search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "land broker"

    வள்ளியூர் அருகே லாரி மோதி டாக்டர், நில புரோக்கர் பலியாகினர். இந்த விபத்து குறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிந்து தப்பி ஓடிய மினிலாரியின் டிரைவரை தேடி வருகின்றனர்.
    வள்ளியூர்:

    நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தை சேர்ந்தவர் ஞானநிகேஸ் ஜெட்சன் (வயது 43). டாக்டரான இவர் குமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் பணியாற்றி வந்தார். இதனால் நாகர்கோவிலிலேயே தனது மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

    இந்நிலையில் ஞானநிகேஸ் ஜெட்சன் பணகுடி அருகே உள்ள காவல்கிணறில் புதிதாக இடம் வாங்குவதற்காக பிள்ளையார்குடியிருப்பை சேர்ந்த நில புரோக்கர் மதன் (39) என்பவருடன் நேற்று மாலை காரில் சென்றார். அவர்கள் இருவரும் இடத்தை பார்த்துவிட்டு திரும்பியபோது, காவல்கிணறு நான்குவழிச்சாலையில் ஓரமாக காரை நிறுத்தி விட்டு காருக்கு பின்னால் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக நெல்லையில் இருந்து கன்னியாகுமரி நோக்கி சென்ற மினிலாரி ரோட்டோரமாக நின்று பேசிக்கொண்டிருந்தவர்கள் மீது வேகமாக மோதியது. இதில் டாக்டர் ஞானநிகேஸ் ஜெட்சன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். நில புரோக்கர் மதன் படுகாயமடைந்தார்.

    இதனை பார்த்த விபத்துக்கு காரணமான மினிலாரியின் டிரைவர், லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். மினிலாரி மோதியதில் காரும் ரோட்டோர பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டது. இந்த விபத்து குறித்து பணகுடி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து சம்பவ இடத்துக்கு பணகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் டேவிட் ரவிராஜன் மற்றும் போலீசார் விரைந்து வந்து காயமடைந்து கிடந்த மதனை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அவருடன் மினிலாரியின் கிளீனரும் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் லாரியின் கிளீனர் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றதும் தப்பிச்சென்று விட்டார். பலியான டாக்டரின் உடலை போலீசார் சம்பவ இடத்தில் இருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிந்து தப்பி ஓடிய மினிலாரியின் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். விபத்துக்கு காரணமான மினிலாரியின் பதிவு எண்ணை வைத்து அதன் உரிமையாளர் யார்? அதனை ஓட்டி வந்த டிரைவர் யார்? என போலீசார் துப்பு துலக்கி வருகின்றனர்.

    இந்நிலையில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த நில புரோக்கர் மதன் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக இறந்தார். இதனால் விபத்து பலி 2 ஆனது.
    ×