடம் இருந்து ரூ.2472 கோடி பெற்று கொடுத்துள்ளது.

    கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பிளஸ்-2, 10-ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு தேர்வு தேதி அறிவிக்கும்போதே தேர்வு முடிவு தேர்வும் அறிவிக்கப்பட்டது.

    மேலும் செல்போன் மூலம் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இது இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் உள்ளது. கல்வித்துறையில் திள்ளுமுள்ளு நடந்து வருவதாக கூறி வருகின்றனர்.

    எங்களிடம் குறைகளை கேட்டு தெரிந்து கொள்ளலாம். நாங்கள் சகோதரத்துவ முறையுடன்தான் பணிகளை செய்து வருகிறோம். கல்வித்துறை வெளிப்படை தன்மையுடன்தான் செயல்பட்டு வருகிறது. எங்களை பாராட்டவில்லை என்றாலும் புண்படுத்த வேண்டாம்.



    நடக்க இருக்கிற சட்டசபை கூட்டத்தொடரில் கல்வித்துறை மானியத்தின் போது 41 புதிய திட்டங்களை அறிவிக்க உள்ளோம். இதன் மூலம் தமிழக அரசின் கல்வித்துறையை இந்தியாவே பாராட்டும் என்பதில் ஐயமில்லை.

    கல்வித்துறைக்காக ரூ. 26,892 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. நாங்கள் எடுத்தோம், முடித்தோம் என்ற நிலையில்தான் செயல்பட்டு வருகிறோம்.

    இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி சதீஷ், கோபி கோட்டாட்சியர் கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் நிருபர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்தார். அப்போது, ‘‘ஆசிரியர் கவுன்சிலிங்கில் திள்ளுமுள்ளு நடந்ததாக கூறப்படுகிறதே’’ என்று நிருபர்கள் கேட்ட னர்.

    அதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், ‘‘ஆசிரியர் கவுன்சிலிங்கில் முறைகேடு நடந்திருந்தால் சம்மந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
    ஈரோடு மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் முடிந்தும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. இதனால் மக்கள் வெளியில் நடமாட இன்னமும் அச்சத்தில்தான் உள்ளனர்.

    ஈரோடு:

    அக்னி நட்சத்திரம் கடந்த மாதம் 4-ந் தேதி தொடங்கியது. அதற்கு முன்பே ஈரோடு மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. எனவே அக்னி நட்சத்திர காலத்திலும் வெயிலின் கொடுமை அதிகமாக இருந்தது. ஆனால் மாவட்டத்தின் பல பகுதிகளில் அக்னி நட்சத்திர காலத்தின் பல நாட்களில் இரவு வேளையில் மழை பெய்தது.

    இது மக்கள் பகல் நேரத்தில் அனுபவித்த வெயில் கொடுமைக்கு இதமாக அமைந்தது. இரவு நேரத்தில் மக்கள் குளிர்ச்சியை அனுபவித்தனர். இந்த நிலையில் கடந்த 28-ந் தேதி அக்னி நட்சத்திர வெயில் முடிந்தது. எனவே இனி வெயில் கொடுமை இருக்காது என்று ஈரோடு மாவட்ட மக்கள் நினைத்திருந்தனர்.

    ஆனால் அவர்கள் நினைத்ததுபோல அல்லாமல் அக்னி நட்சத்திரம் முடிந்தும் வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை. பகல் நேரத்தில் அடிக்கும் வெயில் மக்களை மிகவும் வாட்டுகிறது.

    அவ்வப்போது வானில் மேக மூட்டம் வந்தாலும், திடீரென அடிக்கும் வெயில் உக்கிரத்தை காட்டுகிறது. மதிய நேரத்தில் மக்கள் வியர்வையால் நனைந்து வருகின்றனர். இதனால் மக்கள் வெளியில் நடமாட இன்னமும் அச்சத்தில்தான் உள்ளனர்.

    கடந்த ஒரு வாரத்தில் (கடந்த மாதம் 26-ந் தேதி முதல் கடந்த 1-ந் தேதி வரை) ஈரோடு மாவட்டத்தில் சராசரியாக அதிகபட்சம் 91.4 டிகிரியும், குறைந்தபட்சம் 75.2 டிகிரியும் வெயில் பதிவாகி உள்ளது. கடந்த 26, 31-ந் தேதி அதிகபட்சமாக 93.2 டிகிரி வெயிலும், கடந்த 29-ந் தேதி குறைந்தபட்சமாக 87.8 டிகிரி வெயிலும் பதிவாகி உள்ளது.

    வெயிலின் தாக்கம் இருந்தாலும் தினமும் அவ்வப்போது வானம் மேக மூட்டமாகவும், பாதி அளவு மேக மூட்டமாகவும், கொஞ்ச மேக மூட்டமாகவும் காணப்பட்டது.

    கடந்த 28-ந் தேதி காலை 11.30 மணி அளவிலும், 27-ந் தேதி காலை 8.30 மணி, மாலை 5.30 மணி அளவில் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் அதிக மேக மூட்டம் நிலவியது

    கடந்த 29-ந் தேதி மாலை நேரத்தில் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் லேசான அளவில் மழை பெய்தது. பெரும்பாலான நாட்கள் நள்ளிரவும், அதிகாலை நேரத்திலும் மூடுபனி, லேசான பனி நிலவியது.

    கடந்த 1 வாரத்தில் காற்றின் வேகமும் இருந்தது. கடந்த 27-ந் தேதி மதியம் 2.30 மணி அளவில் அதிகபட்சமாக மணிக்கு 30 கி.மீட்டர் வேகத்தில் காற்றடித்தது. குறைந்தபட்சமாக 29-ந் தேதி மதியம் 2.30 மணி அளவில் மணிக்கு 7 கி.மீட்டர் வேகத்தில் காற்றடித்தது.

    கோபி அரசு ஆஸ்பத்திரியில் வயிற்று வலிக்கு சிகிச்சை பெற்று வந்த பெண் வாட்டர் டேங்க் பைப்பில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    கோபி:

    கோபி அருகே உள்ள அத்தாணி பகுதியை சேர்ந்தவர் மாதையன் மனைவி மணி (வயது 46). இவர் சில தினங்களுக்கு முன் கோபி அரசு ஆஸ்பத்திரியில் வயிற்று வலி காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த மணி நேற்று ஆஸ்பத்திரி பின் பகுதிக்கு சென்றார். அங்கு அவர் ஒரு வாட்டர் டேங்க் பைப்பில் தனது சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ஆஸ்பத்திரிக்கு வந்த நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் இதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து உடனடியாக கோபி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து மணி உடலை மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவத்தால் கோபி அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது.

    டைரக்டர் ராஜகுமாரன் நடிகை தேவயானியுடன் அந்தியூர் செல்லீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

    அந்தியூர்:

    ‘காதல்கோட்டை’ உள்பட பல்வேறு படங்களை இயக்கியவர் டைரக்டர் ராஜகுமாரன். காதல் கோட்டை படத்தில் நாயகியாக நடித்த நடிகை தேவயானியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    டைரக்டர் ராஜகுமாரனின் சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஆகும்.

    சென்னையில் வசித்து வந்தாலும் அவ்வப்போது மனைவி தேவயானி மற்றும் குழந்தைகளுடன் டைரக்டர் ராஜகுமாரன் அந்தியூர் வந்து செல்வார்.

    அதேபோல் நேற்றும் டைரக்டர் ராஜகுமாரன் நடிகை தேவயானியுடன் அந்தியூர் ஆலம் பாளையத்தில் உள்ள தனது பண்ணைவீட்டுக்கு வந்திருந்தார்.

    நேற்று மாலை 6.30மணி யளவில் ராஜகுமாரனும் தேவயானியும் தம்பதி சகிதமாக அந்தியூர் செல்லீஸ்வரர் கோவிலுக்கு வந்தனர். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

    பிறகு சாமி தரிசனம் செய்த அவர்கள் கோவிலை வலம் வந்தும் வழிபட்டனர்.

    கோவிலுக்கு வந்திருந்த பெண் பக்தர்கள் நடிகை தேவயானியை பார்த்ததும் மகிழ்ச்சி அடைந்தனர். அவரிடம் சென்று பேசினர். அப்போது பெண்களிடம் நடிகை தேவயானி, “அக்கா நல்லா இருக்கீங்களா..? வீட்டில் எல்லோரும் சுகமா?” என்று விசாரித்தார்.

    ஈரோட்டில் வருகிற 6-ந்தேதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நடத்தும் நதிநீர் இணைப்பு மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
    ஈரோடு:

    கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஈரோடு சம்பத் நகரில் உள்ள அலுவலகத்தில் நடந்தது. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கலந்து கொண்டு பேசினார்.

    தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்தவும், 50 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாமல் உள்ள நீர்பாசன திட்டங்களை பராமரிக்கவும், தேசிய நதிகளை இணைக்க வலியுறுத்தியும் கொ.ம.தே.க சார்பில் நதிநீர் இணைப்பு மாநாடு ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் வருகிற 6-ந்தேதி நடக்கிறது.

    தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் மாநாட்டில் கலந்துகொள்கிறார். அவரிடம் நீர்மேலாண்மை திட்டத்தை எடுத்துக்கூறி சட்டமன்ற கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்ற கோரிக்கை வைப்போம்.


    பாண்டியாறு-புன்னம்புழா திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகிறோம். இந்த திட்டத்தை நிறைவேற்றினால் கேரள மாநிலத்திற்கு செல்லும் பவானி ஆற்று தண்ணீர் நிறுத்தப்படும். இதேபோல் நீலகிரி பகுதியில் உதயமாகும் பல்வேறு கிளை நதிகள் கர்நாடக மாநிலத்திற்கு சென்று காவிரி ஆற்றில் கலக்கிறது. இதை தடுத்து தமிழகத்துக்கு திருப்பி விட்டால் தண்ணீர் தட்டுப்பாடே இருக்காது.

    இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு தடை விதித்து உள்ளது. இது சிறு விவசாயிகளுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

    நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக கூறுகிறார்கள். என்னை பொறுத்தவரை அவரை பற்றி பேசுவதே நேரம் வீண் என்று நினைக்கிறேன். இதனால் அவரை பற்றி கேட்க வேண்டாம். மாநிலத்தில் ஆளும் தமிழக அரசு முடங்கிப்போய் உள்ளது. உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடிய தைரியம் ஆளும் கட்சிக்கு இல்லை.

    இவ்வாறு ஈஸ்வரன் கூறினார்.
    மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த சிறுமி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தாள். இறந்த தகவல் பரவியதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு அருகே உள்ள சூரியம்பாளையத்தை சேர்ந்தவர் பேச்சிமுத்து. மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி வளர்மதி. இவர்களது மகன் மோகன் பிரசாந்த் (வயது 8), மகள் சண்முகபிரியா (4). சண்முகபிரியா யு.கே.ஜி. படித்தார். மோகன் பிரசாந்த் 2-ம் வகுப்பு படிக்கிறார். சண்முகபிரியா கடந்த 1 வாரத்துக்கு முன்பிருந்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.

    இதைத்தொடர்ந்து அவரை சிகிச்சைக்காக பவானியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் காய்ச்சல் குறைய வில்லை. எனவே ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கும் காய்ச்சல் சரியாகாததால் கோவைக்கு கொண்டு சென்றனர். அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட சண்முக பிரியாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    ரத்த பரிசோதனை மேற்கொண்டபோது சண்முக பிரியாவுக்கு மர்ம காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. எனவே தீவிர சிகிச்சை பிரிவில் சண்முக பிரியாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு சண் முகபிரியா பரிதாபமாக இறந்தார். சண்முகபிரியாவின் அண்ணன் மோகன் பிரசாத்தும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அதே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    மர்ம காய்ச்சலுக்கு சிறுமி சண்முகபிரியா இறந்த தகவல் சூரியம்பாளையம் கிராம மக்களிடையே பரவியது. அவர்கள் ஆத்திரம் அடைந்து போராட்டத்தில் குதித்தனர்.


    ஈரோடு-பவானி ரோட்டில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். அவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பரபரப்பும் நிலவியது.

    தகவல் கிடைத்தும் ஈரோடு தாசில்தார் ஜெயக்குமார், மாநகராட்சி உதவி கமி‌ஷனர் விஜயகுமார், சித்தோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அவர்களிடம் பொது மக்கள் கூறியதாவது:-

    இந்த பகுதியில் தண்ணீர் அப்படியே தேங்கி நிற்கிறது. மழை பெய்தால் தண்ணீர் வெளியேறுவதில்லை. கால்வாய் கட்டியிருந்தும் அதன் வழியாக தண்ணீர் வெளியேறாமல் தேங்குகிறது.

    தேங்கும் தண்ணீரில் உற்பத்தியாகி கொசுக்கள் பரவுகிறது. இதனால்தான் சண்முகபிரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளார். அவரது அண்ணனும் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

    எனவே இந்த பகுதி மக்களை காய்ச்சல் பாதிக்க வாய்ப்பு உள்ளது. எனவே இதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பாதிப்பு தொடர்பாக கலெக்டர் அலுவலகத்திலும் ஏற்கனவே மனு கொடுத்துள்ளோம்.

    இவ்வாறு கூறிய மக்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகளும், போலீசாரும் கூறினர். இதைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    நம்பியூர் அருகே நகைக்கடை கதவை உடைத்து 10 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நம்பியூர்:

    நம்பியூர் அருகே உள்ள குருமந்தூர் மேட்டில் சரவணன் என்பவர் சிறிய அளவில் நகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார். காலையில் அவ்வழியாக சென்றவர்கள் பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிரீல் கதவுகள் திறந்திருப்பதை பார்த்து சரவணனுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

    சரவணன் வந்து பார்த்த போது கடையின் கதவு மற்றும் கிரீல்கேட் ஆகியவற்றில் போடப்பட்டிருந்த பூட்டுகள் கல்லால் உடைக்கப்பட்டும் கதவுகளை கடப்பாரை அல்லது இரும்பு கம்பிகள் கொண்டு நெம்பி திறந்து நகைக்கடையின் உள் நுழைந்திருப்பது தெரிய வந்துள்ளது.

    அதனை தொடர்ந்து நம்பியூர் போலீசாருக்கு சரவணன் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கடையினுள் சென்று திருடு போயுள்ள பொருட்கள் குறித்து விபரம் சேகரித்தனர்.

    அதில் மோதிரம், கம்மல் உள்பட 10 பவுன் தங்க நகைகள் மற்றும் கொலுசு அரணா உள்ளிட்ட சுமார் ஒருகிலோ வெள்ளிப்பொருட்கள் திருடுபோயிருப்பது தெரியவந்துள்ளது.

    இதை தொடர்ந்து ஈரோடு தடவியியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்து மர்ம ஆசாமியை தேடிவருகின்றனர்.
    நொய்யல் ஆற்று வெள்ளம் சாயக்கழிவுடன் கலந்து வருவதால் விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    சென்னிமலை:

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான வெள்ளியங்கிரி மலை பகுதியில் தற்போது மழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் நொய்யல் ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    அந்த தண்ணீருடன் சாயக் கழிவும் கலந்து வருகிறது. இது நொய்யல் ஆற்றுப்படுகை விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்பூர் பகுதியில் பின்னலாடை சாயப்பட்டறைகளில் இருந்து கழிவு நீரை வெளியேற்றக்கூடாது என மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு கோர்ட்டு உத்திரவிட்டுள்ளது.

    இது தொடர்பாக திருப்பூரில் அதிகாரிகள் கடும் சோதனை நடத்தி பல சாயப்பட்டறைகளை மூடிவிட்டனர். ஆனாலும் தற்போதும் மழை நீருடன் சாயக்கழிவு ஆற்றில் கலந்து தான் வருகிறது.

    தற்போது கடும் வறட்சி நிலவுவதால் விவசாயிகள் இந்த தண்ணீரையும் விடாமல் பயன்படுத்துகிறார்கள். டீசல் என்ஜின் மூலம் தண்ணீரை எடுத்து தென்னை மரத்திற்கு பாய்ச்சுகின்றனர்.

    சாயக்கழிவு கலந்து வரும் தண்ணீரால் பாதிப்பு அதிகம் என்று கூறும் விவசாயிகள், இந்த தண்ணீர் நிலத்தடியில் இறங்கி கிணற்று நீரும் மாசுபடும் நிலை உள்ளது என புலம்புகின்றனர்.
    ஈரோடு தனியார் ஆஸ்பத்திரியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மகனுக்கு இன்று அதிகாலை ஆண் குழந்தை பிறந்தது.
    ஈரோடு:

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் மகன் மிதுன். இவருக்கும் ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த சுப்பிரமணியம்-ஜெயந்தி தம்பதியினரின் மகள் திவ்யாவுக்கும் திருமணம் நடந்தது.

    நிறைமாத கர்ப்பிணியாக இருந்த திவ்யா பிரசவத்துக்காக ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள 24 கேர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இருந்தார்.

    இன்று அதிகாலை அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. மகளையும், குழந்தையையும் சுப்பிரமணியமும், ஜெயந்தி மற்றும் உறவினர்கள் உடன் இருந்து கவனித்து வருகிறார்கள். மகனையும், பேரனையும் பார்க்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஈரோடு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
    குடிப்பழக்கத்தை மனைவியும், பெற்றோரும் கண்டித்ததால் மதுவில் வி‌ஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெருந்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு ராசம்பாளையம் அருகில் உள்ள வில்லரசம் பட்டியை சேர்ந்தவர் ஜோபட் கிளிண்டன் (வயது 23). இவர் சொந்தமாக 2 கார்கள் வைத்துள்ளார். அந்த கார்களை ஒரு கால் டாக்சி நிறுவனத்துடன் இணைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார்.

    நேற்று காலை இவரது கார் பெருந்துறை ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகே ரோட்டோரமாக நின்றது. அந்த வழியாக ஜோபட் கிளிண்டனின் உறவினர் ஒருவர் வந்தார்.

    அவர் ஜோபட் கிளிண்டனின் காரை கண்டதும் அருகில் சென்று பார்த்தார். அப்போது காரில் டிரைவரின் இருக்கையில் ஜோபட் கிளிண்டன் மயங்கியபடி கிடந்தார்.

    இதனால் அங்கு பலர் கூடினர். மக்கள் கூடியதால் பரபரப்பும் ஏற்பட்டது. இது பற்றி ஈரோடு தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். காருக்குள் மயங்கி கிடந்து ஜோபட் கிளிண்டனை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஜோபட் கிளிண்டன் ஏற்கனவே இறந்துவிட்ட தாக தெரிவித்தனர். ஜோபட் கிளிண்டன் மதுவில் வி‌ஷம் கலந்து குடித்து இறந்திருப்பதும் பரிசோதனையில் தெரியவந்தது.

    ஜோபட் கிளிண்டனுக்கு குடிப்பழக்கம் உண்டாம். இதனால் தொழிலை சரியாக கவனிக்காமல் இருந்துள்ளார். எனவே குடிப்பழக்கத்தை கைவிடுமாறு கூறி அவரது மனைவி ரேவதியும், பெற்றோரும் கண்டித்தனர்.

    இதனால் மனம் உடைந்து தான் ஜோபட் கிளிண்டன் இந்த விபரீத முடிவை எடுத்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இறந்த ஜோபட் கிளிண்டனுக்கு ஒரு வயதில் குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×