search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோடு அருகே மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலி: பொதுமக்கள் சாலை மறியல்
    X

    ஈரோடு அருகே மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலி: பொதுமக்கள் சாலை மறியல்

    மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த சிறுமி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தாள். இறந்த தகவல் பரவியதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு அருகே உள்ள சூரியம்பாளையத்தை சேர்ந்தவர் பேச்சிமுத்து. மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி வளர்மதி. இவர்களது மகன் மோகன் பிரசாந்த் (வயது 8), மகள் சண்முகபிரியா (4). சண்முகபிரியா யு.கே.ஜி. படித்தார். மோகன் பிரசாந்த் 2-ம் வகுப்பு படிக்கிறார். சண்முகபிரியா கடந்த 1 வாரத்துக்கு முன்பிருந்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.

    இதைத்தொடர்ந்து அவரை சிகிச்சைக்காக பவானியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் காய்ச்சல் குறைய வில்லை. எனவே ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கும் காய்ச்சல் சரியாகாததால் கோவைக்கு கொண்டு சென்றனர். அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட சண்முக பிரியாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    ரத்த பரிசோதனை மேற்கொண்டபோது சண்முக பிரியாவுக்கு மர்ம காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. எனவே தீவிர சிகிச்சை பிரிவில் சண்முக பிரியாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு சண் முகபிரியா பரிதாபமாக இறந்தார். சண்முகபிரியாவின் அண்ணன் மோகன் பிரசாத்தும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அதே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    மர்ம காய்ச்சலுக்கு சிறுமி சண்முகபிரியா இறந்த தகவல் சூரியம்பாளையம் கிராம மக்களிடையே பரவியது. அவர்கள் ஆத்திரம் அடைந்து போராட்டத்தில் குதித்தனர்.


    ஈரோடு-பவானி ரோட்டில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். அவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பரபரப்பும் நிலவியது.

    தகவல் கிடைத்தும் ஈரோடு தாசில்தார் ஜெயக்குமார், மாநகராட்சி உதவி கமி‌ஷனர் விஜயகுமார், சித்தோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அவர்களிடம் பொது மக்கள் கூறியதாவது:-

    இந்த பகுதியில் தண்ணீர் அப்படியே தேங்கி நிற்கிறது. மழை பெய்தால் தண்ணீர் வெளியேறுவதில்லை. கால்வாய் கட்டியிருந்தும் அதன் வழியாக தண்ணீர் வெளியேறாமல் தேங்குகிறது.

    தேங்கும் தண்ணீரில் உற்பத்தியாகி கொசுக்கள் பரவுகிறது. இதனால்தான் சண்முகபிரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளார். அவரது அண்ணனும் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

    எனவே இந்த பகுதி மக்களை காய்ச்சல் பாதிக்க வாய்ப்பு உள்ளது. எனவே இதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பாதிப்பு தொடர்பாக கலெக்டர் அலுவலகத்திலும் ஏற்கனவே மனு கொடுத்துள்ளோம்.

    இவ்வாறு கூறிய மக்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகளும், போலீசாரும் கூறினர். இதைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    Next Story
    ×